எழுத்தாளர் கார்த்திகாயினி சுபேஸின் 'தாய்மடி தோடி' சிறுகதைத் தொகுதி நூல் வெளியீட்டு விழா

 

மா.பா.சிசிறந்த கதைஞரும், பத்திரிகையாளருமான கார்த்திகாயினி சுபேஸின் 'தாய்மடி தேடி....' என்ற சிறுகதைத் தொகுப்பு மீரா பதிப்பகத்தின் 91 ஆவது வெளியீடாக வெளிவந்துள்ளது. இத்தொகுப்பின் வெளியீட்டு விழா 06.03.2011 அன்று கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது. வைத்திய கலாநிதியும் பிரபல இலக்கியவாதியுமான எம்.கே.முருகானந்தம் தலைமை தாங்கினார். 'தினக்குரல்' பத்திரிகையின் நிறுவுநர் எஸ்.பி.சாமி தொகுப்பை வெளியிட்டு வைத்தார்.

எஸ்.பி.சாமி, எம்.கே.முருகானந்தம், கே.எம்.தர்மராஜா, தெளிவத்தை ஜோசப், டொமினிக் ஜீவா, தி.ஞானசேகரன், புஸ்பராணி நவரட்ணம், மு.தயாபரன், தேவகௌரி சுரேந்திரன், கே.எஸ்.சிவகுமாரன், நூலாசிரியையின் பெற்றோரான க.குலநாயகம் தம்பதி, பாரதி ராஜநாயகம் ஆகிய பிரமுகர்கள் மங்களச் சுடரேற்றி நிகழ்வைத் தொடக்கி வைத்தனர். கி.வேஜின் துஷ்யந்தி, ஆ.அனா ஆகியோர் இனிய குரலில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினர். 'ஆர்த்திகன்' ஆசிரியர் அ.சுபேஸ் வரவேற்புரை நிகழ்த்தினார்.

தலைமையுரை: வைத்திய கலாநிதி எம்.கே.முருகானந்தம்

தாயன்பு விசாலமானது. கைமாறை எதிர்பார்;க்காதது. நாமனைவரும் தாய்மடியின் சுகத்தை அனுபவித்தவர்கள். 'தாய்மடி தேடி...' என்ற இந்நூல் தாபத்தை ஏற்படுத்துகிறது. சாதியம், ஆணாதிக்கம், குழந்தை இன்மை, ஆசிரியர்களின் நடத்தை இது போன்றவற்றைக் கதைகள் பேசுகின்றன.

கடந்து போன நிகழ்வுகளின் பிரதிபலிப்புகளை, துன்பங்களை உயிரிழப்புகளைக் கார்த்திகாயினியின் இக்கதைகள் வெளிப்படுத்துகின்றன. தாயன்பு முக்கியத்துவம் பெறுகிறது. அதனால் ஏற்படும் ஏக்கமும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இவைகள் வாசகரின் உள்ளத்துள் புகுந்து கொள்ளக்கூடிய விடயங்கள். வாசகர்கள் சிந்திக்க வேண்டும். காத்திருப்பும் கதையாகி இருக்கிறது. அன்பை ஒட்டிய காத்திருப்பு வெளிச் சென்ற கணவர், மகன், மகள் எப்போ திரும்புவார்கள் என்ற காத்திருப்பு, இப்போதெல்லாம் எமது சமூகம் காத்தே தான் இருக்கிறது. பித்துப் பிடித்தவர்கள் எமது பிள்ளைகளைக் கவர்ந்து சென்றிருக்கின்றனர். இதனால் பெற்றோர் படும் வேதனைகளைக் கார்த்திகாயினி சொல்லியிருக்கிறார். தாயின் சலிப்பு, ஆச்சியின் பாசம் என்ற வகையில் நூல் முழுதுமே தாயன்பு வியாபித்து நிற்கிறது. ஆண்களிடமும் தாயன்பு ஏற்படலாம்.

நூலின் அட்டைப் படம் உணர்வு பூர்வமானதாக இருக்கின்றது. கார்த்திகாயினி உசன் கிராமத்தவர். அங்கு 1970, 1990 களில் சென்றிருக்கிறேன். இரம்மியமான சூழல். இந்த இயற்கை வனப்பு இப்போ இராணுவத்தால் சிதைக்கப்பட்டு விட்டது.

