உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு

தேவிபாரதி

கோவையில் கடந்த ஜூன் 23 தொடங்கி 27 வரை நடந்து முடிந்த முதலாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியைப் பொறுத்தவரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்பதில் சந்தேகமில்லை. ஏறத்தாழ 370 கோடி ரூபாய் செலவில் மிக ஆடம்பரமாக நடத்தப்பட்ட இம்மாநாடு தமிழக மக்களுக்கும் திமுகவினருக்கும் ஒரு முக்கியமான செய்தியைச் சொல்லியிருக்கிறது. ஆட்சியிலும் கட்சியிலும் உச்ச அதிகாரம் பெற்றவர்களாகக் கருணாநிதியும் அவரது குடும்ப உறுப்பினர்களுமே நீடித்திருக்க முடியும் என்பதுதான் அது. திமுகவினர் இந்த உண்மையைச் சில பத்தாண்டுகளுக்கு முன்னரே ஏற்றுக்கொண்டுவிட்டனர். கருணாநிதி குடும்பத்தினரின் இந்த மேலாண்மையைத் தமிழக மக்களை, குறிப்பாக வாக்காளர்களை, ஏற்றுக்கொள்ளச் செய்வதுதான் இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம்.

கொங்கு மண்டலத்தில் பலவீனமாக உள்ள கட்சியின் செல்வாக்கை உயர்த்துவதற்காகவே இந்த மாநாடு கோவையில் நடத்தப்படுகிறது என்னும் விமர்சனங்கள் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டன. தேர்தல்களை எதிர்கொள்வதற்குக் கொங்கு மண்டலத்தில் அழகிரியைப் போன்ற 'உறுதி'யான தலைமை எதுவும் இல்லாத நிலையில் மக்களின் 'மனங்களை' வென்றெடுப்பது தவிரத் திமுகவுக்கு வேறு வழியில்லை. மாநாட்டை முன்னிட்டுக் கோவை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் கோவை மாநகராட்சிப் பகுதியின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் சாலைகள் அமைக்கவும் புதைமின்வடம் அமைக்கவும் செம்மொழிப் பூங்கா நிறுவவும் பல கோடி ரூபாய் அரசு நிதி செலவிடப்பட்டுள்ளது. முதல்வர், துணை முதல்வர், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோரது நேரடி மேற்பார்வையில் அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களால் கண்காணிப்புக்குட்படுத்தப்பட்ட அதிகார வர்க்கத்தால் அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்ட இப்பணிகள் கடந்த சில வருடங்களில் இடைத்தேர்தல்கள் நடைபெற்ற தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட 'வளர்ச்சிப் பணிகளை' நினைவூட்டக்கூடியவை. (இந்த அவசரத்தில் குடிசை மாற்று வாரியத்தால் கோவையின் ஏரிப்பகுதியொன்றில் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளில் சில மண்ணில் புதையுண்டதையடுத்து இடித்துத் தள்ளப்பட்டன.) உலக அளவிலான ஒரு மாநாடு கூட்டப்படும்போது கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது இயல்பான ஒன்றுதான். ஆனால் இது போன்ற பணிகளை மேற்கொள்வதற்கு அரசு ஒரு இடைத் தேர்தலுக்காகவோ மாநாடு போன்ற கொண்டாட்டங்களுக்காகவோ காத்திருக்க வேண்டியதில்லை.

