காதல் வீரத்துக்கு அப்பால் சங்கப் பாடல்கள்

மே.. ராசுகுமார்


தொடக்க இன வாழ்வைக் கிரேக்க அரசு அமைப்புடன் ப்பிட்டதால ஏற்பட்ட முரண்கள்
 

மிழில் நமக்குக் கிடைத்திருக்கின்ற இலக்கியங்களில் சங்கப் பாடல்கள் என்று கூறப்படும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியனவே காலத்தால் மிகப் பழமையானவையாக அமைந்துள்ளன. தமிழரது சமூக-பொருளிய-பண்பாட்டு வரலாற்றினை அறிந்துகொள்ள இந்த இலக்கியச் செல்வங்களே பெருமளவுக்குப் பயன்படுகின்றன.இத்தகைய இலக்கியங்களிலிருந்து பெறக்கூடிய விவரங்களை உறுதிப்படுத்தும் வகையிலான அகழ்வாய்வுச் சான்றுகளும் காசுகளும் கல்வெட்டுப் பதிவுகளும் பரவலாகக் கிடைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.   

இந்த எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றை அகம், புறம் என இரு வகைகளாகப் பகுத்துப் பார்ப்பது மரபாகவே பின்பற்றப்பட்டு வருகிறது. பண்டைய தமிழரது காதல் உணர்வுகள் - உறவுகள் - தொடர்புகள் போன்ற அக வாழ்வைக் குறிப்பன அக இலக்கியங்களாகக் கொள்ளப்படுகின்றன. அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகை போன்றன இதில் அடங்கும். வீரம், போர், ஆட்சி  போன்ற புற வாழ்வு தொடர்பானவை யாவும் புறப் பாடல்கள் என்று அழைக்கப்படுகின்றன. புறநானூறு, பதிற்றுப்பத்து போன்றன புறம் என்ற பகுப்புக்குள் வருகின்றன. இத்தகையதொரு மரபு, சங்க இலக்கியங்கள் அனைத்தையுமே காதலையும் வீரத்தையும் வெளிப்படுத்தும் பாடல்களாக மட்டுமே பார்க்கின்ற ஒரு பார்வையைக் காலப்போக்கில் தோற்றுவித்துவிட்டது.

குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என்ற ஐந்து வகைப்பட்ட நில அடிப்படையிலான திணைவழியே அறியப்படும் அக இலக்கியங்கள் யாவும் ஏதோவொரு வகையில் ஆண்-பெண் உறவுகளையும் காதல் தொடர்புகளையும் இவற்றையொட்டிய மன உணர்வுகளையும் முன்னிலைப்படுத்துகின்றன என்பது உண்மைதான்.ஆயினும்,ஒரு தலைவனும் தலைவியும் இயல்பாக அன்பு செலுத்துகின்ற காதல் உறவுகள் மட்டுமே வெவ்வேறான வடிவங்களில் இப்பாடல்களில் இடம்பெற்றிருக்கின்றன என்று கருதுவது உண்மைக்கு மாறானதாகும்.

மேலும், போர், வீரம், ஆட்சி போன்ற வெவ்வேறு வகைப்பட்ட நுணுக்கமான விவரங்கள் அனைத்தையுமே வீரம் என்ற அளவுகோல் கொண்டு மட்டுமே அளப்பதும் பொருந்துவதாகத் தெரியவில்லை.

சங்கப் பாடல்களில் காணப்படும் வாழ்க்கை முறைமைகளோடு காதலும் வீரமும் எவ்வாறெல்லாம் இயைந்தும் பொருந்தியும் நிற்கின்றன என்ற அடிப்படைகளைக் கொண்டுதான் இவற்றை மதிப்பிடவேண்டும்.
இத்தகைய காதல், வீரம் என்ற குறுகிய பார்வையில் மட்டுமே பெரும்பாலான பாடல்கள் பார்க்கப்பட்டதாலும் புரிந்துகொள்ளப்பட்டதாலும், அவற்றுள் உள்ளடங்கிக் கிடக்கின்ற சமூக-பொருளிய-பண்பாட்டு வெளிப்பாடுகள் குறித்த விவரங்கள் கண்களுக்குத் தெரியாமல் மறைந்துவிட்டன என்று துணிந்து கூறமுடியும்
.

ஆகையால்தான், காதல், வீரம் என்பன போன்ற வரையறைகளுக்கு மேலாகச் சங்கப் பாடல்களில் இழையோடிக் கிடக்கும் வாழ்முறை விவரங்களை நுட்பத்துடன் ஆழ்ந்து பார்க்கவேண்டியுள்ளது.

வேட்டையாடியும் இயற்கையில் கிடைத்த காய்கனிகளைத் தேடியும் உணவு திரட்டும் வாழ்முறையில் இனக்குழு-குடிகளாகக் கூட்டு வாழ்க்கை முறைமைகளைக் கொண்டிருந்த மக்களே,அடுத்த கட்டத்தில் உணவு உற்பத்திக்கு முன்னேறி,பண்பாட்டு வளர்ச்சியை அடைந்தார்கள் என்பது மானிடவியலார் மற்றும் சமூகவியலார் கூற்றாகும். அத்தகைய இனக்குழு-குடி வாழ்வின் கூட்டு வாழ்க்கை முறையிலேயே மனிதன் இயற்கையினூடாக இயல்புடன் பல்வேறான அறிதல்களையும் புரிதல்களையும் பெற்றுக்கொண்டான். காற்று, மழை, இடி, மின்னல் போன்றவற்றை எதிர்கொண்டான். விலங்குகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொண்டான். வில், அம்பு போன்ற கருவிகளைக் கொண்டு விலங்குகளை வேட்டையாடவும் பழகிக்கொண்டான். இத்தகைய வாழ்முறையின் ஒரு பகுதியாகவே கூட்டு நடனம், சேர்ந்திசை போன்றவற்றைக் கற்றும் நிகழ்த்தியும் வந்ததையும் அறியலாம். இத்கைய நடனத்திலும் சேர்ந்திசையிலும், அன்றைய மக்களது மன உணர்வுகளும் அன்றாட வாழ்க்கையின் சிக்கல்களும் பலவாறு எதிரொலித்தன. உணவு திரட்டும் நிலையிலிருந்து, உணவு உற்பத்தி நிலைக்குப் படிப்படியாக மாற்றங்கள் நிகழ்ந்தபோது, இத்தகைய மாறுதல்களையும் முன்னேற்றங்களையும் அவர்கள் எந்த வகையில் உள்வாங்கிக்கொண்டார்கள், மாறுதல்களை மறுத்த குரல்கள் எவ்வாறு ஏற்பட்டன, முன்னேற்றங்களை முன்னெடுத்த போக்குகள் எப்படி அமைந்தன என்பனவெல்லாம் சங்கப் பாடல்களில் ஆழமாகவும் இயல்பாகவும் முழுமையாகவும் பதிவாகியுள்ளன. இவற்றில் கற்பனையோ கலப்போ இருந்திருக்க வாய்ப்புகள் இல்லை.

