தனிச்சுவை தரும் தனிப்பாடல்கள் 1

கவிஞர் மா.உலகநாதன்., எம்.ஏ


முன்னுரை :
ங்க இலக்கியங்களெல்லாம் பெரும்பாலும் தனிப்பாடல்களே! சங்க இலக்கியங்களைப் படிக்கும்போது அது உண்மையே என்பர். இலக்கிய ஆர்வலர்கள் தனிப்பாடல்கள் இயற்றிய கவிஞர்களின் விருப்பு வெறுப்புகளைத் தாங்கியே அவர்தம் பாடல்கள் அமைந்தன. கவிஞர்களின் உள்ளப் போக்கை அறிந்து கொள்வது எவ்வளவு சுவையானது: அதில் தான் எத்தனை எத்தனைச் சுவைகள்! அவலம், பெருமிதம், இகழ்ச்சி, புகழ்ச்சி, வசை, ஓசை விளையாட்டு, சொல்விளையாட்டு, விடுகவி ஆகியன நம்மை மெய்மறக்கச் செய்வதோடு, கவிஞர்களின் ஆற்றலை எண்ணியெண்ணி வியக்கவும் வைக்கின்றன.

நூற்றுக்கும் மேற்பட்ட அத்தகைய கவிஞர்களின் பாடல்களின் சுவையை, அதுவும் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற வகையில் இக்கட்டுரை ஆய்வு செய்கிறது.

அத்தனை புலவர்களையும், அவர்தம் பாக்களில் அமைந்துள்ள ஒலி, ஓசை, சொற் சிலம்பம், ஆகியனவற்றை தொடர்ந்து எழுதுகிறேன். ஆதுவும், உங்கள் பின்னூட்டங்கள் தரும் ஊக்கத்தைப் பொறுத்தது.

இதோ, தனிப்பாடல் சுவையின் முதல் பகுதி.

தனிப்பாடல்களில், பாடுபொருளாக அமைந்திருப்பன, தமிழ்ப்புலவர்களுடைய வறுமை, பொருள் பெற்ற விடத்தில் மகிழ்ச்சி, பொருள்தராத செல்வந்தர் மீது கோபம், தகுதியில்லாதோரைப் பாடி மாட்டிக் கொள்ளுதல், பயணவழிக் கோயில்களில் பெருமை, வஞ்சப் புகழ்ச்சி, எள்ளல், சொல் விளையாட்டு, புராணம், வரலாறு இவற்றை வெளிப்படுத்தும் நகைச்சுவை உணர்வுஅகியவையேயாகும்.

வாழ்க்கையை வறுமை வாட்டியபோதும் உணவும் உடையும் இருப்பிடமும் நிலையாகக் கிடைக்காதபோதும், இவர்களின் தமிழறிவும் துணிவும் பாடல்களாய்ப் பரிணமித்திருக்கின்றன.

இராமச்சந்திரக் கவிராயர் :

கல்லாத வொருவனைநான் கற்றா யென்றேன்
     காடெறியு மறவனைநா டாள்வா யென்றேன்
பொல்லாத வொருவனைநா னல்லா யென்றேன்.
     போர்முகத்தை யறியானைப்புலியே றென்றேன்
மல்லாரும் புயனென்றேன் சூம்பற் றோளை
     வழங்காத கையனை நான் வள்ள லென்றேன்
இல்லாது சொன்னேனுக கில்லை யென்றான்
     யானுமென்தன் குற்றத்தா லேகின்றேனே!


நான் கல்லாத ஒரு செல்வனை நோக்கி கற்றவனே என்றேன், காட்டினை வெட்டும் குலத்தில் தோன்றிய செல்வனை நாட்டை ஆள்பவனே என்றேன், தீயகுணம் பெற்றவனை, நல்லவனே என்றேன், போர்க்களத்தை அறியாத ஒருவனை! நீ போர் செய்வதில் புலி போன்றவன் என்றேன்: மெலிந்த தோள்களையுடையவனை: மற்போருக்கு ஏற்ற தோள்களையுடையவனே என்றேன், பிறருக்கு சிறிதும் ஈயாதவனை வள்ளல் எனச் சொன்னேன். இவ்வாறு பொய்யாக இல்லாதை உரைத்தற்காக எனக்குக் கொடுக்கத் தன்னிடம் பொருள் ஏதும் இல்லையென்றான். நானும் என் குற்றத்தை உணர்ந்து பொருள் பெறாமல் செல்கிறேன்!

இதோ இன்னொரு புலவர் எக்கச்சக்கமாய் மாட்டிக் கொண்ட ஒரு செய்தியைப் பார்க்கலாம். இவர் கல்லாத ஒரு அரசன் மேல் பொய்ப்புகழ் பாடி பொல்லாப்பு தேடிக் கொண்டார்.