'ஆயிரத்தொரு இரவுகள்' என்ற கதைகள் தான் சிறுகதைக்கு முன்னோடி. ஆரம்பக் கதைகளின் குறைகள் பின்னர் படைக்கப்பட்ட கதைகளில் இல்லை. ஆழ்ந்த சமூக நோக்கில் எழுதுகிறார். மண்ணையும் மக்கள் பேசுமொழியையும் எழுதியுள்ளார். நீர்வை பொன்னையன், கார்த்திகாயினியின் படைப்புலகத்தை எழுதியுள்ளார். அவரது கருத்துக்களோடு உடன்படுகிறேன். பட்டப் படிப்புக்கானவசதி கிடைத்தும் அதைச் சில காரணங்களால் கார்த்திகாயினி துறந்துள்ளார். உயர்தர வகுப்பு மாணவியாக இருந்த காலத்தில் உதயன் பத்திரிகையில் சிறுகதை எழுதினார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஒலிபரப்பிய 'இசையும் கதையும்' என்ற நிகழ்ச்சிக்கும் எழுதினார்.

இன்று வெளியிடப்படுவது இவரது மூன்றாவது நூல். ஏற்கனவே இரு சிறுவர் நூல்களையும் வெளியிட்டுள்ளார். இக்கட்டான இலங்கைச் சூழலில் எஸ்.பி. சாமி 'தினக்குரல்' பத்திகையைத் தொடங்கினார். அவரை நாம் பாராட்ட வேண்டும். இரத்தினவேலோன் சிறந்த எழுத்தாளர். விமர்சகர். மீரா பதிப்பகம் 1996 ஆம் ஆண்டு அவரால் ஆரம்பிக்கப்பட்டது. கார்த்திகாயினியின் 'தாய்மடி தேடி...' அதன் 91 ஆவது நூல்.

நூல் வெளியீட்டு நிகழ்வில் 'தினக்குரல்' பத்திரிகையின் நிறுவுநர் எஸ்.பி.சாமி முதல் பிரதியை பிரசித்த நொத்தாரிஸூம், சட்ட உதவியாளருமான கே.எம். தர்மராஜாவுக்கு வழங்கினார். சிறப்புப் பிரதிகளை கலை, இலக்கிய, ஊடக பொதுப்பணிப் பிரமுகர்கள் பெற்றனர்.

வெளியீட்டுரை: தெளிவத்தை ஜோசப்

இது ஒட்டுமொத்தமான 'தினக்குரல்' இலக்கிய விழா. முன்பு கவிதையும் நாவலுந்தான் இருந்தது. உரை நடைக்கானது நாவல், கவிதைக்குப் பொழிப்புரை தேவைப்பட்டது. நாவல் சீர்கெட்டிருந்தது. தமிழகத்தார் சிறுகதை வடிவத்தைக் கொண்டு வந்தனர். பிரசார நெடியில்லாது தொனிப்பொருளைச் சிறுகதையில் சொல்ல வேண்டும். புதுமைப் பித்தன் அதைச் செய்து காட்டினார். புதுமைப் பித்தன் கதைகளை வாசிக்காதவர்கள் சிறுகதை எழுதக்கூடாதெனக் சுஜாதா கூறியுள்ளார். இலங்கையர்கோனை, வைத்தியலிங்கத்தை எழுத்தாளர்கள் வாசிக்க வேண்டும்.

எழுத்து மென்மேலும் வாசிப்புக்கு இட்டுச் செல்ல வேண்டும். தினக்குரலுக்கு வந்தபின் கார்த்திகாயினியின் பணி 2004 இல் தொடங்கியது. பின்னர்தான் எழுத்தாளர்கள் தொடர்பும் ஏற்பட்டிருக்கிறது. நூல் வந்துள்ளது. அதைப் படிக்க வேண்டும். நம்மவர்கள் நமது இலக்கியத்தைப் பேசமாட்டார்கள். ஆனால் தமிழ்நாட்டு இலக்கியத்தைப் பேசுவார்கள். கார்த்திகாயினி எழுத்துலகத்துக்கு வந்தது மகிழ்ச்சியாக இருக்கின்றது. இது அவரது எழுத்தின் இரண்டாவது கட்டம். தொகுப்பு வந்த பின் படைப்பாற்றலைக் கூறுவோம். இனிக் கார்த்திகாயினிக்கு மூன்றாவது கட்டம். அதுதான் அவரது படைப்புக்கான ஆய்வு. அதை நாம் முறையாகச் செய்வதில்லை.