குறிப்பாக, உணவு திரட்டியுண்ணும் வாழ்முறையிலிருந்து, உணவு உற்பத்திக்கான முன்னேற்றம் நிகழ்ந்தபோது, இனக்குழு-குடிகளின் செயல்பாடுகளில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டன. மழையை எதிர்பார்த்த இயற்கை வேளாண்மை என்ற நிலையிலிருந்து, வளமான வயல்களை உருவாக்கிய வேளாண்மைக்கான வளர்ச்சி, மேலும் பல மாறுதல்களைக் கொண்டுவந்தது. இனக்குழு-குடிகளின் கட்டமைப்புகளும் கட்டுப்பாடுகளும் தளரத் தொடங்கின. இவை, இனக்குழு-குடிகளின் சமூக-பொருளிய-பண்பாட்டு நிலைகளில் வெவ்வேறு வகையான  தாக்கங்களை உருவாக்கின.

இத்தகைய சமூக-பொருளிய-பண்பாட்டுத் தாக்கங்களுக்கிடையே,புதிய மாற்றங்களைப் புறக்கணிக்க முடியாமலும் முன்னைய முறைமைகளை முழுமையாகத் துறக்க முடியாமலும் இருந்த சூழலில் ஏற்பட்டிருந்த மன உணர்வுகள், மனப் போராட்டங்கள் ஆகியன, சங்கப் பாடல்களில் தெளிவாகவும் விரிவாகவும் வெளிப்படையாகவும் காட்டப்பெற்றுள்ளன என்று கூறலாம்.

பண்டைய இனக்குழு-குடிகள், வேட்டையில் கிடைத்த விலங்குகளையும் காடுகளில் இயற்கையாக விளைந்த காய்கனிகளையும் உண்டு வாழ்ந்து வந்தனர். அடுத்து, தினை போன்ற உணவுப் பொருள்களை விளைவிக்கத் தொடங்கியிருந்தாலும், இவை மழையை நம்பியதாகவே இருந்தன. இத்தகைய வேளாண் உற்பத்தி வேண்டியவாறு இல்லாததாலும் இயற்கையைச் சார்ந்து இருந்ததாலும், அவர்கள் தங்களுடைய முழுமையான உணவுப் பயன்பாட்டுக்காக விலங்குகளை வேட்டையாடுவதையும் தொடர்ந்து கொண்டிருந்தனர். இது ஒரு வகையான வேலைப் பிரிவினையை உருவாக்கியிருந்தது. பொதுவாக, ஆண்கள் விலங்குகளை வேட்டையாடினர்; மகளிர் நிலங்களில் விளைச்சலை மேற்கொண்டனர். ஆயினும், தொடக்கக் கட்டத்தில், ஆண்கள் மேற்கொண்டிருந்த பணிகளில் அவர்களுக்குள்ளேயே வேலைப் பிரிவினை ஏற்பட்டிருந்ததாகத் தெரியவில்லை. இதனைப் போன்றே, பெண்டிர் மேற்கொண்டிருந்த பணிகளில், அவர்களுக்குள்ளேயே எந்த வகையிலும் வேலைப் பிரிவினை உருவாகவில்லை.

தொடக்க நிலையில், ஏற்றுக்கொள்ளப்பட்ட, குருதி உறவுள்ள இனக்குழு-குடிகளுக்கு இடையேதான் ஆண்-பெண் உறவுகள் இருந்தன. பிற வகைப்பட்ட உடல் உறவுகளுக்கு அன்றைய கட்டத்தில் வாய்ப்புகளும் சூழல்களும் இருக்கவில்லை. அப்போது, களவு மணம், கற்பு மணம் என்ற பாகுபாடுகள் எதுவும் தோன்றியிருக்கவில்லை. மண முறைமைகளுக்கான சமூக-பொருளியக் காரணிகள் ஏற்பட்டிராத ஒரு காலகட்டத்தில், எந்த வகையிலும் களவு மணம், கற்பு மணம் என்ற பாகுபாடுகள் இருந்திருக்க முடியாது
.  

மரங்கள் அடர்ந்திருந்த காடுகளை எரித்து, அத்தகைய நிலத்தில் பயிரிட்டு வந்ததால், அடுத்தடுத்த பருவங்களுக்கு வேறு நிலங்களை நாடிச் செல்லவேண்டியிருந்தது. மழையை மட்டும் நம்பியிருந்ததற்கு மாறாக, கிடைக்கின்ற நீரினைப் பயன்படுத்தும் நுட்பம் தெரிந்த பின்னர்நீர் வாய்ப்புள்ள இடங்களைத் தேடி இடம்பெயர்ந்து செல்லும் நிலை அடுத்து உண்டாயிற்று.

பயிரிடும் நுட்பத்தில் வளர்ச்சி, வேளாண் கருவிகளில் மேம்பாடு, நீரியல் நுட்பத்தின் அறிமுகம், இரும்பின் பயன்பாடு ஆகியவை பயிர் செய்யும் வாய்ப்புகளைப் பெருக்கின. இத்தகைய முன்னேற்றங்கள், தொடக்கத்தில் இனக் குழு-குடிகளுக்குள்ளேயே வேண்டியவாறான வேலைப் பகுப்பினை உருவாக்கின. இதனையடுத்து, தினை போன்ற புன்செய் வேளாண்மையில் இருந்து, நெல், கரும்பு, வாழை போன்ற நன்செய் வேளாண்மைக்கான மாறுதலும் நிகழத் தொடங்கியது. இவை, வேலைப் பிரிவினையை ஓரளவு முழுமைப்படுத்தின.

இவை யாவும், இனக்குழு-குடிகளின் அன்றாடச் செயல்பாடுகளில் மேலும் பெருத்த மாறுதல்களுக்கு வழியேற்படுத்தின. நீர் வளம் நாடிப் புதிய இடங்களுக்கு நகர்ந்ததால், ஆங்காங்கே இருந்த வேறு இனக்குழு-குடிகளுடன் தொடர்பும் உறவும் ஏற்படக்கூடிய இன்றியமையாமை நிகழ்ந்தது. வேலைப் பிரிவினையாலும் வாழ்முறை மாற்றங்களாலும், இனக்குழு-குடிகள் தங்களது வழமைகள் அனைத்தையும் முன்பிருந்தவாறே முழுமையாகத் தொடரமுடியவில்லை. இனக்குழு -குடிப் பண்புகள் பல நீடித்திருந்தாலும், அவற்றில் மாற்றங்களும் சிதைவுகளும் ஏற்பட்டுக்கொண்டிருந்தன. புதிய உற்பத்தி வேண்டல்களுக்கு ஏற்றவாறான ஆண் - பெண் உறவு முறைமைகள் இயல்பாகவே நடைமுறைப்பட்டன.

