விமர்சன மாமலை பேராசிரியர் கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி

கலாநிதி நாகராஜ ஐயர் சுப்பிரமணியன்

பேராசிரியர் சிவத்தம்பியவர்கள் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் 'பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம்' என்ற தலைப்பில் ஆய்வநிகழ்த்தி டாக்கர் பட்டம் பெற்றவர். ஈழத்தில் வித்தியோதயா பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். ஈழத்தின் கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் தமிழகத்தின் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் , சென்னைப் பல்கலைக்கழகம் சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றிலும் வருகைதரு சிறப்புநிலைப் பேராசிரியராகப் பணியாற்றியவர். தமிழ்நாட்டிலும் அனைத்துலகமட்டத்திலும் பல்வேறு பல்கலைக்கழகங்களின் தமிழியல் ஆய்வரங்குகளில் பங்குகொண்டு சிறப்பித்தவர் . பல நூல்களின் ஆசிரியர். கடந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற செம்மொழித்தமிழ் ஆய்வு மாநாட்டின் ஆய்வரங்கக்குழுவின் தலைமைப் பொறுப்பேற்று ஆய்வுகளை வழிநடத்தியவர்.

இவை அவரைப்பற்றிய பொதுநிலை அறிமுகக் குறிப்புகளாகும்.இவற்றுக்கு மேலாக இங்கே குறிப்பிடப்படவேண்டிய முக்கிய அம்சம், 'அவர் சமகாலத் தமிழ் ஆய்வியல் மற்றும் திறனாய்வியல் என்பவற்றின் 'திசையறிகருவி' யாகவும் 'விமர்சன மாமலை'யாகவும் திகழ்ந்தவர்' என்பதாகும். தமிழ்த்திறனாய்வுலகின் ஒரு சகாப்தம் அவர்.

அவர் நம்மை விட்டுப் பிரிந்த இச்சந்தர்ப்பத்தில் அவரைப்பற்றிய எனது மனப்பதிவுகளை உணர்த்தும் வகையில் சில குறிப்புகள் இங்கு முன்வைக்கப்படுகின்றன.

பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் தொடர்பான எனது பார்வையையும் கணிப்புகள் சிலவற்றையும்;; பதிவு செய்யும் வாய்ப்பு பதினாறு ஆண்டுகளின் முன்னரேயே
(1995இல்) எனக்குக் கிட்டியது. எனது 'தமிழக அநுபவங்கள்' பற்றி மல்லிகையில் எழுதுமாறு நண்பர் டொமினிக்ஜீவா அப்போது கேட்டிருந்தார்.. (நான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த அக்காலப்பகுதியில் அடிக்கடி தமிழகம் சென்றுமீள்வதை வழக்கமாகக்கொண்டிருந்தேன்.) அவரது கேள்விப்படி நான் மல்லிகை (1995 ஏப்ரல்--அக்டோபர்) இதழ்களில் பதிவுசெய்த அநுபவங்களில் கணிசமான பகுதி பேராசிரியர் சிவத்தம்பி அவர்களைப் பற்றியதான கணிப்பாகவே அமைந்தது என்பது இங்கு குறிப்பிடப்படவேண்டியதாகும்.

