அங்காடித் தெரு

திரைவிமர்சனம் ( கவிஞர் இரா.இரவி)


இயக்குனர்: திரு. வசந்தபாலன்
தயாரிப்பு : ஜங்கரன் இன்டர்நேசனல் பிலிம்ஸ் (பி.) லிட்.

'வெயில்' என்ற வித்தியாசமான திரைப்படத்தை தந்த இயக்குநர் திரு. வசந்தபாலனின் அற்புதமான படைப்பு 'அங்காடித் தெரு'. சுpலப்பதிகாரத்தில் அல் அங்காடி என்ற சொல்லிற்கு ஏற்ப நல்ல தமிழ்ச் சொல்லில் பெயர் வைத்தமைக்குப் பாராட்டுக்கள். செயற்கைத்தனம் எதுவுமில்லாத இயல்பான திரைப்படம்.

இயந்திரமான சென்னை வாழ்க்கையில் கிராமத்தில் இருந்து வயிற்றுப்பிழைப்பிற்காக வந்தவர்கள் படும் பாட்டை இன்னலை மிக நுட்பமாக வடித்து உள்ளார். முதலாளிகள், முதலாளிகளாகவே இருக்கிறார்கள் மனிதாபிமானிகளாக இருப்பதில்லை என்பதை உணர்ந்தும் அழகிய திரைப்படம் திரைப்படம் பார்க்கும் உணர்வே இன்றி நாமும் அங்காடியில் வேலை பார்த்து கஷ்டப்படுவதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது. இது இயக்குனரின் வெற்றி. சென்னையின் மறுப்பக்கத்தை உண்மை முகத்தைக் காட்டி உள்ளார்.

திரைப்படத்தனம் இல்லாமல் நம் பக்கத்து வீட்டு பையன் போன்ற கதாநாயகன், எதிர் வீட்டுப் பெண்ணைப் போன்ற கதாநாயகி. பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற போதும், அப்பாவின் விபத்து மரணம் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு நண்பன் பாண்டியுடன் சென்னைக்கு வந்து அங்காடியில் வேலை பார்த்து படும் துயரை கண்முன்னே கொண்டு வந்து விடுகிறார் இயக்குனர். துணிக்கடைகளில் பல மணிநேரம் நின்று கொண்டே வேலை பார்ப்பவர்களுக்கு ஒருவித நோய் வருவதை உணர்த்துகின்றார். கடையில் கண்காணிப்பாளராக இருப்பவர்கள் மனிதநேயமின்றி, முதலாளிகளிடம் நல்ல பெயர் எடுப்பதற்காக கொடுங்கோலர்களாக நடந்து கொள்ளும் விதம்,பெண் பணியாளர் என்றும் பார்க்காமல் அடிப்பது, கண்ட இடங்களில் கை வைப்பது போன்ற மனித உரிமை மீறல்கள் என நடக்கும் அவலத்தை தோலுரித்துக் காட்டுகிறார் குத்துபாட்டு, கவர்ச்சி என்ற வழக்கமான திரைப்படப் பாணியிலிருந்து விலகி, கோணத்தில் வழங்கி இருக்கும் இயக்குனரைப் பாராட்டலாம்.

'உழைத்தால் உயரலாம்' என்பதற்க்கு எடுத்துக்காட்டாக, மிகவும் மோசமான நிலையில் உள்ள கழிவறையை சிரமப்பட்டு சுத்தம் செய்து விட்டு, கழிவறை செல்ல கட்டணமாக ஒரு ரூபாய் வசூலித்து, சம்பாத்திக்கும் பாத்திரம் மனதில் நிற்கிறது. கதாநாயகி தான் வேலை பார்க்கும் அங்காடியில், உடன் வேலை பார்க்கும் பெண்களிடையே சேமிப்புச் சீட்டு நடத்தியதற்காக, கண்காணிப்பாளர் அடிப்பது கண்களில் நீர் வரவழைக்கின்றது. ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் அன்றாடம் சந்திக்கும் வாழ்க்கைப் போராட்டத்தை நுட்பமாக செதுக்கி உள்ளார். கதாநாயகன் வேலையை விட்டு எடுத்து விடாதீர்கள், என கண்காணிப்பாளரின் காலைப் பிடித்து கதறும் காட்சி, வல்லரசாகப் போகிறோம் என ஏவுகணைகள் ஏவி, மார் தட்டினாலும், மறுபுறம் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாமல், இருக்க இடமின்றி சாலை ஓரங்களில் தூங்கும் கொடுமை, சென்னையில் இன்றும் பார்க்கலாம். சிங்காரச் சென்னைக்கு சென்றவர்களுக்கு தெரியும், நட்சத்திர விடுதிகள் பிரமாண்டமாக இருக்கும், அதே சாலையில் சாலை ஓரத்தில் குடும்பம் நடத்தும் வறுமையும் இருக்கும். இந்தப் படத்தில் சாலை ஓரத்தில் படுத்து இருந்தவர்கள் மீது வாகனங்கள் மோதி ஏறி, கதாநாயகனுக்கு காயம், கதாநாயகிக்கு இரண்டு காலும் பறி போய் விடும். கதாநாயகி சம்பாத்தியத்தில் வாழ்ந்து வந்த நோயாளி அப்பா, மகளுக்கு கால்கள் இல்லை என்றதும், கம்பி நீட்டுவதைக் கண்டுஇகதாநாயகன் அவரிடம், அவளை கைவிட்டு வீடாதீர்கள் என்று கெஞ்சுவதும், அவரோ நானே நோயாளி, என்னால் எப்படி? என செல்வதும், கடைசியில் தாலி கட்டி மனைவியாக்கி வாழ்ந்து ஜெயிக்கும் கதை. மாற்றுத் திறன் படைத்தோருக்கும் நம்பிக்கை விதைக்கும் விடியல் முடிவு.

