உதவும் பண்பை உணர்த்திநிற்கும் ஆற்றுப்படை இலக்கியம்


செந்தமிழ்ச் செல்வர் சு.ஸ்ரீகந்தராசா-அவுஸ்திரேலிய

ங்க இலக்கியங்களில் இடம்பெறும் பத்துப்பாட்டு என்பது பத்துப்பாடல்களைக்கொண்ட ஒரு தொகைநூல். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு புலவரால் பாடப்பட்டது. எட்டுப் புலவர் பெருமக்கள் இவற்றைப் பாடியுள்ளனர். நக்கீரர், உருத்திரங்கண்ணனார் என்ற இரண்டு புலவர்களும் இவ்விரண்டு பாடல்களைப் பாடியுள்ளனர். ஒவ்வொரு பாடலுமே தனித்தனி நூலாகவே திகழ்கின்றன. ஒரு பாட்டே ஒரு நூலாக அமைவது தமிழ்க் கவியிலக்கியத்தின் தனிச்சிறப்பாகும். இதில் சொல்லப்படும் பத்து பாடல்களாவன: திருமுருகாற்றுப்படை, பொருநர்ஆற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்பவையாகும்.

இவற்றில் திருமுருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் என்னும் ஐந்துபாடல்களும் ஆற்றுப்படை நூல்களாகும்.

தமிழில் தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்கள் உள்ளன. அவற்றிலே ஆற்றுப்படை என்பது தனியொரு வகைப் பிலபந்தமாகும். ஆற்றுப்படை என்றால் ஆற்றுப் படுத்துதல் அதாவது வழிகாட்டுதல் என்பது கருத்ததாகும். பத்துப்பாட்டில் ஐந்து பாடல்கள் ஆற்றுப்படை இலக்கியங்களாகவிருப்பது பண்டைத்தமிழகத்தில் ஆற்றுப்படை என்பது தனியொருவகைத் தமிழ் இலக்கியமாகப் பேணி வளர்க்கப்பட்டமைக்குச் சான்று பகர்கின்றது. மற்றவர்க்கு உதவுகின்ற தன்மை பண்டைத்தமிழ் மக்களின் பண்பாடாகவே இருந்திருக்கிறது என்பதற்கு இந்த ஆற்றுப்படை நூல்கள் சான்றாக அமைகின்றன.

இசைக் கலைஞர்கள், நாட்டியக் கலைஞர்கள் என்போர் தமது கலைத் திறமைகளைப் பரம்பரை பரம்பரையாகப் பேணிவந்துள்ளார்கள். கலையே தொழிலாக வாழ்ந்து வந்துள்ளார்கள். இசையில் வல்ல ஆண்கலைஞர்கள் பாணர்கள் என்று அழைக்கப்பட்டனர். யாழ், குழல், முழவு முதலிய இசைக் கருவிகளில் தேர்ச்சி பெற்றவார்களாக அவர்கள் விளங்கினார்கள். அவர்களின் இல்லத்தரசிகள் சிலர் அந்த இசைக்கருவிகளில் தேர்ச்சி பெற்றதோடு நாட்டியக்கலைகளிலும் சிறந்து விளங்கினார்கள். நாட்டியத்தில் சிறந்து விளங்கிய கலைஞர்களில் ஆண்கள் கூத்தர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். பெண்கள் விறலியர் என்று அழைக்கப்பட்டார்கள்.

இவ்வாறு கலைகளில் சிறப்புற்று விளங்கிய கலைஞர்களில் சிலர் அரசர்களின் ஆதரவுபெற்று அரசவைகளிலே இடம்பெற்றார்கள். வாழ்விலே வளம் பெற்றார்கள்.
ஆனால் அத்தகைய உயர்வுகள் கிடைக்கப்பெறாத பெரும்பாலான கலைஞர்களும் புலவர்களும் வறுமையில் வாடவேண்டிய நிலைமையில் இருந்தார்கள்.

அவர்களில் சிலர் தம் வறுமையைப் போக்கிக்கொள்ள அரசர்களையும் செல்வர்களையும் நாடினார்கள். அவர்களைப் புகழ்ந்து பாடினார்கள். அதன்மூலம் தமது வறுமையைப் போக்கிக்கொண்டார்கள். அவ்வாறு அரசர்களிடமும், செல்வர்களிடமும் பொருள்பெற்றுக்கொண்ட புலவர்கள் வறுமையால் துன்பமடைகின்ற ஏனைய புலவர்களும் தம்மைப்போலப் பொருள்பெற்று வறுமை நீங்கப் பெறுவதற்கு அவர்களுக்கு வழிகூறினார்கள். தம்மை ஆதரித்த புரவலர்களிடம் அவர்களையும் செல்லுமாறு ஆற்றுப்படுத்தினார்கள். தாம்பெற்ற இன்பத்தை மற்றவர்களும் பெறுதல்வேண்டும் என்கின்ற தராளமனம் பொதுவாக அன்றைய மக்கள் எல்லோருக்குமே இரந்திருக்கிறது என்பது மக்களோடு மக்களாக வாழ்ந்த புலவர்களின் இலங்கியங்கள் மூலம் புலப்படுகின்றது.

அவ்வாறு ஒரு புலவரை இன்னொரு புலவர் ஆற்றுப்படுத்துவதையும் செய்யுளிலே அமைத்துப் பாடினார்கள். அவ்வாறு ஆற்றுப்படுத்தும்போது அந்தப் புரவலர் இருக்கும் ஊருக்குச் செல்லும் வழிகளில் உள்ள காடுகளை, மேடுகளை, களனிகளை எல்லாம் வர்ணனை செய்தார்கள். அரசர்களின் வீரத்தையும், செல்வர்களின் சிறப்பையும் புகழ்ந்துரைத்தார்கள். அவர்களின் கொடைச் சிறப்புக்களை விதந்துரைத்தார்கள். அவையெல்லாம் இலக்கியச் சுவைமிகுந்த நூல்களாகத் திகழ்ந்தன. ஆற்றுப்படையென்ற தனியொரு இலக்கிய வகையாக வளர்ந்தன.

