திருக்குற்றாலக் குறவஞ்சி (ஓர் அறிமுகம்)

அவுஸ்திரேலியாவிலிருந்து சு.ஸ்ரீகந்தராசா

ற்றைக்கு ஏறத்தாழ இருநாறு வருடங்களுக்கு முன்னர் தென்பாண்டி நாட்டிலே, மேலகரம் என்ற ஊரில் வாழ்ந்த திரிகூடராசப்பக் கவிராயர் என்ற புலவரால் இயற்றப்பட்டது திருக்குற்றாலக் குறவஞ்சி. திரிகூடராசப்பக் கவிராசர் என்பவர் மிகச் சிறந்த புலவராகத் திகழ்ந்தவர்.

குற்றாலக்குறவஞ்சி மிகவும் அருமையான சந்தங்களைக் கொண்ட பாடல்களால் ஆக்கப்பட்டுள்ளது வெண்பா, கலிப்பா, விருத்தப்பா, ஆசிரியப்பா, கண்ணிகள்,, கட்டறைக்கலித்துறை என்னும் பாவகைகளிலே மட்டுமன்றி, பல்வேறு இராகங்களுக்கு அமைவான பண்ணிசைப்பாடல்களாகவும் குற்றாலக்குறவஞ்சிப்பாடல்கள் அமைந்துள்ளன.

குற்றாலக் குறவஞ்சிப் பாடல்களின் கருத்துச் செறிவும் ஓசைநயமும் படிப்பவர்களின் இதயங்களைக் கொள்ளை கொள்ளும். கேட்போரின் செவிகளில் தேனாகப் பாயும். இயற்றமிழின் செழுமையையும், இசைத்தமிழின் இனிமையையும், நாடகத் தமிழின் எழிலினையும் ஒருங்கே கொண்டு முத்தமிழ்க் காவியமாகத் திகழ்வது குற்றாலக் குறவஞ்சி.

ஏனைய பண்டைய இலக்கியங்களைப் போல் அல்லாது குற்றாலக் குறவஞ்சிப் பாடல்கள் மிகவும் எளிதான சொற்களால் ஆக்கப்பட்டுள்ளன. அதனால், காலங்காலமாக சாதாரண மக்களால் அன்றாடம் பாடப்பட்டு வருகின்றன. அபிநயப் பாடல்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இப்பாடல்களுக்கு ஏற்ப நடனங்கள் அமைக்கப்பட்டு மேடைக் கலைவடிவங்களாக ஆடப்பட்டுவருகின்றன. இக்காலத்தில்கூட பாடசாலை விழாக்களிலும், தமிழ்க்கலை விழாக்களிலும், நடன நிகழ்ச்சிகளிலும் குற்றாலக் குறவஞ்சிப் பாடல்கள் இடம்பெறுகின்றன. அதற்குக்காரணம் அந்த அளவுக்கு அவை மக்களால் மகிழ்வோடு இரசிக்கப்படுகின்றன என்பதுதான்.

குற்றாலக் குறவஞ்சி சைவசமயச் சார்பான ஒரு நூல் என்பது வெளிப்படையானது. பண்டைய வரலாற்று நிகழ்வுகள், திருவிளையாடற் புராணம், பெரியபுராணம் என்பவற்றில் உள்ள புராணக்கதைகள்; என்பனவெல்லாம் பாடல்களில் ஆங்காங்கே குறிப்பிடப்படுகின்றன. எழிலான இயற்கைக் காட்சிகளைச் சுவையோடு சொல்லிநிற்கும் குற்றாலக் குறவஞ்சிப் பாடல்கள் மலைவாழ் மக்களின் வாழ்வியல் முறைகளைச் கலையோடு வெளிப்படுத்துகின்றன.

