நீங்கல் ஒல்லுமோ?

அனலை ஆறு இராசேந்திரம்

லைவன் தான் பொருள் தேடுதற்காக பிரிந்து போகவிருக்கும் செய்தியைத் தோழிக்குச் சொன்னான். அவ்வேளையில் அவன் தலைவியைப் பிரிந்து செல்வது தோழிக்குப் பொருத்தமற்றதாகத் தெரிந்தது. பிரிவின்போது தலைவி படும் துன்பத்தையும், செல்லும் வழியின் கடுமையையும் அவனுக்கு எடுத்துச் சொல்லிப் பயணத்தை விலக்கிட முனைகிறாள் தோழி.

'ஐயனே!

நீ பிரிந்து செல்வையாயின் தலைவியின் சிறுநெற்றி மெலிந்து வனப்பிழக்கும். பெருமை பொருந்தியனவான அவள் தோள்கள் தளர்ந்து சாயும். பரந்த அழகிய அல்குற் பகுதியிடத்துக் காணப்படும் வரிகள் வாடும். இரவும் பகலும் தன்னினைவு இழந்தவளாய் மெல்லெனப் பாயும் மழைபோல மலர்போலும் கண்களிலிருந்து நீர்த்துளிகள் விழ, அவள் துன்பத்தில் உழல்வாள்.

இதனைக் கருதிப் பாராது செய்யும் தொழிலில் விரும்புடையனாய் அவளைப் பிரிந்து செல்லுதல் தகுமோ?
வேங்கையுடன் கொண்ட பகையை, அதனோடு சண்டையிட்டுப் போக்கிக் கொண்ட களிறு, வெறிமிகுந்து செருக்குற்று வழிச் செல்வோரைக் கொல்லும் தன்மையானதும், முள்ளம் பன்றிகளைக் கொண்டதுமாகும் நீ செல்லும் காடு. அங்கே பெரிய கைகளையுடைய கரடியினங்கள் புற்றாஞ் சோற்றினைத் தேடும் புற்றுக்கள் சுவர்போல் அமைந்தும் புதர் மண்டியும் காணப்படும். பொதுவிடத்தே கடவுள் வழிபாடு இன்றிப் பாழடைந்த கோயிலின்கண், வாழ்ந்த பழக்கத்தினால் பெரிய காட்டுப்புறாக்கள் அவ்விடத்தை விட்டு நீங்காது தம் பெடையொடு கூடி வாழும் பெருங்கற்கள் மிகுதியாகக் காணப்படும் மலையடிவாரத்தே செல்வது நின் வழியாகும்.

மேற்காட்டிய எழுத்தோவியம் நம் புலவர் ஈழத்துப் பூதந்தேவனார் அவர்கள் யாத்த பாடலைத் தழுவி அமைந்ததாகும். அப்பாடல் இது:

சிறுநுதல் பசந்து வெருந்தோள் சாஅய்
அகலெழில் அல்குல் அவ்வரி வாடப்
பகலுங் கங்குலும் மயங்கிப் பையெனப்
பெயல்உறு மலரின் கண்பனி வார
ஈங்கிவள் உழக்கும் என்னாது வினைநயந்து
நீங்கல் ஒல்லுமோ ஐய வேங்கை
அடுமுரண் தொலைத்த நெடுநல் யானை
மையலம் கடாஅந் செருக்கி மதஞ்சிறந்து
இயங்குநர்ச் செருக்கும் எய்படு நனந்தலைப்
பெருங்கை எண்கினம் குரும்பி தேடும்
புற்றுடைச் சுவர புதலிவர் பொதியிற்
கடவுள் போகிய கருந்தாட் கந்தத்து
உடனுறை பழமையின் துறத்தல் செல்லாது
இரும்புறாப் பெடையொடு பயிரும்
பெருங்கல் வைப்பின் மலைமுதல் ஆறே!


                                                                                   ( அகம் - 307)


தோழி 'ஈங்கிவள் உழக்கும் என்னாது வினைநயந்து நீங்கல் ஒன்னுமோ? என்னுமிடத்தே! உடனுறை வாழ்வினும் நினக்கு பொருள் பெரிதோ?' என நேரடியாகக் கேட்பதும்
'உடனுறை பழமையின் துறத்தல் செல்லாது இரும்புறாப் பெடையொடு பயிரும்' என்னுமிடத்தே பழகிய இடத்தை விட்டுப் புறாக்கள் கூட நீங்காது வாழுங்கால் தலைவியைப் பிரிந்து செல்ல நீ நினைப்பது தகுமோ?' எனக் குறிப்பாற் கேட்பதும் நயந்தற்குரியனவாம்.analairaj@hotmail.com