நால்வகை நிலங்களை வர்ணித்துப் பாடுதல் பிற்கால இலக்கியங்களில் பின்பற்றப்பட்டமைக்கு பத்துப்பாட்டில் இடம்பெறும் ஆற்றுப்படைநூல்களே வழிநூல்களாக அமைந்தன என்றும் கூறலாம்.

திருமுருகாற்றுப்படை

முருகக்கடவுளின் அருள்பெற்றுய்ந்த ஒருவர் இன்னொருவருக்கு அந்த அருளைப்பெறுவதற்கு வழிகாட்டி ஆற்றுப்படுத்துவதாக அமைந்த பாடலே திருமுருகாற்றுப்படையாகும். இது
317 வரிகளைக்கொண்டது. ஆசிரியப்பாவில் அமைந்தது. இதனைப் பாடியவர் நக்கீரர். இதுவே முற்று முழுதாகப் பக்தி இலக்கியமாகத் திகழும் சங்ககால நூலாகும். நீண்ட பாடலாக அமைந்துள்ள திருமுருகாற்றுப்படை பக்தர்களால் பிரார்த்தனைக்காகப் பாடப்பட்டுவருகின்ற அளவுக்குப் பக்தி இலக்கியமாகவும் விளங்குகின்றது. அதனால்தான் பதினோராம் திருமுறையிலும் இடம்பெற்று இலங்குகின்றது.

திருமுருகாற்றுப்படையின் மூலம் முற்காலத்தில் இருந்த முருகன்கோவில்களைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. முருகனை வழிபடுகின்ற முறைகள்பற்றித் தெரிந்துகொள்ள முடிகின்றது. முருகக் கடவுள்பற்றி நக்கீரர் பாடியுள்ள பாடல்கள் பக்திக்கு உரியனவாக மட்டுமன்றித் தித்திப்பான செந்தமிழ் இலக்கியமாகவும் விளங்குகின்றன.

'செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச்
செயலைத் தண்தளிர் துயல்வரும் காதினன்
கச்சினன், கழலினன், செச்சைக் கண்ணியன்
குழலன், கோட்டன், குறும்பல்லியத்தன்
தகரன், மஞ்ஞையன், புகர்இல் சேவல் அம்
கொடியன், நெடியன், தொடியணி தோளன்'


என்றெல்லாம் முருகனின் தோற்றத்தை வர்ணிக்கும் வரிகளைத் திருமுருகாற்றுப்படையில் காணலாம்.

திருமுருகாற்றுப்படை முருகனின் ஆறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய்(திருச்செந்தூர்),திருவாவினன்குடி(பழனி) திருவேரகம் (சுவாமிமலை), குன்றுதோறாடல், பழமுதிர் சோலை என்பவற்றின் அடிப்படையில் ஆறு பகுதிகளாகப் பாடப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் முதலாவது பகுதி. திருப்பரங்குன்றத்தில் மலைக்கோயில் அமைந்துள்ள இயற்கை எழிலையும், கோயிலில் குடிகொண்டிருக்கும் முருகக் கடவுளின் அழகையும், சூரனோடு இடம்பெற்ற போர் நிகழ்வையும் இப்பகுதி எடுத்தியம்புகின்றது. அங்காடிகள் நிரம்பிய அகன்ற வீதிகள், மாடங்களோடு கூடிய வீடுகள் எல்லாம் அமைந்துள்ள மதுரைக்கு மேற்குப்பக்கத்திலே, சேறுநிரம்பிய வயல்கள், சேற்றில் மலர்ந்திருக்கும் தாமரைமலர்கள், மலர்களில் துயில்கொள்ளும் வண்டுகள், இவையெல்லாம் நிறைந்த இயற்கை வனப்புக்கள் கொண்டது திருப்பரங்குன்றம் என்று பகர்கின்ற பாடல்கள் இந்த முதலாம் பகுதியிலே இடம்பெறுகின்றன.

திருச்செந்தூர் என்று இப்பொழுது வழங்கப்படும் திருச்சீரலைவாய் இரண்டாவது பகுதி. இது முருகனின் இரண்டாவது படைவீடு. திருச்செந்தூர்த் தலத்தின் மகிமை இதில் கூறப்பட்டுள்ளது. ஆறுமுகங்களும், பன்னிரண்டு கரங்களும் கொண்ட திருமுருகனின் திருக்கோலத்தின் சிறப்பு சொல்லப்பட்டுள்ளது. ஆறு திருமுகங்களின் அற்புத இயல்புகளும், பன்னிரு திருக்கரங்களின் உன்னத நிலைகளும் பாடப்பட்டுள்ளன.

மூன்றாவது பகுதி திருஆவினன்குடி பற்றியது. திருஆவினன் குடித் திருக்கோயில் பழனிமலையின் அடிவாரத்திலே அமைந்துள்ளது. அதனால் அத்திருத்தலம் பழனி என்று இப்பொழுது வழங்கப்படுகின்றது. திருஆவினன் குடியின் இயற்கையழகுகளும், முருகக் கடவுளை வழிபட வருகின்ற முனிவர்களின் இயல்புகளும், பிரம்மனை விடுவிக்கக்கோரி திருமாலும், உருத்திரனும், இந்திரனும் முருகனை நாடிவந்ததாகச் சொல்லப்படும் கதைகளும் இப்பகுதியில் இயம்பப்பட்டுள்ளன. தெய்வயானையுடன் முருகன் திருவாவினன் குடியில் சிலநாட்கள் இருப்பவன் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

நான்காவது பகுதி திருவேரகம் என்று சொல்லப்படும் சுவாமிமலை பற்றியது. திருவேரகத்தின் சிறப்புக்களும், முருகனை அங்கு வழிபடவருகின்ற அந்தணர்களின் இயல்புகளும் சொல்லப்பட்டுள்ளன. ஓதுதல் முதலான அறுவகைத் தொழில்களை வழுமாமல் செய்கின்றவர்களாகவும், நாற்பத்தெட்டு வயதுவரை இளமைக்காலம் முழுவதும் பிரமச்சரியம் காக்கும் பேராண்மையாளர்களாகவும், அறக்கோட்பாடுகளுக்கு அமைந்து ஒழுகுபவர்களாகவும் உள்ள அந்தணர்கள் பூணுர்லணிந்து, தலைமேல் கைகுவித்து, ஆறெழுத்து மந்திரத்தை ஓதி, மலர்தூவி வணங்குவதை மனமுவந்து ஏற்றுக்கொள்ளும் முருகன் உறைந்துள்ள இடம் திருவேரகம் என்று திருமுருகாற்றுப்படையின் நான்காம் பகுதியில் கூறப்பட்டுள்ளது.