சீருலா விய காமதேனுவே! தாருவே
     சிந்தா மணிக்கு நிகரே
செப்புவசனத்து அரிச் சந்திரனே!

            என்று புகழ்ந்து பாட,
அரசன் உடனே கோபம் கொண்டு,

ஆரை நீ மாடுகல் மரம் என்றுரைத்தனை?
     அலால் அரிச்சந்திரன் என்றே
அடாதசொற் கூறினை? யார்க்கடிமை யாயினேன்?
     யார்கையில் பெண்டு விற்றேன்?
தீருமோ இந்த வசை?


என்று புலவரை ஒரு பிடி பிடித்து விட்டானாம்.

காளமேகப் புலவர் :

முக்காலுக் கேகாமுன் முன்னரையி;ல் வீழாமுன்
அக்கா லரைக்கால் கண்டஞ்சா முன் - விக்கி
இருமா முன் மாகாணிக் கேகாமுன் கச்சி
ஒருமா வின் கீழரையின் றோது.


காஞ்சிபுரத்தில் மாமரத்தின் அடியில் வீற்றிருக்கும் சிவபெருமானை வேண்டிப் பாடும்போது, ஒரே பாடலில் எண்ணும் எழுத்தும் அமையுமாறு பாடினார் காளமேகப் புலவர்.

வயோதிககாலத்தில், மூன்றாவது காலாகக் கம்பை ஊன்றிக்கொள்ளும் முன்பாக, தலையில் நரை ஏற்படும் முன்னர் காலதூதரைக் கண்டு அஞ்சுவதற்கு முன், நோயால் துன்புற்று, விக்கி, இருமி, வாடி மயானக்கரைக்குச் செல்லும் முன்பாக, காஞ்சிபுரத்தில் மாமரத்தினடியில் அருள்பாலிக்கும் சிவபெருமானை வணங்குவோமாக! என்கிறார்.

3/4 1/2, 1/4, 1/8, 1/16 மாகாணி என எண்ணிலக்க அளவுகள் ஒருமா, இருமா நிலஅளவும் சொல்லியுள்ளார். இவற்றையெல்லாம் நாமும், நமது வழித்தோன்றல்களும் மறந்தே போனோம்.

பலபட்டடைச் சொக்கநாதப்புலவர் :

பாடும் தமிழுக்குச் சிவந்தெழுந்தான் மல்லைப் பல்லவர்கோன்
காடும் செடியும் திரியா திரட்டைக் கடுக்கன் செய்து
போடும்பொழுதென்ன பூட்டகமோ? அற்பப்புல் லரைக்கொண்டு
ஆடும் பொழுதிரு கன்னத்திலே நின்ற டிக்கின்றதே!


சிவந்தான் என்ற பல்லவ மன்னன் காடுகளிலும் சோலைகளிலும் நான் சென்று அலையாமல், நான் பாடிய தமிழககவிக்குப் பரிசாக, இணையான கடுக்கன்கள் செய்து என் செவிகளில் அணிவித்தான்: அப்போது, என்ன நுட்பமான வேலைப்பாட்டை அந்தக் கடுக்கனில் அமைத்தானோ அறியேன்: நான் கீழான புல்லரைப் பாடும்போது அது காதுகளின் இரண்டு பக்கங்களிலும் இருந்தபடி அற்பனைப் பாடாதே பாடாதே என்று தாக்குகின்றது.

கம்பர் :
தோட்டக்காரனின் இயல்பாகக் கூறியது

இருந்தவளை போனவளை என்னை அவளைப்
பொருந்தவளை பறித்துப் போனான்: - பெருந்தவளை
பூத்தத்தத் தேன் சொரியும் பொன்னிவள நன்னாட்டில்
மாத்தத்தன் வீதியினில் வந்து.


பெரிய தவளைகள் தாமரை மீது தாவ, அதனால் மலர் மலர்ந்து தேனைச் சிந்தும் காவிரி பாயும் வளமுடைய நாட்டில் மாதத்தன் என்பவன் தெருவில் சென்று, அவ்விடத்தில் இருந்தவள், சென்றவள், யான், என்பக்கத்தில் இருந்தவள் ஆகிய அனைவரின் வளைகளும் கழலுமாறு செய்து அவற்றைக் கொண்டு சென்றான்.
இதைப் படித்ததால் தானோ? என்னவோ? கவியரசர் கண்ணதாசன் புதிய பூமி திரைப்பாடலில் இப்படி எழுதினார்.

சின்னவளை முகம் சிவந்தவளை - நான்
சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு
என்னவளைக் காதல் சொன்னவளை - நான்
ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு.


இப்பாடல் முழவதும் வளை, வளை என்றெழுதி, நம்மை அப்படியே இலக்கியத்திற்குள் வளைத்துப்போட்டு விட்டாரே!


(தொடரும்..............)
 worldnath_131149@yahoo.co.in