வீதியில் ஒரு பெண்யானை

அனலை. ஆறு. இராசேந்திரம்

வீதியில் நின்றான் இளைஞன் ஒருவன். கண்ணுக்கெட்டிய தூரத்தில், அவன் பார்வையில் பட்டாள் இளமங்கை ஒருத்தி!
அவள் வனப்பும் வடிவும் அவன் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன.

வைத்த கண் வாங்காது அவளையே பார்த்து நின்றான் அவன்.

ஊரகத்தே அமைந்த சிறுகாட்டில், நீரோடும் வாய்க்காற் கரையில் நிற்கும் ஞாழல் மரத்தின் பூங்கொத்துக்களைப் பறித்து, பூவும் மயிரும் நன்கு பொருந்த முடிந்த கூந்தல் குலைந்து தோள்மிசை வீழ, நிறை நிலா குளிர்ந்த ஒளிக்கதிர்களைச் சிந்துவதுபோல முகம் ஒளிமிக்கு விளங்க, அவள் அவன் நிற்கும் பக்கல் நோக்கி நடந்து வந்தாள்.

மங்கை அவன் நிற்கும் இடத்தை நெருங்க நெருங்க, அவள் அழகில் தன் எண்ணத்தை இழந்தான் இளைஞன்.

இவள் கலைவல்லான் ஒருவன் செய்த ஒப்பில்லாப் பாவையோ? நல்ல மகளிர் அங்கங்களை ஒன்றாக்கி ஓருருவாய் அயன் படைத்த பெண்வடிவோ? ஆடவர் மேலுள்ள வெறுப்பால் அவர்களைத் தண்டிப்பான் வேண்டி பெண்வடிவு கொண்டு வந்ததோர் கூற்றமோ?

அழகின் இலக்கணமாய் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு நின்ற மங்கைக்கு, இவ்வாறாக ஒப்புமைகளைக் கற்பனை செய்து வியந்தது இளைஞன் நெஞ்சம்.

அவள் அன்னம் போல மிக மெதுவாக நடந்து, அவனை அண்மித்தாள்.

நெஞ்சைக் குத்திக் கிளறிய நேரிழையை கண்களால் அளவெடுக்கலானான் இளைஞன்.

"கொடி போன்ற இடையில் மேகலையும், பூ வேலைப்பாடு மிக்க ஆடையும் அணிந்திருக்கின்றாள். ஆதலால் இவள் குழந்தைச் செல்வமின்றி நீண்ட காலம் வருந்தியோர் பெற்றெடுத்த அருமை மகளாவாள்"

"செல்வச் செழிப்பும் செல்வாக்கும் மிக்க குடிப்பிறந்த மெல்லியள் அவள்" எனச் சரியாகவே மதிப்பீடு செய்தான் அவன்.

அவள் அழகு அவனுக்குத் துன்பம் விளைத்தது. "இவளைக் காத்து நின்றோர், அவ்வாறு செய்யாராய் வெளிச் செல்லவிடுதல் மிகக் கொடுமையானது. தடுத்துக் கதையாடிப் பார்ப்போம்" எனத் தன் நெஞ்சுக்குள் சொல்லியவனாய், அவளைப் பார்த்து 'பெண்ணே, இதனைக் கேள்' என விளித்துப் பித்து மொழிகள் பகர்வானாயினான்.

"மாதர்க்கே உரித்தான மான்போலும் மருண்ட பார்வையும் மடப்பமுமுடைய பெண்ணே, நொய்ய தோகையினை உடைய அன்னத்தைப் போலவும் அழகுமிக்க மயிற்பேடு போலவும், கல்லை யுண்ணும் இயல்பினதான புறாவைப் போலவும் நலம் பொருந்தி நிற்கும் நின்அழகு காண்போரை மயக்குறுத்தும் என்பதை நீ அறிவாயோ? அறியமாட்டாயோ?"

"வளைந்த முன்கையினையும் வெண்மையான பற்களையுமுடைய அழகிய பெண்ணே, நுண்மையுடைய மூங்கிலைப் போலவும், மென்மையான துகில் பொருந்திய அணையைப் போலவும், முழங்கும் நீரைக் கடக்கும் தெப்பம் போலவும் விளங்கும் நின் பெருமைவாய்ந்த மெல்லிய தோள்கள் கண்டார்க்கு வருத்தம் செய்ய வல்லனவாம் என்பதை அறிவாயோ? அறியமாட்டாயோ?".