ஐந்தாம் பகுதி குன்றுதோறாடல் என்கின்ற ஐந்தாவது படைவீட்டைக் குறித்த செய்திகளைச் சொல்கின்றது. குன்று தோறும் ஆடிவருகின்ற குமரனை மலைநாட்டு மக்கள் குரவைக்கூத்து ஆடி வழிபாடியற்றுகின்றமை பற்றிய செய்திகள் இப்பகுதியில் கூறப்பட்டுள்ளன.

ஆறாவது பகுதியில் பழமுதிர் சோலை பற்றி அறியமுடிகின்றது. பழமுதிர்சோலை அருவியின் எழிலும், அங்கே அமர்ந்திருக்கும் முருகனின் அழகும் கூறப்பட்டுள்ளன. முருகனை வழிபடுகின்ற முறைகளும், அவனருள் பெறும் வழிகளும், அவன் அருள்பாலிக்கும் வகைகளும் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன.

பொருநர் ஆற்றுப்படை

இதனைப் பாடியவர் முடத்தாமக்கண்ணியார் என்னும் பெண்புலவர். கரிகாற்சோழன் பெருவளத்தானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது. 248 வரிகளையுடையது. நேரிசை ஆசிரியப்பாவில் அமைந்தது.

பொருநர் என்றால் போர் செய்பவர்கள் அதாவது வீரர்கள் என்பது ஒரு கருத்து. வேடதாரிகள் அல்லது வேடம்போடுபவர்கள் அதாவது கலைஞர்கள் என்பது இன்னுமொரு கருத்து. வேடம் போடபவர்கள் பல வகையினர். ஏர்க்களம் பாடுவொர், போர்க்களம் பாடுவோர், பரணிபாடுவொர் என்பவர்கள் அவர்களில் சில வகையினர். பொருநர் ஆற்றுப்படை போர்க்களத்தைப் பாடும் கலைஞரைப் பற்றியது. ஓர் ஊரிலே நடைபெற்ற திருவிழாவில் தமது நிகழ்ச்சிகளை நடாத்திய கலைஞர்கள் மற்றுமோர் ஊருக்குச் செல்வதைக் கூறுவதுபோல இந்தப் பாடல் தொடங்குகின்றது.

பொருநன் ஒருத்தனுக்குப் பொல்லாத வறுமை. தன் குடும்பத்தாரையும் சுற்றத்தாரையும் காப்பாற்றமுடியாத கொடுமை. எல்லோரையும் அழைத்துக்கொண்டு ஈகைச் சிறப்புமிக்க வள்ளலை நாடிச் செல்கின்றான். வழியிலே அவர்களைச் சந்தித்த இன்னுமொரு பொருநன் அவர்களின் நிலை உணர்ந்து வருந்துகின்றான். அவர்களுக்காக இரங்குகின்றான். கரிகாற் சோழனால் தனது வறுமை நீங்கப்பெற்ற கதையைக் கூறுகிறான். அவர்களையும் அச்சோழ மன்னனிடம் சென்று வறுமையைத் தீர்த்துக்கொள்ளும்படி ஆற்றுப்படுத்துகின்றான்.

அவ்வாறு ஆற்றுப்படுத்தும்போது கரிகாற் சோழனின் ஆற்றலை விதந்துரைக்கின்றான். அவனின் ஈகைச் சிறப்பை புகழ்ந்துரைக்கின்றான். சோழநாட்டின் இயற்கை வளத்தை மகிழ்ந்துரைக்கின்றான். அப்போது சோழநாட்டின் தொழில் வளம், கலைத்திறம் என்பனவும் கூறப்படுகின்றன. இசையின் பெருமைபற்றி இயம்பப்படுகின்றது. வழிப்பறி செய்ய வந்த திருடர்கள்கூட யாழிசையில் மயங்கி மனம் மாறிவிடுவார்கள் என்று சொல்லப்படுகின்றது. யாழ் என்ற இசைக்கருவியின் அமைப்பு விரிவாக விளக்கப்படுகின்றது.

பாணனின் மனைவியான பாடினி(விறலி)யின் உடலின் ஒவ்வோர் அங்கத்தையும் கூந்தல் முதல் கால்கள் வரை வர்ணித்திருக்கும் வரிகளில் அடங்கியுள்ள சொல்லழகும், உவமைச் சிறப்பும் படித்துப் படித்து இன்புறத்தக்கன.

பண்டைத்தமிழ் மக்களின் வாழ்விலும், பழக்கவழக்கங்களிலும் பின்வரும் விடயங்கள் இடம்பெற்றிருந்தமையை பொருநர் ஆற்றுப்படையின் மூலம் அறிய முடிகின்றது.

உணவு உட்கொள்வதற்கு முன்னர் காகத்திற்கு சோறுவைத்தல்

பொன்னில் செய்யப்பட்ட நகைகளை அணிதல்
செல்வந்தர்களின் வீடுகளில் பொன்னாலான பாத்திரங்களை உபயோகித்தல்
இசைக்கலைஞர்கள் தாம் பாடுவதற்கு முன்னர் தெய்வத்தை வாழ்த்திப் பாடுதல்
விருந்தினர்களை ஆதரித்தல், விருந்து முடிந்து விடைபெறும்போது அவர்களோடு ஏழு அடிகள் நடந்து அன்போடு விடைகொடுத்தல்
மறுபிறப்பை நம்புதல்
போன்ற பழக்கவழக்கங்கள் மக்களிடம் நிலவியிருக்கின்றன.

