தமிழ் இலக்கியத்தில் பாரதிக்கு பின்னரான கவிதைப் போக்கு


முருகேசு ரவீந்திரன்

மிழ் இலக்கியத்தில் இன்று புதுக்கவிதைகள் சிறப்பிடம் வகிக்கின்றன. இதன் முன்னோடியாக பாரதியார் கருதப்படுகிறார். இவரது காலத்தில் இருந்தே தமிழ்க்கவிதை புதுவடிவம் பெறுகிறது. பாரதியார் எழுதிய கவிதைகளை வசன கவிதைகள் எனக் குறிப்பிட்டனர். படிப்பதற்கு இலகுவாக இக்கவிதைகள் அமைந்தன. இதனால் இவை மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. பாரதியார் தமிழ் கவிதைத் துறைக்கு புதுவீச்சை ஏற்படுத்தினார். காலத்துக்கேற்ற வகையில் கருத்துக்களை முன்வைத்தார். மூடப்பழக்கங்களைச் சாடினார்.

புதுக்கவிதைகள் பாரதி காலத்தில் வசனகவிதைகள் என்றே அழைக்கப்பட்டன. இவற்றில் மரபுக் கவிதைகளில் காணப்படும் யாப்பமைதியோ, ஓசை ஒழுங்கோ இல்லை. இவ்வகை கவிதை வடிவமே இக்காலத் தமிழ் கவிதையில் பிரதான இடம் வகிக்கின்றது.

பாரதிக்குப் பின் இந்தக் கவிதை மரபை நிலை நிறுத்தியவராக பிச்சமூர்த்தி, கு. ப. ராஜகோபாலன் போன்றோர் விளங்குகின்றனர். சூறாவளி, கலாமோகினி, கிராம ஊழியன்,  மணிக்கொடி போன்ற அக்கால இலக்கிய இதழ்களில் இந்தக் கவிதைகளை இவர்கள் எழுதினர். ஆரம்பத்தில் வசனகவிதைகள் மிகுந்த கண்டனத்துக்குள்ளாகின. காரசாரமான விவாதங்களை எதிர்நோக்கின. எனினும் இன்று மிகுந்த வரவேற்பைப் பெற்ற கலைவடிவமாகவுள்ளன.

புதுக்கவிதைகள் தமிழிலே தோன்றுவதற்கு அடிப்படையாக அமைந்த ஆங்கிலப் புதுக்கவிதை தொகுதியான 'புல்லின் இதழ்கள்' அமெரிக்க கவிஞன் 'வால்ட்விட்மா' எழுதப்பெற்று உலகப் புகழ் பெற்றது. வால்ட்விட்மனகல்னைத் தொடர்ந்து எஸ்ராபவுண்டு, எலியட் ஆகியோரும் இத்தகைய வசனக் கவிதைகளை எழுதினர். தமிழ் புதுக்கவிதையின் தந்தை எனப் போற்றப்படும் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆங்கிலக் கவிதைகளைக் கற்று அந்த அனுபவங்களின் அடிப்படையிலேயே புதுக்கவிதைகளை எழுதினார். வால்ட்விட்மனின் 'புல்லின் இதழ்கள்' என்ற கவிதைத் தொகுப்பும் ரவீந்திரநாத் தாகூரின் 'கீதாஞ்சலியும்' பாரதியாரை ஈர்த்திருந்தன. இவற்றின் தாக்கமே இவரை புதுக்கவிதைகள் எழுதத் தூண்டியது.

பாரதியார் வகுத்த புதுக்கவிதை இலக்கணம் இவ்வாறு அமைகிறது.

'சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது
சொற்புதிது சோதி மிக்க
நவ கவிதை எந்நாளும் அழியாத
மகா கவிதை'


என புதுக்கவிதை பற்றி பாரதியார் விபரித்துள்ளார். புதிய பொருள் நோக்கும்,  புதிய சுவையும், புதிய வளமும், புதிய சொல்லாட்சியும் கொண்டமைகின்ற இன்றைய புதுக்கவிதைக்குரிய இலக்கணம் பாரதியாராலேயே வகுக்கப்பட்டது.

புதுக்கவிதை இலக்கணம் பற்றி கவிஞர் மு. மேத்தா இவ்வாறு குறிப்பிடுகிறார்.

