நகைச்சுவை நாடக உலகில் தந்தை ஜோர்ஜ் பெர்னாட் ஷா

தருமலிங்கம் சௌதாயினி


புகழ் பெற்ற நகைச்சுவை நாடகங்களை அரங்கேற்றியவர் ஜோர்ஜ் பெர்னாட் ஷா. ஆங்கில மொழியில் சிறந்த நகைச்சுவை நாடகங்களை மேற்குலநாட்டு ரசிகர்களுக்கு எழுதி அரங்கேற்றிய பெருமை அயர்லாந்துக்காரரான ஜோர்ஜ் பெர்னாட் ஷாவையே சாரும்.

இவர் டப்பிளின் நகரில்
1856 இல் பிறந்தார். தந்தையார் ஜோர்ஜ் கார்ஷா சட்டமன்ற அதிகாரியாகப் பணியாற்றி சுயவிருப்பில் ஓய்வு பெற்றவர்.

பெர்னாட்ஷாவின் அன்னை ஒரு நிலச்சுவாந்தரின் மகள். ஷாவுக்கு இரு சகோதரிகளும் உள்ளனர்.

தன் கணவர் ஒரு குடிகாரர் என்பதும் தன்னையும் தன் மூன்று மக்களையும் காப்பாற்றக் கூடிய வருவாயை சம்பாதிக்க வகையில்லாதவர் என்பதும் அந்த அம்மையாருக்கு விளங்கியது. பெர்னாட்ஷாவுக்கு பதினாறு வயதாக இருக்கும் போது அவரது அன்னை பிள்ளைகளுடன் டப்பிளினைவிட்டு லண்டன் சென்று நிரந்தரமாக வசிக்கத் தொடங்கினார்.

அவருக்கு நன்றாகப் பாடக் கூடிய குரல் இருந்தது. இசைக் கலை மூலம் அந்த அம்மையார் வாழ்க்கையை நடத்தி வந்தார். சிறுவன் ஷா இசையைத் தன் தாயிடம் கற்றுக்கொள்ள முடிந்தது. இது ஷாவுக்கு பிற்காலத்தில் பெரிதும் உதவியது. தாயின் மூலம் பெற்ற இசையறிவு லண்டனில் தி ஸ்டார் என்ற பத்திரிகையில் சங்கீத விமர்சகராகப் பணியாற்ற உதவியது.

அத்துடன் வார இதழ் ஒன்றில் நாடகங்கள் பற்றியும் விமர்சனங்கள் எழுதி வந்தார். அவர் எழுதிய விமர்சனங்கள் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகும் கூட, போற்றத்தக்க சிறந்த விமர்சனங்களாக அமைந்தன. ஷா பின்னர் தானே நாடகங்களை எழுதத் தலைப்பட்டார். இசையாளரின் உணர்ச்சி அவருக்கு இருந்ததால் தன்னுடைய வசனத்தை கவிதை வரியில் பேசுவதற்குச் சுலபமாகவும் கேட்பவர்களுக்கு இன்பம் அளிக்குமாறும் அமைத்து எழுதினார்.

இக்காரணத்தினால் தான் எவ்வளவு நீண்ட உரையாடல்களும் வெறுப்புத்தட்டாமல் கேட்பவர்களுடைய கவனத்தை ஈர்த்தன என்றும் கூறலாம்.

லண்டனில் வசித்த பொழுது ஷாவுக்கு எழுத்தையே நம்பிப்பிழைப்பது கஷ்டமாக இருந்தது. பத்தாண்டு காலம் அவருடைய அன்னையின் வருமானத்தில் பிழைக்க நேர்ந்தது.

இக்காலத்தில் ஷா தன்னுடைய வாழ்க்கையின் அத்திவாரத்தை அமைத்துக் கொண்டார் என்று கூறினாலும் மிகையாகாது. அரசியல் கட்சிகளில் சேர்ந்தும் கூட்டங்களில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் பேசியும் வந்தார். அந்தச் சந்தர்ப்பங்களில் லண்டன் மாநகரில் அமெரிக்கப் பொருளாதார நிபுணர் ஹென்றிஜோர்ஜ் பேசிய கூட்டத்திற்குச் சென்றிருந்தார்.

அவருடைய பேச்சு ஷாவை பொதுவுடைமைவாதியாக மாற்றியது. உடனடியாகப் பொதுவுடமைப் புரட்சியை முன்னெடுக்காவிட்டாலும் படிப்படியாக முதலாளித்துவத்தைப் போக்கத் தீர்மானித்தார். கார்ல்மாக்ஸின் காஸ்காபிடல் என்ற நூலை பிரேஞ்சு மொழியில் படித்தார்.

முதலாளிகளின் ஆதிக்கம் பெற்ற நாகரிகத்தின் மேலுள்ள அவருடைய வெறுப்பு இன்னும் அதிகரித்தது. இக்கால கூட்டத்தில் இந்திய மக்களின் விடுதலை வேட்கையையும் பிரிட்டிஷ் மக்களுக்கு எடுத்துகூறி பாரதத்தின் சுதந்திரத்துக்கு ஆதரவளித்த அன்னிபெஸண்ட் அம்மையாரை ஷா சந்தித்தார். ஷாவின் விசிறியாக விளங்கிய இந்த அம்மையார் ஷாவை பேபியன் கழகத்தில் உறுப்பினராகச் சேர்த்தார்.

