குறுந்தொகைக் காதல்

திருத்தம் பொன்.சரவணன்.

அவனைச்  சுற்றி  ஒரு  கூட்டமே  உட்கார்ந்திருந்தது. அவனது  பெற்றோரும்  உடன்பிறப்புக்களும்  முகத்தில்  கவலைக்குறிகளுடன்  காணப்பட்டனர்.  அவனுக்கு  எதிரே  அமர்ந்திருந்த  பூசாரி  கையில்  இருந்த  உடுக்கையை  பலமாக  அடித்துக்  கொண்டே  கேட்டார்.

‘யார்  நீ?’.  அவன்  பதிலேதும்  பேசவில்லை.   

‘சொல்!.  யார்  நீ?.  எங்கிருந்து  வந்தாய்?.  எதற்காக  வந்தாய்?’ 

இப்போதும்  அவன்  பதில்  பேசவில்லை.  பூசாரி  விபூதியை  அள்ளி  அவனது  முகத்தில்  வீசினார்.  விபூதி  பட்டதும்  அவனது  உடல்  ஒருமுறை  சிலிர்த்தது.  ஆனால்  ஒரு  வார்த்தை  வெளிவரவில்லை.  பூசாரிக்குக்  கோபம்  வந்து  விட்டது.  

‘இவ்வளவு  கேட்கிறேனே,  பதிலேதும்  பேச  மாட்டாயா?.  உன்னை  எப்படிப்  பேச  வைக்கிறேன்  பார்!’ 

பூசாரி  வேப்பிலையைக்  கையில்  எடுத்து  அவனது  உடம்பில்  விளாசத்  துவங்கினார்.  இப்போது  அவனுக்குக்  கோபம்  வந்திருக்க  வேண்டும்.   இதுவரை  மூடியே  இருந்த  அவனது  கண்கள்  திறந்தன.  அவை  பூசாரியை  முறைத்துப்  பார்த்தன.  திடீரென்று  அவன்  பூசாரியின்  வேப்பிலையைப்  பிடுங்கி  வீசி  எறிந்தான்.  ஆவேசமாய்  எழுந்தான்.  அனைவரும்  நடுங்கும்  வண்ணம்  கர்ஜித்தான்.

‘மதிகெட்டவர்களே!.  அப்பால்  செல்லுங்கள்!’   

தன்  முன்னால்  இருந்த  பூசை  சாமான்களை  எல்லாம்  உதைத்துவிட்டு  விடுவிடு  என்று  வாசலை  நோக்கி  நடந்து  வீட்டை  விட்டு  வெளியே  சென்றுவிட்டான்.  இவை  அத்தனையும்  ஒரு  நொடிப்  பொழுதில்  நடந்து  விட்டதால்  அங்கிருந்த  அனைவரும்  அந்த  அதிர்ச்சியில்  இருந்து  மீளாமல்  அப்படியே  இருந்தனர்.  முதலில்  சுதாரித்துக்  கொண்ட  பூசாரி  சொன்னார்.  

‘ஐயா!.  கவலைப்  படாதீர்கள்!  உங்கள்  மகனுக்கு  எந்தப்  பேயும்  பிடிக்கவில்லை.  ஏனென்றால்  அவனுக்குள்  ஒரு  ஆவி  இருந்திருந்தால்  எனது  கட்டுப்பாட்டை  மீறி  அவன்  வெளியே  சென்றிருக்க  முடியாது.  அவனது  உடலிலோ  மனதிலோ  தான்  கோளாறு  இருக்கவேண்டும்.  நீங்கள்  எதற்கும்  ஒரு  நல்ல  மருத்துவரை  அழைத்துவந்து  காட்டுங்கள்.  நான்  சென்று  வருகிறேன்.’.   

பூசாரி  சொல்லிவிட்டுப்  போனபின்னர்  மெதுவாக  அவனது  பெற்றோரை  நெருங்கினார்  ஒரு  முதியவர்.  அவர்  ஒரு  ஆன்று  அவிந்து  அடங்கிய  சான்றோர்  (அனுபவசாலி)  என்பது  அவரது  முகத்தில்  தெரிந்தது.  தந்தையின்  தோள்மீது  ஆதரவாய்க்  கையை  வைத்துக்  கொண்டே  கேட்டார்.  

‘என்ன  ஆயிற்று  உங்கள்  மகனுக்கு?.  நீங்கள்  என்னிடம்  சொல்வதற்குத்  தயார்  என்றால்  நான்  உங்களுக்கு  உதவத்  தயாராய்  இருக்கிறேன்!.’  

