வாழ்வியலை சித்தரிக்கும் சிறுகதைகள்

முருகேசு ரவீந்திரன்

லக்கியங்கள் கற்பனையோடு வாழ்வியலை சித்திரிக்கின்றன. இவை உணர்வுபூர்வமாக இருத்தல் வேண்டும். இவ்வாறு இருப்பதற்கு கதைமாந்தர் கதைக்களம் என்பன மிக நுணுக்கமாக நோக்கப்பட்டு எழுதப்படல் வேண்டும். இதற்கு அந்தப் படைப்பாளி தான் சார்ந்த சமூகம் தொடர்பான ஆழ்ந்த அறிவை கொண்டிருத்தல் வேண்டும்.

விஞ்ஞானத்துக்கும் கற்பனைக்கும் இடையில் பலத்த வேறுபாடுள்ளது. விஞ்ஞானம் சார்ந்த சமூகப் பார்வைக்கும் கற்பனையுடன் கூடிய இலக்கியத்துக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதை இலக்கிய ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஒரு சிறந்த எழுத்தாளருக்கு கற்பனை வளம் இருக்கின்ற அளவுக்கு சமூகவியல் அறிவும் இருக்கவேண்டும்.

குறிப்பிட்ட சமூக அமைப்பில் வாழும் மனிதர்களின் வாழ்வியல் பிரச்சினைகளையும் உளவியல் பிரச்சினைகளையும் மையமாக கொண்டு எழுதப்படும் சிறுகதையானது அம்மனிதர்களினதும் சமூகத்தினதும் பண்பாடு, பழக்க வழக்கங்கள், சமய விழுமியங்கள் என்பவற்றை முழுமையாக பிரதிபலிப்பது அவசியமாகும். அப்போதுதான் அந்தச் சிறுகதையை வாசிப்பவர்களின் மனதில் அது இடம்பிடிக்கும். அத்துடன் அந்தச் சிறுகதையில் இடம்பெறும் பாத்திரங்கள் அவை சித்திரிக்கப்படும் காலச் சூழலோடு பொருந்தி நிற்கும். சிறுகதைகள் நம்மோடு வாழும் சக மனிதர்கள் பற்றி புரிந்துகொள்ள வாய்ப்பளிக்கின்றது. அதே சமயம் கருத்துக்களை சிறுகதையில் துல்லியமாக பதிவு செய்ய சமூகம் சார்ந்த செய்திகள் மிகவும் பயன்படும்.

குறிப்பிட்ட சமூகப் பிரிவுபற்றி நன்கு அறிந்ததன் அடிப்படையில் சிறுகதை எழுதும்போது அப்பிரிவினருக்கே உரிய சமூகம் சார்ந்த செய்திகளை தகுந்த இடத்தில் பொருத்தமான முறையில் அமைக்கும் போது அந்தச் சிறுகதை அக்குறிப்பிட்ட மக்களைப் பற்றிய எதார்த்தமான இயல்பான தன்மையுடன் விளங்கும்.

ஒரு குறிப்பிட்ட பகுதியைப் பற்றி எழுதப்பட்ட சிறுகதைகளையும் ஒரு குறிப்பிட்ட இனத்தைப்பற்றி எழுதப்பட்ட சிறுகதைகளையும் பிரதேச வழக்கில் அமைந்த சிறுகதைகள் என்கிறோம். ஆனால் இவை இரண்டுக்கும் இடையில் வேறுபாடுள்ளது. குறிப்பிட்ட பிரதேசத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறுகதைகள் அப்பகுதியின் புவியியல் தொடர்பானது. அதேவேளை குறிப்பட்ட இனத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறுகதைகள் அவ்வினத்தின் வாழ்வியல் பற்றியதாகும்.

இலங்கையின் வட பகுதியை மையமாக வைத்து எழுதப்படும் சிறுகதைகளை யாழ்ப்பாண பிரதேச பேச்சு வழக்கில் அமைந்த சிறுகதைகள் என்கிறோம். ஆனால் யாழ்ப்பாணத்தில் வாழுகின்ற வேளாளர் அங்கு ஆதிக்க சாதியினர் எனக் கருதப்படுகின்றனர்.

அதேவேளை சமூக ரீதியில் பல கொடுமைகளை ஒரு காலத்தில் சந்தித்த தாழ்த்தப்பட்ட மக்களும் அங்கே வாழுகின்றனர். இந்த இரு சமூகத்தவர்களினதும் பண்பாடு பழக்கவழக்கம் என்பன வேறுபட்டு காணப்படுகிறது.