அரசியல், சமூக, கலை, இலக்கியம் இப்படி எல்லாத்துறைகளிலும் தனது பேனாவை ஓட்டிய மேதை. பாதி அறிஞர் எனவும் பாதி கோமாளி எனவும் வீண் பெருமைக்குப் பேர் போனவர் எனவும் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் ஆளாகி, ஜி.பி.எஸ். என்ற மூன்று எழுத்துக்களால் உலகம் முழுவதும் அறியப்பட்ட விந்தை மனிதர்தான் ஜோர்ஜ் பெர்னாட் ஷா. இவரே நகைச்சுவை நாடக உலகின் தந்தை என்று பலராலும் அழைக்கப்படுகின்றார்.

வேடிக்கையாகவும் வினையாகவும் பளிச்சென்று பதிலளிப்பதில் பெர்னாட் ஷhவை எவராலும் மிஞ்ச முடியாது. நகைச்சுவைக் களஞ்சியம் என்று புகழப்படுபவர் இவர். இவர் தெரிவித்த கருத்துக்களை தொடக்கத்தில் காது கொடுத்துக் கேட்பார் யாருமில்லை என்றாலும் இவரது வயோதிபத்தில் இவரது ஒவ்வொரு சொல்லுக்கும் உலகம் காத்து நின்றது.

இவர் தனது முதுமையிலும் தொடர்ந்து நாடகங்களை எழுதி வந்தார். அந்நேரம் ஷாவிற்கு நோபல் பரிசாக எண்ணாயிரம் பவுண் கிடைத்தது. கிடைத்த தொகையை உடனடியாகவே கலை இலக்கிய வளர்ச்சிக்கு வழங்கினார். நாடக அரங்கம் இவருக்கு ஒரு தேவாலயமாக, ஒரு கல்வி நிலையமாகத் திகழ்ந்தது.

ஷா எழுதிய நாடகங்களிலொன்று மனைவி இழந்த இல்லங்கள். அந்த நாடகத்தில் லண்டன் சேரிகளில் காணும் கொடுமைகளையும் பணக்காரர்கள் ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சுகின்ற கொடுமைகளையும் விளக்கி இருந்தார்.
1904 ஆம் ஆண்டு லண்டன் கோர்ட் திரையரங்கில் நடைபெற்ற அவருடைய நாடகம் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது. ஜோன் புல்லின் மற்றுமொரு தீவு என்ற அயர்லாந்து அரசியல் பற்றிய நகைச்சுவை நாடகம் பிரசித்தி பெற்றது. 1905 இல் மனிதனும் மேம்பட்ட மனிதனும் என்ற நாடகம் லண்டன் கோர்ட் திரையரங்கில் நடைபெற்றது.

மனித சமுதாயத்தை நாடக அரங்கின் மூலம் திருத்த முடியும் என்று உணர்ந்த ஷா பல உன்னதமான நாடகங்களை எழுதினார். சட்டத்தின் மூலம் திருத்த முடியாத மனநிலையை நாடகத்தினால் திருத்த முடியும் என்பது அவருடைய திடமான நம்பிக்கை.

கலை கலைக்காக மட்டும் என்று முழக்கமிடுவதில் பயனில்லை. கலையிலேயே நல்ல புரட்சி தேவை. புரட்சியால் மனித அறிவு மலர்ச்சியடைந்து முன்னேற்றம் காண முடியும். போலித்தன்மையையும் வெளி வேஷத்தையும் ஒழிக்க நாடகம் உதவவேண்டும் என்று விரும்பினார். உலக மகாகவி வில்லியம் ஷேக்ஸ்பியருக்கு அடுத்தபடியாக அவரைக் கருதினாலும் ஷhவின் கருத்துக்களை ஏற்க முடியாதவர்களால் அவர் வெறுக்கப்பட்டார். இவர்
1923 இல் எழுதிய செயின்ட்ஜோன் நாடகம் ஷாவின் புகழை உச்ச நிலைக்குக் கொண்டு சென்றது.

பெர்னாட் ஷh சிறியதும் நீண்டதுமாக ஐம்பது நாடகங்களை எழுதினார். இதைத்தவிர அறிவுள்ள நங்கைக்குப் பொதுவுடைமையான வழி போன்ற கட்டுரைகளையும் எழுதினார்.
1950 ஆம் ஆண்டு தனது 95 ஆவது வயதில் அவர் காலமானார்.

பெர்னாட் ஷா உலகை விட்டுப் பிரிந்தாலும் அவரது நகைச்சுவை நிரம்பிய நாடகங்கள் ரசிகர்கள் மத்தியில் என்றும் நிலைத்து நிற்கும் என்பது கண்கூடு.