சங்க இலக்கியத்தில் விடுகதை

முனைவர்.இரா.குணசீலன


ங்க இலக்கியங்கள் சங்கத்தமிழரின் வாழ்வியலைக் கூறும் வரலாறாகும். விடுகதைகள் நாட்டுப்புற மக்களின் சிந்தனைத் திறனுக்கு தக்க சான்றாகும். சங்க இலக்கியங்கள் வாய்மொழி வழி வந்தவை என்பதால் சங்கப்பாடல்கள் பலவற்றிலும் விடுகதைக் கூறுகளைக் காணமுடிகிறது. அதனை எடுத்தியம்புதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

விடுகதை

விடும் கதை – விடுவிக்கும் கதை என்பதே விடுகதையாகும். மறைபொருளிலிருந்து பொருள் விளக்கும் முயற்சியே விடுகதை. வினா எழுப்பி விடையளிக்குமாறு இவ்விடுகதைகள் அமையும். அறிவூட்டுவது சிந்தனையைத் தூண்டுவது இதன் நோக்கமாகும். யாப்பு முறையை சுட்டும் போது தொல்காப்பியர்,

'பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே' என்றுரைக்கிறார்.

'பிசி, நொடி, புதிர், விடுகதை, வெடிபோடுதல், அழிப்பாங்கதை' ஆகியன இதன் வேறு பெயர்களாகும். விடுகதை என்னும் சொல்லாட்சி பழந்தமிழ் இலக்கியங்களில் இல்லை. 'பிசி' என்னும் சொல்லே பிதிர் என்று மாறி புதிர் என்று மாறியது. குறுகிய காலத்தில் விடைகாணும் முயற்சியால் 'நொடி' என்ற பெயரும் பெற்றது.

சங்கப்பாடல்களில் விடுகதை

Ø க.கைலாசபதி அவர்கள் 'தமிழ் வீரயுகப்பாடல்கள்' என்னும் தம் நூலில் சங்க இலக்கியப்பாடல்கள் வாய்மொழிப்பாடல்கள் என்று நிறுவியுள்ளார்.
Ø கதிர்மகாதேவன், தமிழண்ணல், கமில் சுவலபில் போன்ற தமிழ்ச்சான்றோரும் இதனை ஏற்றுள்ளனர். இவர்களின் கருத்து எவ்வளவு உண்மையானது என்பதை சங்கப்பாடல்களை நன்கு உற்று நோக்கும் போது அறிந்துகொள்ள முடிகிறது.

நாட்டுப்புறவியல் கூறுகள் பலவும் பழந்தமிழர் வாழ்வில் இயைபுற்று இருந்தமையும்இ அவற்றுள் 'விடுகதை' வழக்கிலிருந்த மரபையும் சங்கப்பாடல்கள் வழியாக நன்கு அறிந்துகொள்ளமுடிகிறது.


'துணங்கை அம் செல்விக்கு அணங்கு நொடித்தாங்கு' (பெரும்பாணாற்றுப்படை-
459)

என்னும் அடிகள் வாயிலாகப் பேய்மகளிர் கொற்றவைக்கு விடுகதை என்னும் நொடிவிட்டதை கடியலூர் உருத்திரங்கண்ணனார் சுட்டுவர்.


கலித்தொகையில் விடுகதைக் கூறு.

தலைவன் தலைவியின் அழகு நலத்தை வியந்து புகழும் பாடல் ஒன்று விடுகதையின் கூறுகளைத் தன்னகத்தே தாங்கிநிற்கின்றது. பாடல் இதோஇ


'ஐ தேய்ந்தன்று, பிறையும் அன்று
மை தீர்ந்தன்று, மதியும் அன்று
வேய் அமன்றன்று, மலையும் அன்று
பூ அமன்றன்று, சுனையும் அன்று
மெல்ல இயலும், மயிலும் அன்று
சொல்லத் தளரும், கிளியும் அன்று'

                          (கலி
55-9-14)

இதன் பொருள்,

உன் நெற்றி வியக்குமாறு தேய்ந்தது
ஆயினும் பிறையுமல்ல!
உன் முகம் மறுவற்றுள்ளது
ஆயினும் நிலவுமல்ல!
உன் கண் மலர் போலுள்ளது
ஆயினும் மலருமல்ல!
நீ அது பிறக்கும் சுனையுமல்ல
உன் சாயல் மெல்லென அசைவதே
ஆயினும் நீ மயிலுமல்ல!
நீ சொல்லுக்குச் சொல் தளர்கிறாய்
ஆயினும் நீ கிளியுமல்ல!