குறிஞ்சி நிலத்தில் விலங்குகளை வேட்டையாடிக்கொண்டிருந்த மலைநாடனும் தினைப் பயிரைக் காவல் செய்துகொண்டிருந்த தலைவியும் காணும் வாய்ப்புப் பெற்றுக் காதல் கொண்டனர். அதாவது, உணவு திரட்டும் வாழ்விலிருந்த தலைவனுக்கும் உணவு உற்பத்தி வாழ்வுக்கு மாறியிருந்த தலைவிக்கும் காதல் தொடர்பு ஏற்பட்டது. கடல் சார்ந்த நெய்தல் நிலத்தில், வேறு பணியில் ஈடுபட்டதால் பொருளீட்டிக் குதிரை பூட்டிய தேரில் வலம்வந்த தலைவனும் மீன் பிடித்து வாழ்ந்த பரதவர் மகளும் காதல் வயப்பட்டனர். முல்லை நிலத்தில், ஆடு, மாடு, எருமை போன்ற வெவ்வேறு குடிகளைச் சார்ந்திருந்த ஆணும் பெண்ணும் காதலித்தனர். வேட்டை வாழ்வில் அல்லது இனக்குழு - குடி அமைப்பில் இது போன்ற வேறுபட்ட இனக்குழு - குடிகளுக்கிடையே தொடர்புகள் ஏற்பட வாய்ப்புகளே இல்லை. குறுதி உறவும் இயைபும் ஏற்பும் தொடர்பும் இல்லாதோரிடம் காதல் கொள்வதும் உடல் உறவு கொள்வதும் அப்போது நினைத்துக்கூடப் பார்க்க முடியாதவையாகும்.

ஆனால், யானும் நீயும் எவ்வழி அறிதும் (குறுந். 40:3) என்று தெளிவாகவும் வெளிப்படையாகவும் கூறப்பட்டிருப்பதுபோன்று, இத்தகைய,தலைவியும்,தலைவனும் முன்பின் அறியோதாராகவும் அறிமுகமில்லாதோராகவுமே சங்கப் பாடல்களில் பெரிதும் காட்டப்படுகின்றனர் என்பதையும் பார்க்கவேண்டும். புதிய வளர்ச்சியில் இது போன்ற காதல் உறவுகள் தோன்றியிருந்தாலும், அவை ஏற்கப்படவில்லை. இதனால், எதிர்ப்புகளும் ஏற்பட்டன. ஆண் - பெண் சார்ந்த இரண்டு இனக்குழு - குடிகளுமே ஏற்றுக்கொள்ளாததால், காதலர், தொடர்பில்லாத புதிய இடங்களுக்கு உடன்போக்குச் செல்லவேண்டியதாயிற்று.

இனக்குழு - குடி முறைமைகளைக் கட்டிக் காக்கும் முயற்சிகள், புதிய மாற்றங்களை ஏற்பதில் உள்ள தயக்கங்கள், நடைமுறையிலிருந்த கட்டுப்பாடுகளுக்கு மாறான அகப் போராட்டங்கள், முன்னேற்றத்தின் அடுத்தடுத்த நகர்வுகளுக்கான முனைப்புகள், எதிர்ப்புகளை எதிர்கொள்ளும் நுட்பம், இயல்பான வளர்ச்சிப் போக்குகளுக்கு வழிவிட்டு வேண்டிய மாறுதல்களைக் கைக்கொள்ளுதல் போன்றவை தொடர்பான முரண்பட்ட மன உணர்வுகள், குழப்பங்கள், எண்ணச் சிதறல்கள் ஆகியன மிக நுணுக்கமாகச் சங்கப் பாடல்களில் வெளிப்படுத்தப்படுகின்றன.   

நிலங்கள் வளம் பெற்றவுடன் பிறரிடமிருந்து அவற்றைக் காக்கவேண்டியிருந்ததுநீர் வளத்துக்காக - வரத்துக்காகத் தொடர்புடைய பரந்த நிலங்களைக் கட்டுப்படுத்தவேண்டியிருந்தது. வள வயல்கள், நீர் வாய்ப்புகள் ஆகியவற்றைக் கைக்கொள்ளும் போர்கள் ஒருபுறம் தொடர்ந்துகொண்டிருந்தன. நிலங்களைக் கைப்பற்றும் போரில் வெற்றி பெற்ற குடிகள், தங்களிடம் உழைப்பு ஆற்றலும் வேளாண் நுட்ப அறிவும் உற்பத்திக் கருவிகளும் போதுமான அளவு இல்லாதபோது, தோல்வியுற்ற குடிகளிடமே நிலத்தைத் திரும்ப ஒப்படைத்துப் பயிரிடச் செய்தனர். தங்களது வெற்றிக்கு அடையாளமாக, உற்பத்தியில் ஒரு பங்கினைத் திறை என்ற பெயரில் பெற்றுக்கொண்டனர்.

இதனால், வேளாண் உற்பத்திக்கான உழைப்பில் ஈடுபடாமலேயே, உற்பத்தியில் ஒரு பங்கினைப் பெறுகின்ற பிரிவினர் தோன்றினர். அடுத்தவர் உழைப்பின் பயனை உறிஞ்சக்கூடிய - சுரண்டக்கூடிய புதிய வழமை மனித வாழ்க்கை வரலாற்றில் உருவாகும் தோற்றுவாயாக இது அமைந்தது எனலாம்
.

உணவு உற்பத்தி செய்யத் தகுந்த வளமான நிலங்களைக் கைப்பற்றுதற்கான போர்கள், ஒரு வெற்றியோடு நின்றுவிடவில்லை அல்லது முடிந்துவிடவில்லை. இத்தகைய வளமான நிலங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர வெவ்வேறு குழு - குடிகள் முயற்சிகளை மேற்கொண்ட வண்ணம் இருந்தன. இதனால், வள நிலங்களுக்கான போரில் அவ்வப்போது எந்தக் குழு - குடி வெற்றி பெறுகிறதோ அதற்கு நில உற்பத்தியில் ஒரு பங்கு உழைப்பு இல்லாமலேயே கிடைத்துக்கொண்டிருந்தது.

இந்த நிலையில், போர் வெற்றியினால் அடைந்த நிலங்களிலிருந்து ஒரு பங்கினைத் திறையாகப் பெற்றுக்கொண்டிருந்த குழு - குடியினர், அந்த வெற்றியை - மேலாண்மையை - அதனால் கிடைத்த உற்பத்திப் பங்கினைத் தக்க வைத்துக்கொள்ள, அத்தகைய நிலங்களைப் பிறரிடமிருந்து காக்கவேண்டிய கடமையும் வந்துசேர்ந்தது. திறை என்ற பெயரில் உழைப்பு இல்லாமல், நில உற்பத்தியில் பங்கினைப் பெற்றுக்கொண்டாலே, அந்த நிலங்களையும் உற்பத்தியில் ஈடுபட்டிருந்த குடிகளையும் காக்கவேண்டிய கடமை உண்டு என்ற முறைமை முழுமைப்பட்டது.  