"மயிர் நேரிதாக வரிசையுற அமைந்த முன்கையினையும் மடப்பத்தினையுமுடைய பெண்ணே, முற்றிய கோங்கை மரத்தின் முகையைப் போலவும், தோற்றத்தில் தெங்கின் இளநீரைப் போலவும், மழைத் துளியாற் புவியில் உண்டாகும் மொக்குகளைப் போலவும் விளங்கும் பெரியவும் இளமையுடையவுமான நின் முலைகள் கண்டார் உயிரை வாங்கிவிடும் தன்மையன என்பதை நீ அறிவாயோ? அறியமாட்டாயோ?".

"பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்"


என்னும் வள்ளுவன் வாக்கையும்,

"வாளினைத் தொழுவதல்லால் வணங்குதல்
மகளிர் ஊடல் நாளினும் உளதோ"


என இரணியன் வாயிலாக கம்பர் கூறுவதையும் கைவிட்டவனாய், கண்ட மாத்திரத்தே மங்கைமீது எழுந்த காதல் நெஞ்சிற் தீயாய்ப் பற்றிப் பரந்து வளரும் பான்மையை வார்த்தைகளால் அவட்கே வனப்புற எடுத்துரைத்தான் இளைஞன்.

அவளோ அறிவு மயங்கியவள் போற் பிறர் துன்பம் அறியாதவளாய், வாய் திறந்து யாதும் பேசாதவளாய் அவ்விடம் கழிந்து போனாள்.
அவளைப் பார்த்து இளைஞன் "இனியாவது இதனைக் கேள்" என்றவானய் பின்வருமாறு கூறலானான்.

"பெண்ணே, நீயும் தவறுடையள் அல்லள். நின்னை வெளிப்புறப்பட விடுத்த உறவினரும் தவறுடையர் அல்லர். மதம் கொள்வதும் கொலைக் குணமுடையதுமான யானையை, பறை சாற்றி நீர்த்துறைக்குக் கொண்டு செல்லுமாறு போல நின்னையும் 'பறைசாற்றியே வெளிச் செல்க அன்றேல் செல்லாதொழிக' எனக் கட்டளை பிறப்பிக்காத நம் அரசனே தவறுடையான்".

இச்சொல்லோவியம் கலித்தொகை 56ஆம் பாடலைத் தழுவி எழுதப்பட்டதாகும். இளைஞன் ஒருவன், மங்கை ஒருத்திமேற் கொண்ட ஒருதலைக் காதலைப் பேத்தலின் இது கைக்கிளைத் திணையின் பாற்படுவதாயிற்று. குறிஞ்சி நிலத்தையும், மக்கள் ஒழுகலாறுகளையும் சித்தரிப்பதில் வல்லவரான நல்லிசைப் புலவர் கபிலர் யாத்தளித்த இப்பாடல், ஒருதலைக் காதலின் நீர்மையை, அதற்காளான இளைஞன் வாய்மொழிகளாலேயே சிறப்புற வெளிப்படுத்துகிறது. அப்பாடல் இது:

ஊர்க்கால் நிவந்த பொதும்பருள் நீர்க்காற்
கொழுநிழல் ஞாழல் முதிரிணர் கொண்டு
கழும முடித்துக் கண்கூடு கூழை
சுவன்மிசைத் தாதொடு தாழ வகன்மதி

தீங்கதிர் விட்டது போல முகனமர்ந்
தீங்கே வருவாளிவள்யார்கொல் ஆங்கேயோர்
வல்லவன் தைஇய பாவைகொல் நல்லார்
உறுப்பெலாங் கொண்டியற்றி யாள்கொல் வெறுப்பினால்
வேண்டுருவங் கொண்டதோர் கூற்றங்கொல் ஆண்டார்

கடிதிவளைக் காவார் விடுதல் கொடியியற்
பல்கலைச் சில்பூங் கலிங்கத்தள் ஈங்கிதோர்
நல்கூர்ந்தார் செல்வ மகள்:
இவளைச், சொல்லாடிக் காண்பேன் தகைத்து:
ஆய்தூவி யனமென அணிமயிற் பெடையெனத்