இந்தப் பாடல்களில் குற்றால மலையின் அழகைப் பருகலாம். குறத்திப் பெண்களின் எழிலை இரசிக்கலாம். மன்னன்மேல் காதல் கொள்ளும் மங்கையரின் மனங்களை அறிந்துகொள்ளலாம். மனிதக்காதலின் மாண்பினைத் தெரிந்து கொள்ளலாம். தெய்வத்தின்மேல் கொள்ளுகின்ற காதலின் சிறப்பை உணர்ந்து கொள்ளலாம். மலையிலிருந்து துள்ளிப் பாய்ந்தோடி வரும் அழகிய குற்றால அருவிபோல, தௌ;ளுதமிழின் சுவைமணக்கும் இந்தத் தீந்தமிழ் பாடல்கள் நெஞ்சத்தைக் கொள்ளை கொள்ளுகின்றன.

இந்நூலில் உள்ள குறவஞ்சி நாடகத்திலே இடம்பெறுகின்ற ஒரு பாடல் எண்ணற்ற மக்களின் இதையங்களில் நிறைந்த பாடல். பள்ளிப்பாட நூல்களிலே நாம் படித்ததோடு மட்டுமன்றி, அடிக்கடி மேடைகளில் கிராமிய நடன நிகழ்ச்சிகளாகக் கண்டும், கேட்டும் சுவைக்கின்ற இந்தப்பாடலை மறக்க முடியுமா?


வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
     மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பார்
    கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்
தேனருவித் திரை எழுப்பி வானின்வழி ஒழுகும்
     செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனலிளம் பிறைமுடித்த வேணியலங்காரர்
     குற்றாலத் திரிகூட மலைஎங்கள் மலையே.


மலையிலேயுள்ள பழமரங்களிலே காய்த்துக்குலுங்கும் கனிகளை ஆண்குரங்குகள் பறித்துக்கொண்டு வந்து பெண்குரங்குகளுக்குக் கொடுத்து அவற்றோடு கொஞ்சிக்கொண்டிருக்கும். அப்போது அந்தப் பெண்குரங்குகளின் கைகளில் இருந்து கீழே சிந்துகின்ற கனிகளைப் பெறுவதற்காகத் தேவர்கள் கெஞ்சிக்கொண்டிருப்பார்கள். வேடுவர்கள் அந்த வானவர்களைக் கீழே வருமாறு அழைப்பார்கள். வானத்திலிருந்து சித்தர்கள் வந்திருந்து சித்தமூலிகைகளைப் பயிரிட்டு வளர்ப்பார்கள். தேன் அருவியின் அலைகள் மேலெழுந்து வான்வழியாக ஒழுகிக்கொண்டிருக்கும். அதிலே செங்கதிரவனின் தேர்ச்சக்கரங்கள் வழுக்கி விழும். வளைந்த பிறையினைச் சடையிலே அணிந்திருக்கும் குற்றால ஈஸ்வரன் குடிகொண்டிருக்கும் அத்தகைய வளம் கொண்ட திரிகூட மலைதான் எங்கள் மலையாகும். என்பது இந்தப்பாடலின் கருத்து. எத்தகைய கற்பனை? எவ்வளவு சொற்செறிவு? பொருளறிந்து பாடும்போது தமிழின் சுவையறிந்து நெஞ்சம் பூரிக்கின்றது.

அதே குறவஞ்சி நாடகத்திலே மலைவாழ் குறப்பெண் ஒருத்தி தன் வாழ்விடம்பற்றிப் பெருமையுடன் கூறுவதாக அமைந்த பாடல்கள் சில இடம்பெறுகின்றன. எல்லா மலைகளுமே தன் உறவினர்களின் மலைகள்தான், என்று சொல்லும் அந்தப்பெண் இறுதியாக, மேகங்களின் இடியோசை முழவோசையாக ஒலிக்க அதற்கேற்ப மயிலினங்கள் தோகைவிரித்து ஆடுகின்ற திரிகூட மலைதான் தனது மலை என்று பெருமைப்படுகின்ற பாடலை நாம் படிக்கும் போதும், கேட்கும்போதும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடியவாறு, பேச்சுவழக்கிலேயுள்ள அந்தப்பாடல் நடனமாக, நாடகமாக எப்போதும் நம் மனக்கண்களினுள்ளே நர்த்தனம் ஆடி நம்மை இன்புறவைக்கும்.