மேலும், பண்டமாற்று முதலிய வணிக முறைகள் இருந்திருக்கின்றன.

காவிரி நதியினால் வளமும், பாதுகாப்பும் பெறுகின்ற சோழநாட்டின் பெருமை கூறி, 'காவிரி புரக்கும் நாடுகிழவோனே' என்ற கடைசி வரியோடு பொருநர் ஆற்றுப்படை முடிவுறுகின்றது.


சிறுபாணாற்றுப்படை

இடைக்கழி நாடு என்னும் ஊரில் பிறந்த நல்லூர் நத்தத்தனார் என்னும் புலவர் பாடியது சிறுபாணாற்றுப்படை. 269 வரிகளோடு ஆசிரியப்பாவில் அமைந்தது.

ஏற்கனவே பரிசுபெற்று வறுமை நீங்கிய பாணன் ஒருத்தன் வறுமையால் வாடும் மற்றொரு பாணனை ஓய்மா நாட்டு நல்லியக்கோடன் என்ற சிற்றரசனிடம் ஆற்றுப்படுத்துவதாக சிறுபாணாற்றுப்படை பாடப்பட்டுள்ளது.

பாணனின் வறுமையின் கொடுமை மிகவும் திறமையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. செல்லரித்த சுவர்களும், சிதைந்துபோன கூரையுமாகவுள்ள பாணனின் வீட்டுச் சமையல் அறையில் புழுதி மண்டிக்கிடக்கிறது. அதில் காளான் பூத்துக்கிடக்கிறது. அங்கே குட்டிபோட்ட நாய் ஒன்று படுக்கிறது. பசியிலே வாடுகின்ற அந்த நாய் பால்குடிக்க வரும் குட்டிகளைப் பார்த்துக் குரைக்கிறது. மடியிலே பால் இல்லாத வலியினால் துடிக்கும் அந்த நாய், தன் குட்டிகளை அணுகவிடாமல் குரைத்துத் துரத்துகிறது.

உப்புக்கும் வழியின்றி வெறும் கீரையை வேகவைத்த வீட்டுக்காரி வேற்று மனிதர்கள் தங்கள் வேதனையைப் பார்த்துவிடக்கூடாதே என்று வீட்டின் தெருக்கதவைப் பூட்டிவைக்கிறாள். இல்லாத நிலையிலும் யாரிடமும் இரந்து செல்லாதவாறு வறுமையில் உழன்ற போதும் மானத்தில் உயர்ந்து நிற்கிறது பாணனின் குடும்பம்.

பாட்டுடைத் தலைவனான நல்லியக்கோடன் சங்ககாலத்து வள்ளல்களில் ஒருவன். கடையெழு வள்ளல்கள் காலத்தால் இவனுக்கு முந்தியவர்கள். கடையெழுவள்ளல்கள் ஏழுபேரினதும் கொடைப்பணியையும் இவன் ஒருத்தனே கடைப்பிடித்து தனியாக ஏற்று நடாத்தினான் என்று இப்பாடலில் குறிப்பிடப்படுகின்றது. அதனால் இவன் அத்தகைய சிறந்த வள்ளலாகத் திகழ்ந்திருக்கிறான் என்றோ அல்லது இவன் காலத்தில் வேறு வள்ளல்கள் வாழ்ந்திருக்கவில்லை என்றோ எண்ண முடிகிறது.

சிறுபாணாற்றுப்படையில் குறிப்பிடப்பட்டுள்ள கடையெழு வள்ளல்கள் பற்றிய விபரங்கள் பின்வருமாறு:

கடையெழு வள்ளல்கள்:

1. மழை வளம் மிக்க மலைப் பகுதியில் ஓரிடத்தில் குளிரில் நடுங்கியபடி தோகைவிரித்தாடிய மயிலுக்குத் தன் போர்வையை ஈந்ததவனான பேகன்.

'வானம் வாய்த்த வளமலைக் கவாஅன்
கானமஞ்சைக்குக் கலிங்கம் நல்கிய
அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன், பேகனும்...'
(84 – 87)

2. நெடுஞ்சாலையொன்றில் படர்வதற்குக் கொழுகொம்பின்றி தவித்துக்கிடந்த முல்லைச் செடி பற்றிப்படர்வதற்குத் தன் தேரினை விட்டு வந்தவனான பறம்புமலையின் அரசன் பாரி.

'சுரும்புண
நறுவீ உறைக்கும் நாகம் நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்கு வெள்ளருவி வீழும் சாரல்
பறம்பின் கோமான், பாரியும்....' (
88 – 91)

3. இரப்பவர்க்கு இல்லையென்று சொல்லாது பொன்னையும், பொருளையும் மட்டுமன்றித் தன் குதிரைகளையும் ஈந்தளித்த காரி.

'கறங்குமணி
வால் உளைப் புரவியொடு வையகம் மருள
ஈர நன்மொழி இரவலர்க்கு ஈந்த
அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல்
கழல், தொடித் தடக்கைக், காரியும்'
(92 – 95)

4. நீல நாகமொன்று தனக்குக் கொடுத்த அரியதோர் ஆடையினைக் கல்லாலின் கீழமர்ந்திருந்த சிவனுக்குப் பக்தியுடன் அளித்தவனான ஆய் என்பவன்.

'நிழல் திகழ்
நீலநாகம் நல்கிய கலிங்கம்
ஆலமர் செலர்வர்க்கு அமர்ந்தனன் கொடுத்த
சாவந்தாங்கிய சாந்துபுலர் திணிதோள்
ஆர்வ நன்மொழி, ஆயும்'
(96 – 99)

5. நீண்டவாழ்வைத்தரும் அற்புதக் கருநெல்லிக்கனியினைத் தான் உண்ணாது அவ்வைக்கு அளித்து மகிழ்ந்த அதியமான்.