தமிழ்த் தேசிய அமைப்புகளாலும் ஈழ ஆதரவாளர்களாலும் தமிழினத் துரோகி என வர்ணிக்கப்படும் முதல்வர் கருணாநிதிக்கு அவரைப் பற்றிக் கட்டமைக்கப்பட்டிருக்கும் தமிழினத் தலைவர் என்னும் பிம்பத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்கு இந்த மாநாடு தேவைப்பட்டிருக்கலாம். மாநாடு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டவுடன் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களை அவர் பொருட்படுத்தவேயில்லை. ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாட்டை நடத்துவதற்குத் தேவைப்படும் நியாயமான கால அவகாசத்தைக்கூட உலகத் தமிழாராய்ச்சிக் கழகத்துக்கு வழங்க முடியாத அளவுக்குக் கருணாநிதி அவசரப்பட்டதற்கான காரணம் எளிமையானது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மாநாட்டை நடத்தி முடித்துவிட வேண்டும் என முடிவுசெய்தவர், அதற்கான திட்டமிடல்களில் அசுர வேகத்தைக் காட்டினார். மாநாடு முடிந்தவுடன் தமிழக சட்டமன்றத்துக்கான தேர்தலைச் சந்திக்கவும் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் கசிந்தன. இது போன்ற ஒரு மாநாட்டை நடத்துவதன் மூலம் ஈழப் பிரச்சினை சார்ந்து தனக்கேற்பட்ட அவப்பெயரைத் துடைத்துக்கொள்ள முடியும் என அவர் நம்பினார். மாநாட்டில் பங்கேற்கச் செய்வதற்கு ஈழத்தின் மூத்த தமிழறிஞரான கா. சிவத்தம்பிக்குப் பல நெருக்கடிகள் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுவதை இந்தப் பின்னணியில் தான் விளங்கிக்கொள்ள முடிகிறது.

மாநாடு பற்றிய அறிவிப்பு வெளியானதுமே அரசின் எல்லா மட்டங்களிலும் சொல்ல முடியாத பதற்றம் நிலவத் தொடங்கியது. தான் விரும்பியதுபோல் உலகத் தமிழ் மாநாட்டை நடத்த முடியாத நிலையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தத் தீர்மானித்த முதல்வருக்குத் தமிழ் கல்விப் புலம் முழு 'ஒத்துழைப்பு' கொடுத்தது. சொடக்குப் போடும் நேரத்திற்குள் ஆயிரக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகள் எழுதி முடிக்கப்பட்டன. கருணாநிதிக்கு என்ன தேவை என்பதைத் தமிழ் அறிஞர்கள் தெளிவாக அறிந்திருந்தார்கள். செம்மொழி தொடர்பான முறையான ஆய்வுப் பணிகள் இன்னும் தொடக்க நிலையைத் தாண்டாத நிலையில் சங்க இலக்கியம் தொடர்பாக ஏற்கனவே நிலவிவந்த பொதுப்புரிதல்கள் சார்ந்து எழுதுவது கடந்த பல பத்தாண்டுகளாகவே தமிழாய்வுகளைச் சடங்காக மேற்கொண்டுவரும் தமிழறிஞர்களுக்குச் சிரமமான காரியமாக இருந்திருக்க வாய்ப்பில்லை. கருணாநிதியை மனுநீதிச் சோழனோடும் நெடுஞ்சேரலாதனோடும் பாண்டியன் நெடுஞ்செழியனோடும் ஒப்பிடுவது போதுமானது என்பதைப் புரிந்துவைத்திருக்கும் ஆய்வாளர்கள் புகழுரைகள்மீது அவருக்குள்ள மயக்கத்தை நன்றாகவே பயன்படுத்திக்கொண்டுள்ளனர். கருணாநிதி தலைமையில் நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கில் தன்மீதான புகழுரைகளைக் கேட்டுக் கருணாநிதியே கூச்சப்படும் அளவுக்குப் புகழ்மாரி பொழியப்பட்டது. கவிமாரி பொழிந்தவர்களோ தமிழை மிக மோசமாக அவமதித்தார்கள்.