போர்களில் நிலங்களைக் கைப்பற்றுவதால், சமூகத்தின் செல்வங்கள் தோல்வியுற்ற குழுக்களிடமிருந்து வெற்றி பெற்ற குழுக்களுக்குக் கைமாறியனவேயன்றி, புதிய வளங்கள் உருவாகவில்லை. இதனால், புதிய சமூக வளங்களை அன்றைய வேண்டல்களுக்கு ஏற்ப உருவாக்கவேண்டிய இன்றியமையாமையும் சூழலும் ஏற்பட்டன. இதனால், காடுகளை அழித்துப் புதிய நிலங்களைப் பண்படுத்துவதும் ஏரி குளங்களை ஏற்ப அமைப்பதும் முனைப்புப் பெற்றன. புதிய நிலங்களைப் பண்படுத்தவும் ஏரி குளங்களை அமைக்கவும் உழைப்பு ஆற்றலும் தொழில் நுட்பமும் வேண்டியிருந்தன. மேலும், இவற்றை நிறைவேற்றக்கூடியவாறான பயிற்சிகளைப் பெற்றிருந்த உழைப்பு ஆற்றலும் வேண்டியிருந்தது. இதனால், இத்தகைய ஆற்றல்களைப் பெற்றிருக்காத புதிய மக்கள் பகுதியினருக்குத் தொழில்நுட்பப் பயிற்சி கொடுக்க முனைந்தனர். இந்த வகையில், மனித வள மேம்பாட்டுக்கான முயற்சிகள் திட்டமிட்டுச் சிறப்புடன் செயல்படுத்தப்பட்டன என்றே கூறவேண்டும். இத்தகைய மனித வள மேம்பாட்டு முயற்சிகள்தாம், பரந்துபட்ட மக்கள் பகுதியினர் வேளாண் தொழில்நுட்பப் பயிற்சி பெறுதற்குக் காட்டப்பட்ட முனைப்புகள்தாம், சங்க காலத்தை, சமூக பொருளிய - பண்பாட்டு வளர்ச்சியின் முற்போக்கான அடுத்த கட்ட நகர்வுகளுக்கு அழைத்துச் செல்ல ஆழமான அடித்தளங்களை அமைத்துக் கொடுத்தன. விரிவடைந்த இத்தகைய செயல்பாடுகளையடுத்து, ஆட்சி முறையின் தோற்றமும் ஏற்பட்டது.

விளைநிலங்கள் விரிவடைந்தபோது, இந்த வளத்தினால் செல்வமும் செல்வாக்கும் பெற்ற வேளாண் நிலத் தலைவர்கள் உருப்பெற்றனர். இவர்கள் வேளாண் உற்பத்தி வளம் கொடுத்த செல்வத்தினால் வேந்தர்களுக்குக் கட்டுப்படாமல் தனித்துச் செயல்படத் தொடங்கினர். நீர் வளமிருந்த பரந்த பகுதிகளில் இவர்கள் விரவிக் கிடந்ததால், இவர்களைக் கட்டுப்படுத்தத் தக்க ஆட்சி அமைப்பு நிறுவனமும் படை வலிமையும் வேந்தர்களிடம் அப்போது உருவாகியிருக்கவில்லை. இருப்பினும், சங்கப் பாடல்களில் வேளாளர் என்ற பிரிவினர் உருவானதற்கான பதிவுகள் இல்லை. மேலும், நான்கு வகையான சமூகப் பிரிவுகளும் இருக்கவில்லை.
தொடக்கக் கட்டத்தில், குறிஞ்சி, நெய்தல், முல்லை போன்ற நிலப்பகுதிகளில் பெண்கள் உணவு உற்பத்தியிலும் பொருளியச் செயல்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தனர். குறிஞ்சியில் தினை விளைச்சலிலும் நெய்தலில் மீன் பக்குவப்படுத்தல் மற்றும் உப்பு விற்றலிலும் முல்லையில் பால், தயிர், மோர் விற்றலிலும் மகளிரே செயல்பட்டனர். அப்போது ஆண்கள் வேட்டையாடுவதில் தொடர்ந்தனர். அதாவது, ஆண்கள் உணவு திரட்டும் பணிகளையே பெரிதும் தொடர்ந்துகொண்டிருந்தனர். ஆனால், பெண்கள் உற்பத்தி மற்றும் பொருளியச் செயல்பாடுகள் என்ற அடுத்த கட்ட வளர்ச்சியை அடைந்திருந்தனர். இதனால், அன்றைய வாழ்முறையில் மகளிரின் மேல் நிலை உறுதிப்பட்டிருந்ததுஆகவே, அந்த நிலையில் மகளிரே பாடல்களில் போற்றப்பட்டனர். அப்போது, பெண்வழி உரிமை முறையே நடைமுறையில் இருந்தது
.

ஆயினும், பயிர் நுட்ப வளர்ச்சியும் விரிவாக்கமும் நிகழ்ந்தபோது ஆண்களின் பங்களிப்பு மிகுந்துவிட்டது. வள நிலங்களைக் கைப்பற்றும் போர்களுக்கும் ஆடவரே வேண்டப்பட்டனர். அவர்களது வீரமும் ஏற்றப்பட்டது. வேளாண் தொழில்நுட்ப அறிவைக் கற்பது ஆண்களின் தனி உரிமையாகவும் மாறிவிட்டது. இது ஆண்வழி உரிமைக்கு வித்திட்டது.   

உடைமைப் பிரிவினராக இருந்த ஆண்கள், வேறு மகளிருடன் தொடர்புகொண்டது, மண உறவு முறைமைகள் அறிமுகமாவதற்கு முன்னைய வழமையின் எச்சமாகவும் தொடர்ச்சியாகவும் ஓரளவு நீடித்துவந்தது. இது போன்ற தொடர்புகளில் பொருள் கைமாறவில்லை. பெண்டிர் தங்களது உடலினை வணிக முறையில் விற்கவும் இல்லை. பரத்தையர் என உரையாசிரியர் கூறும் இவர்கள் வேறு பிற ஆண்களுடன் உறவும் கொள்ளவில்லை. ஆனால், இந்த வளர்ச்சியில், உடைமைப் பிரிவு மகளிர் உழைப்பிலிருந்து ஒதுக்கப்பட்டனர். உழைப்பு ஆற்றலைத் தரும் ஆண் மக்களைப் பெறவேண்டியது மட்டுமே இவர்களது கடமை ஆயிற்று.

காதலுக்கும் வீரத்துக்கும் மேலாக இவை போன்ற பல விவரங்களைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. சங்க இலக்கியங்களில் காணப்படும் இத்தகைய விவரங்களைக் கொண்டு, அன்றைய வாழ்முறை எவ்வாறு அடுத்தடுத்த கட்டங்களின் வளர்ச்சிநிலைகளை எட்டிப் பிடித்து முன்னேறிவந்தது என்பதை ஓரளவு தெளிவாகவே புரிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கிறது. திணை அடிப்படையிலான பகுப்புகளும் இவற்றுக்கு இயைபான வாழ்முறை வேறுபாடுகளும் இருந்தாலும், அன்றைய மனித வாழ்வின் வளர்ச்சிப் போக்குகளை வரையறுப்பதில் பெரும் சிக்கல்கள் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. சங்கப் பாடல்கள், இயல்பான மனித மன வெளிப்பாடுகளாக இருப்பதே இவற்றுக்கெல்லாம் அடிப்படையாகலாம். குறிப்பாகச் சொல்லவேண்டுமெனில், அரசு உருவாக்கமும் ஆட்சி முறைமைகளும் முழுமையாக ஏற்படுவதற்கு முற்பட்ட சமூக பொருளிய - பண்பாட்டு வளர்ச்சிப் போக்குகளைச் சங்கப் பாடல்கள் வெளிப்படுத்துகின்றன என்பதில் அய்யமில்லை.  