கொல்லிமலை எனக்கிளைய செல்லி மலை அம்மே
     கொழுநனுக்குக் காணிமலை பழநிமலை அம்மே
எல்லுலவும் விந்தைமலை எந்தைமலை அம்மே
     இமயமலை என்னுடைய தமையன்மலை அம்மே
சொல்லரிய சாமிமலை மாமிமலை அம்மே
     தோழிமலை நாஞ்சிநாட்டு வேள்விமலை அம்மே
செல்லினங்கள் முழவுகொட்ட மயிலினங்கள் ஆடும்
     திரிகூட மலையெங்கள் செல்வமலை அம்மே!



குற்றாலக் குறவஞ்சியின் பாடல்கள் மிகவும் இலகுவாகப் பொருள் விளங்கிக்கொள்ளக்கூடியன. ஒருமுறை படிக்கும்போதே பாடலின் கருத்து நம் மனதில் பதிந்துவிடுகின்றது. நிலவைப் பழித்துரைப்பதுபோலச் சில பாடல்கள் உள்ளன. அவற்றிலிருந்து இரண்டு பாடல்கள் பின்வருமாறு:

தண்ணமுதுடன் பிறந்தாய் வெண்ணிலாவே - அந்தத்
தண்ணளியை ஏன்மறந்தாய் வெண்ணிலாவே
பெண்ணுடன் பிறந்ததுண்டே வெண்ணிலாவே - என்றன்
பெண்மைகண்டும் காயலாமோ வெண்ணிலாவே

விண்ணிலே பிறந்ததற்கோ வெண்ணிலாவே - எரு
விட்டுநான் எறிந்ததற்கோ வெண்ணிலாவே
கண்ணில் விழி யாதவர்போல் வெண்ணிலாவே - மெத்தக்
காந்தியாட்டம் ஆடுகிறாய் வெண்ணிலாவே



என்றிவ்வாறு நிலவைப் பழித்துரைப்பதுபோல உள்ள பாடல்கள்தான் பின்னால் வந்த கவிஞர்கள் நிலவைப்பற்றிப் பாடிய எண்ணற்ற இசைப்பாடல்களுக்கு முன்னோடியாக அமைந்தன என்றால் அதற்கு எதிர்வாதம் இருக்கமுடியாது.

வசந்தவல்லியின் காதல் என்ற பகுதியிலே, வசந்தவல்லி தனக்காகக் குற்றால நாதரிடம் தூதுசெல்லுமாறு தன் தோழியிடம் கேட்டுக்கொள்வதாக அமைந்த பாடல் இறைவன்மீது கொண்ட பக்திமயமான காதலை வெளிப்படுத்துகின்றது. காம்போதி இராகத்தில், ஆதிதாளத்தில் அமைந்ததொரு பாடல் இது:

பல்லவி

தூது நீ சொல்லி வாராய் பெண்ணே
குற்றாலர் முன்போய்த் தூது சொல்லி வாராய்


அனுபல்லவி

ஆதிநாட் சுந்தரர்க்டகுத் தூதுபோ
னவர் முன்னே (தூது நீ)


சரணம்

உறங்க உறக்கமும் வாராது மாயஞ் செய்தாரை
மறந்தால் மறக்கவும் கூடாது - பெண்சென்மம் என்று
பிறந்தாலும் பேராசை ஆகாது அஃதறிந்துஞ்
சலுகைக் காரர்க்கு ஆசையாயினேன் இப்போது (தூது நீ)