பொது நிகழ்வுகள் குறித்துப் பக்கம் பக்கமாக எழுதிய ஊடகங்களில் ஆய்வரங்குகள் குறித்து மிகச் சொற்பமான பதிவுகளே இடம்பெற்றிருந்தன. இனியவை நாற்பது என்னும் தலைப்பில் நடத்தப்பட்ட பேரணி லட்சக் கணக்கில் திரட்டப்பட்ட பார்வையாளர்களுக்கு மட்டுமல்லாமல் ஊடகத் துறையினருக்கும் அறிஞர்களுக்கும் பிரமிப்பூட்டும் ஒரு காட்சியாகவே இருந்திருக்க வேண்டும். ஊடகங்களில் பிரசுரம் பெற்றுள்ள நிழற்படங்களைப் பார்த்தால் பேரணியைப் பார்வையிடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மேடைகளில் கருணாநிதியையும் அவர் குடும்பத்தினரையும் தவிர வேறு யாருக்கும் உட்காரக்கூட இடமில்லாததுபோல் தோன்றியது. அரங்க நிகழ்வுகளின்போதுகூடப் பார்வையாளர்களின் முதல் வரிசையில் தென்பட்டவர்கள் முதல்வரின் குடும்பத்தினர்தாம். ஆய்வரங்கங்களில் பெரும்பாலானவற்றுக்கு விரல்விட்டு எண்ணத்தக்க பார்வையாளர்களே வந்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. தமிழக வரலாறு, தமிழின் தொன்மைச் சிறப்புகள் குறித்து புதிய புரிதல்களை உருவாக்கும் விவாதங்களைத் தூண்டுவதற்கு இந்த மாநாட்டில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் ஏதாவது பங்களிப்புச் செய்திருக்கும் என நம்புவதற்கான தடயங்கள் அவை குறித்த பதிவுகளில் தென்படவில்லை.

மொத்தம்
219 அமர்வுகளில் 913 கட்டுரைகள் வாசிக்கப்பட்டதாகக் கருணாநிதி செய்தி வெளியிட்டுள்ளார். இதில் அதிகபட்சக் கட்டுரைகள் அவரைப் பற்றியவை என்பதைச் சொல்லத் தேவை இல்லை. வணிகம், தொழில், வேளாண்மை, நிதி மேலாண்மை ஆகியன பற்றிய கட்டுரைகள் இல்லை. கோவையில் நடந்த மாநாட்டில் ஆடை உற்பத்தி பற்றிய கட்டுரைகள் இடம்பெறாமை அபத்தம்.

ஆனால் இந்த மாநாடு பெரும் வெற்றியடைந்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. தமிழ்க் குடியை உலகின் மூத்த குடி எனவும் தமிழை உலகின் முதல் மொழி எனவும் தமிழறிஞர்களை ஏற்றுக்கொள்ளச் செய்வதில் கருணாநிதி வெற்றிபெற்றுவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த இருபது இருபத்தைந்து ஆண்டுகளில் சங்க இலக்கியங்கள் சார்ந்தும் தமிழக வரலாறு குறித்த புனைவுகள் சார்ந்தும் பல்வேறு கேள்விகளை எழுப்பிவந்த தமிழ் தலித், பெண்ணிய, பின்நவீனத்துவ அறிவுத் துறையினரது குரல்கள் இந்தக் கொண்டாட்டத்தால் பலவீனப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ் குறித்தும் தமிழக வரலாறு குறித்தும் திராவிட இயக்கங்களால் கட்டமைக்கப்பட்ட கற்பனைகளின் மீது குறுக்கீடுகளை நிகழ்த்துவதற்கான உரிமைகள் முற்றாகப் பறிக்கப்பட்டுள்ளன. தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து அளிப்பது பற்றிய அறிவிப்பு வந்ததுமே கருணாநிதியைச் 'செம்மொழி கொண்டான்' என்னும் பட்டப்பெயரிட்டு அவருடைய அன்பர்கள் அழைக்கத் தொடங்கியிருந்தனர். 'கங்கை கொண்டான்', 'கடாரம் வென்றான்' போன்ற பழந்தமிழ் மன்னர்களுடைய பட்டப்பெயர்களுக்கு இணையான ஓசை நயம் கொண்ட இந்தப் பெயர்கள் கருணாநிதியைப் பெருமித மடையவைத்திருக்கும்.
1967க்கு முன்பு தம்மைச் சூத்திரர்களாகவும் பாட்டாளிகளாவும் அடையாளப் படுத்திக்கொண்ட ஒரு இயக்கத்தினரின் தலைவர் தற்போது மன்னர்களோடும் பேரரசர்களோடும் இணைத்து அடையாளப்படுத்திக்கொள்வதற்குப் பின்னணியில் உள்ள 'பின்நவீனத்துவ அரசியல்' நம் பின்நவீனத்துவவாதிகளின் புரிதலுக்கு அப்பாற்பட்டதல்ல.