'மால்வரைக்
கமழ்பூஞ்சாரல் கவினிய நெல்லி
அமிழ்துவிளை தீம்கனி ஒளவைக்கு ஈத்த
உரவுச்சினம் கனலும் ஒளிதிகழ் நெடுவேல்
அரவக் கடல்தானை, அதிகனும்'
(100 – 103)

6. தன்னிடம் உள்ள எப்பொருளையும் மறைக்காமல் தன் செல்வங்களையெல்லாம் வறியவர்களுக்கு வாரி வழங்கிய நள்ளி.

'கரவாது
நட்டோர் உவப்ப நடைப்பரிகாரம்
முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத்
துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு
நளிமலை நாடன், நள்ளியும்'
(104 – 107)

7. மலைகள் நிறைந்த தன் நாட்டையே கலைஞர்களுக்குப் பரிசாக வழங்கியவனான ஓரி.

'நளிசினை
நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்துக்
குறும்பொறை நன்னாடு கோடியர்க்கீந்த
காரிக் குதிரைக் காரியொடு மலைந்த
ஓரிக்குதிரை, ஓரியும் (எனவாங்கு)'
(108 – 111)

இத்தனை வள்ளல்களினதும் வள்ளல் தன்மைகளும் ஒருசேரப்பெற்றவனாக அவர்கள் எல்லோருக்கும் இணையாகத் தனியோருவனாகப் பிற்காலத்தில் விளங்கியவனே சிறுபாணாற்றுப்படைப் பாட்டுடைத் தலைவனான நல்லியக் கோடன் என்கிறது பாடல்.


பெரும்பாணாற்றுப்படை

'பட்டினப்பாலை' நூலின் ஆசிரியரான கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவரே பெரும்பாணாற்றுப்படையையும் இயற்றினார். 500 வரிகளைக்கொண்டு மிக நீளமான பாடலாக இருப்பதால் இது பெரும்பாணாற்றுப்படை எனப்படுகிறதென்றும், சிறுபாணாற்றுப்படை 269 வரிகளைக் கொண்டமைந்ததால் அது அப்பெயர்பெற்றதென்றும் ஒரு கருத்து உண்டு.

அதே வேளை பேரியாழ் கொண்ட பாணனைப் பாடியதால் பெரும்பாணாற்றுப்படை என்றும், சீறியாழ் கொண்ட பாணனைப் பாடியதால் சிறுபாணாற்றுப்படையென்றும் பெயர்பெற்றன என்கின்ற கருத்தும் அறிஞர்களிடையே நிலவுகின்றது. பெரும்பாணாற்றுப்படை ஆசிரியப்பாவில் இயற்றப்பட்டுள்ளது. பாட்டுடைத் தலைவன், தொண்டைமான் இளந்திரையன் என்ற மன்னன். பாணன் ஒருவன் வறுமையில் வாடிய மற்றொரு பாணனை தொண்டைமான் இளந்திரையனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது பெரும்பாணாற்றுப்படை.

மேகம் மழைபொழிவதுபோல வாரிவழங்கும் வள்ளலான இளந்திரையனிடம், தனது சுற்றத்தாரோடு சென்று யானைகளையும், குதிரைகளையும், பெறுமதிமிக்க பொருட்களையும் தான் பரிசாகப்பெற்றமை பற்றி எடுத்துரைத்து அவ்வாறே மற்றவனையும் பரிசுபெற்றுய்யுமாறு ஆற்றுப்படுத்துகின்றான் ஒரு பாணன்.

தொண்டைமான் இளந்திரையன் என்ற இந்த மன்னன் வெண்வேற்கிள்ளி என்ற சோழ மன்னனுக்கு நாககன்னிகை வயிற்றில் பிறந்தவன் என்று மணிமேகலையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவன் ஒரு குறுநில அரசனாக இருந்தபோதும் முடியுமை மூவேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டிய மன்னர்களைப்போல மதிக்கப்பட்டான்.

தமிழ்மொழியில் நிறைந்த அறிவுள்ளவனாகத் திகழ்ந்த இவன் ஒரு புலவனுமாவான். 'இளந்திரையம்' என்னும் நூலொன்றை இவன் ஆக்கியதாகச் சொல்லப்படுகின்றது.

வழிப்பறிசெய்யும் கள்வரும் இல்லை. வனத்திலே கொடிய விலங்குகளும் இல்லை. வானத்து இடியும் மக்களைத் தாக்குவதில்லை. பாம்புகளும் யாரையும் தீண்டுவதில்லை. அத்தகைய அற்புதமான நாடு என்றெல்லாம் தொண்டை நாட்டின் சிறப்பு பெரும்பாணாற்றுப்படையில் நலமுறச் சொல்லப்படுகின்றது.

'கைப்பொருள் வெளவும் களவுஏர் வாழ்க்கைக்
கொடியோர் இன்றவன் கடியுடை வியன்புலம்
உருமும் உரறாது அரவும் தப்பா
காட்டுமாவும் உறுகண் செய்யா வேட்டாங்கு
அசைவழி அசைஇ நசைவழித் தங்கிச்
சென்மோ இரவல! சிறக்கநின் உள்ளம்'
(40 - 45)

அந்நாட்டின் தலைநகராக விளங்கிய காஞ்சியின் செழிப்பு விதந்துரைக்கப்படுகின்றது. காஞ்சியில் திருமால் கோயில் கொண்டுள்ளமை பற்றிய புராதனச் செய்தியும் சொல்லப்பட்டுள்ளது. முருகன் சூரனை வதைத்த புராணக்கதையும் குறிப்பிடப்படுகின்றது.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைமுறை எடுத்துரைக்கப்படுகின்றது. வறுமையின் கொடுமை உணர்த்தப்படுகின்றது. விருந்தோம்பல் பண்பு பற்றி விபரிக்கப்படுகின்றது.