இலக்கணச் செங்கோல்
யாப்புச் சிம்மாசனம்
எதுகைப் பல்லக்கு
மோனைத் தேர்கள்
தனிமொழிச் சேனை
பண்டித பவனி
இவை எதுவும் இல்லாத
கருத்துக்கள் தம்மை
தாமே ஆளக்
கற்றுக் கொண்ட
புதிய மக்களாட்சி
முறையே
புதுக்கவிதை
என கவிஞர் மு. மேத்தா பாடியுள்ளார்.


புதுக்கவிதை என்ற பெயரை யார் வைத்திருப்பார்கள். இதுபற்றி இரு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. பாரதிக்கு பின்னால் மணிக்கொடி காலத்தில் வசன கவிதை என்ற பெயர் யாப்பில்லா கவிதைக்கு வழங்கப்பட்டது. மேற்குலக நாடுகளில் இப்பெயர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வழங்கப்பட்டது. வசனத்தால் எழுதப்பட்ட கவிதையை வசன கவிதை என்று வழங்கும் நிலை ஏற்பட்டது. வசன கவிதை என்ற பெயர் முழுவை பெற்றதாக இல்லை என இலக்கிய ஆய்வாளர்களால் உணரப்பட்டது. புதுக்கவிதை என்ற பெயர் வைக்கப்பட்டது. இந்தப் பெயர் 1930களில் இடதுசாரிகளிடையே வழக்கிலிருந்த னிரிதீ ஏரிஞிஷிரி என்கிற பதத்தை மொழிபெயர்த்து புதுக்கவிதை என பெயர் சூட்டியதாக க. நா. சுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார். இதற்கு மாறாக தாமே புதுக்கவிதை எனப் பெயரிட்டதாக இலக்கியத் திறனாய்வாளர் சி. சு. செல்லப்பா கூறியுள்ளார்.

பிச்சைமூர்த்தியும், கு. ப. ராஜாகோபாலனும் வசன கவிதை என்றுதான் எழுதி வந்தார்கள். அந்தச் சொல் தற்காலக் கவிதைக்குப் பொருத்தமானதாக எனக்குப்படவில்லை. எனவே 'நியூபொயட்டரி' என்ற ஆங்கில வார்த்தைகளின் மொழிபெயர்ப்பாக புதுக்கவிதை என்ற சொல்லை நான் பயன்படுத்தினேன் 1யி சி. சு. செல்லப்பா குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில் இந்தக் கவிதைகள் புதுமை ஆனதாகவும் விதவிதமானதாகவும் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் அமைந்து இருந்ததால் இச்சொல் பொருத்தமானதாகப்பட்டது. இதனை அடியொட்டி வசனக்கவிதை புதுக்கவிதை என அழைக்கப்பட்டது என சி. சு. செல்லப்பா எழுதியுள்ளார்.

பாரதிக்கு பின்பு முதன் முதலில் புதுக்கவிதை முயற்சியில் ஈடுபட்டவர் ந. பிச்சமூர்த்தியே ஆவார்.

'சித்திரைச் சூரியன் செர்சூலம் பாய்ச்சலால் ஆற்றுமணல் வெள்ளம் அனலாகக் காய்ந்தது'

என 'அக்கா குருவி' என்ற கவிதையில் எழுதியுள்ளார்.

கு ப. ராஜகோபாலனும் அதே காலகட்டத்தில் புதுக்கவிதை எழுதினார். அவருடைய கவிதையிலே

'முதல் மழை விழுந்ததும்
மேல்மண் பதமாகி விட்டது
வெள்ளி முளைத்திடுது விரைந்துபோ'


எனக் குறிப்பிடுகிறார். கு. ப. ராஜகோபாலனின் 'ஏர் புதிது' என்ற கவிதையிலே மேற்சொன்ன கவிதை வரிகள் இடம்பெற்றுள்ளன.

கு. ப. ராஜகோபாலனால் பாராட்டப்பட்ட ந. பிச்சமூர்த்தியின் கவிதை 'மழைக் கூத்து' அது இவ்வாறாயமைகிறது.

'பார்த்தீரோ அதிசயம்
கேட்டீரோ அதிசயம்
நேற்று நள்ளிரவில்
நடைபெறாத நடிப்பினை
மந்தை மந்தையா மேகங்கள் சரிய
மலைகள் போல் இலைகள் போல
மேகங்கள் விரிய
விந்தை நிமிஷத்தில் விரித்த மேகங்கள் போய்
சோனையாய் தாரையாய்
அமைந்த மழைக் கூத்தை
என ந. பிச்சைமூர்த்தி எழுதியுள்ளார்.