நேற்றைக் கெல்லாங்குளிர்ந்து காட்டிஇன்று கொதிக்கும்
நித்திரா பாவிக்கென்ன போட்டி - நடுவே இந்தக்
காற்றுக்கு வந்ததொரு கோட்டி விரக நோய்க்கு
மாற்று மருந்து முக்கண் மருந்தென்று பரஞ்சாட்டி (தூது நீ)

வந்தால்இந் நேரம் வரச்சொல்லு வராதிருந்தால்
மாலையா கிலுந்தரச் சொல்லு - குற்றாலநாதர்
தந்தாலென் நெஞ்சைத் தரச்சொல்லு தராதிருந்தால்
தான்பெண்ணா கியபெண்ணை நான்விடேன் என்று (தூது நீ)


எனக்காகத் தூது சொல்லி வா பெண்ணே! முன்னாளிலே சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்காகத் தூதுபோன அந்தக் குற்றால நாதரிடம் எனக்காகத் தூது சென்று வா. தூங்கச் சென்றால் தூக்கம் வரவில்லை. மாயம் செய்த அவனை மறக்க முயன்றால் அதற்கும் முடியவில்லை. பெண்ணாய்ப் பிறந்தாலும் நான் பேராசைகொள்ளக்கூடாது என்பதை நான் அறிந்திருந்தாலும் அவர்மீது நான் ஆசைப்பட்டுவிட்டேன். அதனால் நீ எனக்காகத் தூது சென்றுவா.
நேற்றெல்லாம் குளிச்ச்சியாக இருந்து, இன்றைக்குக் கொதிப்பாக இருக்கின்ற இந்த நித்திரை என்ற பாவிக்குக்கூட, என்னுடன் போட்டியா? இதற்கிடையில் இந்தத் தென்றலுக்கும் ஓர் அழகு வந்துவிட்டதே! எனது விரகதாபத்தினை மாற்றுவதற்கான மருந்து முக்கண்ணன்தான் என்று அவரிடம் சென்று எடுத்துரைத்து நீ தூது சென்றுவா.

வருவதென்றால் அவரை இப்போதே வரச்சொல். இல்லையென்றால் அவர் தன் மார்பிலே அணிந்திருக்கும் கொன்றைமாலையையென்றாலும் தரச்சொல். குற்றாலநாதர் அவராக எனக்கு ஏதாவது தருவதாயிருந்தால் என்னிடமிருந்து அவர் கவர்ந்துசென்ற என் நெஞ்சைத் திருப்பித் தரச்சொல். இல்லையென்றால் அவரே பெண்ணாக இருக்கின்ற அவரது சக்தியை நான் விடவேமாட்டேன் என்று சொல். இப்படியெல்லாம் சொல்லிவர இப்பொதே தூது செல் என்பது இந்தப்பாடலின் கருத்து.

இந்த நூலிலே வசந்தவல்லி என்ற பெண் பந்துவிளையாடும் காட்சியை விளக்குவதாக அமைந்துள்ள பாடல்கள் நம்மை மிகவும் பரவசப்படுத்துகின்றன. பண்டைக்காலத்திலே பந்தடித்து விளையாடுவதும் பெண்களின் விளையாட்டுக்களிலே ஒன்றாக இருந்திருக்கின்றது என்பதற்கு இந்தப்பாடல்கள் சான்றாக உள்ளன. பந்தை எறிவதும், அதைப்பிடிப்பதும், பந்து பறப்பதும், நிலத்தில் விழுவதுமான காட்சிகளைப் படம்பிடித்துக்காட்டுவதுபோல இந்தப்பாடல்களைப் பொருத்தமான சந்தத்தில் புலவர் எழுதியுள்ளார்.

செங்கையில் வண்டு கலின்கலின் என்று ஜெயம் ஜெயம் என்றாட - இடை
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்தாட - இரு
கொங்கை கொடும்பகை வென்றனம் என்று குழைந்து குழைந்தாட - மணிப்
பைங்கொடி மங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றனளே.

