கொடுக்குங்கால் முகம் வேறாகுதல்.....

ப. இரமேஷ், (பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளர்)

ங்க இலக்கியங்கள் மனிதனின் அக, புற வாழ்வியலை எடுத்தியம்புகின்ற என்பதற்குச் சான்றாக கலித்தொகையில் இடம் பெறும் பாடல் ஒன்று விளங்குகின்றது.  வாழ்க்கையின் உண்மைகளை அழகாக நேரடியாக எடுத்துக் கூறாமல், உவமைகள் வாயிலாக வெளிப்படுத்தியிருப்பது கலித்தொகையின் சிறப்புக்குக் காரணமாக அமைகின்றன.  பாலைக் கலியில்

உண்கடன் வழிமொழிந் திரக்குங்கால் முகனுந்தாங்
கொண்டது கொடுக்குங்கால் முகனும் வேறாகுதல்
பண்டுமிவ் வுலகத்தியற்கை; அஃதின்றும்
புதுவதன்றே
”                (பாலைக் கலி-21)

தோழி தலைவனுக்கு கூறுவது போல் அமைந்துள்ள இந்தப் பாட்டில், தலைவன் தலைவிபால் பெற்ற இன்பத்தையெல்லாம் மறந்து பொருள் வயிற்பிரிந்து செல்ல நினைக்கின்றான்.  உடனே தோழி பசியுடையார் அஃதில்லாரிடத்துச் தாழ்வு சொல்லி இரந்து நின்று, உணவு கடன் பெற்றுத் தம்பசிதீர்வதுப் போல, முன்னர் வேட்கையையுடைய நீ, வேட்கை பிறக்கின்ற பருவத்தளாய தலைவியிடம் வந்து தாழ்வு சொல்லி இரந்து நின்று அவளது நலத்தினை நுகர்ந்து உனது வேட்கையைத் தீர்த்துக் கொண்டாய்.  கடன் வாங்கினவர் அக்கடனைத் திருப்பிக் கொடுக்கும்போது முகஞ்சுழித்து நிற்பது போன்று, வேட்கை பிறந்த பருவத்தளாய விடத்து உன்னிடம் வந்து இரக்கும் போது நீ சிறிதும் இரங்கவில்லையே என்று கூறி உலகியலைத் தலைவனுக்குப் புலப்படுத்துகின்றாள், தலைவியை விட்டு தலைவன் பிரிந்து செல்தலை தடுக்கும் நோக்கில் இப்பாடல் அமைந்தாலும் வாழ்வியல் உண்மைகளை நயமுடன் எடுத்துரைப்பதைக் காணமுடிகிறது.

இன்றைக்கு பெரும்பாலும் ஒவ்வொரு மனிதனும் எதிர்கொள்கிற பிரச்சனை கடன்’, இதை வாங்கும்போது எவ்வளவு பணிவோடு நைந்து பேசி வாங்குகிறமோ அந்தப்போக்கு பெரும்பாலானவர்களுக்கு கடனைத் திருப்பிக் கொடுக்கும் பொழுது இல்லாமல் போய்விடுகிறது.  கடன் கொடுத்தவன் பாடு திண்டாட்டம் கடன் வாங்கியவன் பாடு கொண்டாட்டம் என்றுச் சொல்வார்கள் அது உண்மைதான் ஏனென்றால், கடனை கொடுத்து விட்டு அதை வாங்க அலைகின்ற அலைச்சலும் படும் வேதனைகளும் சொல்லி மாளாதது.  இதை விட கடன் வாங்கியவன் மிரட்டலும் திட்டும் வேறு மனதை புண்ணாக்கி விடுகின்றன.  இத்தகைய நிலைப்பாட்டை முன்னரே கலித்தொகையில் குறிப்பிட்டுக் காட்டும் பாங்கு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.  என்றாலும் இந்நிலை அக்காலத்தலும் இருந்துள்ளதை நமக்கு வெளிச்சம்போட்டு காட்டிவிடுகிறது.  வாழ்க்கையின் உண்மைகளை இலைமறை காயென என வெளிப்படுத்தியுள்ள விதத்தைப் பார்க்கும் பொழுது மெய்ப்பொருளையும் இன்பத்தையும் குழைத்துத் தருவதில் வல்லவர்கள் சங்ககாலப்புலவர்கள் என்பது தெளிவாகிறது.


rkavithaxeroxspkoil@gmail.com