கோரிப்பாளையம்
(goripalayam)

திரைவிமர்சனம்:  (கவிஞர் இரா.ரவி)

நடிகர்கள்:    ஹரிஷ், ராமகிருஷ்ணன், ரகுவண்ணன், பிரகாஷ், விக்ராந்த், பூங்கொடி, சுவாஷிகா
இசை:        சபேஷ்-முரளி
தயாரிப்பு:     மைக்கேல் ராயப்ப
ன்
இயக்குனர்:  இராசு மதுரவன்
'மாயாண்டி குடும்பத்தார்' என்ற வெற்றிப்படத்தை இயக்கிய திரு.இராசு மதுரவன் அவர்களின் இயக்கத்தில் வந்துள்ள அடுத்த படம். 10 இயக்குனர்கள் மாயாண்டி குடும்பத்தார் படத்தில் நடித்தனர். கோரிப்பாளையம் திரைப்படத்தில் சிங்கம் புலி, ரவிமரியா உள்ளிட்ட சில இயக்குனர்கள் நடித்து உள்ளனர்.

தூங்கா நகர் மதுரையில் உறக்கத்தைத் தொலைத்த இளைஞர்கள் கதை தான். காவலர் தன்; மகனிடம் சிகரெட் வாங்கி வரச் சொல்வதும், பற்ற வைத்து வாடா என்பதும், மது அருந்துவதும், அதன் காரணமாக மகன் கெட்டவனாகி, கஞ்சாவிற்கு அடிமையாவதை திரைப்படம் உணர்த்துகின்றது. பின்னாளில் காவலர் தன் மகன் சீரழிய தானே காரணமாகி விட்டோம் என எண்ணி வருந்தும் காட்சி நெகிழ்ச்சி. அதிகபட்ச வன்முறை படத்தில் உள்ளது. வெட்டு, குத்து கொலை மிக அதிகமாக காட்சியில் வருவதால் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையை கொலை நகரமாக சித்தரித்து இருப்பது சற்று அதிகம் தான்.

திரைத்துறையில் பல மூட நம்பிக்கை உள்ளது. மதுரையில் திரைப்படம் எடுத்தால், படம் நன்றாக ஓடும் என்ற மூட நம்பிக்கை திரைத்துறையில் உள்ளது. தற்போது மதுரைப்பகுதி பெயர் சூட்டும் பழக்கம் வந்துள்ளது. சுப்பிரமணியபுரம் என்று பெயர் வைத்து படம் ஓடியதால் கோரிப்பாளையம் என்று சூட்டி உள்ளனர். அடுத்து ஜெய்ஹிந்த்புரம் என ஒரு திரைப்படம் தயாராகின்றது. பெயருக்காக படம் ஓடுவதில்லை.

கஞ்சா மதியை மயக்கும், அதன் காரணமாகவே இளைஞர்கள் திசை மாறிப்போகிறார்கள் என்பதை திரைப்படம் நன்கு உணர்த்தி உள்ளது. நண்பர்களுடன் சகோதரி வீட்டிற்கு சென்றதும், வந்தவர்கள் திருட்டு பயலுக, எனவே என் நகையையும், பணத்தையும் பத்திரமாக வைத்து இருங்கள் என்று அடுத்த வீட்டில் கொடுக்கும் சகோதரியிடம், அடுத்தவரை நம்பும் நீ என்னை நம்பவில்லையே என உணவு உண்ணாமல் வெளியே வரும் காட்சி உருக்கம்.

இயக்குனர் ரவி மரியா சிறந்த வில்லனாக நடித்து உள்ளார். இந்த நாட்டில், ஆணாதிக்க சமுதாயத்தில் ஆண் எப்படியும் திரியலாம், ஆனால் பெண் மட்டும் கட்டுப்பெட்டியாகவே இருக்க வேண்டுமென்ற சிந்தனை நிலவுவதை திரைப்படத்தில் நன்கு உணர்த்தி உள்ள இயக்குனருக்குப் பாராட்டுக்கள்.