பொங்கு கனங்குழை மண்டிய கெண்டை புரண்டு புரண்டாட - குழல்
மங்கு வில்வண்டு கலைந்தது கண்டு மதன்சிலை வண்டோட - இனி
இங்கிது கண்டுல கென்படும் என்படும் என்றிடை திண்டாட
மங்கல மங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றனளே.
சூடக முன்கையில் வால்வளை கண்டிரு தோள்வளை நின்றாடப் - புனை
பாடக முஞ்சிறு பாதமும் அங்கொரு பாவனை கொண்டாட – நய
நாடக மாடிய தோகை மயிலென நன்னகர் வீதியிலே – அணி
ஆடக வல்லி வசந்த ஒய்யாரி அடர்ந்துபந் தாடினளே.


இந்தப் பாடல் வரிசையிலே, அடுத்ததாகத் தொடர்ந்து வருவது திரைப்படம் ஒன்றிலே இடம்பெற்றதால் மிகவும் பிரபல்யமாகிவிட்ட பாடலாகும். 'காதலன்' என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடலை எழுதியவர் இக்காலத் திரைப்படப் பாடலாசிரியர்களில் ஒருவர்தான் என்று இன்னும் பலர் எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால், திரிகூடராசப்பக் கவிராயர் என்ற புலவரால் இயற்றப்பட்ட குற்றாலக் குறவஞ்சியிலே இடம்பெற்ற அந்தப்பாடலைத் திரைப்படத்திற்காக எடுத்தாண்டு இசையமைத்துப் பயன்படுத்தியுள்ளார்கள் என்பதுதான் உண்மை.

அந்தப்பாடல்,

இந்திரை யோவிவள் சுந்தரி யோதெய்வ ரம்பையோ மோகினியோ - மனம்
முந்திய தோவிழி முந்திய தோகரம் முந்திய தோவெனவே - உயர்
சந்திர சூடர் குறும்பல வீசுரர் சங்கணி வீதியிலே - மணிப்
பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரிபொற் பந்து கொண்டாடினளே.


வசந்தவல்லியின் அழகினை வர்ணிக்கும் பாடல்கள் சொற்சுவையும், பொருட்செறிவும் நிரம்பியவை. படிக்கப்படிக்க இன்பம் தருபவை. உதாரணத்திற்காக இரண்டு பாடல்களை எடுத்து இரசிப்போம்.

அரம்பை தேசவில்லும் விரும்பி ஆசை சொல்லும் புருவத்தாள் - பிறர்
அறிவை மயக்குமொரு கருவம் இருக்கும் மங்கைப் பருவத்தாள்
கரும்பு போலினித்து மருந்துபோல் வடித்த சொல்லினாள் - கடல்
கத்துந் திரை கொழித்த முத்து நிரை பதித்த பல்லினாள்

துடிக்குள் அடங்கியொரு பிடிக்குள் அடங்குஞ்சின்ன இடையினாள் - காமத்
துட்டன் அரண்மனைக்குக் கட்டும் கதலிவாழைத் தொடையினாள்
அடுக்கு வன்னச் சேலை எடுத்து நெறிபிடித்த உடையினாள் - மட
அன்ன நடையிலொரு சின்ன நடைபயிலும் நடையினாள்


அத்தகைய அழகுள்ளவளான வசந்த வல்லிக்கு குறிபார்த்துச் சொல்வதற்காக வருகின்றாள் மலைக்குறவஞ்சி.