கருணாநிதி பின்நவீனத்துவவாதி என்பதில் சந்தேகமில்லை. வள்ளுவர் கோட்டத்தையும் அய்யன் திருவள்ளுவரின் சிலையையும் நிறுவியவர்இ தான் கோலோச்சுவதற்காக 450 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன்கூடிய 'பசுமைக் கட்டட'த்தைக் கட்டிக்கொள்ளவும் செய்தார். சென்னை மாநகரை அழகுபடுத்துவதற்காகப் பல்லாயிரம் விளிம்புநிலை மக்களை மாநகர எல்லைகளுக்குள்ளிருந்து அப்புறப்படுத்தவும் விவசாயிகள்இ உழைப்பாளர்களின் வாழ்வாதாரங்களை, உரிமைகளைப் பாதிக்கும் பல பன்னாட்டு நிறுவனங்களுடன் நூற்றுக்கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்துகொண்டுள்ள அவரது அரசால் கலைஞர் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் ஏழைகளுக்காக
21 லட்சம் வீடுகளைக் கட்டிக்கொடுக்கப்போவதாக வாக்களிக்கவும் முடிகிறது. சங்க காலப் பெருமிதங்களைப் பேசும் அவரது குடும்பத்தினர் தமிழ் நவீன ஊடகத் துறைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல கோடி ரூபாய் முதலீடுகளைச் செய்து அவற்றைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிகிறது. சாதிய, மதவாத அரசியல் சக்திகளுடன் சந்தர்ப்பவாதக் கூட்டணிகளை அமைத்துக்கொள்வதற்கு இந்தப் பெரியாரியவாதிக்கு எந்தத் தயக்கமும் இருந்ததில்லை. மின்னணுமயப் படுத்தப்பட்டுவிட்ட தேர்தல்களை வென்றெடுப்பதற்கும் எதிர்ப்பாளர்களை ஒடுக்குவதற்கும் தம் மகனை 'அஞ்சா நெஞ்சனா'க உருவாக்கியுள்ள அவர்தான் நாட்டார் கலை மரபை மீட்டெடுப்பதற்கு மகள் கனிமொழியைப் பொறுப்பாக்கியுள்ளார். இவற்றைக்கொண்டு அவரைப் பிளவுபட்ட, முரண்பட்ட ஆளுமைக்கு உதாரணமாகக் கட்டமைக்க முயல்வது பிழை. அவர் மாமன்னர். மூவேந்தர் மரபின் தொடர்ச்சி. அவர் மனுநீதிச் சோழன் தான். ஆனால் தன் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களான ஆ. ராசா போன்றவர்கள்மீது வைக்கப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக அவர்கள்மீது நடவடிக்கை எடுக்குமளவுக்குப் பழமைவாதி அல்ல.

அவர் சாணக்கியரோடு ஒப்பிடப்படும் ராஜதந்திரி என்பதைப் பல தருணங்களில் நிரூபித்துவந்திருக்கிறார்.
1965இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போர். 1967இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு வெற்றியை ஈட்டிக்கொடுத்தது போலச் செம்மொழிமீது கொண்ட வெற்றி 2010 சட்டமன்றத் தேர்தல்களில் தன் கட்சியின் வெற்றிக்குத் துணைபுரியும் என அவர் கணக்குப்போடுவதுகூட ஒருவகையில் ராஜதந்திரம்தான்.