கிரேக்கம், லத்தீன் போன்ற மொழிகளில் மன்னர் வரலாறுகள், அவர்கள் நடத்திய போர் குறித்த மிக நுணுக்கமான விவரங்கள், ஆட்சியமைப்பு உருவான பின்னர் வேண்டியிருந்த ஆளுமைக்கான கருத்தோட்டங்கள், இவற்றையொட்டிய மேலாண்மை முறைமைகள் போன்றன விரிவாகவும் விளக்கமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரோம் நகரம் கிமு 763இல் உருவாக்கப்பட்டது முதல் ரோமப் பேரரசு கிபி 410இல்முடிவுக்கு வந்தது வரையிலான வரலாறும் கிடைக்கின்றது. இதைப் போன்றே கிரேக்க வரலாறும் தெளிவாகத் தெரிகின்றது. கிபி 5ஆம் நூற்றாண்டை அடுத்த கிரேக்க நாடகங்கள் பல கிடைத்துள்ளன. கிபி 900ஆம் ஆண்டைச் சார்ந்ததாகக் கொள்ளப்படும் ரோமரின் காவியங்கள் போன்ற லத்தீன் படைப்புகளும் உள்ளன.

ஆனால், இவை போன்ற அரசமைப்பு, ஆட்சி முறை, இவற்றையடுத்த வளர்ச்சிப் போக்குகள் போன்ற முழுமையான விவரங்கள் தமிழில் உள்ள சங்கப் பாடல்களில் இடம் பெறவில்லை என்பது உண்மைதான். பல மன்னர்களைப் பற்றிய விரிவான குறிப்புகளும் அவர்கள் நடத்திய போர்கள் தொடர்பான விவரங்களும் அவர்களது செயல்பாடுகளும் சங்கப் பாடல்களில் இடம்பெற்றிருந்தாலும், அவை தொடர்ச்சியாகவும் முழுமையாகவும் அமையவில்லை. பல்வேறு மன்னர்களைப் பற்றிய மரபுவழி முறைமைகள் தெளிவாகத் தெரியக்கூடியதாகக் கிடைக்கவில்லை. சேரர், சோழர், பாண்டியர் போன்ற மூவேந்தர் குறித்த விவரங்களும்கூட தொடர்ச்சியாகவும் புரியும்படியாகவும் இடம்பெறவில்லை.

ஒரு அரசனுடைய மகன் யார், யாருக்குப் பின் யார் ஆட்சியில் அமர்ந்தனர், அவர்கள் எத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்தனர், அவர்களது ஆட்சி முறை எவ்வாறு அமைந்திருந்தது, அவர்தம் ஆட்சிப் பகுதிகள் எவை, ஆட்சி என்ற வகையில் அவர்கள் மக்களுக்குச் செய்த பணிகள் யாவை, மன்னனுக்கும் மக்களுக்கும் இருந்த உறவுகள் யாவை என்பன போன்ற விவரங்கள் தெளிவாக விளங்கிக் கொள்ளக்கூடியதாகச் சங்கப் பாடல்களில் பதிவாகவில்லை. இதனால், இந்த மன்னர்களது ஆட்சிக் காலம் பற்றியும் தெரியவில்லை. சேர மன்னர்களைப் பற்றிச் சிறப்பாக எடுத்துரைக்கும் பதிற்றுப்பத்துப் பாடல்களிலும் வழிமுறைகள் வரையறுத்துக் கூறப்படவில்லை என்பதுதான் உண்மை. இவற்றையெல்லாம் பதிவு செய்யாமை, ஒரு வகையில் சங்கப் பாடல்களில் உள்ள குறைகளாகவேகூடக் கூறப்பட்டு வருவதையும் காணலாம்.

இங்கு ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. கிரேக்க, லத்தீன் மொழிகளில் கிடைக்கக்கூடிய விவரங்கள் யாவும், இனக்குழு - குடி அமைப்புக்கு அடுத்த வளர்ச்சிக் கட்டத்தில், அரசமைப்பு முறை உருவான பின்னர் தோன்றிய வேறுபட்ட காலத்தைச் சார்ந்தவையாகும். ஆனால், சங்கப் பாடல்கள், அரசமைப்பு முறை உருவாதற்கு முன்னைய காலத்தைச் சேர்ந்தவை. இந்த வேறுபாட்டை மறந்துவிடாமல் கணக்கில் கொள்ளவேண்டும்.

இன்னும் விளக்கமாகக் கூறவேண்டுமெனில், இனக்குழு-குடியமைப்புக்கு அடுத்ததான வளர்ச்சிக் கட்டத்தைச் சார்ந்தவையாகக் கிரேக்க, ரோமானிய வரலாறுகள் அமைந்திருப்பதாலேயே அந்தக் காலத்துக்கு ஏற்றவாறான விவரங்கள் அவற்றில் இடம்பெற்றிருக்கின்றன. அதனால், அவை தெளிவாகவும் பதியப்பட்டிருக்கின்றன. ஆனால், சங்கப் பாடல்களோ, இனக்குழு - குடி அமைப்பு முழுமையாகச் சிதையாத காலத்தில் பாடப்பட்டவையாக விளங்குகின்றன. அதனாலேயே, அன்றைய காலகட்டத்திற்குப் புறம்பான விவரங்கள் இடம்பெற வாய்ப்புகள் ஏற்படவில்லை.  

அரசமைப்பு முழுமையாக உருவாவதற்கு முன்னைய காலத்தைச் சார்ந்தவையாகச் சங்கப் பாடல்கள் இருப்பதாலேயே, அவற்றில் கிரேக்க, லத்தீன் மொழிகளில் கிடைக்கக்கூடிய விவரங்களை நாம் பெற முடியவில்லை. ஆயினும், கிரேக்கம், லத்தீன் போன்ற மொழிகளில் அரசமைப்பு உருவாதற்கு முன்னர் தோன்றிய இலக்கியங்கள் பெருமளவில் இல்லை என்பதையும் பார்க்கத் தவறிவிடக்கூடாது. அதாவது, இனக்குழு - குடிகளின் காலத்திய வாழ்முறைகளை ஒட்டிய படைப்புகள் கிரேக்க, லத்தீன் மொழிகளில் மிகுதியாகக் கிடைக்கவில்லை.

இருப்பினும், அய்ரோப்பிய வரலாற்றைப் படித்து, அந்த அடிச்சுவட்டில், அதனை முன்னெடுத்துக்காட்டாகக் கொண்டு மட்டுமே சங்க இலக்கியங்களைப் பார்த்ததால் பல முரண்களும் பிழைகளும் ஏற்பட்டுவிட்டன.

அடிமை முறையும் அரசமைப்பும் ஆட்சி நிறுவனங்களும் உருவான பின்னைய சமூக-பொருளியக் கட்டமைப்பினை எடுத்துரைக்கும் கிரேக்க, ரோமானியரது காதலையும் வீரத்தையும், அத்தகைய வளர்ச்சி நிலையினை எட்டாத காலத்திய சங்கப் பாடல்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க இயலாது. இரண்டும் அடிப்படையிலேயே வேறுவேறான காலத்தைச் சார்ந்தவை.