பல்லவி

வஞ்சி வந்தாள் மலைக்குற
வஞ்சி வந்தாள் (வஞ்சி)


அனுபல்லவி

வஞ்சி வந்தாள் திரிகூட ரஞ்சித மோகினி முன்னே
மிஞ்சிய விரக நோய்க்குச்
சஞ்சீவி மருந்த போலே (வஞ்சி)


சரணம்

மும்மை உலகெங்கும் வெல்லக்
கொம்மை முலையார்க்கு நல்ல
செம்மையா குறிகள் சொல்ல
அம்மே அம்மே என்று செல்ல (வஞ்சி)

சோலையில் வசந்தகாலம்
வாலகோ கிலம்வந் தாற்போல
கோலமலை வில்லியார் குற்
றாலமலை வாழுங் குற (வஞ்சி)

மாத்திரைக் கோலது துன்னச்
சாத்திரக் கண்பார்வை பன்னத்
தோத்திர வடிவம் மின்னப்
பூத்த மலர்க்கொடி என்ன (வஞ்சி)



வசந்த வல்லியின் விரகநோயைத் தீர்த்து வைக்கும் ஒரு சஞ்சீவி மருந்தைப் போல வஞ்சிவந்தாள். அழகிய மார்பகங்களைக்கொண்ட மலைவாழ் நங்கையர்கள் மூவுலகங்களிலும் உள்ள ஆண்களையெல்லாம் வெற்றிகொள்ளும் வகையில் குறிசொல்வதற்காக வஞ்சி வந்தாள். வசந்த காலத்திலே சோலைகளிலே இளம் குயிலினம் வருவதுபோல திருக்குற்றால மலையிலே வாழும் வஞ்சி என்பவள் வந்தாள். குறிசொல்லப் பயன்படும் கோலைக் கையில் பிடித்தவாறு, குறிசொல்லும் தனது ஆற்றலைக் கண்களிலே வெளிப்படுத்தியவாறு, கண்டவர்களர் போற்றும் அழகுடன், பூத்த மலர்க்கொடியொன்று நடந்துவருவதுபோலக் குறவஞ்சி வந்தாள் என்று குறிசொல்ல வருகின்ற வஞ்சியின் வரவை வர்ணிக்கும் அந்தப் பாடல் அற்புதமானது.

அவ்வாறு குறிசொல்ல வந்த குறவஞ்சி குறிசொல்லத் தொடங்கும் அழகை அவளது வாயாலேயே சொல்லக் கேட்போம்

சொல்லக்கேளாய் குறி சொல்லக்கேளாய் - அம்மே
     தோகையர்க் கரசேகுறி சொல்லக்கேளாய்
முல்லைப்பூங் குழலாளே நன்னகரில் வாழ் - முத்து
     மோகனப் பசுங்கிளியே சொல்லக் கேளாய்
பல்லக்கேறுந் தெருவில் ஆனைநடத்தி - மணிப்
     பணியா பரணம்பூண்ட பார்த்திபன் வந்தான்
செல்லப்பூங்கோதை நீ பந்தடிக்கையில் - அவன்
     சேனைகண்ட வெருட்சிபோற் காணுதே அம்மே!



இந்நூலில் இடம்பெறும் குறவஞ்சி நாடகம் இரசித்துப் படிப்பதற்கு மிகவும் சுவையானது. குறிசொல்ல வந்த வஞ்சியிடம் தன் மனதைக்கவர்ந்தவர் யாரென்றும் அவரது ஊர், பெயர், மலை முதலிய விபரங்களையும் சொல்லமுடியுமா உன்னால் என்று வசந்தவல்லி சவால் விடுகின்றாள். அதற்குக் குறவஞ்சியின் பதிலும், அந்தப் பதிலால் கோபங்கொள்ளும் வசந்தவல்லியின் வார்த்தைகளும், குறவஞ்சியின் விளக்கமும் அழகான இசைப்பாடல்களாக உள்ளன.

உன்னைப்போல் எனக்கவன் அறிமுகமோ – அம்மே
ஊரும் பெரும் சொல்லவதும்ங் குறிமுகமோ?
பின்னையுந்தான் உனக்காகச் சொல்லுவேனம்மே – அவன்
பெண்சேர வல்லவன்காண் பெண்கட் கரசே!