தவிரத் தமிழ்மீதும் தமிழ்ச் சமூகத்தின் மீது அதிகாரம் பெற்றவர்கள் கருணாநிதியும் அவரது குடும்பமும்தாம் என்பதைச் 'சங்கத் தமிழி'ல் பறைசாற்றியிருக்கிறது இச்செம்மொழி மாநாடு. 'செம்மொழியான தமிழ் மொழி'யைக் காப்பதற்குக் கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலினும் அழகிரியும் கனிமொழியும் மாறன்களும் கயல்விழி அழகிரியும் தயாநிதி அழகிரியும் உதயநிதி ஸ்டாலினும் பேத்தி எழிலரசி ஜோதிமணியும் இன்னபிற வாரிசுகளும் காத்திருக்கிறார்கள் என்பதையும் உணர்த்தியிருக்கிறது. ஈழப் பிரச்சினை, திணறவைக்கும் விலைவாசி உயர்வு, அரசின் பொருளாதாரக் கொள்கைகள் காரணமாகச் சரிவடைந்திருக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம், பாதிப்புக்குள்ளாகியுள்ள வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் அரசின் தலைவருக்கு இது போன்ற கொண்டாட்டங்கள் அவசியம் என்பதையும் மறுப்பதிற்கில்லை.

இந்த மாநாடு தமிழ்ச் சமூகத்துக்குச் சொல்லியிருக்கும் மற்றொரு முக்கியமான செய்தி அதிகாரத்தின் முன் அடிபணியாத, அதனிடம் வாலைக் குழைக்காத தமிழ் அறிவுலக ஆளுமைகள் சொற்பம் என்பதுதான். ஜனநாயகத்தை மீட்பதற்கான போராட்டம் என
2006இன் தமிழகச் சட்டமன்றத் தேர்தலைப் பற்றிக் குறிப்பிட்ட கருணாநிதி ஆட்சிப்பொறுப்பேற்றபிறகு முதல்வராகத் தமிழக மக்களின் ஆதாரமான வாழ்வியல் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்கு அளித்த முக்கியத்துவத்தைக் காட்டிலும் தன்னைத் தமிழகத்தின் தன்னிகரற்ற நிரந்தரமான தலைவனாக முன்னிறுத்திக் கொள்வதற்கே கூடுதல் முக்கியத்துவமளித்தார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த மிகச் சுருக்கமான வழி துதிபாடிகளை ஊக்குவித்துத் தன்னைப் பற்றிய மிகைப்படுத்தப் பட்ட கற்பனையான பிம்பங்களைக் கட்டமைப்பது. அரசு அறிவிக்கும் ஒவ்வொரு திட்டத்தையும் தொடர்ந்து அதற்கான பாராட்டுவிழாக்களை நடத்துவதற்கு இந்தத் துதிபாடிகள் கூட்டம் அணிவகுத்து நின்றது. கடந்த நான்காண்டு காலத்தில் கருணாநிதிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாக்களின் எண்ணிக்கை பட்டியலிடப்பட முடியாத அளவுக்கு நீண்டது. ஆட்சிப் பொறுப்பேற்றதும் பல்வேறு பிரிவினருக்குமான நலவாரியங்களை அமைத்தது அரசு. ஒவ்வொரு பிரிவினரும் ஒரு பாராட்டு விழாவை நடத்தி ஒவ்வொரு பட்டத்தை வழங்கித் தம்மைக் கௌரவித்துக்கொண்டனர். இச்செம்மொழி மாநாடு தமிழறிஞர்களால் அவருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழா என்றுகூடச் சொல்லலாம். மாநாட்டில் கலந்துகொண்ட அறிஞர்களுக்குச் செய்துதரப்பட்டிருந்த வசதிகளைப் பார்த்தால் அவற்றைச் செய்துகொடுத்த வரை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்றுதான் தோன்றும்.