ஒவ்வொருவரும் தமது படைப்புகளைச் சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டும். உரிய விமர்சனங்கள் இல்லாததாலேயே எமது சிறுகதைகள் வளர்ச்சி காணவில்லை. எழுதவேண்டும். தொகுக்க வேண்டும். ஆய்வுசெய்ய வேண்டும். தொகுப்புகளை வெளியிட்ட ராணி சீதரனும், பவானி சிவக்குமாரும் எனக்கு ஞாபகத்துக்கு வந்தனர். இதனால் அவர்கள் 'பட்டபாடுகள்! ஆ.முத்துலிங்கம் எலுமிச்சையைக் கதையில் கொண்டு வந்திருக்கிறார். 'இப்படியும்' என்ற சிறுகதையில் கார்த்திகாயினி நாயைப் பற்றி எழுதியுள்ளார். வித்தியாசமான கதை. 'தாயகம் சஞ்சிகையில் கோகிலா மகேந்திரனும் 'மூன்றாவது மனிதன்' இல் நானும் நாயைப் பற்றி எழுதியுள்ளோம். மனிதரோடான நாயின் ஊடாட்டத்தைச் சொல்லியிருக்கிறார். 'இப்படியும்' சிறுகதையை வாழ்வாகப் பார்க்க முடியவில்லை.

வாழ்த்துரைகள்: 'மல்லிகை' டொமினிக் ஜீவா

கார்த்திகாயினியைப் பார்ப்பதே சந்தோஷம் நெஞ்சு நிறையும். தமது பெயரை மனைவிமார் மீறிவிடக் கூடாதெனக் கணவன்மார் வாழ்ந்துவரும் சூழலில் தானே முன் நின்று கார்த்திகாயினியின் கணவர் மனைவியின் புத்தகத்தை வெளியிடுவது பெருஞ்சிறப்பு. 'தினக்குரல்' பத்திரிகையை நேசிப்பவன் நான். அதன் ஆசிரிய தலையங்கங்களின் தொகுப்பான 'ஊருக்கு நல்லது சொல்வேன்' இன்று வெகுவாகப் பேசப்படுகிறது.

இதனைச் சகலரும் படிக்க வேண்டும். எந்தவொரு பத்திரிகையின் தலையங்கமும் இப்படித் தொகுக்கப்பட்டு நூலாக வரவில்லை. எத்தனையோ தகவல்களைப் படிக்க முடிகின்றது. தடியை முறிக்காமல் சிறிதாக்கு என்றதுக்கு பெரிய தடியொன்றைப் போட்டு ஒருவன் சிறிதாக்கிக் காட்டினான். இதுதான் பத்திரிகை எழுத்தின் பண்பு.

இக்கூட்ட நிகழ்வுகள் எதிர்வரும் புதனோ வியாழனோ தினக்குரலில் வந்துவிடும். இலக்கியத்தை இப்படியாக முக்கியத்துவப்படுத்தும் வழக்கம் தமிழ்நாட்டில் இல்லை. தினக்குரல் முன் மாதிரி காட்டுகிறது. கவிதைகளை, சிறுகதைகள் எழுதி வெளியிடுகின்றவர்கள் இலக்கியக் கூட்டங்களுக்கு வருவதில்லை. 'ஞானம்', ஜீவநதி' போன்ற பல சஞ்சிகைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 'இடி' என்ற ஏட்டிலும் கார்த்திகாயினி எழுதியிருக்கிறார். ஆனால் 46 ஆண்டுகளாக வெளிவந்துகொண்டிருக்கும் 'மல்லிகை' இல் இன்னமும் எழுதவில்லை. இருந்தும் அவரை மனதார வாழ்த்துகிறேன். இதுதான் பண்பென்பது. இச்சிறுகதைத் தொகுதியை எழுத்தெண்ணிப் படித்தேன். 'தாய்மடி தேடி' என்றதைத் தாயின் மடியைத் தேடி எனவாக்கி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

'ஞானம்' ஆசிரியர் தி.ஞானசேகரன்

கடைசியாக 'ஞானம்' நடத்திய சிறுகதைப் போட்டியில் கார்த்திகாயினியும் பரிசைப் பெற்றிருக்கிறார். இத்தொகுப்பின் தலைப்பிலான சிறுகதை ஞானத்தில் வெளிவந்தது.