தமிழக ஆய்வியற்;சூழல்களில் எனக்குக் கிடைத்த வரவேற்புகள் மற்றும் வாய்ப்புகள் என்பவற்றுக்கான பின்புலங்கள் மற்றும் காரணிகள் என்பன பற்றி எடுத்துரைக்க முற்பட்ட போது பேராசிரியர் கா.சிவத்தம்பி மற்றும் அவருடன் இணைந்து செயற்பட்டுநின்ற காலஞ்சென்ற பேராசிரியர் க.கைலாசபதி; ஆகியோர் பற்றிக் குறிப்பிடவேண்டிய தேவை ஏற்பட்டது. அச்சந்தர்ப்பத்தில் சிவத்தம்பியவர்களைப்பற்றி – அவருக்குத் தமிழக ஆய்வுலகம் தந்திருந்த கணிப்பையும் கௌரவத்தையும்பற்றி – விரிவாகப் பதிவுசெய்துள்ளேன். அப்பதிவுகளில் நான் புலப்படுத்திய உணர்வுநிலைகளை இங்கு நினைவில் மீட்பதும் அவற்றை ஒட்டி மேலும் சில எண்ணங்களைப்பதிவுசெய்வதும் இச்சந்தர்ப்பத்தில் பொருத்தமான அஞ்சலியாக இருக்கும் எனக் கருதுகிறேன்.
எனது மேற்படி பதிவுகளில் நான் புலப்படுத்திநின்ற உணர்வுநிலைகள் இருவகையின. அவற்றுள் முதலாவது, பேராசிரியரவர்கள் தமிழகச்சூழலில் பெற்றிருந்த அறிமுகம் மற்றும் அம்மண்ணின் தமிழ்க் கல்வியாளர் மத்தியில் அவருக்கிருந்த பெருமதிப்பு என்பனகுறித்து எனக்கு ஏற்பட்ட 'வியப்புணர்வு' ஆகும். மற்றது, பேராசிரியரவர்களின் பன்முக ஆளுமையை நமது சூழல் -அதாவது ஈழத்தின் பல்கலைக்கழகச்; சூழல் - உரியவாறு பயன்படுத்திக் கொள்ளவில்லையே என்ற 'ஆதங்கம்' ஆகும்.

தமிழகச் சூழலில் தமிழ்க்கல்வியாளர்கள் பலரோடும் நான் தொடர்புகொள்ள முற்பட்ட அன்றைய சூழலில் அவர்களுட் பலரும் என்னிடம் எழுப்பிநின்ற முதலாவது வினா, 'பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் நலமா?' ஏன்பதேயாகும். மேற்படி கல்வியாளர் பலருக்கும் 'ஈழத்துத் தமிழ் இலக்கியச் சூழல்;' என்றவுடன் முதலில் நினைவுக்கு வருபவராக பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் திகழ்ந்தார்கள் என்பதை இவ்வினா உணர்த்திநிற்கின்றமை வெளிப்படை. இவ்வினாவிற்கு நான் அளிக்கும் விடைகளைத் தொடர்ந்து, 'ஈழத்துத் தமிழியல்' தொடர்பாக எனக்கும் அவர்களுக்குமிடையே நிகழும் உரையாடல்களே என்னை அக்கல்வியாளர் மத்தியில் அறிமுகம் செய்து வைக்கும் 'அடையாள அட்டை'களாக அமைந்தன.

என்னோடு பேராசிரியர் அவர்களைப்பற்றி உரையாடிய பலரும் அவரது ஆளுமை தொடர்பாக பெருவியப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள.; பேராசிரியரோடு பழகுவதற்கு தமக்குக்கிடைத்த வாய்ப்பபை மனநிறைவோடு நினைவு கூர்ந்தவர்கள் பலர். அவருடைய தொடர்பாலும் அவருடைய எழுத்துகளினூடாகவும் தாம் எய்திய பார்வை விரிவை வியந்துரைத்தவர்கள் பலர். அவர் மறுமுறை தமிழகம் வரும் பொழுது நேரில் சந்தித்து உரையாடப் பேராவலுடன் காத்திருந்தவர்கள் பலர். இவைபற்றியெல்லாம் மேற்படி கட்டுரைத்தொடரிலே சுட்டியிருந்தேன்.