வண்மையோ வாய்மதமோ வித்தை மதமோ – என்முன்
மதியாமற் பெண்சேர வல்லவன் என்றாய்
கண்மயக்கால் மயக்காதே உண்மை சொல்லடி – பெருங்
கானமலைக் குறவஞ்சி கள்ளி மயிலி

பெண்ணரசே பெண்ணென்றால் திரியும் ஒக்கும் - ஒரு
பெண்ணுடனே சேரவென்றாற் கூடவும் ஒக்கும்
திண்ணமாக வல்லவனும் நாதனும் ஒக்கும் - பேரைத்
திரிகூட நாதனென்று செப்பலாம் அம்மே!


'அம்மா பெண்களுக்கு அரசியே! உன்னைப்போல எனக்கு அவன் அறிமுகமானவனா? அவனுடைய ஊரையும் பேரையும் குறியினால் சொல்ல முடியுமா? இல்லையே! ஆனாலும் நான் அவற்றை உனக்காகச் சொல்வேன். அவன் பெண்களோடு சேர்வதிலே மிகவும் வல்லவன்' என்று வஞ்சி சொல்கிறாள். உடனே கோபங்கொண்ட வசந்தவல்லி, 'மயிலைப் போல ஒயில் கொண்ட மலைக் குறத்தி! கள்ளி! என்னடி சொன்னாய்? உனது உடல் வலிமையால் வந்த குறும்பா? வாய்க்கொழுப்பா? அல்லது குறிசொல்லும் வித்தையின் செருக்கா? என்முன்னே நின்று கொஞ்சமும் மதிப்பில்லாமல் என் காதலனைப் பெண்களோடு கூடுவதில் வல்லவன் என்று பழிக்கிறாய்! உன் கண்மயக்கினால் என்னை மயக்க வேண்டாம் உண்மையைச் சொல்லிவிடு.' என்று அதட்டுகின்றாள்.

அதற்குக் குறவஞ்சி, பெண்ணரசியே! 'பெண்' என்றால் 'திரி' என்ற கருத்தும் உண்டு. பெண்களோடு 'சேர' என்றால் 'கூட' என்றும் கருத்து உண்டு. 'உறுதியாக வல்லவன்'என்பது நாதனையும் குறிக்கும். அதனால், அவன்பெயர் திரி-கூட-நாதன் என்று சொல்லலாம் என்றுதான் நான் சொன்னேன் என்றவாறு விளக்கம் தருகின்றாள். புலவரின் தமிழ் வளத்தினையும், தமிழின் சொல் வளத்தினையும் புலப்படுத்தி நிற்கும் அருமையான பாடல் இது.

இவ்வாறு இலகுவான சொற்களிலும், செழுமையான இலக்கியங்கள் தமிழ் மொழியில் உள்ளன என்பதற்குக் குற்றாலக் குறவஞ்சி தக்கதொரு சான்றாக விளங்குகின்றது. பிற்காலத்தில் தோன்றிய கவிஞர்கள் சாதாரண மொழி நடையில் சரித்திரம் படைத்த இலக்கியங்களை ஆக்குவதற்கு வழிகாட்டியாக இருந்த நூல்களில், குற்றாலக் குறவஞ்சியும் ஒன்றாகும். இந்த நூலின் எல்லாப் பாடல்களுமே படித்து இன்புறத்தக்கன. சிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிட்டுள்ளேன். இதன் மூலம் எல்லாப் பாடல்களையும் படித்துச் சுவைக்க வேண்டும் என்ற ஆர்வம் தமிழ் மக்களுக்கு எற்படவேண்டும், அது செயல்பெறவேண்டும், எல்லோரும் இன்புற வேண்டும் என்பதுவே இக்கட்டுரையின் நோக்கமாகும்.



srisuppiah@hotmail.com