இதே போன்றுதான் மலையகத்தை எடுத்துக்கொண்டாலும் அங்கு வாழும் ஒவ்வொரு சாதி மக்களினதும் பழக்க வழக்கங்கள் வேறாக இருக்கின்றன. கிழக்கிலங்கையில் காணப்படும் தமிழர்கள் மத்தியிலும் சாதி சமய அடிப்படையில் பண்பாடு பழக்க வழக்கங்கள் என்பவற்றில் வேறுபாட்டைக் காணமுடியும். ஒரே பிரதேசத்தவர் என்றவகையில் ஒன்றாகவும் சமூக ரீதியில் வேறுபாடுகள் காணப்படுவதால் வேறுபட்ட பழக்க வழக்கங்களை உடையவர்களாகவும் காணப்படுகின்றனர். யாழ் குடாநாட்டை எடுத்துக் கொண்டால் நல்லூரில் வாழுகின்ற வேளாளர்களுக்கும் பருத்தித்துறையில் வாழுகின்ற வேளாளர்களுக்கும் இடையில் பழக்க வழக்கங்களில் வேறுபாட்டை காணமுடியும். அதேபோன்று மானிப்பாயில் வாழுகின்ற வேளாளர்களுக்கும் காரை நகரில் வாழுகின்ற வேளாளர்களுக்கும் இடையில் பண்பாட்டு அம்சங்களில் வேறுபாட்டைக் காண முடியும். இது ஏனைய சாதியினருக்கும் பொருந்தும்.

ஒரே பிரதேசத்தில் வாழுகின்ற வெவ்வேறு சாதி மக்களிடையே பழக்க வழக்கங்களில் வேறுபாடு காணப்படுகிறது. ஒரே சாதி மக்களிலும் வெவ்வேறு ஊர்களில் வாழும் மக்களிடையே பழக்கவழக்கங்கள் வேறுபட்டு காணப்படுகிறது. இவற்றையெல்லாம் கவனமாக உள்வாங்கியே சிறுகதை எழுத்தாளர்கள் தமது, படைப்புக்களை எழுதியுள்ளனர்.

பிரதேச மண்வாசனையோடு எழுதப்பட்ட சிறுகதைகளில் இந்தப் பண்புகளை மிகச் சிறப்பாக காணமுடியும். ஈழத்துச் சிறுகதை எழுத்தாளரான .சட்டநாதன எழுதிய 'உலா' சிறுகதை குழந்தைகளின் மன உணர்வுகளை மிகச் சிறப்பாக சித்திரிக்கிறது. இந்தச் சிறுகதை யாழ்ப்பாண பிரதேச வழக்கில் எழுதப்பட்டது. புவியியல் ரீதியாக அந்த மண்ணின் வாழ் நிலையை வெளிப்படுத்துகிறது. இங்கே சாதி குறித்த சித்திரிப்பு இல்லை. இதை யாழ்ப்பாண மண்வாசனையோடு எழுதப்பட்ட பொதுவான கதை என மேல் எழுந்தவாரியாக நோக்கும் ஒருவர் எண்ணலாம். ஆனால் இதில் வரும் சம்பவங்கள், கதை மாந்தர் போன்ற விடயங்களை ஆராய்ந்தால் யாழ்ப்பாணத்தில் உள்ள வேளாளர் சமூகம் பற்றிய சித்திரிப்பை இங்கே அவதானிக்க முடியும்.

நீர்வை பொன்னையன் எழுதிய 'சோறு' சிறுகதை யாழ்ப்பாண பிரதேச மொழி வழக்கில் எழுதப்பட்டது. இங்கே கூறப்படும் விடயங்கள், கதைமாந்தர் போன்றவை தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றியதாக அமைந்துள்ளது. யாழ்ப்பாண சமூகத்திலே தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்நிலை எவ்வாறு அமைந்திருந்தது என்பதை எடுத்துக் காட்டும் வகையில் இந்தச் சிறுகதை அமைந்துள்ளது.

சமூகம் தொடர்பான செய்திகளை எழுத்தாளன் சுய அனுபவம், கள ஆய்வு, நூலறிவு ஆகிய மூன்று முறைகளில் அறிந்து கொள்ள முடியும். இவற்றுள் முதலிரண்டு முறைகளில் எழுதப்பட்ட சிறுகதைகள் கூடுதலாக வெளியாகியுள்ளன.