இதேபோல் சுதாராஜின் 'உயிர்க்கசிவு' பிரமிளா செல்வராசாவின் 'பாக்குப்பட்டை' என்பனவும் ஞானத்தில் வெளியான சிறுகதைகளின் தலைப்புகளே என்பதை நினைக்கும்போது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கின்றது. இத்தொகுப்பின் மூன்று சிறுகதைகள் ஞானத்தில் பரிசைப் பெற்றவை.

இப்போதெல்லாம் பெண் எழுத்தாளர்கள் நல்ல சிறுகதைகளை எழுதுகிறார்கள். அண்மையில் தாட்சாயிணி தினக்குரலில் பிள்ளையார் கதையொன்றை எழுதியுள்ளார். வித்தியாசமான பார்வை. புதிய புதிய கருத்துகள் வெளிப்படுத்தப்படுகின்றன. கருத்துக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். இத்தொகுப்பின் சிறுகதைகளில் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கனதியான கருக்கள் கையாளப்பட்டுள்ளன. வாசித்தபோது அதிர்ச்சியேற்பட்டது. பெண் எழுத்தாளர்கள் உருவத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆய்வாளர்களைவிட படைப்புகளை மீண்டும் மீண்டும் மெருகு செய்ய வேண்டும். மொழியாட்சியில் கவனம் வேண்டும்.

'தினக்குரல்' பிரதம ஆசிரியர் வீ. தனபாலசிங்கம்

இது எங்கள் வீட்டு விழா. தினக்குரல் நிகழ்வு. இதில் மீரா பதிப்பகமும் சம்பந்தப்பட்டிருப்பது இரட்டிப்புச் சந்தோசத்தைத் தருகின்றது. கார்த்திகாயினி அட்டகாசமற்றவர். அடக்கமானவர். எளிமையானவர். ஆனால் ஆழமான செயல்களைச் செய்து வருகிறார்.

சிறந்த கலை, இலக்கியவாதி. பத்திரிகைத்துறையில் இலக்கியவாதிகள் குறைவாகவே உள்ளனர். லெ.முருகபூபதி, தேவகௌரி போன்றவர்கள் முன்பிருந்தனர். இன்றுள்ள பத்திரிகையாளர்களுக்கு இலக்கிய ஈடுபாடு மிகவும் குறைவு. செய்திகளை எழுதுவதில்தான் ஈடுபடுகின்றனர். எழுத்தில் செழுமையேற்றபட இலக்கியத்தை வாசிக்க வேண்டும்.

தேவகௌரிக்குப்பின் எமது பத்திரிகைக்குக் கார்த்திகாயினி வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது. மிகவும் உதவியாக இருக்கிறார். பத்திரிகைத் துறைக்கு இலக்கிய ஆர்வமுள்ளவர்கள் தான் தேவை. இதை நிர்வாகம் கவனத்துக்கு எடுக்க வேண்டும்.

புத்தகம் போடுவதுக்கு மனைவியை ஊக்கப்படுத்திய சுபேஸின் செயற்பாடு சந்தோஷத்தைத் தருகிறது. இரத்தினவேலோன் அடக்கமானவர். நோய்க்கு வைத்தியம் பார்க்கும் எம்.கே.முருகானந்தம் கதைகளில் வரும் கதை மாந்தருக்கும் வைத்தியம் சொல்கிறார்.

