அழகிய தோளும் அகன்ற மார்பும்

கவிஞர் மா.உலகநாதன்., எம்.ஏ


தோள் வலியும் துணிவும் ஆடவர்க்குரியன தினவெடுத்த தோள்கள் என்பர். அதனால்தான் இராமனின் தோளழகைச் சொல்ல வந்த கம்பர்.

தோள் கண்டார் தோளே கண்டார்
தொடுகழற் கமலம் அன்ன
தாள்கண்டார் தாளே கண்டார்
தடக்கை கண்டாரும் அஃதே என்றார்.


படகோட்டி என்ற திரைப்படப் பாடலில் அழகிய தோள்கள் பழகிய நாட்கள் ஆயிரம் சுகம் அல்லவா? என்று வாலி தோளழகைச் சித்தரித்திருக்கிறார்.

பொதுவாக, ஆடவரிற் சிறந்தார்க்குத் திருமாலும், பெண்களிற் பெருமையுடையார்க்குத் (இலக்குமியை) திருவும் உவமை கூறுவர். ஆடவர்க்குரியது வினைமாட்சி. வினையின் பொருட்டு, ஆடவரின் உடலமைப்பு உறுதிபட படைக்கப்பட்டிருக்கிறது.

அகன்ற நெற்றியும், மார்பும், ஊடுருவி உணரும் கண்களும், எஃகைப் போன்ற தோள்களும் (புயங்களும்) சிறப்பு என்பர் நூலோர். ஆண்களுக்கு அழகு செய்வது மார்பு! மார்புக் கூட்டுக்குள் தான், மனித இயக்கத்தின் முக்கிய உறுப்புகளான இதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், கணையம் ஆகியவை அமைந்துள்ளன. மார்பின் அகலத்தைப் பொறுத்தே ஆணின் வலிமை கணக்கில் கொள்ளப்படும். இதனால் தான் இராணுவம், காவல்துறை போன்ற துணிவும் சாகசமும் மிக்க துறைகளில் மார்பளவு குறிக்கப் பெறுகிறது.

மலைஎன எழுஎன வழங்கும் தோள்களும்
பாயல் ஆம்எனப் படர்தரு மார்பமும்
காளையர்க்கு உரித்து எனக் கழறினர் கற்றோர்.

                                  (அறுவகை இலக்கணம்)

குன்றுகள் எனவும், எஃகு எனவும் சொல்லப்படுகின்ற புயங்களும், படுக்கையைப் போன்று பரந்து அகன்றுள்ளமார்பும் வாலிபர்க்கு உரியன என்று கற்றறிந்தபுலவர்கள் கூறுவர்.
மகளிர் தழுவவும், மைந்தர் ஏறி விளையாடவும் ஏதுவானதாக ஆடவரின் மார்பு அகலமானதாக இருக்க வேண்டுமாம்.
உறுதியுள்ள உடலிலே தான் உரத்த சிந்தனையூறும்!
(Sound mind in the sound body)

ஏறு தழுவுதல் :

முல்லை நிலத்தில் வாழ்ந்திருந்த ஆயர்குடிப்பெண்கள், ஏறு தழுபுபவனையே மணப்பேன் என்று உறுதியாக இருப்பர்.

கொல்லேற்றுக் கோடஞ்சுவானை
மறுமையும் புல்லாளே, ஆய மகள்.


கொல்லும் ஏற்றின் கொம்புக்கு அஞ்சும் ஆயனை மறுபிறவியிலும் ஆய மகள் தழுவாள். அவளுடைய தோள்கள் அஞ்சாமல் உயிரைத் துறந்து கொல்லும் தொழிலை உடைய ஏற்றைக்கொள்பவனைச் சேரும்.
ஏறுதழுவும் போது எழும் களக்காட்சியை கலித்தொகை இப்படிச் சொல்கிறது.

எழுந்தது துகள் :
ஏற்றனர் மார்பு :
கவிழ்ந்தன மருப்பு :
கலங்கினர் பலர் :
(கலி :
102-21-24)

காளையொருவன் காளையை அடக்கும்போது களம் தூசி பறந்து போர்க்களம் போல காட்சியளிக்கிறது. எருதுகளை எதிர்கொள்ளும் காளையர்கள் தம்மார்பில் கொம்புகளை ஏந்தி திமிலைப்பற்றி காளையை அடக்குவர். என்னாகுமோ என்று எருதுகள் கவிழ்ந்தனவாம். இதைப்பார்த்த எருதின் உரிமையாளர் பலர் கலங்கி நின்றனராம்.

