தனிச்சுவை தரும் தனிப்பாடல்கள் 2

கவிஞர் மா.உலகநாதன்., எம்.ஏ


அந்தகக்கவி வீரராகவர்

விளங்கு தொண்டைப்
பாலார் பதியர் அறத்தொடும் சீரும் படைத்தவரே


என்று பாராட்டுமாறு சான்றோர் பலர் தோன்றிய தொண்டை வள நாட்டில் பூதூர் என்னும் சீறூரிலே பிறந்தவர் அந்தகக்கவி வீரராகவர்.
புலவர் பிறவியிலேயே புறக்கண்களை இழந்தவராதலால் அந்தகக்கவி என்று அழைக்கப்பட்டார். கட்புலனில்லையெனினும் கவிபாடும் ஆற்றல் மிகுதியும் பெற்றவர் காஞ்சி மாநகரிலே தமிழறிஞர் ஒருவரிடம் இலக்கண. இலக்கிய நூல்களை ஏடு படிப்பவர்; படிக்க. ஆசிரியர் உரை கூற கேள்வியாலுணர்ந்து. தம் நெஞ்சமே ஏடாக. எழுதாமல் எழுதிப் படித்துத் தேர்ச்சி பெற்றார். கவிபாடும் திறன் கைவரப் பெற்றார். இச்செயலை.

கண்ணன் சயந்தன் கவிவீர ராகவன் கச்சியிலே
தன்னெஞ்சம் ஏடெனக் கற்றான் கனமுத் தமிழையுமே


என்று பாராட்டியுள்ளனர்.

கொம்பை வெட்டிக் காலை நடு :

வீரராகவர். அக்காலத்தில் வாழ்ந்த சந்திர வாணன் என்னும் வள்ளல்மீது ஒரு கோவை யை இயற்றிப் பலர் கூடிய பேரவையில் அதை அரங்கேற்றினார். அப்போது, அக்கோவையில் வரும்,

மாலே நிகருறுஞ் சந்திர வாணன் வரையிடத்தே
பாலேரி பாய்ச்செந் தேன்மாரி பெய்யநற் பாகுகற்கண்
டாலே எருவிட முப்பழச் சேற்றின் அமுதவயல்
மேலே முளைத்த கரும்போ!


என்னும் பாட்டைப் படித்தபோது, அவையில் இருந்த புலமை மிக்க அம்மைச்சி என்பவள், புலவர்க்குக் கண்தான் கெட்டது, அறிவுங் கெட்டதோ! என்று கூறினாள். அதுகேட்ட அவள் கருத்தை யறிந்து, கையேடு படிப்பவனை நோக்கி, அந்தக் கொம்பை வெட்டிக் காலை நடு என்று கூறினார். மாணவன் முப்பழச் சேற்றின் என்பதை முப்பழச் சாற்றின் என்று மாற்றிப் படித்தான். அம்மைச்சி புலவரின் கூர்த்த மதியை அறிந்து வியந்தாள்;.
அவையிலிருந்த மற்றவர்க்கு இது விளங்கவில்லை. அவர்களை நோக்கிப் புலவர் கரும்பு சேற்றில் விளைவதன்று. ஆதலால், சேற்றில் என்பதில் உள்ள கொம்புச் சுழியை நீக்கிச் ச என்னும் எழுத்திற்குக் கால் இட்டு, சாற்றின் என்று படிக்கச் சொன்னேன் என்று விளக்கம் கூறினார். அனைவரும் வியந்தனர்.

பொய்யாமொழிப் புலவர் :

இவரும் தொண்டை நாட்டைச் சேர்ந்தவர். செங்காட்டுக் கோட்டத்தைச் சேர்ந்த துறையூரில் பொய்யாமொழி தோன்றினார். குருகுலக் கல்வி பயின்ற போது, ஒரு நாள், ஆசிரியரது கம்பிக் கொல்லையில் காவல் காத்துக் கொண்டிருக்கையில், ஒரு மரத்தடியில் படுத்து உறங்கி விட்டார். விழித்து எழுந்தபோது, அவ்வூர்த் தலைவனாகிய காளிங்கராயனது குதிரை கம்பங்கொல்லையில் மேய்வதைக் கண்டார். ஓடிச் சென்று அக்குதிரையைத் துரத்தினர். குதிரை அஞ்சி ஓடாமல் மேய்ந்து கொண்டே இருந்தது. கோபம் கொண்ட புலவர்

வாய்த்த வயிரபுரி மாகாலி அம்மையே
காய்த்த புனத்தினில் காலை வைத்துச் - சாய்த்துக்
கதிரைமா ளத்தின்ற காளிங்க னேறும்
குதிரைமா ளக்கொண்டு போ! என்பது பாட, உடனே, அக்குதிரை


இறந்து போனது, அதையறிந்த ஆசிரியர், ஊர்த்தலைவனான காளிங்கனின் குதிரை இறந்ததைக் கண்டு அஞ்சி நடுங்கினார். அது கண்ட புலவர் ஈற்றடியை மாற்றி குதிரை மீளக்கொண்டு வா என்று பாடிவுடன், குதிரை உயிர்பெற்றது இதைக் கண்ட அவரது ஆசிரியர், அவரைப் பொய்யா மொழிப்புலவர் என்றே அழைத்தார்.

படிக்காசுத் தம்பிரான் :

வள்ளல் சீதக்காதியின் கொடைத்திறனைப் பாடிய,
இவர்,
காய்ந்து சிவந்தது சூரிய
காந்தி: கல்வியிலே
தோய்ந்து சிவந்தது மின்னார்
நெடுங்கண்;கள் தொல்பல நூல்
ஆய்ந்து சிவந்தது பாவாணர்
நெஞ்சம் : அனுதினமும்
ஈந்து சிவந்தது மால்சீதக்
காதி இருகரமே!


சூரிய காந்தி என்னும் மலர் வெய்யிலில் காய்ந்து சிவந்த நிறத்தை அடைந்தது பெண்களின் நீண்ட கண்கள் தம் காதலருடன் சேர்ந்து இன்பம் அனுபவித்ததால் சிவந்து போயின. கவிஞர்களின் உள்ளங்கள் பழைமையுடைய நூல்களை ஆராய்ந்து கற்றதால் செம்மை அடைந்தன. சீதக்காதியின் இரு கைகளும் வந்து இறந்தவர்க்குக் கொடுத்துக் கொடுத்துச் சிவந்தன.

சொக்கநாதப் புலவர் :

பெண்ணே! நான் வெளியூர்க்குச் செல்ல வேண்டியுள்ளது, என்று சொன்ன அளவிலே, தலைவியின் உடலில் பசலை நிறம் பாய்ந்தது. அவன் கையிலுள்ள பாதி வளையல்கள்;, உடல் மெலிந்ததால் கழன்றன. அதைப் பார்த்த நான் பயணம் செல்லவில்லை என்றேன். அதனைக் கேட்டுச் அவன் பூரித்துப் போனான். எனவே, எஞ்சிய பாதி வளையிலும் உடைந்து கழலும் நிலையில் உள்ளன.

நங்கை பயண நமக்கென்று உரைத்தளவில்
அங்கம் பசலைநிற மானதே - செங்கை
வளைநெகிழப் பாதி மறுத்தேன் என்றோத
உளநெகிழப் பாதி யுடைந்து.

                                                                                                                           (தொடரும்..............)

 worldnath_131149@yahoo.co.in