ஆசிரியை புஷ்பராணி நவரத்தினம்

கார்த்திகாயினி பிறந்த மிருசுவில் சிறிய கிராமம். கூட்டுக்குடும்ப வாழ்க்கை. நேரில் வந்து வாழ்த்துவதில் பேரானந்தம். கன்னிப் படைப்பு 'நான் சீதையல்ல' சிறுகதையைச் 'சஞ்சீவி' வாரப் பத்திரிகையில் படித்துக் கார்த்திகாயினியின் ஆற்றலைக் கண்டு வியந்தேன். பெரும்பாலான எமது சிறுகதைப் படைப்பாளிகள் சமுதாய சிந்தனைகளோடு எழுதுகின்றனர். எதைச் சொல்லக்கூடாது மக்களுக்கு என்பதுக்கு இலக்கணமாக விளங்குபவை கார்த்திகாயினியின் சிறுகதைகள். சமுதாய சிந்தனை கொண்ட கார்த்திகாயினியின் இலக்கியப் பணி தொடர வேண்டும்.

கார்த்திகாயினியின் பெற்றோரை வாழ்த்தும் மடலொன்றைச் சுபேஸ் வாசித்து மனைவி கார்த்திகாயினியோடு சேர்ந்து வழங்கினார்.

ஆய்வுரைகள்: 'தகவம்' மு.தயாபரன்

நூலின் தலைப்பு அருமையானது. இத்தொகுப்பில் பத்துச் சிறுகதைகள் உண்டு. முதலைந்து சிறுகதைகளின் மீதான எனது பார்வையை நயவுரையாகத் தான் சொல்லவிருக்கிருக்கிறேன். சிறுகதைக்கான சில பொது அம்சங்கள் உண்டு. கரு, மொழி சித்திரிப்புத் தேவை. சிறுகதையொன்று எப்படி இருக்க வேண்டும்? வாசகனுக்குச் சுகானுபவத்தை ஏற்படுத்த வேண்டும் அல்லது வலியை உண்டாக்க வேண்டும். வாசித்த பின் பத்து நிமிடத்துக்காவது வாசித்த அதிர்வு வாசகனிடம் இருக்க வேண்டும்.

இதில் கார்த்திகாயினி வெற்றி பெற்றுள்ளாரெனத்தான் சொல்வேன். தனிமனித வாழ்வின் யதார்த்தம், சமூகக் கூறுகள் என்பவைகளைச் சித்திரிக்கும் இரு சிறுகதைகளும் ஐந்து போர்க் காலக் கதைகளும் மற்றும் மூன்று கதைகளும் படிக்கக் கிடைக்கின்றன. சிறுகதைச் சித்தரிப்பு வாசகனை இன்னொரு தளத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும். 'நான் சீதையல்ல' போர்க்காலக் கதை. இராணுவத்தால் கைது செய்யப்பட்ட பெண்ணின் கதை. பெண்ணியச் சிந்தனை நாசுக்காகச் சொல்லப்பட்டுள்ளது. சிறுகதையோடு வாசகன் தொடர்பு கொண்டிருக்க அதில் தொய்வு இருக்கக் கூடாது. க.சட்டநாதன் 20 பக்கக்கதை எழுதியும் வெற்றிகண்டுள்ளார். எனவே சிறுகதைக்கு அளவு பெரிதல்ல.

இன்று குறுங்கதைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அவகைள் வெறும் செய்திகளாகவே இருக்கின்றன. கார்த்திகாயினியின் மொழி நடை எளிமையானது. இதுவே அவருக்குப் பெருமையைத் தருகிறது. சிலரின் கதைகளைப் பத்துத்தரம் படித்தாலும் விளங்காது. துள்ள முடியாத புள்ளிமான், ஊனம் அருமையான சிறுகதைகள்.

ஒரு சிறுகதையை வாசித்த பின் அது இன்னொரு சிறுகதையைப் படைப்பதற்கான உணர்வை ஏற்படுத்த வேண்டும். நூலின் வடிவமைப்பு பாடப்புத்தகம் போன்ற தோற்றத்தைத் தருகிறது. அட்டைப் படத்தைக் கோட்டோவிய முறையில் அமைத்திருந்தால் கவர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். 'அறுவடையாகாத விதைகள்', 'இப்படியும்', சிறுகதைகள் வாசிப்பில் தொய்வை ஏற்படுத்துகின்றன. 'நான் சீதையல்ல' தமிழ்ச் சினிமாப் பாணியான கதை. தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய தொகுப்பு 'தாய்மடி தேடி...'