என்பதே ஆகும்.
விடுகதைக் கூறுகளுள் 'இயைபுநிலை விடுகதை' என்னும் வாய்மொழிக் கூறுகொண்டு இப்பாடல் விளங்குகிறது.

இப்பாடலுடன் ஒப்புநோக்கத்தக்க விடுகதை,

'பச்சைப் பசேலென்றிருக்கும் பாகற்காயுமல்ல
பக்கமெல்லாம் முள்ளிருக்கும் பலாக்காயுமல்ல
உள்ளே வெளுத்திருக்கும் தேங்காயுமல்ல
உருக்கினால் நெய்வடியும் வெண்ணெயுமல்ல'


விடை – ஆமணக்கு

வாழ்க்கை இயல்பு கூறும் விடுகதை

தலைவனுடன் உடன்போக்கில் பெற்றோரை நீங்கிச் சென்றாள் தலைவி. தலைவி மீது கொண்ட பற்றினால் அவள் சென்ற வழியிலேயே தொடர்ந்து வந்தால் செவிலி. வழியில் முக்கோர்பவரைக் கண்டுஇ தாங்கள் வந்த வழியில் எனது மகளைப் பார்த்தீர்களா என்று வினவினாள். அச்சான்றோர் சொன்ன பதிலே விடுகதை போல இருந்தது. அவர்கள் சொன்ன கருத்தை ஆழ நோக்கினால் வாழ்க்கை இயல்பு இதுதான் என்று புரிந்துகொள்ளும் பக்குவம் வந்துவிடும். பாடல் இதோ,

'பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கு அவைதான் என் செய்யும்?
நினையுங்காலை நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே
சீர் கெழு வெண்முத்;தம் அணிபவர்க்கு அல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதான் என்செய்யும்
தேருங்காலை நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே
ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவைதாம் என் செய்யும்?


                                           (கலித்தொகை 09)

என்றனர்.

Ø நறுமணப் பொருளான சந்தனைம் பூசிக்கொள்பவரல்லது மலையிலே பிறந்தாலும் மலைக்கு அவைதான் என்ன செய்யும்?
Ø சிறந்த வெண்முத்துக்கள் அணிபவருக்குப் பயன்படுவதன்றி கடலிலே பிறந்தாலும் கடலுக்கு அவைதான் என்ன செய்யும்?
Ø ஏழ் நரம்பிலான யாழில் தோன்றும் இன்னிசை யாழிலே பிறப்பினும் பாடுபவர்கல்லாது யாழுக்கு அவைதான் என்ன செய்யம்?
Ø இவைபோலவே உன் மகள் உனக்கும். அவள் உன் மகளாயினும் அவள் அவனுக்குப் பிடித்தவனோடு வாழ்வதே வாழ்வின் இயல்பு.

என்ற முக்கோற்பவரின் கேள்வி செவிலியைச் சிந்திக்கச் செய்வதாக அமையும். வாழ்க்கையின் இயல்பு அது தான் என்பதை உணரச்செய்வதாகவும் அமையும்.

குறுந்தொகையில் விடுகதை

வினாநிலை விடுகதை

தன் தலைவியின் கூந்தல் மணத்தைவிட சிறந்த மணம் வேறெந்தப் பூக்களிலும் உள்ளதா? என்று ஞிமிறிடம் கேட்கும் தலைவனின் கூற்று முழுமையான விடுகதையைக் கேட்டுஇ பதிலை எதிர்பார்ப்பது போலவே உள்ளது. பாடல் இதோ,

2. குறிஞ்சி - தலைவன் கூற்று

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.