தவறு எதுவும் செய்யாத சகோதரியை தவறாக எண்ணி, வீட்டிற்கு திருட வந்த திருடனுக்கும் உனக்கும் காதல் என்று சொல்லி அடிப்பது, உயிரோடு தூக்கில் ஏற்றி கொல்லும் கொடூர வில்லனாக இயக்குனர் ரவி மரியா நடித்து உள்ளார். தீர விசாரிக்;காமல் உணர்ச்சி வசப்பட்டு கொலை புரியும் முட்டாள்கள் மலி;ந்து விட்டனர். என்பதை உணர்த்துகின்றது படம்.

தந்தை இறந்ததும் தவிக்கும் மகன், குடும்பத்திற்காக கொலை செய்யும் கூலிப்படைத் தலைவனாக மாறிடும் அவலம் உணர்த்துகின்றது திரைப்படம்.

அனாதை என்ற சொல்லே அகற்றப்பட வேண்டும், ஆதரவற்றோர் என்பதே வழக்கில் வர வேண்டும். அவர்களின் உள்ளத்து வலியை திரைப்படம் உணர்த்துகின்றது. ஒரு தாய், தந்தையைப் பிரிந்து வேறு ஒருவனுடன் ஓடி விட்டால் குழந்தையின் வாழ்க்கை எந்த அளவிற்கு பாதிக்கின்றது என்பதை திரைப்படம் நன்கு உணர்த்துகின்றது. ஒருவனுக்கு ஒருத்தி என்று ஒழுக்கமாக இரு பாலரும் வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும் என்பதை உணர்த்துகின்றது.

ஓடிப்போன தாய் வேறு கணவனுடன் வாழ்ந்து வரும் போது நண்பர்களுடன் வந்த மகனை நீ யார் என்று கேட்பதும், மகன் என்று சொல்லியதும் போய் விடு, என் வாழ்க்கையை கெடுத்து விடாதே என்பதும், தாய், தன்னை யார் என்று கேட்டதை நினைத்து நண்பர்களுடன் மகன் அழுவதும் உருக்கமான, சோகமான காட்சிகள், படம் பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீர் வரவழைத்து இயக்குனர் திரு.இராசு மதுரவன் வெற்றி பெறுகிறார். நட்புக்காக காதலை மறைத்தது அறிந்து, தான் கட்டிய தாலியை அத்து, காதலித்த நண்பனை தாலி கட்டச் சொல்லும் காட்சி நெகிழ்ச்சி. நட்பின் உச்சம்.

மயில்சாமி விபத்தில் குடும்பத்தை இழந்து தனிமையில் வாடும் கொடுமையிலிருந்து மீள இளைஞர்களுடன் நட்பாக இருந்து காலம் கழிக்கும் நல்ல பாத்திரம் மனதில் நிற்கின்றார். மதுரையைச் சுற்றித் சுற்றித் திரைப்படம் எடுத்துள்ளனர்.

படத்தின் மிகப்பெரிய பலம் இயக்குனர் சிங்கம் புலிதான். அவர் வந்து நின்றாலே சிரிப்பு வந்து விடுகின்றது, நகைச்சுவை நடிகர் வடிவேலு நிலைக்கு உயர வாய்ப்பு உள்ளது. பெண் பார்க்க சென்ற இடத்தில் கனவு கண்டு பெண்ணிற்கு பதிலாக அருகிலிருந்த அத்தையைக் கட்டிப் பிடித்து அவர் வாழ்க்கையை சிதைத்தது என பல்வேறு காட்சிகளில் திறம்பட நடித்துள்ளார். கடைசியில் அத்தையையும், மாமாவையும் சேர்த்து வைக்கும் காட்சி நல்ல நகைச்சுவை.

திரைப்படத்தில் ஆபாச நடனங்கள், அதிகபட்ச வன்முறை காட்சிகள் தவிர்த்து இருந்தால் மிகத்தரமான திரைப்படமாக வந்து இருக்கும். திரைப்படத்தில் நல்ல பல நெறிப்படுத்தும் செய்திகள் உள்ளது. அதற்காக இயக்குனரை பாராட்ட வேண்டும். குழந்தையின் உயிரை வளர்ப்பது மட்டுமல்ல, மனசை வளர்ப்பதும் தந்தையின் தலையாய கடமை என உணர்த்தும் திரைப்படம். இயக்குனர் திரு. இராசு மதுரவன் வழக்கமான மசாலாக்களை தவிர்த்தால் தனித்து நிலைத்து நிற்கலாம்.

 

 

 

eraeravik@gmail.com