சிலையாகிவிட்ட கலையே!

பூநகரான் குகதாசன் - கனடா

நடிப்புச் சிலையாகிவிட்ட கலையே! கலைக்குரிசில் சிவாஜி கணேசனே!

நீங்கள் மறைந்தும் மறையாத நடிப்புச் சிலையாகி ஒன்பது ஆண்டுகளாகிவிட்டன. இவ்வுலகில் நீங்கள் அவதரித்த அக்டோபர் முதலாம் நாளுடன் உங்களது 82வது நினைவு தினமும் நம்மைக் கடந்து சென்றுவிட்ட நிலையில் , உங்களது அழியா எழில் கலைத் திரைக் கோலங்கள் எங்கள் மனத்திரைகளில் இரை மீட்கப்படுகின்றன.

உங்களது சிம்மக் குரல் எங்கள் செவிப்பறைகளில் இன்னமும் எதிரொலித்துக் கொண்டேயிருக்கின்றது.

துள்ளிச் சிதறும் உங்கள் துல்லியமான தமிழ் வசன உச்சரிப்புக்கள் தமிழிற்கே மேலும் மெருகூட்டி இன்றும் தமிழையே மேலும் அழகு படுத்தி;க் கொண்டேயிருக்கின்றன.

கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகளிற்கு உங்கள் அங்கங்களின் நடிப்பால் கருத்தளித்து பொருள் சொன்னவர் நீங்கள்.

கலைஞரின் வசனங்களை அள்ளி வாளாக வீசியவரும் நீங்களே.

ரி எம் எஸ் இன் நடிப்பிசைக் குரலையும் , எம் எஸ் வி இன் இதயத் துடிப்பிசையமைப்பiயும் தாண்டி திரையில் மேலே தென்பட்ட நிழல் , உங்களுடையது மட்டுமே.

அர்த்தம் நிறைந்த பாடல்வரிகளால் பொங்கிய கருத்துக் கடல் அலைகளையும் , வீசிய இன்னிசையையும் விஞ்சி வானளாவ உயர்ந்து நின்ற நடிப்பு இமயமும் தங்களுடையதே.

ஒரே திரையில் ஒன்பது வேடங்களையும் தாங்கி , இந்த உலகத்து பாத்திரங்களையெல்லாம் வடித்தெடுத்து நடிப்பிற்கே அகராதியாக்கிவிட்டு, சிலையாகி விட்ட கலை நீங்கள்.

நடிப்பின் மலையே ! கதா பாத்திரங்களின் முழு நிலையே! நவரசங்களினதும் அலையே!

நவதானியம் , நவரத்தினம், நவராத்திரி என்று நடிப்பின் பல் முனைகளையும் ஒன்றாக்கி முதலில் முடிச்சுப் போட்டவர் நீங்கள்.

இன்றும், இனி என்றும் நடிப்புலகத்தின் முதல் மரியாதை உங்களிற்குரியதே.

ஓ! ராஜ ராஜனே! நடிப்பால் அந்தப் பாரிஸ் அதிசய சிகரம் வரை உயர்ந்த மனிதனும் நீங்களே.

பராசக்தியில் 'சக்கஸ்' என்று கூவிக் கொண்டு வந்து பல்வேறு வேடங்களிற்கெல்லாம் சக்தி கொடுத்து படைத்து, அவற்றிற்கு உயிரும் கொடுத்த நடிப்புப் பிரம்மம் நீங்கள் தான். திருவிளையாடல்ச் சிவனும் நீங்களே. திருவருட் செல்வர் அப்பரும் தாங்களே. கந்தன் கருணை வீரவாகு தேவரும் நீரே. நாராயணனும் ஏன் நாரதரும் கூட நீங்களே. இராமரும் பரதனும் பட்டு உடுத்த மாடத்துச் சீதையும் நடிப்புக் காதையும் நீங்களே.

கப்பலோட்டிய தமிழனே! கர்னனே! வீர பாண்டிய கட்டப் பொம்மனே!

திரிசூலமான தெய்வ மகனே! நடிப்புப் பிரபஞ்சத்தின் விஸ்வ ரூபமே!