அரசமைப்பு உருவான பின்னர் கிரேக்க, ரோமானியப் பகுதிகளில் எழுந்த மன்னரது வரலாறு, ஆட்சி முறை, கருத்தோட்டங்கள் போன்றவற்றை, இனக்குழு-குடிகளின் கட்டமைப்பு முழுமையாகச் சிதையாத சங்க காலத்தில் எதிர்பார்க்கக் கூடாது. இந்த அளவுக்கான வளர்ச்சியை எட்டுதற்கு அப்போது அடிப்படைகள் ஏற்பட்டிருக்கவில்லை. அதனால்தான், ஆயிரக் கணக்கில் பண்டைய பாடல்கள் கிடைத்திருப்பினும், அவற்றில் இத்தகைய விவரங்கள் இடம்பெறவில்லை.

இந்த இடத்தில், சங்க அகப் பாடல்களில் தலைவன், தலைவியர் மற்றும் பிற மாந்தருடைய பெயர்கள் எதுவுமே குறிப்பிட்டுச் சொல்லப்படாததையும் மனம் கொள்ளவேண்டும். இதனை இலக்கிய மரபாக எடுத்துக்கொண்டு அமைதி கொண்டார்களேயன்றி, வரலாற்றுப் பார்வையில் பார்த்துப் புரிந்துகொள்ள முனையவில்லை. இனக்குழு-குடி அமைப்பின் தொடக்க நிலைக் கூட்டு வாழ்முறையில், தனி மனிதனாக யாரும் பார்க்கப்படுவதில்லை என்பதாலேயே பெயர்கள் யாருக்கும் சுட்டப்படவில்லை.

இது சங்கப் பாடல்களின் வரலாற்றுக் காலத்தை மேலும் தெளிவுபடுத்துகிறது. கிரேக்க, ரோமானிய வரலாற்றுக் காலங்களுடன் ஒப்பிட்டு, அவற்றையொட்டிய காலமாகப் பார்க்காமல், அவற்றுக்கு முன்னைய காலமாகச் சங்கப் பாடல்களைக் கணக்கிடுவதே பொருந்துவதாக அமையும். அப்படிப் பார்ப்பது, அண்மையில் கொடுமணல் அகழ்வாய்வுகளை அடுத்து சங்கப் பாடல்களின் காலத்தை மீண்டும் புதியதாகக் கணக்கிட்டிருப்பதற்கு இயைபாகவும் இருக்கும். கிமு ஆறாம் அய்ந்தாம் நூற்றாண்டுகளுக்கு மிக முந்தையதாகவே சங்கப் பாடல்கள் இருக்க முடியும் என்ற கருத்தோட்டத்தை இவையெல்லாம் மேலும் வலுப்படுத்தி வருகின்றன

சங்கப் பாடல்களை மதிப்பிடுவதில் உள்ள மற்றொரு சிக்கல்அவற்றின் நம்பகத் தன்மையாகும். கிரேக்க, ரோமானிய நாட்டு விவரங்கள் யாவும் வரலாறாகவும் நூல்களாகவும் எழுதப்பட்டிருக்கின்றன. அவையும் பல்வேறு துறை சார்ந்தவையாக உள்ளன. தூசிடைடஸ், பாலிபியஸ், கெரோடோடஸ், புளுடார்க், லிவி, டாசிடஸ் போன்றோர் அவர்தம் காலத்திலேயே இவற்றையெல்லாம் எழுதியிருக்கிறார்கள். இவையெல்லாம் இலக்கிய வகையைச் சார்ந்தனவல்ல. ஆனால், சங்கப் படைப்புகள் யாவும் இலக்கியங்களாக - பாடல்களாக இருப்பதால், அவற்றின் நம்பகத் தன்மையும் ஏற்புத் தன்மையும் அவ்வப்போது கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன.

இலக்கியங்களில் புனைவும் கற்பனையும் கலந்திருக்கும் - மிகுந்திருக்கும் என்பதாலேயே இந்த நிலை ஏற்படுகிறது. அடிமை முறையும் உடைமையும் தோன்றியிருந்த சமூக-பொருளிய-பண்பாட்டுக் கட்டமைப்பில் தோன்றிய இலக்கிய இயல்புகளையும் கொள்கைகளையும் போக்குகளையும் வைத்துக்கொண்டு, இனக்குழு-குடி அமைப்பின் இலக்கியங்களை மதிப்பிட முடியாது; மதிப்பிடவும்கூடாது.
இனக்குழு-குடி அமைப்பில் எழுந்த படைப்புகளில் கற்பனைகளுக்கும் புனைவுகளுக்கும் வாய்ப்புகள் குறைவு. புறநானூறு, பதிற்றுப்பத்து போன்றவற்றில்கூட, மன்னர்களைப் பற்றிய புகழ்ச்சிகள் சிலவற்றில் மிகை இருக்கலாம். ஆனால், வாழ்க்கை பற்றிய விவரங்களில் கற்பனையோ புனைவோ, மிகையோ இருக்க இயலாது. சமூக-பொருளிய-பண்பாட்டு வாழ்நிலைகளில் வேறான கற்பனைகளைக் கலந்திருக்கவே முடியாது. ஏனெனில், இனக்குழு-குடி வாழ்க்கையில், அந்த வாழ்க்கை முறைகளுக்கு வேறான அல்லது நடைமுறைகளுக்கு மாறான அல்லது உண்மைகளுக்குப் புறம்பான கற்பனைகள் தோன்ற வழியேயில்லை. அவர்கள் பார்த்திராத, கேட்டிராத, அறிந்திராத ஒன்றை அவர்களால் கற்பனை செய்து வெளிப்படுத்தியிருக்க முடியாது.            
சங்கப் பாடல்களில் குறிக்கப்பெறும் பல அரசர்களது பெயர்கள், அக்காலத்தைச் சார்ந்தவையாகவே உறுதிப்பட்டுள்ள கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. ஆகவே, வரலாற்று விவரங்களின் நம்பகத் தன்மைக்கு இவை எடுத்துக்காட்டுகளாகும்
.

மேலும், சங்கப் பாடல்களில் வெளிப்படும் நிகழ்வுகள், மாற்றங்கள், முன்னேற்றங்கள் ஆகியன, இயங்கியல் வகையிலான வரலாற்று வளர்ச்சிப் போக்குகளுக்கு இயைபாகவே அமைந்திருக்கின்றன. பண்டைய இனக்குழு-குடிகளுடைய வாழ்க்கையை மதிப்பிட, மானிடவியலார், சமூகவியலார், வரலாற்றாளர் போன்றோர், இன்றைய பழங்குடி வாழ்முறைகளை ஆய்வு செய்து சில முடிவுகளை மேற்கொண்டனர். இவையும் சங்கப் பாடல்களுக்கு இயைபாகவே பொருந்தி உள்ளன.