பெண்களின் வீரத்தின் பெருமை சித்தரிக்கப்படுகின்றது. உப்பு வண்டிகளைப் பெண்கள் ஓட்டிச் செல்லல், மிளகு விற்பவர்கள் கழுதைகளின் மேல் மிளகு மூட்டைகளை ஏற்றிச் செல்லல், வணிகர்கள் தங்கள் பாதுகாப்புக்காக வாள் போன்ற ஆயுதங்களைத் தங்களுடன் வைத்திருத்தல், கடற்கரையில் கலங்கரை விளக்கம் அமைந்திருத்தல் முதலிய வரலாற்றுப்பதிவுகளாக அமையக்கூடிய தகவல்களையும் பெரும்பாணாற்றுப்படையில் காணலாம். மேல்நாட்டுக் குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டமைபற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மலைபடுகடாம்

மலைபடுகடாம், பத்துப்பாட்டில் இறுதிப்பாட்டாக இடம்பெறுகின்றது. எண்ணிக்கையற்ற எத்தனையோ விதமான ஓசைகள் மலைகளிலே தோன்றுகின்றன அல்லது மலைப்பிரதேசங்களிலே தோன்றி எதிரொலிக்கின்றன. அத்தகைய ஓசைகளில் இருபது வகையான ஓசைகளைப் பற்றி இதில் எடுத்தியம்பப்படுகின்றது.

மலையை யானையாக உருவகம் செய்து, மலையில் பிறக்கும் ஓசைகள் அந்த யானையின் மதத்திற்கு ஒப்பானவை என்று கற்பித்து பாடப்பட்டுள்ளமையால் மலைபடு கடாம் என்று இதற்குப் பெயர் இடப்பட்டுள்ளது. பத்துப் பாட்டுக்களிலும் அளவிலே இரண்டாவது பெரிய பாடல் இதுவாகும். 583 அடிகளைக் கொண்டது. ஆசிரியப்பாவில் அமைந்தது.

இதனைப் பாடியவர் கௌசிகனார் என்னும் சிறந்த புலவர். பாண்டிநாட்டிலுள்ள பெருங்குன்றூரில் வாழ்ந்தவர். ஊர் ஊராகச் சுற்றித்திரிந்தவர். பல்வேறு இடங்களிலும் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறைகள் பற்றி அறிந்தவர். காடுகள், மலைகள் எல்லாம் கடந்து பயணங்களைச் செய்தவர். அங்கெல்லாம் நடைபெறும் நிகழ்வுகளை நேரிலே கண்டு அனுபவம் பெற்றவர். அதனால் அவற்றையெல்லாம் இந்நூலில் அற்புதமாகப் பாடியுள்ளார்.

உண்மையில் இது ஓர் ஆற்றுப்படை இலக்கியமாகும். வேளிர்குலத் தலைவனாக விளங்கியவன் நன்னன் என்னும் குறுநில மன்னன். அவன் ஒரு சிறந்த வள்ளல். அவனிடம் பரிசுகள்பெற்றுத் திரும்பிய கூத்தன் ஒருத்தன், வழியிலே இன்னுமொரு கூத்தனைக் காண்கின்றான். அவன் தன் சுற்றத்தவர்களான கூத்தர்களுடனும், பாணர்களுடனும், விறலியர்களுடனும் ஒரு மரநிழலில் அமர்ந்திருந்தான். இசையில் வல்ல அந்தப் பாணர்கள் பல்வேறு இசைக் கருவிகளை வைத்திருந்தார்கள்.

பரிசுபெற்று வந்துகொண்டிருந்த கூத்தன் மரநிழலில் அமர்ந்திருந்த கூத்தனதும், அவனுடைய கூட்டத்தினரதும் வறுமை நிலையை உணர்ந்தான். தன்னைப்போல அவர்களும் நன்னனிடம் பரிசுபெற்று தங்கள் வறுமையைப் போக்கி இன்பமுறவேண்டும் என்று நல்லெண்ணம் கொண்டான். உடனே அந்தக் கூட்டத்தின் தலைவனான கூத்தனிடம் தான் நன்னனிடம் பரிசுபெற்ற வருவதுபற்றியும், நன்னனின் உயர்ந்த குணங்களைப் பற்றியும் எடுத்துக்கூறி, நன்னன் இருக்குமிடத்திற்குப் போகும் வழியையும் விபரித்து ஆற்றுப்படுத்துகின்றான். கூத்தருக்கு வழிகாட்டி ஆற்றுப்படுத்துவதால் இப்பாடல் கூத்தராற்றுப்படை என்றும் அழைக்கப்படுகின்றது.

இப்பாட்டின் தலைவனான நன்னன் என்பவன் தொண்டை நாட்டின் ஒரு பகுதியான பல்குன்றக் கோட்டம் என்ற நாட்டை ஆட்சி செய்தவன். செங்கண்மா என்பது அவனின் தலை நகரத்தின் பெயராகும். திருவண்ணாமலைக்கு மேற்குப்புறத்தில் சற்றுத் தொலைவில் இப்பொழுது செங்கம் என்றபெயரில் சிற்றூராக உள்ள இடமே அந்நாளில் கோட்டை கொத்தளங்களுடன் பெருநகராக விளங்கிய நன்னனின் தலைநகராகும்.

நன்னனின் நாட்டுக்குப் போகும் பாதையை கூத்தன் சொல்வதுபோல புலவர் கூறியிருக்கும் விதம், ஊர்சுற்றிப் பார்க்கச் செல்லும் வெளியூர்ப் பயணிகளுக்குப் புதினங்களை உரைத்துக்கொண்டு, உடன்செல்லும் அனுபவம்மிக்க வழிகாட்டியொருவர் விபரிப்பதைப் போல சிறப்பாக உள்ளது. காட்டு வழியிலே செல்வது எப்படி, நாடு நகரங்களூடாகச் செல்வது எப்படி என்றெல்லாம் விபரமாகச் சொல்லப்பட்டுள்ளது.