இவ்வாறு பேராசிரியர் அவர்கள் தமிழகக் கல்விச்சூழலில் பெற்றிருந்த அறிமுகம் மற்றும் பெருமதிப்பு என்பவற்றுக்கான காரணிகளையும் மேற்படி தொடரிலே பதிவுசெய்திருந்தேன். இக்காரணிகளுள் முக்கியமானது தமிழியலின் பல்கலைக்கழக நிலையிலான உயராய்வுச் செயற்பாட்டை முற்றிலும் 'ஆய்வறிவுப்பாங்கானதாக'க் கட்டமைப்பதில் அவர் காட்டிநின்ற பேரீடுபாடு ஆகும்;. இந்த ஈடுபாட்டுக்கு அடிப்படையாக அமைந்தது அவருடைய 'முற்போக்கு'நிலைப்பட்ட சிந்தனைத்தெளிவாகும். மார்க்சியம் என்ற அறிவியல்சார் தத்துவத்தின் ஒளியில் சமூகத்தையும் அதன் வரலாற்றையும் தரிசிக்கும் முறைமையான இம் முற்போக்குப் பார்வையைப் பல்கலைக்கழக உயராய்வுச் சூழலில் அழுத்தமாகப் பதிவுசெய்தவர் இவர் என்பது இங்கு சுட்டப்படவேண்டிய முக்கிய அம்சமாகும். (இவ்வாறான செயற்பாட்டில் இவருடன் இணைநிலையில் இயங்கிநின்றவர் என்றவகையில் காலஞ்சென்ற பேராசிரியர் க.கைலாசபதியவர்கள் முக்கிய வரலாற்றுப் பாத்திரமாகத் திகழ்ந்தவராவார்;. இவரைப்பற்றி ஒரு தனி நூல் என்னால் முன்பே எழுதப்பட்டுளது.)

மரபுபேணும் உணர்வுகள் மற்றும் இயந்திரப்பாங்கான பகுத்தறிவுப்பார்வை என்பவற்றுக்கு இடையில், 'திசைவழி அறியாது திகைத்துநின்ற' தமிழ் ஆய்வுலகிற்கு ஓர் திசைகாட்டியாகவும் புத்தூக்கம் அளிக்கும்; செயற்பாடாகவும் அறிமுகமானதே மாக்சியச்சார்பான ஆய்வுப்பார்வையாகும். 1940-60களில் தமிழ் ஆய்வுலகிற்கு இப்பார்வை அறிமுகமானாலும் பல்கலைக்கழக மட்டத்தில் இதனை முன்னெடுக்கக் கூடிய வாய்ப்பு ஈழத்திற்கே கிட்டியது. பேராசிரியர்கள் க.கைலாசபதி மற்றும் க.சிவத்தம்பி ஆகிய இருவரும் மார்க்சிய சிந்தனைசார்ந்த இலக்கியவாதிகளாகத்திகழ்ந்ததோடு மட்டுமன்றி அதனைப் பல்கலைக்கழக உயர்ஆய்வு நிலையில் பயன்படுத்தும் வாய்ப்புடையவர்களாகவும் விளங்கினார்கள் என்பதே இதற்கான முக்கிய காரணமாகும். பல்கலைக்கழக மட்டத்தில் இவ்வகை ஆய்வுப்பார்வையை ஒருவர் முன்னெடுக்கும் வாய்ப்பைப் பெற்றால் பாடத்திட்ட அமைப்பினூடாக அதனை அவரால் வளர்த்துக்கொள்ள முடியும் என்பது வெளிப்படை.

தமிழகச்சூழலிலே
1940-60 காலப்பகுதியில் தோழர்கள் ப.ஜீவானந்தம், தொ.மு.சி.ரகுநாதன், நா.வானமாமலை, எஸ். இராமகிருஸ்ணன் முதலியோர் இவ்வாறான மார்க்சிய அறிவுசார் பார்வையை முன்னெடுத்தவர்கள் என்பது வரலாறு. ஆனால் இவர்கள் பல்கலைக்கழக உயர் ஆய்வுச் சூழல் சார்ந்தவர்கள் அல்லர் என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விடயமாகும். (இவர்களுள் வானமாமலை மட்டும் பின்னாளில் மதுரைப் பல்கலைக்கழகத்தோடு தொடர்புகொண்டு இயங்கும் வாய்ப்பைப்பெற்றவர் ஆவார்)

இவ்வாறான வரலாற்றுப்பின்புலத்தை நோக்கும் பொழுது தமிழகத்தின் தமிழியலாளர்பலரும் பேராசிரியர்கள் கைலாசபதி மற்றும் சிவத்தம்பி ஆகியோருடைய ஆய்வுச்சிந்தனைகளால் கவரப்பட்டதன் பின்புலம் தெளிவாகும். இதனை மேற்படி எனது கட்டுரைத்தொடரிலே விரிவாகப்பதிவு செய்துள்ளேன்.