தூதுணம் புறவெனத் துதைந்தநின் னெழினலம்
மாதர்கொள் மானோக்கின் மடநல்லாய் நிற்கண்டார்ப்
பேதுறூஉ மென்பதை அறிதியோ அறியாயோ:

நுணங்மைத் திரளென நுண்ணிழை யணையென
முழங்குநீர்ப் புணையென அமைந்தநின் தடமென்றோள்
வணங்கிறை வாலெயிற் றந்நல்லாய் நிற்கண்டார்க்
கணங்காகு மென்பதை அறிதியோ அறியாயோ:

முதிர்கோங்கின் முகையென முகஞ்செய்த குரும்பையெனப்
பெயல்துளி முகிழெனப் பெருத்தநின் னிளமுலை
மயிர்வார்த்த வரிமுன்கை மடநல்லாய் நிற்கண்டார்
உயிர்வாங்கு மென்பதை உணர்தியோ உணராயோ:

எனவாங்கு,
பேதுற்றாய் போலப் பிறரெவ்வம் நீயறியாய்
யாதொன்றும் வாய்வாளா திறந்தீவாய் கேளினி
நீயுந் தவறிலை நின்னைப் புறங்கடைப்
போதர விட்ட நுமருந் தவறிலர்

நிறையழி கொல்யானை நீர்க்குவிட் டாங்குப்
பறையறைந் தல்லது செல்லற்க என்னா
இறையே தவறுடை யான்.


                                                                 -கலித்தொகை - 56.

மதங்கொண்ட யானை வீதிவழிச் செல்லுமாயின் எதிர்ப்படுவோரைத் தூக்கி வீசியும் காலால் மிதித்துக் கொன்றும், பயன்மரங்களை முறித்தும் வேரோடு பிடுங்கி எறிந்தும், மக்கள் வாழ்விடங்களைச் சிதைத்தும் பெரும் சேதம் விளைக்கும். அதன் அழிவுக்குள்ளான பகுதி புயல் அடித்து ஓய்ந்த பூங்காபோல் விளங்கும்.

மங்கை மேனியழகால் இளைஞன் நெஞ்சம் நுழைந்து, காதல் நெருப்பை வளரச் செய்து, ஈற்றில் ஏமாற்றத்தையும் வெறுமையையும் பரிசாக அளித்து, அவனை நிலைகுலையச் செய்த பான்மையை நிறையழி கொல்யானை என்னும் உவமையைத் தந்து நம்மையே சிந்தித்து உணரச் செய்கிறார் புலவர்.

இத்தகையாளாகிய மங்கை வேறொருத்தியை வெளிச்செல்ல விடுத்தது அவளை ஈன்ற தாயும், வளர்த்த தாயும் செய்த தவறு என நந்திக்கலம்பகம் பாடும்.

வரிசிலை நெடுநாட்டத்(து) அஞ்சனம் முழுதூட்டிப்
புரிகுழல் மடமானைப் போதர விட்டார்?
நரபதி எனும்நந்தி நன்மயிலா புரியில்
உருவுடை இவள்தாய்க்(கு) உலகொடு பகையுண்டோ?


                                                                                              -நந்திக்கலம்பகம்

மங்கையர் மேனியழகு இளைஞர் உயிர்களைக் குடித்திடும் தகையது என்பதை, "நிற்கண்டார் உயிர்வாங்கும் என்பதை அறிதியோ? அறியாயோ?" எனச் சொல்லுகிறார் கபிலர். செயங்கொண்டார் "செங்கழுநீர் மலர்களுடன் இளைஞர் ஆருயிரையும் ஒன்றாய்ச் செருகிக் கூந்தல் முடித்திடும் தன்மையர் மங்கையர்" என்பார்.

முருகிற் சிவந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் குழன்மடவீர்
செப்பொற் கபாடம் திறமினோ!

                                                                             -கலிங்கத்துப்பரணி

இவ்வாறு, கபிலர் பாடலின் தாக்கம் பிற்கால இலக்கியங்களிலும் படிந்து விளங்கும் அழகு நயத்தற்குரியதாகும்.