என்னென்னவெல்லாம் வழியிலே எதிர்ப்படும், என்னென்ன வகையான உணவுகள் கிடைக்கப் பெறும், யார்யாரையெல்லாம் காண முடியும், எப்படியெப்படியெல்லாம் பாதையில் நடந்துகொள்ள வேண்டும், எப்படிப்பட்ட அபாயங்களையெல்லாம் கடக்க வேண்டி வரும், எவ்வௌற்றால் தீமைகள் வரக்கூடும் என்பதையெல்லாம் விபரமாகச் சொல்லுகின்றபோது தமிழின் சுவையையும் கலந்து தருகின்ற புலவரின் திறமை போற்றுதற்குரியது.

மலையில் பிறக்கின்ற இருபது வகையான ஓசைகளை இந்நூலில் புலவர் இனம் காட்டுகின்றார். அவையாவன:
1. பெரிய பலாப்பழமொன்றை ஆண்குரங்கு ஒன்று கைகளால் துளாவுகின்றது. அப்போது அந்தப் பழத்திலேயிருந்து சொட்டுகின்ற தேன் மலை முழுவதும் மணம்பரப்பி, அருவியிலே விழுகின்றது. தேவ மகளிர் அந்த அருவியிலே நீராடுகின்றார்கள். பாணர்களின் வாத்தியங்களிலிருந்து வரும் இன்னிசைபோலக் கேட்கின்ற அவர்கள் நீராடும் ஓசை

2. தனது இனத்தை விட்டுப் பிரிந்த வந்த ஆண் யானை ஒன்று தினைப் புனத்தினுள் நுழைந்து விட்டது. அதனைப் பிடிப்பதற்காக, அங்கே காவல் பரணில் இருக்கின்ற கானவர்கள் போடுகின்ற ஆரவாரம்.

3. குகையிலே வாழுகின்ற முள்ளம் பன்றி வீசிய கூரிய முட்களால் காயமடைந்த கானவர்கள் கதறி அழுகின்ற ஒலி.

4. தங்கள் கணவர்களின் மேல் பாய்ந்த புலிகள் அவர்களின் மார்பில் கீறியதால் உண்டான காயங்கள் ஆறவேண்டுமென மனைவிமார் (கொடிச்சியர்கள்) பாடுகின்ற பாட்டுக்களின் ஓசை.

5. முதன்முதலில் பூத்த வேங்கை மலர்களைப் பறித்துத் தம் தலையில் சூடுவதற்காக, குறப்பெண்கள் புலி புலி என்று போடுகின்ற கூச்சல் ஒலி

6. சூல்கொண்ட பெண்யானைக்குத் துணையாகச் சென்றுகொண்டிருந்த ஆண் யானை பதுங்கியிருந்து பாய்ந்த புலியினால் கொல்லப்பட்டுவிட்டது. அதனால் அந்தப் பெண்யானை தன் சுற்றத்தோடு சேர்ந்துகொண்டு கதறுகின்ற இடியோசை போன்ற ஒலி.

7. தாயின் வயிற்றைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளத் தெரியாத குரங்குக் குட்டி, அதன் தாயும் தன் கையால் அதைப் பிடித்துக்கொள்ள மறந்ததினால் ஆழமான மலைப் பிழவிலே வீழ்ந்து இறந்துவிட, அதுகண்டு வருந்தித் தாய்க் குரங்கு போடுகின்ற கூச்சல்ஒலி.

8. மலை உச்சியிலே ஏறி, தேன்கூட்டிலிருந்த தேனை எடுத்த கானவர்கள் ஆரவாரித்து மகிழுகின்ற ஓசை.

9. கானவர்கள் குறுநில மன்னர்களின் காவல்களை அழித்துவிட்டு ஆரவாரம் செய்யும்ஒலி.

10. அரசனுக்குத் திறையாக அளிப்பதற்கு ஏற்றதான புதிய நறுந்தேனைச் சேகரித்துவிட்ட மகிழ்ச்சியில் குறவர்கள் மான்தோலால் செய்யப்பட்ட சிறிய பறை முழங்கித் தங்கள் பெண்களோடு மலை உச்சியிலே குரவைக்கூத்து ஆடுகின்ற ஓசை.

11. அழகான நல்ல தேர் ஓடி வருவதைப்போல மலை வெடிப்புக்களிலே வீழ்ந்த அருவி ஆறாக ஓடி வருகின்ற ஓசை.

12. நீர்ச் சுழியிலே வீழ்ந்ததால் கடுங்கோபம் கொண்ட யானையின் கோபத்தைத் தணிய வைத்துத் தம் ஏவலுக்குக் கட்டுப்பட வைப்பதற்காக, யானைப் பாகர்கள் யானைக்கு விளங்கும் மொழியிலே பேசுகின்ற ஒலி.

13. தினைப்புனத்திலே காவலிருக்கும் பெண்கள் மூங்கிலால் செய்த தட்டையை அடித்துக் கிளிகளைத் துரத்துகின்ற ஓசை.

14. ஆநிரையை விட்டு அகன்று பிரிந்து வந்த காளையும், மலையிலிருந்து வந்த காட்டெருமையும் ஒன்றுடனொன்று முட்டி மோத, அதுகண்டு இடையரும், குறவரும் ஆரவாரிக்கும்ஓசை.

15. குவளையும் குறிஞ்சியும் வாடிவதங்கும்படியாக எருமைக்கடாக்கள் பொருதுகின்ற ஓசை.

16. உண்டு மிஞ்சிய பலாச்சுளைகளை நிலத்தில்பரப்பி அவற்றின் மேல் மாட்டுக்கன்றுகளைப் பிணைத்து ஓட்டுகின்றார்கள். அவை மிதிக்க மிதிக்கச் சுளைகிளலிருந்த பலாக் கொட்டைகள் தனியாகப் பிரிந்து வரும். அவ்வாறு கொட்டைகளைச் சேகரிப்பதற்காகச் சிறுவர்கள் எருமைக்கன்றுகளைப் பலாச் சுளைகளின் மேல் ஓட்டுகின்ற ஓசை.