சுய அனுபவம் என்பது எழுத்தாளனுக்குத் தான் பிறந்து வளர்ந்த சமூகச் சூழலையோ, தான் மேற்கொண்டிருக்கும் தொழில் அடிப்படையில் பெறும் அனுபவங்களை மையமாக கொண்டோ சிறுகதை எழுதுவதாகும். இம்முறையில் ஒரு சிறுகதை எழுத்தாளனுக்கு மிகவும் இயல்பாக சமூகவியல் தரவுகள் கிட்டிவிடுகின்றன. இதற்கு சான்றாக தெளிவத்தை ஜோசப் எழுதிய 'மீன்கள்' சிறுகதையை குறிப்பிடலாம். இவரது கதைகள் மலையக மக்களின் பிரச்சினைகளை பாடுபொருளாகக் கொண்டு எழுதப் பட்டவை. மலையகத்தை சேர்ந்த தெளிவத்தை ஜோசப்பிற்கு தான் பிறந்து வளர்ந்த பிரதேசம் பற்றியும் அந்தப் பிரதேச மக்களின் வாழ்க்கை முறை பற்றியும் நன்கு தெரியும். அந்த மக்களோடு மக்களாக அவரும் வாழ்ந்திருக்கிறார். எனவே இவரது கதைகள் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை யதார்த்த பூர்வமாக ரூரிளிப்படுத்துபவையாகவுள்ளன.

கள ஆய்வு முறையில் எழுத்தாளன் ஒரு குறிப்பட்ட களத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டு அங்கு நேரடியாகச் சென்று கள ஆய்வு நிகழ்த்தியோ அக்களத்திலுள்ள மக்களுடன் சிறிது காலம் வாழ்ந்தோ சமூக செய்திகளை சேகரிக்கிறான். தான் தேர்ந்தெடுத்த களத்தில் வாழும் மக்களின் வாழ்வியலை உற்று நோக்குபவனாகவும் வாய்ப்பு நேரிடும் போதெல்லாம் அதில் பங்கேற்பவனாகவும் அவன் மாறுகின்றான். கள ஆய்வு முறையில் சிறுகதை எழுதியவர்களுள் முக்கியமானவர் செங்கை ஆழியான். இவர் யாப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டவர். அரசாங்க அதிகாரியாக வன்னிப் பிரதேசத்தில் பணியாற்றியவர். அந்தவகையில் அந்தப் பிரதேசம் பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தார். இவரது படைப்புக்கள் பல வன்னிப் பிரதேச மக்களின் வாழ்நிலையையும் பண்பாட்டையும் சிறந்த முறையில் வெளிப்படுத்துபவையாகவுள்ளன. அந்தவகையில் செங்கை ஆழியான் எழுதிய 'அறுவடை' சிறுகதை வன்னி மக்களின் வாழ்க்கை முறை மற்றும் பண்பாட்டு விழுமியங்களை சிறப்பான முறையில் எடுத்துக் காட்டுகின்றது.

சுய அனுபவம் இன்றியும் கள ஆய்வு நிகழ்த்தாமலும் நூல்கள் வாயிலாக படித்தறிந்த செய்திகளை பயன்படுத்தும் முறையும் உண்டு. ஈழத்துச் சிறுகதை மூலவர்களுள் ஒருவரான போற்றப்படுபவர் சி. வைத்தியலிங்கம், காளிதாஸனின் சாகுந்தலமும், குமாரசம்பவமும், மேகசந்தேசமும் இவரைக் கவர்ந்தன. ஆங்கில, சமஸ்கிருத இலக்கியங்களில் மிகுந்த தேர்ச்சி பெற்றவராக சி. வைத்தியலிங்கம் காணப்பட்டார். தான் படித்த வரலாற்று நூல் அறிவின் அடிப்படையிலேயே 'கங்காகீதம்' சிறுகதையை எழுதினார். சி. வைத்தியலிங்கம் பல சிறுகதைகளை எழுதியபோதும் அவரது சிறுகதைத் தொகுதி 'கங்காகீதம்' சிறுகதையின் பெயரிலேயே வெளிவந்தது. சுய அனுபவமோஇ கள ஆய்வு முறையோ இல்லாது நூலறிவுமுறையைக் கையாண்டு இவர் இந்தச் சிறுகதையை எழுதினார்.