இங்கு மற்றொரு வினா எழலாம். இனக்குழு-குடி அமைப்புக்கு அடுத்த கட்டத்தில், கிரேக்க, ரோமானியப் பேரரசு போன்று ஒன்று ஏன் தமிழ்நாட்டில் உருவாகவில்லை என்பதுதான் அது. மனித உழைப்பைப் பயன்கொள்வதில் கிரேக்க, ரோமானிய நாடுகளில் இருந்தது போல, அடிமை முறை தமிழ்நாட்டில் ஏற்படாததால், இங்கு பேரரசு ஒன்று உருவாதற்கான அடிப்படைகளும் சூழல்களும் வாய்ப்புகளும் அமையவில்லை.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை, போரில் வெற்றி பெற்ற குடியினர், தோல்வியுற்றோரை அடிமைப்படுத்தாமல், அவர்களிடமே நிலங்களைத் திருப்பி ஒப்படைத்து உற்பத்தியைத் தொடர வழியமைத்த புதிய முறைமையொன்று அறிமுகமானது. இந்த முறைமை தொடர்ந்து நடைமுறையிலும் இருந்தது. ஆகையால், அடிமை முறை ஏற்படுதற்கான அடித்தளம் தமிழ்நாட்டில் உருப்பெறவில்லை. இதனால், பெருமளவிலான அடிமைகளை அடக்கிவைத்துப் பேணுவதற்கான வாய்ப்புகளும் இருக்கவில்லை. இதனால், அத்தகைய அடிமைகளின் உழைப்பைக் கொண்டு, பெரும் பரப்பிலான நிலங்களை விளைவிப்பதற்கும் வேறு வகையிலான உழைப்புப் பயன்களை அடைவதற்குமான சூழல் அமையவில்லை.

தங்களது உழைப்பில் உற்பத்தி செய்த விளைச்சலில், வெற்றி பெற்ற குடிகளுக்கு ஒரு பங்கு கொடுக்கவேண்டிய அவல நிலை ஒருபுறம் இருந்தபோதும், நிலங்களை உழுதோர் ஆங்காங்கே தங்கள் பணிகளைத் தம் விருப்பப்படியும் விடுதலை உணர்வுடனும் மேற்கொண்ட ஆக்க நிலையும் மறுபுறம் நீடித்துக்கொண்டிருந்தது. வேந்தருக்குக் கட்டுப்படாமல் எழுச்சி பெற்றிருந்த புதிய நிலத் தலைவர்களும் அடிமைகளின் உழைப்பைக்கொண்டு உற்பத்தியில் ஈடுபடவில்லை. அவர்கள் விற்பனைக்கான உற்பத்தியில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரியவில்லை. அவர்களை அடக்கி ஆளக்கூடிய வல்லமை வேந்தர்களிடம் இல்லை என்பதன்றி, நிலத் தலைவர்களே ஆட்சியாளர்களாக மாறிவிடவில்லை. வேந்தருக்கு மாற்றாகவும் அவர்கள் இருக்கவில்லை. இத்தகைய ஏற்பாட்டில், மனித உழைப்பினால் உருவான பெருஞ்செல்வம் ஒரு பக்கம் மட்டும் குவியும் வாய்ப்பும் அப்போதைய கட்டத்தில் முழுமையாக ஏற்படவில்லை. பெருமளவிலான நிலங்கள் ஒரு சிலரிடம் அல்லது ஒரு சில குடிகளிடம் மட்டுமே சென்றுசேர்வதும் அதன் காரணியாகச் செல்வக் குவியல் ஏற்படுவதும் இந்த வகையில் தடுக்கப்பட்டுவிட்டது. இவை, அன்றைய சமூகம் அடுத்த கட்ட வரலாற்று வளர்ச்சிக்குச் செல்வதை ஓரளவு தள்ளிப்போட்டுவிட்டது என்றே கூறலாம்.

இந்தப் பின்புலத்தில், அடிமைப்படுத்தும் அமைப்புக்கான பேரரசு நிறுவனங்களும் கருத்துருவாக்கங்களும் தத்துவங்களும் ஆட்சி முறைமைகளும் தமிழ்நாட்டில் பெரிய அளவில் வேண்டியிருக்கவில்லை; தோன்றவும் இல்லை.
இருப்பினும், தமிழ்நாட்டில் அன்று இருந்த நிலைமைகள் ஒருவாறான தேக்கத்தை எந்த வகையிலும் உண்டாக்கிவிடவில்லை. இது மிக முதன்மையாக நோக்கத்தக்கதாகும். அதற்குக் பல காரணிகள் இருந்தன.
“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே “(புறம் 183 : 1-2)
என்று புதிய மக்கள் பகுதியினர் வேளாண் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்வது ஊக்கப்படுத்தப்பட்டது. மனித வள மேம்பாட்டை உருவாக்கவும் உறுதிப்படுத்தவும் சிறப்பான முயற்சிகள் ஓர் இயக்கமாகவே நடத்தப்பட்டிருப்பதை இந்தப் பாடல் வரிகள் வலியுறுத்துகின்றன
.

“நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே”
(புறம் 18 : 22-23)
என உணவு உற்பத்திக்காக நீரையும் நிலத்தையும் இணைக்கவேண்டியதன் இன்றியமையாமை வற்புறுத்தப்பட்டது.

“காடுகொன்று நாடாக்கிக்
குளம்தொட்டு வளம்பெருக்கி
(பட்டினப்பாலை 283-4)
என்று புதிய நிலங்களை உற்பத்திக்குக் கொண்டு வருவதும் குளங்களை உருவாக்கி வளம் பெருக்குவதும் தொடர் பணிகளாகவே மேற்கொள்ளப்பட்டன.

“பகடுபுறந் தருநர் பாரம் ஓம்பிக்
குடிபுறந் தருகுவை ஆயின்
அடிபுறந் தருகுவர் அடங்கா தோரே
(புறம் 35)
என்று உற்பத்திக் குடிகளை அடிமைப்படுத்துதற்கு மாறாக, அவர்களைப் பேணுவதே பெரிதெனக் கருதப்பட்டது
.

வேளாண் தொழில்நுட்ப அறிவைப் பெறுவதும் உற்பத்தி ஆற்றலைப் பெருக்குவதும் சங்கப் பாடல்களில் மேலோங்கி நிற்கின்றன. இவற்றால் ஏற்பட்ட வளர்ச்சிகளும் முன்னேற்றங்களும்தாம் அக்காலத்திய சமூக-பொருளிய-பண்பாட்டு மாறுதல்களுக்கும் மேம்பாடுகளுக்கும் காரணிகளாக அமைந்தன.
இனக்குழு-குடி வாழ்முறை அமைப்பில் இத்தகைய வளர்ச்சிக்கான வரவேற்பினைப் பதிவு செய்த பாடல்கள் உலகின் எந்த மொழியிலும் கிடைத்ததாகத் தெரியவில்லை
.

மக்கள் திரளின் வாழ்க்கைப் போக்கில் இத்தகைய கண்ணோட்டங்களும் கருத்தோட்டங்களும் ஏற்படுதற்கும் காரணிகள் இல்லாமல் இல்லை. பண்டைய தமிழர், படைப்புக் கொள்கைகளையோ அவை சார்ந்த தத்துவப் போக்குகளையோ  அடிப்படையிலேயே ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. உலகம் அய்ந்து மூலப் பொருள்களால் உருவானது என்ற நம்பிக்கைதான் நிலவியது. அதனால்தான்,  

“நீரின்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
(புறம் 18 : 18-20)
என்று உணவு, உடல், உயிர் போன்றவற்றின் வளர்நிலை உருவாக்கத்தைப் புரிந்துகொண்டிருந்தனர்.