                             -இறையனார்.

இப்பாடலின் வழி இக்கருத்தை உணரலாம்.


இயைபுநிலை விடுகதை

நிலத்தைவிடப் பெரியது
வானைவிட உயரமானது
கடலைவிட ஆழமானது எது?


என்று இன்று யாரையாவது கேட்டால் அவரவர் அறிவுக்கு ஏற்ப ஏதாவதொன்றைச் சொல்வார்கள். ஆனால் சங்கஇலக்கியம் பயின்றவர்களை இக்ககேள்வியைக் கேட்டால் உடனே சொல்வார்கள் 'காதல்' என்று. பாடல் இதோ,

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.'


குறுந்தொகை -3 குறிஞ்சி - தலைவி கூற்று

அம்மா சேலையை மடிக்க முயாது
அப்பா காச எண்ண முடியாது
அது என்ன?

(விடை – வானம் - நட்சத்திரம்)

என்பது போலவே இக்குறுந்தொகைப்பாடல் உள்ளது. அளக்கலாகா கூறுகளை விளக்கும் முயற்சியே இவை போன்ற விடுகதைகளாகும்.

புதிர் நிலை விடுகதை

தலைவியைச் சந்தித்து மகிழும் இடத்தைத் தோழியிடம் கேட்கிறான் தலைவன். தோழியோ நேரிடையாகக் கூறாமல் சுற்றி வளைத்துப் புதிர் போடும் முறையில் பதில் சொல்கிறாள்.

ஊர்க்கும் அணித்தே பொய்கை பொய்கைக்குச்
சேய்த்தும் அன்றே சிறுகான் யாறே
இரைதேர் வெண்குரு கல்ல தியாவதும்
துன்னல்போ கின்றாற் பொழிலே யாமெம்
கூழைக் கெருமண் கொணர்கஞ் சேறும்
ஆண்டும் வருகுவள் பெரும்பே தையே.

(குறுந்தொகை
113 மருதம் - தோழி கூற்று மாதீர்த்தனார்.)

ஊர்க்கு அணிமையில் பொய்கை உள்ளது. சிறு காட்டாறு அப்பொய்கைக்குத் தூரத்தில் இல்லை. அவ்வாற்றில் இரைதேடும் நாரையன்றி வேறு எவ்வுயிரும் அடைதல் இல்லை. நாங்கள் எம் கூந்தலுக்கு செங்கழுநீர் மலர் பறிக்க அங்கு செல்வோம். பெரிய பேதமை கொண்ட தலைவி அங்கும் வருவாள் என்கிறாள் தோழி.

'ஆற்றங்கரைக்கு வந்தால் தலைவியைப் பார்க்கலாம் என்று தலைவனுக்கு நேரிடையாகப் பதில் கூறாமல் தோழி பதில் சொல்லும் முறை புதிர் நிலை விடுகதை போல உள்ளது படித்து இன்புறத்தக்கதாகவுள்ளது.

சிந்திக்கத்தூண்டும் விடுகதை

இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் தலைவன் தன்னைப் பிரிவான் என்று அஞ்சி வருந்தினாள் தலைவி. அவள் மனநிலையை அறிந்த தலைவன்,

என் தாயும் உன் தாயும் என்ன உறவினர்?
என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவினர்?
நானும் நீயும் இதற்கு முன்னர் எந்நிலையில் உறவுடையவர்களாக இருந்தோம்?


என்று கேட்கிறான்.

எவ்விதத்திலும் தமக்கு இதற்கு முன் உறவு இல்லை என்பதே தலைவியின் மனதில் தோன்றும் பதில்.

செம்மண் நிலத்தில் சேர்ந்த மழைத்துளி போல நீயும் நானும் சேர்ந்தோம் என்ற தலைவனின் பதில். தலைவன் இனிதன்னை நீங்கமாட்டான் என்ற மனநிம்மதியைத் தலைவிக்கு அளிப்பதாகவுள்ளது. பாடல் இதோ,

'யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்
யானும் நீயும் எவ் வழி அறிதும்
செம் புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.'


குறுந்தொகை
40 – செம்புலப் பெயர்நீரார்.