17. ஆலைகளிலே கரும்புகளைப் போட்டுச் சாறு பிழிகின்ற ஓசை.

18. தினை குற்றுகின்ற பெண்கள் பாடுகின்ற பாட்டொலி.

19. வளர்ந்து விட்ட சேம்பு, மஞ்சள் என்பவற்றை அகழ்ந்து பாழ்படுத்த வருகின்ற பன்றிகளை விரட்டுவதற்காகாப் பறையடிக்கும் ஓசை.

20. இத்தனை ஓசைகளும் ஒன்றாகச் சேர்ந்து மலையடிவாரத்திலிருந்து எழுவதால் மலையிலே ஏற்படுகின்ற எதிரொலி.


பண்டைத்தமிழகத்தின் வாழ்க்கை முறை, உணவு வகை என்பன பற்றியும், அக்காலத்தில் பயன்பாட்டிலிருந்த இசைக் கருவிகள் பற்றியும் பல்வேறு தகவல்களை மலைபடுகடாம் அறியத்தருகின்றது.

உணவு வகை

நெல்லரிசிச் சோறு, தினைமா, பலாக்கொட்டையின் மா என்பவற்றை உணவாகப் பயன்படுத்தினார்கள். அவரை விதை, மூங்கில்அரிசி, நெல்லரிசி என்பவற்றைப் புளியுடன் சேர்த்துச் சமைத்து உண்டார்கள். சமைத்த சோற்றைக் குளிர்ந்த நெய்யுடன் கலந்து உணவாகப் பரிமாறினார்கள். இரவிலே பால், பாற்சோறு என்பவற்றை உணவாகக் கொண்டார்கள். கிழங்குகள், தேன், பன்றியிறைச்சி மற்றும் உடும்பு, மான், எய்ப்பன்றி என்பவற்றின் இறைச்சி வகைகளையும் உண்டார்கள். வாளை மீன், வரால் மீன் முதலிய மீன்களை வலை வீசிப்பிடித்தும், தூண்டில் போட்டுப்பிடித்தும் தமக்கு உணவாக்கினார்கள். கள்ளுண்ணும் பழக்கம் அவர்களுக்கு இருந்தது. மதுவைப் பானைகளில் ஊற்றி வைப்பார்கள். மூங்கில் குழாய்களிலே அடைத்து வைப்பார்கள். மேற்படி உணவு வகைகள், குறிஞ்சி. முல்லை, மருதம், நெய்தல் என்ற நால்வகை நிலங்களிலும் அந்தந்த நிலங்களில் கிடைக்கப் பெறுவனவற்றுக்கும், பண்டமாற்றுச் செய்யக்கூடியனவற்றுக்கும் ஏற்ப ஒன்றுபட்டும், வேறுபட்டும் அமைந்திருந்தன.

வாழ்க்கை முறை

இந்த உணவு வகைகளையும், மதுவையும் மற்றவர்களுக்குக் கொடுத்து மகிழ்ச்சியடையும் விருந்தோம்பும் பண்பிலே மக்கள் மேலோங்கி நின்றார்கள்.

கூத்தர்களும் பாணர்களும் தங்கள் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் கடவுளை வணங்கினார்கள்.

தேவர்கள் கடலைக் கடைந்து அமுதம் பெற முனைந்தமை, அங்கே நஞ்சு விளைந்தமை, பரமசிவன் அந்த நஞ்சை உண்டமை முதலிய புராணக் கதைகள் வழக்கிலிருந்திருக்கின்றன.

மக்கள் இறக்கும்போது உடலிலிருந்து உயிரைப் பிரித்தெடுப்பவன் கூற்றுவன் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்திருக்கின்றது.

நாகபாம்பை வணங்கும் வழக்கம் இருந்தது. இந்தவணக்கத்தை மேற்கொள்பவர்கள் நாகர்கள் என்று அழைக்கப்பட்டனர். பெரும்பாலும் பெண்களே பாம்புகளை வணங்கித் துதிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள்.

போர்களில் ஈடுபட்டு இறந்த வீரர்களின் நினைவாக மரங்களின் கீழ் அந்த வீரர்களின் பெயர் பொறித்த நடுகற்களை நட்டு வழிபாடியற்றினார்கள்.

மட்பாண்டத் தொழில் நடைபெற்றிருக்கின்றது. குயவர்கள் சக்கரத்திலே மண்ணைக் குவித்து பாத்திரங்களைச் செய்தார்கள்.

உலோகங்களை உருக்கிப் பாத்த்திரங்களாகச் செய்யும் தொழிற்சாலைகளும் இருந்தன.

தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, தாளக்கருவி என்னும் நால்வகை இசைக் கருவிகள் பயன்பாட்டில் இருந்தன.

பேரியாழ், மத்தளம், சிறுபறைமேளம், வெண்கலத் தாளம், ஒருகண் மாக்கிணை, தூம்பு. நெடுவாங்கியம், சல்லி, கரடிகை ஆகிய இசைக்கழுவிகளைப் பாணர்கள் பயன்படுத்தினார்கள்.

சிறு குடிசைகளில் மட்டுமன்றிப் பெரு வீடுகளிலும் மக்கள் வாழ்ந்தார்கள். மதில் சுவரோடு கூடிய வழிபாட்டுத் தலங்கள் இருந்தன. யானைப்படை, குதிரைப்படைகளோடு கூடிய படைவீரர்களின் காவல் தளங்கள் இருந்தன.

அரண்மனை இருந்தது. அங்கே பகைவர்களிடமிருந்து மக்களைக் காக்கும் அரசன் வாழ்ந்தான். அரசசபை இருந்தது. அதிலே கற்றோரும், சான்றோரும் நிறைந்திருந்தார்கள்.

கல்வியிற் சிறந்தோர் போற்றப்பட்டார்கள். கலைகளில் வல்லவர்கள் பேணப்பட்டார்கள். மக்களின் நன்மையையே கருத்தில் கொண்டவனாக மன்னன் இருந்தான்.


srisuppiah@hotmail.com