புதுக்கவிதை என்ற பெயரை சூட்டியது. தானே எனக் கூறும் க. நா. சுப்பிரமணியம் 'மயன்' என்ற பெயரில் எழுதிய முதல் வசன கவிதை 'மணப்பெண்'

திரையிட்டு மறைந்த முகமும்
பெண்மை ஏசும் பட்டாடையும்
மறைத்து வைக்கும்
உண்மை அறியாவண்ணம்
'அழகி' என்று
அவளை அறிவதெப்படி'
என்பதாக அமைகிறது.


1950க்குப் பின்னர் சி. சு. செல்லப்பா நடத்திய 'எழுத்து' பத்திரிகை புதுக்கவிதை வளர்ச்சியில் முக்கிய இடம் வகித்தது. சி. சு. செல்லப்பா, தர்மு சிவராமு, க. நா. சுப்பிரமணியம், சி.மணி, வைத்தீஸ்வரன் போன்றோர் எழுத்துப் பத்திரிகை காலத்தில் பிரதானமாக வசன கவிதை எழுதினார். 'மனமுறிவு' விரக்தி, அந்நியப்படல் போன்ற உணர்வுகள் இவர்கள் கவிதைகளின் பொருளாயின. இவர்களது கவிதைகளில் விளக்கமின்மை மறைபொருள் ஆகியன மலிந்திருப்பதாக பேராசிரியை சித்திரலேகா மெளனகுரு குறிப்பிட்டுள்ளார்.

வசன கவிதைகள் என சொல்லப்பட்ட கவிதைகள் க. நா. சுப்பிரமணியத்தால் புதுக்கவிதைகள் என பெயர் சூட்டப்பட்டதாக அவரே கூறியுள்ளார். இதனை இலக்கிய ஆய்வாளர்களில் ஒரு சாரார் ஏற்றுக்கொள்கின்றனர்.

க. நா. சுவின் பார்வை உலகப் பார்வை உலகளாவிய பார்வை. அவர் எழுத்துக்கள் உலக இலக்கியங்கள் உலக நாவல்கள் உலக சிந்தனை என உலகை நோக்கி விரிவன க. நா. சுப்பிரமணியம் ஒரு படைப்பாளர், விமர்சகர், மெளனி என்னும் சிறுகதை சிற்பியை பிரமாதப்படுத்தியவர். க. நா. சுப்பிரமணியத்தின் விமர்சனங்கள் முழுதும் பலராலும் ஒரு மிக்க ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் அவருடைய பார்வைகளின் பாதிப்புக்கள் அழுத்தமான சுவடுகளைப் பதித்துள்ளன என இலக்கிய ஆய்வாளர் ச. மெய்யப்பன் குறிப்பிட்டுள்ளார்.

க. நா. சுப்பிரமணியத்தின் காலகட்டத்தை சேர்ந்தவர் நி. க. சிவசங்கரன் சமுதாயப் பார்வையோடு புதுக்கவிதைகளை எழுதியவர். அவருடைய 'அங்கே' என்ற கவிதை சிறப்பானது.

'சாக்கடைச் சோற்றை
யாம் உண்கிறோம்
அங்கு
சர்க்கரைப் பொங்கலை
ஜமாய்க்கிறார்'


என்பதாக கவிதை அமைந்துள்ளது. சி.மணி சிறிய சிறிய நயங்கள் நிறைந்த கவிதைகளை எழுதியுள்ளார். 'வெளுத்தது நான்கு' என்ற கவிதை இவ்வாறு அமைகிறது.

'துவைக்க
வெளுத்தது
துணி
ஞாயிறு
வெறிக்க
வெளுத்தது
நிலம்
காதலன்
சுவைக்க
வெளுத்தது
இதழ்
வாழ்வு
நெறிக்க
வெளுத்தது
முடி'


இந்தக் கவிதை வாழ்வியல் நெறியை படம் பிடித்துக் காட்டுகிறது. புதுக்கவிதை என வசன கவிதைகளுக்கு பெயரிட்டதாக எழுத்துப்பத்திரிகையை நடத்திய சி. சு. செல்லப்பாவும் குறிப்பிட்டுள்ளார். இவர் க. நா. சுப்பிரமணியன் கவிதைகள் எழுதிய காலத்தில் நல்ல பல புதுக்கவிதைகளை எழுதியவர். இருவரும் ஒரே காலத்தவர்கள். 1950 களுக்குப் பின்னர் புதுக்கவிதை எழுதியவர்கள்.