தமிழ் அறிவுத் துறைச் செயல்பாட்டாளர்களில் ம.,லெ. தங்கப்பா, கோவை ஞானி, பா. செயப்பிரகாசம், ராஜேந்திர சோழன், தொ. பரமசிவம், வெளி. ரங்கராஜன் க. பூர்ணச் சந்திரன் உள்ளிட்ட சிலர் இம்மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாக வெளிப்படையாக அறிவித்தனர். சுந்தர் காளி, இராம சுந்தரம், தி.சு. நடராஜன், பா. ஆனந்தகுமார், ந.முத்துமோகன், ஆ.சிவசுப்பிரமணியன், நா. இராமச்சந்திரன் உள்ளிட்ட சிலர் இம்மாநாட்டைப் புறக்கணித்தனர். இவர்களில் சிலர் மாநாட்டைப் புறக்கணிப்பதற்கான காரணங்களை ஊடகங்களின் வாயிலாகப் பதிவுசெய்திருந்தனர். சில மாதங்களுக்கு முன்பு மாநாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் புதிய தமிழகம் கோவையில் ஒரு பேரணியை நடத்தியது. ஜூன்
13ஆம் தேதி தமிழ்நேயம் சார்பில் கோவை ஞானி 'தமிழ் மலர்' என்னும் இலக்கிய ஆய்வுக் கட்டுரைகளடங்கிய ஒரு தொகுதியை வெளியிட்டு அதைச் செம்மொழி மாநாட்டுக்கான எதிர்ப்பு நடவடிக்கையாக முன்வைத்தார். இத்தகைய எதிர்ப்புக் குரல்கள் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. தமிழ் அறிவுத் துறையினரில் விரல்விட்டு எண்ணத்தக்க சிலரைத் தவிர மற்றவர்கள் மாநாட்டில் பங்கேற்றனர். ஆய்வரங்குகளில் பங்கேற்பதற்காகப் பெரிய இடங்களின் சிபாரிசுகளை நாடி அலைந்தவர்களும் உண்டு என்கிறார்கள். 1981இல் எம்.ஜி.ராமச்சந்திரன் தலைமையிலான அதிமுக அரசால் நடத்தப்பட்ட உலகத் தமிழ் மாநாட்டைக் கும்பல் கலாச்சாரம் என விமர்சித்து அதற்கெதிராக 'இலக்கு' என்னும் அமைப்பின் தலைமையில் போராடிய அறிவுத் துறை ஆளுமைகளில் பலர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டிருக்கிறார்கள். கும்பல் கலாச்சாரத்துக்கும் மாற்றுக் கலாச்சாரத்துக்குமிடையேயான கோடு மிக ரகசியமாக அழிக்கப்பட்டிருக்கிறது. கருணாநிதியின் பின்நவீனத்துவ அணுகுமுறைக்கு இதைவிடச் சிறந்த எடுத்துக்காட்டை பேராசிரியர் முனைவர் அ. ராமசாமிதான் கண்டுபிடிக்க வேண்டும்.

மாநாட்டையொட்டி வெளியிடப்பட்டுள்ள சிறப்பு மலரைப் பார்த்தால் புல்லரிக்கிறது. அதில் பிரசுரம் பெற்றுள்ள கவிதைகள் ஏற்படுத்தும் புல்லரிப்புத் தாள முடியாதது.
2000இல் காலச்சுவடு அறக்கட்டளையால் சென்னையில் நடத்தப்பட்ட தமிழ் இனி 2000 மாநாட்டு மலரைப் பொருட்படுத்தத் தயங்கிய, அதன்மீது அவதூறுகளைப் பரப்பிவருகிற தமிழ் அறிவுலகவாதிகள் இந்த மலரைக் குறித்துக் குறைந்தபட்சம் தம் வலைப் பூக்களிலாவது பதிவுசெய்வார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தவிர சென்னை எழும்பூரில் இருந்த அட்லாண்ட்டிக் ஹோட்டலில் மிகச் சுதந்திரமான முறையில் நடைபெற்ற அந்த மாநாட்டில் கலந்துகொண்ட பேராளர்கள் தங்குவதற்கு அறைகளும் சாப்பிடத் தகுந்த உணவும் அளிக்க ஏற்பாடு செய்ததைக் காரணம் காட்டி ஆடம்பரமானது எனக் கண்டித்தவர்கள், மாநாட்டுக்கு எதிராக வசைகளால் நிரப்பப்பட்ட துண்டறிக்கைகளை மாநாட்டு அரங்கிலேயே விநியோகித்தவர்கள், ஊமையாக இருப்பதற்கு இப்போது தமிழ்ச் செம்மொழியாகிவிட்டதுதான் காரணமோ?.


நன்றி – காலச்சுவடு