கதாநாயகியின் தங்கை, வேலை பார்த்த வீட்டில் பெரிய மனுசி ஆனதும் நாயைக் கட்டி இருக்கும் இடத்தில், தங்கையை தங்க வைத்த அவலம் கண்டு கொதிக்கிறாள். சடங்கு செய்ய வசதியின்றி, கோயில் அம்மன் திருவிழாவில் அனுமதி கேட்டு சடங்கு நடத்தும் நிகழ்வு, ஏழை பெண் குழந்தைகளின் உள்ளக் குமுறலைக் பதிவு செய்துள்ளார். நண்பனாக வரும் பாண்டி நெஞ்சில் நிற்கிறார். பாடல்கள் நன்றாக உள்ளது. 'அவள் அப்படி ஒன்றும் அழகில்லை' பாடல் ரசிக்கும்படி உள்ளது.

தோழி, தோழன் காதல் கடிதங்கள் தந்து உதவியவர்கள், கண்காணிப்பாளரிடம் மாட்டியவுடன், தோழன் நான் காதலிக்கவில்லை என்றதும், தோழி ஓடிச் சென்று, குதித்து தற்கொலை செய்யும் காட்சி படம் முடிந்து வந்தும், மனசை பிசைகின்றது. தனியார் நிறுவனங்களில் பணியாளர்களை கொத்தடிமை போல நடத்தும் அவலங்களை தோலுரித்துக் காட்டி, விழிப்புணர்வு விதைத்து உள்ளார். மனித உரிமைகளுக்காக உரக்கக் குரல் கொடுத்து உள்ளார். தமிழ் திரைப்படங்களில் அத்திப்பூத்தாற் போல் வரும் நல்ல திரைப்படங்களில் 'அங்காடித் தெரு 'திரைப்படமும் ஒன்றாகும்.

வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு மாட்டுக் கொட்டம் போல படுக்கும் இடம்,  கழிவறைக்கு தள்ளுமுள், உணவு பெறுவதற்கு சண்டை, தாமதமாக வரும் ஒரு நிமிடத்திற்கு ஒரு ரூபாய் சம்பளப் பிடித்ததம். இது போன்ற அவலங்கள் இன்றும் பல தனியார் நிறுவனங்களில் நடந்து கொண்டு தான் இருக்கிறது என்பதை மிக தைரியமாக திரைப்படத்தில் காட்டி

திரைப்படத்தில் யாரும் நடிக்கவில்லை, அந்தந்த பாத்திரங்களாகவே மாறி இருக்கிறார்கள். விலைமகளாக இருந்தவளை மணம் முடித்த குள்ளமானவர். தனக்கு பிறக்க போகும் குழந்தை தன்னைப் போல் குள்ளமாகப் பிறக்கக் கூடாது என நினைப்பதும், குள்ளமாகப் பிறந்ததும் வருந்துவதும், அதற்கு அவள், இப்படி பிறந்தற்காக மகிழ்கிறேன். நான் ஒரு காலத்தில் விலைமகளாக இருந்தவள், குழந்தை அழகாகப் பிறந்தால் இந்த ஊர் தப்பாகப் பேசும், இனி பேசாது என்பாள். வுசனம் மிக நன்று. தோழன் கண்காணிப்பாளருக்காகப் பயந்து, சத்தியமாக நான் காதலிக்கவில்லை என்றதுமே அவள் செத்து விட்டாள், குதித்து தற்கொலை செய்தது அவள் உடல் மட்டுமே என்பது நல்ல வசனம். பின்னர் தோழன் பைத்தியமாவது இப்படி நெஞ்சை நெகிழ வைக்கும் பல சம்பவங்களின் தொகுப்பு தான் இந்தப் திரைப்படம். முதலாளிகளின் சுரண்டலை தோலுரித்துக் காட்டி உள்ளார்.

நடிகைகளின் அங்கத்தைக் காட்டி, காசு சேர்க்கும் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், நடிகர்களும் அவசியம் பார்த்து திருந்த வேண்டிய திரைப்படம் இது. மிகவும் ஆரோக்கியமான திரைப்படத்தை, மக்களின் உணர்வை சொல்லாத கதையை, திரைப்படம் பார்த்து விட்டு வந்த பிறகும் வழங்கிய வசந்தபாலனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். திரைப்படம் பார்த்து விட்டு வந்த பிறகும் நம் கண்முன்னே ரங்கநாதன் தெரு பணியாளர்கள் தான் வருகிறார்கள். இது தான் திரைப்படத்தின் வெற்றி.

 

eraeravik@gmail.com

 

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.