தேவகௌரி சுரேந்திரன் (விரிவுரையாளர் ஊடகவியல் கல்லூரி)

பல சிரமங்களுக்கும் மத்தியில் கார்த்திகாயினி இத்தொகுப்பை வெளியிட்டிருப்பார். கடைசி ஐந்து சிறுகதையைப் பற்றிச் சொல்ல் வேண்டியிருந்தாலும் தொகுப்பின் பத்துக் கதைகளையும் வாசித்தேன். கருத்து நிலை மாற்றுச் சிந்தனைகளைக் கதைகள் வெளிப்படுத்துகின்றன. பேராசிரியர் க.கைலாசபதி சமுதாய மாற்றத்தை எழுத்துக்கள் நாடி நிற்க வேண்டுமெனவே கூறியிருக்கிறார்.

சமூக மாற்றத்துக்கான கருத்துநிலை கதைகளில் இருக்கின்றது. கடல்கோள் எமது வாழ்வைப் புரட்டிப்போட்டது. சாதீயம் பற்றியது 'எச்சில்' சிறுகதை. படைப்பாளி கார்த்திகாயினி சமூகத்துக்குச் சூடு வைக்கிறார். சமுதாய மாற்றம் கருத்து நிலை மாற்றத்தைக் கொண்டு வரும். 'தாய்மடி தேடி..' வாசகர் மனதில் வலியை ஏற்படுத்தும். 'இப்படியும்' மனிதாபிமானம் இப்பவும் தோற்கவில்லையென்பதை வெளிப்படுத்துகிறது. பெண்ணியப் படிமமும் உண்டு. எமது கலாசாரச் சீரழிவுகளைக் கார்த்திகாயினியின் கதைகள் காட்டுகின்றன.

ஆணாதிக்கத்தை பெண் எதிர்ப்பதைச் சமூகம் அங்கீகரிக்க வேண்டும். கற்புத் தொடர்பான கதைகள் உத்வேகமாக எழுதப்பட்டன. கருத்து நிலைகளை யதார்த்தமெனப் பெண்கள் பலவீனப்படுத்த வேண்டியதில்லை. படைப்பு மொழி நன்று. நூலமைப்பு முறை 1960 களுக்குரியது. இதில் மாற்றம் வேண்டும்.

'தாய்மடி தேடி...' நூலாசிரியை கார்த்திகாயினி சுபேஸ் நன்றியுரை கூறினார். பிரபல எழுத்தாளரும் திறனாய்வாளரும் மீரா பதிப்பக நிறுவுநருமான தென்புலோலியூர் ஆ.இரத்தினவேலோன் நிகழ்வுகளைத் தொகுத்து அறிவிப்புகளைச் செய்தார். அவரது அறிவிப்புகளூடாகக் கேட்டவை பின்வருமாறு:

'புதிய பயணம்' என்ற நூலோடு 1996 வைகாசியில் மீரா பதிப்பகத்தைத் தொடக்கினோம். 'தாய்மடி தேடி..' எமது 91 ஆவது வெளியீடு. சிறுகதை, நாவல், நாட்டார் பாடல், சீர்மியம், வைத்தியம் இப்படிப் பல்துறை சார்ந்த நூல்களை நிறையவே வெளியிட்டுள்ளோம்.

பத்துக்கும் மேற்பட்ட எமது நூல்கள் விருதுகளைப் பெற்றிருக்கின்றன. கார்த்திகாயினி சுபேஸ் 'விபவி' என்ற சிற்றேட்டில் இலக்கிய எழுத்துப் பணியைத் தொடங்கினார். அக்கால கட்டத்தில் பிரபல சிறுகதை எழுத்தாளர் நீர்வை பொன்னையன் விபவியில் பணிப்பாளராக இருந்தார். இலக்கிய எழுத்தின் அரிச்சுவடியைக் கார்த்திகாயினி அவரிடம்தான் கற்றுக் கொண்டார். 'ஞானம்' சஞ்சிகையில் தவழ்ந்தார். இச்சிறுகதைத் தொகுதியிலுள்ள இரு சிறுகதைகள் 'ஞானம்' நடத்திய சிறுகதைப் போட்டிகளில் முதல் பரிசைப் பெற்றவை.