ஏறுதழுவும்போது, ஆயர்குடி ஆடவர்கள், மலையில் உள்ளனவும், காட்டில் உள்ளனவும் ஆன மென்மையான கொத்தையுடைய கொன்றைப் பூ மென்மையானமலரையுடைய காயாம் பூ, புல்லிய இலைகளுடைய வெட்சிப் பூ, பிடவம் பூ, முல்லைப் பூ, கஞ்சங்கொல்லைப் பூ, குரந்தம் பூ, காந்தன் பூ, பாங்கர்ப் பூ ஆகியவற்றால் ஆன மணம் கமழும் கண்ணியைச் சூடியவராய், விரையும் ஏற்றைத் தழுவுவராம்.

மெல் இணர்க் கொன்றையும், மென் மலர்க் காயாவும்
புல்இலை வெட்சியும், பிடாவும், தளவும்
குல்லையும், குரந்தும், கோடலும், பாங்கரும்
கல்லவும் கடத்தவும் கமழ்கண்ணி மலைந்தனர்
பல ஆன் பொதுவர், கதழ்விடைகோள் காண்மார்.
கலி:
103-(3)-1-5

பூச்சூடல் பெண்களுக்கு உரியது அல்லவா? ஆண்கள் பூச்சூடுவதா? என்று நினைக்கிறீர்களா? கலித்தொகை மட்டுமல்ல திருக்குறளும் ஆண் பூச்சூடுதலை அளவிட்டுப் பேசுகிறது.

கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.
குறள் :
1313

கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்குக் காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்வாளாம் தலைவி.

புகழும் இகழும் :

இராமபாணம் இராவணனின் உடலைத் துளைத்து உயிர் கொண்ட செய்தியை கம்பர் வர்ணிக்கிறார். செருக்கடைந்த புய வலியும் தின்று மார்பு புக்கோடி என்கிறார். மார்பில் விழுப்புண் படுதல் என்பது வீரனுக்கு அழகல்லவா? இராவணன் என்ற வீரனின் புகழையெல்லாம் சொல்லி, பின்னரே அவன் இறந்துபட்டான் என்கிறார் கம்பர்.

முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும்
      முதல்வன் முன்னாள்
எக்கோடி யாராலும் வெலப்படாய் எனக்கொடுத்த
      வரமும் ஏனைத்
திக்கோடும் உலகனைத்தும் செருக்கடைந்த புய வலியும்
      தின்று மார்பிற்
புக்கோடி உயிர்பருகிப் புறம் போயிற் றிராகவன் எய்
      புனித வாளி. 

                           (இராவணன் வதைப்படலம்)

இராவணன் இறந்துபட்டதும் இராமன் விபிடணனை நோக்கி என்னிடம் நீ சேர்ந்தாலும் இராவணன் உனக்கு சகோதரன் அல்லவா? அதனால், நீ அவனுடைய இறுதிச் சடங்குகளை செய்து வா என்று சொன்னான். அண்ணனுடைய வீர உடலைப் பார்த்த வீபிடணன்.

போர்மகளைக் கலைமகளைப் புகழ்மகளைத்
       தழுவியகை பொறாமை கூரச்
சீர்மகளைத் திருமகளைத் தேவர்க்கும்
       தெரிவரிய தெய்வக் கற்பின்
பேர்மகளைத் தழுவுவான் உயிர்கொடுத்துப்
       பழிகொண்ட பித்தா! பின்னைப்
பார்மகளைத் தழுவினையோ? திசையானை
       மருப்புஇருத்த தெய்வ மார்பால்.


                           (இராவணன் வதைப்படலம்)

முடிவுரை :

சங்ககால ஆடவர்களை எண்ணும் போது மனம் இறுமாப்பும் புளகாங்கிதமும் அடைகிறது. ஆண்கள் 32 கவளங்கள் உணவு உண்டதாக இதிகாசங்களும், புராணங்களும் கூறுகின்றன. பீமன் ஒருவனே நமக்கு சாட்சியல்லவா?

ஆனால், இன்றைய இளைஞர்களில் சிலர் மது, புகை, பான்பராக் என்னும் இத்தகைய தீய பழக்கவழக்கங்களால் சோம்பிய தோற்றமும், சூம்பிய மார்பும், சுருங்கிய கண்களுமாகக் காட்சியளிக்கின்றனர். சங்ககால ஆடவர்கள் எங்கே? நாம் எங்கே?

ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா!
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா! வா! என்ற பாரதியின் வரிகளை நினைவில் கொள்வோம்.
உடலினை உறுதிசெய்யும் வழியறிவோம்!


worldnath_131149@yahoo.co.in