என்ற பாடல் தலைவியின் மனதில் சிந்தனையைத் தூண்டி பதில் வழி மனமகிழ்ச்சியைத் தருவதாக அமைகிறது.

உறவு நிலை விடுகதை.

வெளிநாடுகளில் ஒரு பெண் தன் காதலையோ திருமணத்தையோ தன் பெற்றோரிடம் மிகவும் சாதரணமாக,

மகள் - அப்பா நேற்று மாலை எனக்கு திருமணம் முடிந்துவிட்டது.
அப்பா – ஓ அப்படியா. பரவாயில்லை மகளே இந்தமுறைதான் எங்களை அழைக்கவில்லை. அடுத்தமுறையாவது தவறாது அழைப்பாயா?

என்று கேட்பது ஒன்றும் உலக அதிசயமல்ல. வெளிநாட்டு மரபுகளைத் தழுவி தமிழர்களும் மாறிவருவது கண்கூடு. இன்று ஒரு தமிழ்ப் பெண் தன் காதலையோ திருமணத்தையோ பெற்றோரிடம் சொல்வதற்குத் தயங்கினாலும் சொல்வதில் பெரியளவுக்கு தயக்கமோ, சிக்கலே இருப்பதில்லை. ஆனால் சங்ககாலத்தில் ஒரு பெண் தன் காதலைப் பெற்றோரிடம் தெரிவிப்பது என்பது இயலாதவொன்றாகவே இருந்தது.

தலைவி தன் காதலைத் தோழியிடம் தெரிவிக்க,
தோழி செவிலியிடம் தெரிவிக்க,
செவிலி நற்றாயிடம் தெரிவிக்க,
நற்றாய் தந்தையிடம் சென்று மகளின் காதலைச் சொல்வாள். இதுவே சங்ககால மரபு.


அகவன் மகளே அகவன் மகளே
மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டேஅவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே.


குறுந்தொகை
23. குறிஞ்சி - தோழி கூற்று
-ஒளவையார்.

இப்பாடலில் தலைவி அகவன் மகளிடம்,
'இன்னும் பாடுக பாட்டேஅவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே.'

என்று தலைவனின் குன்றம் பற்றி பாடலையே தலைவி மீண்டும மீண்டும் விரும்பிக்கேட்பதை அருகாமையில் இருக்கும் செவிலியோ, நற்றாயோ கேட்டு தன்மகள் காதல் வயப்பட்டுவிட்டாள் என்பதை உணர்வர் இதுவே சங்ககால மரபு. இப்பாடலை தலைவி தாயரிடம் கேட்கும் விடுகதையாகக் கொள்வது பொருத்தமாக அமையும்.

நிறைவுரை.

வாய்மொழிப்பாடல்களின் வழிவந்தவையே சங்கப்பாடல்கள் என்பதால் வாய்மொழிக்கூறுகள் பலவும் சங்கப்பாடல்களில் பொதிந்திருக்கின்றன. அவற்றுள் 'விடுகதை' என்னும் வாய்மொழி மரபும் பாடல்களில் இழையோடி இருக்கக் காண்கிறோம். இன்று பேச்சு வழக்கில் யாராவது பேசுவது புரிந்தும் புரியாமலும் இருந்தால் என்ன புதிர்போட்டுப் பேசுகிறாய்? என்று கேட்பது வழக்கம். அது போல சங்கப்பாடல்கள் பலவற்றிலும் பேச்சு மரபுகளினூடே விடுகதைப் பண்பு இயைபுற அமைந்திருப்பது உற்று நோக்கி இன்புறத்தக்கதாகவுள்ளது.

கேள்வி கேட்டல், சிந்தனையைத் தூண்டுதல், மறைபொருளாகக் கூறுதல், உவமையாகக் கூறுதல், சுற்றி வளைத்துக் கூறுதல் தத்துவப் பொருளாகக் கூறுதல் போன்ற பல்வேறு விடுகதைப் பண்புகளையும் சங்கப்பாடல்களில் காணமுடிகிறது
gunathamizh@gmail.com