பேராசிரியர் சிவத்தம்பியவர்கள் தமிழகத்தில் சிறப்பான கவனிப்பையும் கணிப்பையும் பெற்றமைக்குக் காரணமான மற்றொரு முக்கிய அம்சத்தையும் அக் கட்டுரையில் சுட்டியிருந்தேன். அந்த அம்சம் 1980களில் அவர் இருமுறை தமிழகப்பல்லைக்கழகங்களுக்குச் சிறப்புநிலை ஆய்வாளராகச் சென்று பணியாற்றியமையாகும். அவ்வாறான சூழ்நிலைகளை உரியவாறு பயன்படுத்திப் பல்கலைக்கழகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் இலக்கியவாதிகளுடனும் ஆய்வாளர்களுடனும் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டவர் அவர். அத்தொடர்புகள் இன்றுவரை தொடர்கின்றன. அடிக்கடி தமிழகம் செல்வதன் மூலம் அந்த மண்ணின் தமிழ் ஆய்வியலில் ஆழமான செல்வாக்கை அவர் செலுத்தி நிற்கிறார். அவரிடம் அணிந்துரைகள் பெறுவதற்கும் உயர் ஆய்வுகளுக்கு ஆலோசனை பெறுவதற்கும் பெருந்தொகையானவர்கள் சூழ்ந்து நிற்கும் காட்சி பலமுறை எனக்குக் கிட்டியது. பல்கலைக்கழக மேடைகளில் அவர் நிகழ்த்தும் பேருரைகளைக் கேட்பதற்குத் தமிழ்சார்ந்த பல்வேறு ஆய்வுத்துறைகளின் அறிஞர்களும் கூடுவர் என்பதும் குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

இவ்வாறு தமிழக ஆய்வுலகோடு அவர் கொண்டிருந்த தொடர்பு மற்றும் அங்கு அவர் பெற்றுள்ள வரவேற்பு என்பவற்றை சுட்டியுணர்த்தும் சான்றாகத் திகழ்வது அவர் அங்கு பெற்ற திரு.வி.க விருது ஆகும். மேலும் சென்னைப்பல்கலைக்கழகத்தில் 2005ஆம் ஆண்டின் இறுதியில் பேராசிரியர் அவர்களின் ஆய்வுப்பணியை மையப்படுத்தி நிகழ்ந்த அனைத்துலக மட்டத்திலான கருத்தரங்கும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதொன்றாகும். ஈழத்து ஆய்வாளர் ஒருவருக்கு தமிழக ஆய்வுலகம் வழங்கிய மாபெரும் கௌரவம் இது எனலாம்.

19ஆம் நூற்றாண்டிலே ஈழத்தவரான கந்தர் ஆறுமுகம என்பார் தமிழகத்தின்; திருவாவடுதுறை ஆதினத்தால் நாவலர் பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார் என்பதை ஈழத்துச் சைவ உலகம் விதந்து பேசும். அதே போல கடந்த நூற்றாண்டில் ஈழத்தவரான சுவாமி விபுலானந்தர் தமிழகத்தில் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் முதல்த் தமிழ்ப்பேராசிரியராகத் திகழ்ந்தார் என்பதையும் நாம் பெருமையுடன் நினைவு கூருகிறோம். இவ்வாறாகத் தமிழகம் ஈழத்திற்கு அளித்து வந்த கௌரவங்கள்pன் சமகால வரலாற்றுப் பரிமாணங்களாகவே மேலே பேராசிரியர் சிவத்தம்பியவர்களுக்குக் கிடைத்த கௌரவங்களையும் நாம் காண்கிறோம். அதனால் பெருமிதமும் எய்துகிறோம்.

பதினாறு ஆண்டுகளுக்கு முன்னர் மல்லிகையில் எழுதிய கட்டுரைத் தொடரிலே தெரிவித்த ஆதங்கம் தொடர்பாக.....(அதாவது பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுடைய பன்முக ஆளுமையை ஈழத்தின் பல்கலைக்கழகச் சூழல் உரியவாறு பயன்படுத்திக் கொண்டதா? என்பது தொடர்பாக........)
இடம்பெற்ற முக்கிய குறிப்பு இங்கு மீள்பிரசுரமாகிறது.