இதனால்தான், இறைவனுடைய வருத்தத்தால் தனக்கு நோய் ஏற்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ள ஒரு பெண் மறுக்கிறாள். இறை நம்பிக்கையைக்கூட இகழ்கிறாள்.

“நன்னர் நெஞ்சமொடு மயங்கி வெறியென
அன்னை தந்த முதுவாய் வேலன்
எம்இறை அணங்கலின் வந்தன்று இந்நோய்
தணிமருந்து அறிவல் என்னு மாயின்
வினவல் எவனோ . . . . . . . . . . . . . . . . . . . . . . .
காட்டுமான் அடிவழி ஒற்றி
வேட்டம் செல்லுமோ நும்இறை எனவே
(அகம் 388 : 18-26)

இதனால், இனக்குழு-குடி வகைப்பட்ட சில நம்பிக்கைகளையன்றிப் பிறவற்றைச் சங்க கால மக்கள் பெரிதும் பொருட்படுத்தவில்லை என்பதே தெரிகிறது. சிலப்பதிகார காலத்திலும்கூட இத்தகைய எள்ளல் வெளிப்பாடுகள் இருந்ததைக் குன்றக் குரவையில் காணலாம். இத்தகைய உணர்வுகளும் பண்புகளும், மனித எதிர்பார்ப்புகளை மட்டுமன்றி, வாழ்முறையினையே மேலும் செழுமைப்படுத்தின.

“தீதும் நன்றும் பிறர்தர வாரா
(புறம் 00 : 18-20)    

என்ற குரலும் இங்கு நோக்கத் தக்கது. இறைவனிடமிருந்து கிடைக்கும், சடங்குகள்வழிப் பெற முடியும், யாரோ கொடுப்பார்கள், தன் உழைப்பின்றிப் பிறர் உழைப்பில் அடையலாம் என்ற நம்பிக்கைகளுக்கு மாறாக, தனது அறிவில், தனது ஆற்றலில், தனது உழைப்பில், தனது முயற்சியில் மட்டுமே உயர்வு பெற முடியும் என்பது வலியுறுத்தப்பட்டது. அத்தகைய அமைப்பின் குரலாகவும் இது வெளிப்படுகிறது. தன்னம்பிக்கை உணர்வுகளையும் இத்தகைய குரல்கள் வலுப்படுத்தின.

தொழில் பிரிவினை ஏற்பட்ட பின்னரும், உடைமை அமைப்பு அறிமுகமான பின்னரும் இத்தகைய குரல்கள் தொடர்ந்தன. அதனால்தான்,

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
(குறள் 972)
என்பது வாழ்முறையின் அடித்தளமாக அமைந்திருந்தது.

வடஇந்தியாவிலும் கிரேக்க-ரோமானிய நாடுகளிலும் வர்ணாசிரம தர்மமும் அடிமை அமைப்பும் நடைமுறையில் இருந்தபோது, தமிழ்நாட்டில் வேற்றுமைகளுக்கு எதிரான குரல்கள் எழுந்துகொண்டேயிருந்தன - தொடர்ந்துகொண்டேயிருந்தன.

தமிழ்நாட்டில் வர்ணாசிரம முறையும் அடிமை அமைப்பும் அறிமுகமாகாமல் போனதற்கு, இத்தகைய குரல்களே அடிப்படையாகலாம். வர்ணாசிரம முறையையும் அடிமை அமைப்பையும் தமிழகத்தில் நுழைக்க - அறிமுகப்படுத்த பார்ப்பனர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிர்ப்பாகவும் மறுப்பாகவும் இத்தகைய குரல்கள் எழுந்திருக்கலாம். அடுத்த கட்டத்தில், ஆசாரக்கோவை போன்ற நூல்கள் வர்ணாசிரம முறையைப் போற்றிப் பாடப்பட்டதையும், அவை தமிழ்நாட்டில் எடுபடாமல் போய்விட்டதையும் இங்கு மனங்கொளவேண்டும்.

உணவு திரட்டுதலிலிருந்து உணவு உற்பத்தி என்ற வளர்ச்சி, வேளாண் தொழில்நுட்பத்தினால் பெருத்த முன்னேற்றங்களை உருவாக்கியிருந்தாலும், இவை மக்களது வாழ்முறைகளில் பல மாறுதல்களை ஏற்படுத்தியிருந்தாலும், அடிமை முறை இல்லாமை என்பது, இனக்குழு-குடி அமைப்பின் பல பொதுமைப் போக்குகளை நீடிக்கச் செய்தது
.

இனக்குழு-குடி கூட்டு வாழ்முறையின் நீட்சியாகவும் வளர்ச்சியாகவும் அடுத்த கட்டமாகவும் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன என்றாலும், அவற்றின் பொதுமைப் பண்புகள் பல  மாறவில்லை; மறையவில்லை.
நிலத் தலைவர்கள் வேளாளர்களாக வளர்ச்சியடைந்து, விற்பனைக்கான உற்பத்தி என்பது முழுமைப்பட்டு, நிலவுடைமை அமைப்பு தோற்றம் பெறும் வரை, தமிழ் மக்கள் ஒரு வகையில் பண்டைய பொதுவுடைமை நிலையிலேயே தொடர்ந்தனர் என்று கூறுவது மிகையானதாக இருக்காது
.    

ஆனால், ஏதோவொரு வகையில், சங்கப் படைப்புகளைக் காதல், வீரப் பாடல்களாகப் பார்க்கும் மரபு, அதற்கு அப்பால் சென்று புரிந்துகொள்ளும் வழியை முழுமையாக அடைத்துவிட்டதாகவே தெரிகிறது. சங்கப் பாடல்களைப் புரிந்துகொள்வதிலும் அந்த மரபு சில மயக்கங்களையும் ஏற்படுத்திவிட்டது.

அகம், புறம் என்ற இயல்பான - இயைபான - நுட்பமான - பொருத்தமான பாகுபாடுகள் ஏற்கெனவே இருக்கும்போது, இவற்றுக்கு அப்பால் காதல், வீரம் என்பன குறுக்கிட்டுவிட்டன. கிரேக்கம் போன்ற அய்ரோப்பிய வரலாறுகளின் தாக்கம் இருந்திருக்கலாம்.

இதனால், தமிழ்நாட்டின் சமூக-பொருளிய-பண்பாட்டு-அரசியல் வரலாற்றை எழுதுவதும் முழுமை பெறாமல் இன்று வரை தடைபட்டு நிற்கிறது. காதல் மற்றும் வீரத்துக்குள் மட்டும் சங்கப் பாடல்களை முடக்கிவிடாமல், நுட்பமான ஆய்வுகளை மேற்கொண்டால்,பண்டைத் தமிழரது வாழ்வை முழுமையாகப் பெற முடியும்.
 
டைம்ஸ் ஆப் இந்தியா (27-06-2010) ஆங்கில நாளிதழ், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினையொட்டித் தமிழில் வெளியிட்ட கட்டுரையின் விரிவாக்கம்.