தமிழில் தொடக்க கால சிறுகதை எழுத்தாளர்கள் அன்றைய தமிழ் சமூகத்தில் மேல் தட்டு வர்க்கத்தினராக இருந்தனர். இலங்கையர்கோன், சி. வைத்தியலிங்கம், சம்பந்தன் ஆகியோரை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். சிறுகதை மூலவர்கள் எனப் போற்றப்படும் இவர்களுக்கு பின் எழுதத் தொடங்கிய மறுமலர்ச்சிக்கால எழுத்தாளர்களும் ஆங்கில அறிவு அதிகம் கைவரப் பெற்றவர்களாக இருந்தனர். இலங்கையில் மாத்திரம் அல்லாது தமிழகத்திலும் இவ்வாறான நிலையே காணப்பட்டது. புதுமைப்பித்தன், கு..ராஜகோபாலன், மெளனி போன்றவர்கள் ஆங்கில இலக்கியத்தில் பாண்டித்தியம் மிக்கவர்களாக இருந்தனர்.

நம் நாட்டவரான இலங்கையர் கோன் அரசாங்க அதிகாரியாக உயர்பதவி வகித்தவர் ஆனாலும் அவரது 'வெள்ளிப் பாதசரம்' சிறுகதை சாதாரண மக்களின் வாழ்க்கையை பாடுபொருளாக கொண்டு எழுதப்பட்டது.

மறுமலர்ச்சிக் கால எழுத்தாளர்களான வரதர், .செ.முருகானந்தம், நாவற்குதியூர் நடராசன், .. கந்தசாமி, .பரசாட்சஞசர்ம ஆகியோரும் ஈழகேசரி வாயிலாக எழுத்துலகில் பிரபலம் பெற்ற சு. இராஜநாயகன், சொக்கன், .. இராசரத்தினம்,சு., கனக செந்திநாதன் ஆகியோரும் ஆங்கிலம் கற்றவர்களாகவும் சமூகத்தில் உயர்மட்டத்திலும் காணப்பட்டனர். இருந்தபோதும் நாங்கள் வாழ்ந்த சூழல் பற்றியும் தமது பிரதேச மக்களின் வாழ்நிலை குறித்தும் நன்கு அறிந்தவர்களாக இருந்தனர். இதனால் இவர்களால் மண்வாசனை மிக்க சிறுகதைகளை எழுதக் கூடியதாக இருந்தது. தாம் வாழ்ந்த சமூகத்தில் மக்கள் கடைப்பிடித்த பண்பாடு பழக்க வழக்கங்கள் போன்ற விடயங்களையும் இவர்கள் சிறுகதைகள் வாயிலாக சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தனர்.

இலங்கையில் பின்னாளில் சிறந்த பிரதேச வழக்கில் அமைந்த மண்வாசனை கொண்ட சிறுகதைகள் தோற்றம் பெற மறுமலர்ச்சிக்கால எழுத்தாளர்களின் படைப்புகள் உந்து சக்தியாக அமைந்தன.

இன்று தமிழில் மாத்திரம் அல்லாது ஏனைய மொழிகளிலும் பிரதேச வழக்கில் அமைந்த சிறுகதைகளே போற்றப்படுகின்றன. ஒரு பிரதேசத்தை சேர்ந்த மக்கள் எந்த பேச்சு மொழியை பயன்படுத்துகிறார்களோ அதுவே அந்தப் பிரதேச சிறுகதைகளில் வரும் பாத்திரப் படைப்புக்களிலும் சித்திரிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவை இயல்பான சிறுகதைகளாக காணப்படும்.

ஒருகாலத்தில் எமது சிறுகதைகளுக்கு அடிக்குறிப்பு தேவை என பகீரதன், கி.. ஜெகநாதன் போன்றோர் கூறினர். ஈழத்துச் சிறுகதைகளை தமிழகத்தவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது அவர்களின் வாதமாக இருந்தது.

ஆனால் இன்று எந்த அடிக்குறிப்புகளும் இல்லாமல் எமது சிறுகதைகள் உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது. ஆனந்த விகடன், குமுதம் போன்ற வியாபார சஞ்சிகைகள் கூட எமது சிறுகதைகளை வாங்கிப் பிரசுரிக்கின்றன. இதற்கு புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் எம்மவர்களிடம் இவற்றை விற்கவேண்டும் என்பதே நோக்கமாகவுள்ளது. எது எப்படி இருந்த போதும் எமது படைப்புக்களுக்கு இன்று அடிக்குறிப்புகள் தேவைப்படவில்லை. இது முன்னேற்றகரமான விடயம் என்றே கருத வேண்டும்.