திரைக் காவியத் தாயின் தவப் புதல்வனே!

கூட்டுக் குடும்பம் நடாத்திய உத்தம புத்திரனே!

ஆண்டியாக, அரசனாக, அறிஞனாக , அசடனாக , பக்தனாக , பித்தனாக , ஆஸ்தீக பத்மநாத ஐயராக, நாஸ்தீகனாக , டாக்டராக , குஷ்ட ரோகியாக, வக்கீலாக , நீதிபதியாக , குற்றவாளியாக , கொலைகாரனாக, எஜமானாக , முதலாளியாக , தொழிலாளியாக , பைலற்றாக , பயித்தியமாக , ஊமையாக , ஊதும் நாதஸ்வர வித்துவானாக, மிருதங்கச் சக்கரவரத்தியாக , திருடனாக, போலிஸ் காரனாக..........இன்னுமாக சமூகத்தின் எந்தப் பாத்திரங்களையும் விட்டு வைக்காத நிறை குடமான நடிகர் திலகம் தாங்கள் தான்.

சிலர் அழது நடித்தார்கள் , பலர் சிரித்து நடித்தார்கள் , இன்னஞ் சிலர் சிரித்தும் பின்னர் அழுதும் நடித்தார்கள் .


ஆனால் சிரித்துக் கொண்டே அழுதவரும் , அழுது கொண்டே சிரித்தவரும் நீங்கள் ஒருத்தர் தான்.

64 வகை முகபாவங்களை காட்டிய பரத முத்திரையே! அவை எவை என்று கூட எங்களால் பட்டியலிடக் கூடத் தெரியவில்லை.

ரோஜாவின் ராஜா நேருவுடன் அமெரிக்காவின் நயகரா நகரத்தால்
1962 இல் நகர தலைவராக்கி கௌரவிக்கப்பட்ட அடுத்த இந்தியர் தாங்கள்.

நேருவை கௌரவிக்க பல காரணங்களை அவர்கள் அவருள் கண்டிருக்கலாம். இந்தியாவின் முதற் பிரதமர், தரமானவர் , தகுதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் , காந்தியவாதி என்று பலவற்றைக் கருதியிருக்கலாம்.

ஆனால் , உங்களிற்கும் அந்தளவு மரியாதை அளிக்கப்பட காரணம் உங்களது அபூர்வ நடிப்பாற்றல் ஒன்று மட்டுமே.

மானிடர்களையும் உலகின் அதிசய வரிசையில் வருங்காலம் சேர்த்தால் அதில் இடம் பெறும் தமிழ் அதிசயம் தாங்களாகத்தானிருப்பீர்கள். மற்றவர்களுடைய ஆற்றல் தேசிய மற்றும் சர்வ தேச மட்டத்திலானவை.
உங்களுடைய ஆற்றலோ உலக மட்டத்தில் காலக் கடலையும் தாண்டி ஓடும் மகா நதி. காலம் மாறினாலும் கௌரவம் குறையாத வள்ளலே. எந்த நிலையிலும் மரணமில்லாத பத்ம சிறீ தாங்கள்.

எதிலுமே அடிபட்டு போகாத ஈ வெ ராப் பகுத்தறிவு நாடக மேடையிலே நீங்கள் சிவாஜியாகவே மாறியதைப் பார்த்து விட்டு நீங்கள் சிவாஜியே தானென்று கொடுத்த பட்டமே சிவாஜி.

மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்ற அண்ணாவின் கூற்று உங்களிறகுத் தான் முழுமையாகப் பொருந்தும்.

உலகறிந்த நடிகன் மாலன் பிறான்டோ இந்தியாவில் சுற்றுப் பயணஞ் செய்த போது , உங்கள் அபார நடிப்பையும் , நீங்கள் அவர் போல் நடந்தும் நடித்திருந்ததையும் பார்த்து விட்டு மாலன் பிரான்டவே உங்களிற்கு ' அவன் தான் நடிகன்' என்ற பாணியில் மகிடம் சூட்;டக் கொட்டிய வார்த்தைகளே உங்களது இமாலய நடிப்புக் கோபுரத்தின் கலசங்களாகின்றன. ' சிவாஜி கணேசனால் என்னைப் போல் நடிக்க முடிகிறது. ஆனால் என்னால் சிவாஜியைப் போல் நடிக்க இயலாது.'