அந்த வகையில் சி. சு. செல்லப்பா எழுதிய கவிதைகளில் பலரையும் கவர்ந்த கவிதை 'மாற்று இதயம்' மாற்று இதயம் பற்றிய கருத்துக்களால் மிகவும் கவரப்பட்டு இக்கவிதையை சி. சு. செல்லப்பா கிண்டல் பாணியில் எழுதியுள்ளார்.

'அரசியல்வாதியின் இதயம் வேண்டாம் எனக்கு
அதுதான் இப்போ ரொம்ப மலிவா இருக்கு
மதவாதியின் இதயம் வேண்டாம் எனக்கு
அதுதான் இப்போ மரத்துப் போய் கிடக்குது.
வேதாந்தியின் இதயம் வேண்டாம் எனக்கு
அது இப்போ வரண்டு போய் கிடக்கு
விஞ்ஞானியின் இதயம் வேண்டாம் எனக்கு
அதன் சிறப்பான பணி அழிவுக்கு!
ஒரு குழந்தை இதயம் வேண்டாம்
அதுக்கு கபடம் தெரியாது!
ஒரு வாலிபன் இதயம் வேண்டாம்
அதுக்கு நிதானம் தெரியாது
ஒரு நடுவயது இதயம் வேண்டாம்
அதுக்கு எதிலும் சந்தேகம்
ஒரு கிழட்டு இதயம் வேண்டாம்
அது கூறு கெட்டிருக்கும்
ஓ டாக்டர் மன்னிக்கவும்
மாற்று இதயம் வேண்டாம் எனக்கு
எவன் உண்ர்ச்சியும் தேவையில்லை எனக்கு
என் இதயம் பாடம் கற்றிருக்கு
அது தன் வழியே போய் ஒருங்கட்டும்
ஓ! டாக்டர்! உங்களுக்குத் தொந்தரவு தந்தேனா?
மன்னிக்கவும்!


இந்த கிண்டல் கவிதை வாழ்க்கை உண்மைகளை சிந்திக்க வைப்பதாகவுள்ளது.

தமிழ் புதுக்கவிதை துறையில் எழுபதுகளில் தோற்றம் பெற்ற வானம்பாடிக் குழுவினர் முக்கியமானவர்கள். இவர்கள் புதுக்கவிதையில் புதிய உள்ளடக்கத்தை புகுத்தினர். நவபாரதி, புவியரசு, விடிவெள்ளி, காமராசன், சிற்பி, அக்னி புத்திரன் போன்றோர் வானம்பாடிக் கவிஞர்களுள் முக்கியமானவர்கள்.

புதுக்கவிதைகளுக்கு ஆரம்பத்திலிருந்த எதிர்ப்புக்கள் இப்போது குறைந்து விட்டது. இன்று புதுக்கவிதைகள் போஸ்காட் கவிதைகளாக பத்திரிகைகளுக்கு எழுதப்படுகின்றன. இவற்றில் பல பொருன் அந்த கவிதைகளாகக் காணப்படுவதால் கவனத்தை ஈர்க்காமல் காகித குப்பைகளாக மாறிவிடுகின்றன.

சொற் சுவையும் பொருட் சுவையும் புதிய வளமும் கொண்டு எழுதப்படும் புதுக்கவிதைகள் ஒரு சில வசனங்களில் அமைந்தாலும் மனதை தொட்டுவிடுகின்றன. இலக்கிய உலகில் நின்று நிலைத்து விடுகின்றன.

நிலைபெற்ற இலக்கிய வடிவமாக புதுக்கவிதை வடிவம் இன்று காணப்படுகின்றது. பலர் புதுக்கவிதைகளை எழுதுகின்றனர். யாப்பு போன்ற கட்டுப்பாடுகள் இன்றி இலகுவாக எண்ணங்களை புதுக்கவிதைகள் மூலம் வெளிப்படுத்தமுடிகிறது.