'மலையில் நிற்பவர்களுக்கு மலையின் உயரம் தெரிவதில்லை'
'தரையில் நின்று கொண்டே 'தரை எங்கே?' என்று தேடுபவர்களும் உளர்''சைவசித்தாந்த தத்துவத்திலே, 'திருவருட் சூழலில் இருந்து கொண்டே அதனை உணர முடியாத' உயிர்களின் நிலைக்கு எடுத்துக்காட்டுகளாகத் தரப்படும் உவமானங்களிற் சில இவை.

ஒருவகையில் நமது கல்விசார் சூழலுக்கும் இந்த உவமானங்கள் பொருந்தும். நாங்கள் அறிவாராய்ச்சியை முதன்மை நோக்காகவும் பணியாகவும் கொண்டவர்கள். ஆனால் நம் அருகில் உள்ள ஒரு அறிவாராய்ச்சியாளரை – பேராசிரியர் சிவத்தம்பி அவர்களை – நாம் நமது கருத்து வளர்ச்சிக்கு உரியவாறு பயன்படுத்திக்கொள்ளாமல் இருக்கிறோம்.'

பதினாறு வருடங்களுக்கு முன்பு நான் பதிவு செய்துள்ள இக் குறிப்பு இன்றும் பொருட்பொருத்தமுடையதாகவே உள்ளது. இன்றுவரைகூட – அவர் நம்மை விட்டுப் பிரிகின்ற காலம் வரை கூட -அவரது ஆளுமையை நமது கல்விச் சமூகம் உரியவாறு நிறைவாகப் பயன்படுத்திக் கொண்டதாகத் தெரியவில்லை என்பதே எனது கருத்தாகும் .

பேராசிரியர் சிவத்தம்பி என்ற தமிழியலாளரை நமது பல்;கலைக்கழகச் சமூகம் ஒரு தமிழ்ப்பேராசிரியர் என்ற மட்டத்திலேயே கணித்து வந்துள்ளது என்பதே எனது கருத்து. அவர் ஒரு தமிழ்ப்பேராசிரியர் என்ற வரையரையை விஞ்சிநிற்பவர். தமிழ்ப்பேராசிரியர் என்றால் பொதுவாகத் தமிழ்இலக்கியம், இலக்கணம் மற்றும் பண்பாட்டுக்கூறுகள் என்பன தொடர்பான புலமை உடையவர் என்ற பொருளே வெளிப்படும். ஆனால் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுடைய புலமை மேற்படி கூறுகளை உள்ளடக்கித் தமிழரின் சமூகவியல், பொருளியல், அரசியல், கலையியல், மெய்யியல், வரலாற்றியல் முதலான பல்வேறு ஆய்வறிவுத்துறைகளையும் தழுவி நிற்பதாகும். இவ்வாறு நோக்கும்பொழுது கலாநிதி.கா.சிவத்தம்பியவர்களை ஒரு தமிழ்ப்பேராசிரியர் எனச்சுட்டுவதைவிட தமிழியற் பேராசிரியர் எனச்சுட்டுவதே அதிகம் பொருத்தமுடையது என்பது எனது கருத்து. நமது காலகட்டத் தமிழியலாளருள் தலைமைத்தகுதி பெற்றவராக அவர்கள் திகழ்ந்தார்.

இன்று அவர் நம்மிடம் இல்லை . இந்த இழப்பு ஏற்படுத்தியிருக்கும் இடைவெளியை எப்படி இனி இட்டுநிரப்பப் போகிறோம் ?
பேராசிரியரின் பிரிவால் துயருறும் அவருடைய குடும்ப உறவினர்கள் மற்றும் இலக்கிய உறவினர்கள் ஆகிய அனைவருடனும் எனது இவ்வுணர்வுகளைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் எனது துயரச் சுமையைச் சற்றுக் குறைத்துக்கொள்ள முயல்கிறேன்.

(இக்குறிப்புகளில் ஒருபகுதி ஈழத்தில் ஞானம் இதழ் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின்
75 வது ஆண்டுநிறைவைக் கௌரவித்து வெளியிட்ட 'பவள மல'ரில் ( மே 2007)பதிவாகியுள்ளன. அவ்விதழுக்கு நன்றி.)

 

ns_iyer@yahoo.com