இதை விட என்ன தங்கப் பதக்கம் வேண்டும் தங்கச் சுரங்கமே.

பின்னாளில் ,
1995 இல் , கலைக் பொக்கிஷமான பிரான்ஸ் தேசம் உனக்கு வழங்கிய கவலியர் பட்டம் இதை உத்தியோக பூர்வமான சர்வதேச மட்டத்திலான அங்கீகாரமாக்கியதென்றால் அதில் தவறுண்டோ?

உன்னபை; போல் ஒரு நடிகன் உனக்கு முன் இருந்ததும் இல்லை இனி இருக்கப்போவதுமில்லை.

நீ நடந்தாலும் நடிப்பு , விழந்தாலும் நடிப்பு ஏனென்றால் உன் கால்கள் மட்டுமல்ல கைத்தடிகளும் நடித்தன.

நடைத் தடிகளுடன் மட்டும் நடந்தே பல பாடல்களை நடித்து முடித்தவர் நீங்கள்.

ஊன்று தடிகளினூடாகவே தத்துவங்களையும் ஈன்றவர் தாங்களே.

நடக்க காலின்றி சக்கர நாற்ககாலியில் இருந்தபடியே நடிப்புக் காவியம் தீட்டிய நடிக ஓவியனே!

கவிஞர் வைரமுத்து கூறியதைப் போல் ஆரம்பத்தில் இசை நடித்துக் கொண்டிருந்தது. உன் காலத்தில் தான் நடிப்பே நடித்தது.

ஆட்டமும் , பாட்டும் , சண்டையும் , வசனமும் , இயக்கமும் ஏன் இன்று தொழில் நுட்பம் கூட நடித்துக் கொண்டிருக்கின்றது.

அந்த நாட்கள் போனால் போகட்டும் என்று விட்டு ஞான ஒளி பெற இயலாதவை.

சுட்டி சுட்டதடா என்று திரைத் சீலையை உரித்து தத்துவ பிரணவத்தை உணர்த்திய யானை முகப்பிரியக் கணேசனே

வெறும் கறுப்பு வெள்ளைக்குள்ளாலேயே தத்துவத்தின் அத்தனை நிறங்களையும் அள்ளிக் கொட்டித் தீர்த்தவனே

நடிப்பு வரட்சியான இவ்வுலகில் 'ஓவர் அக்றிங்' என்று குறை கூறபபட்ட மீதமற்ற மிகையே அமுதமே

இன்றே நீயோ எங்கே நிம்மதி என்று அமைதியை......சாந்தியைத் தேடிச் சென்று விட்டாயா?

சாந்தியில் தனியாகவும் பேசி நடித்த நடிப்பே! அண்ணனாக, தம்பியாக, தந்தையாக, தனயனாக , நன்பனாக , எதிரியாக , ஏமாளியாக , கோமாளியாக , கணவனாக ஐயராக, பாதிரியாராக , இஸ்லாமியனாக பைரவனாக , பயந்தவனாக எல்லாம் பயனித்தவன் தாங்கள் ஒருவர் தான்.

இந்த மானிட சந்ததியே உங்களிடமிருந்து நடிப்பை கற்றுக் கொள்ள சிவாஜி என்ற நடிப்பகராதியை என்றும் புரட்டிக் கொண்டேயிருக்கும்.

அதுவரை நீங்கள் வாழ்வீர்கள் உங்கள் அமரத்தவ நடிப்புக் கலையும் வாழும்.

ஆம் , நீ நிலையான சிலையாகிவிட்ட நடிப்புக் கலையே நடிகர் திலகமே உங்கள் புகழ் என்றும் எங்கும் வாழ்க! வாழ்க!! வாழ்க!!!.



Poonagaran@rogers.com