பின்னால்  இருந்து  குரல்  வரவே  திரும்பி  அம்முதியவரைப்  பார்த்தார்  தந்தை.  முதியவரின்  முகத்தில்  வீசிய  ஒளி  அவருக்குள்  ஒரு  நம்பிக்கையை  ஏற்படுத்தியிருக்க  வேண்டும்.  இவரிடம்  சொன்னால்  இந்த  இக்கட்டில்  இருந்து  தன்  மகன்  விடுபட  ஏதாவது  வழிபிறக்கும்  என்ற  நினைப்பில்  சொல்ல  ஆரம்பித்தார்.  

‘ஐயா!.  உங்களைப்  பார்த்தால்  ஒரு  மகான்  போலத்  தெரிகிறது.  இந்தச்  சிக்கலுக்கான  தீர்வு  தங்களிடத்தில்  கிடைக்கும்  என்று  நம்பிக்  கூறுகிறேன்.  சில  நாட்களாக  எனது  மகனின்  போக்கும்  செயலும்  எங்களுக்கு  அதிர்ச்சியைத்  தருவதாய்  உள்ளன.  சரியாக  உணவு  உண்பதில்லை;  உறங்குவதில்லை;  மற்ற  இளைஞர்களுடன்  கூடித்  திரிவதில்லை;  எவ்வித  கேளிக்கைகளிலும்  ஈடுபடுவதில்லை;  எதையோ  இழந்தவன்  போல  ஒரு  பித்து  பிடித்த  நிலையில்  காணப்படுகிறான்.  சில  நாட்களுக்கு  முன்பு  அருகில்  இருக்கும்  கானகச்  சோலைக்குள்  ஒருமுறை  சென்று  வந்தான்.  அதன்பின்னர்  தான்  இத்தனை  மாற்றங்களும்  அவனிடத்தில்  உண்டானதாக  நான்  கருதுகிறேன்.  ஆனால்  அவனது  மாற்றங்களுக்கான  காரணம்  என்னவென்று  மட்டும்  இன்னும்  எனக்குப்  புரியவில்லை.  சோலையில்  அவனுக்கு  ஏதோ  ஒன்று  நிகழ்ந்திருக்கிறது.  அது  பேயின்  வேலையோ  என்று  சந்தேகித்துத்  தான்  இன்று  இந்த  ஏற்பாடு  செய்திருந்தேன்.  பேயின்  வேலை  அல்ல  என்று  பூசாரி  தெளிவாகச்  சொல்லிவிட்டார்.  இனி  என்ன  செய்வதென்று  தெரியவில்லை.  தாங்கள்  தான்  வழி  சொல்லவேண்டும்.’  

அவர்  சொல்லி  முடித்ததும்  முதியவர்   கேட்டார்.  

‘பூசாரி  சொன்னது  போல  ஒரு  நல்ல  மருத்துவரை  அழைத்து  வந்து  காட்டுங்களேன்!’.  

‘ஐயா!.  மருத்துவரிடம்  ஏற்கெனவே  காட்டியாகி  விட்டது.  உடம்புக்கு  ஏதும்  நோய்  இல்லை  என்று  மருத்துவர்  கூறிவிட்டார்.’.  -  இது  தந்தை  சொன்ன  பதில்.  

இப்போது  முதியவர்  யோசனையில்  ஆழ்ந்தார்.  சற்று  நேரத்திற்குப் பின்னர்  சொன்னார்.   

‘உங்கள்  மகனுக்குப்  பிடித்திருக்கும்  நோய்  வித்தியாசமானது.  இது  உடலில்  விளைந்த  நோய்  அல்ல.  மனதில்  புகுந்த  நோய்.  இது  புதுமையானது.  இந்த  நோய்க்கு  ‘காமம்’  என்று  பெயர்.  இளம்  பருவ  வயதில்  இந்த  நோய்  ஆண்பெண்  இருவரையும்  தாக்கும்.  உங்கள்  மகன்  ஒரு  பெண்ணின்  மேல்  தீராக்  காதல்  கொண்டுள்ளான்.  அதுவே  இப்போது  நோயாக  மாறி  அவனைப்  பாதித்திருக்கிறது.’  

‘காதல்  தான்  தனது  மகனின்  மாற்றங்களுக்குக்  காரணம்’  என்று  முதியவர்  சொன்னதும்  சற்று  பயம்  தெளிந்தார்  தந்தை.  உடனே  ஒரு  சந்தேகம்  தோன்ற  அவரை  நோக்கிக்  கேட்டார்.  

‘ஐயா!  என்  மகனின்  மாற்றத்திற்குக்  காதல்  தான்  காரணம்  என்கிறீர்கள்.  ஆனால்  காதல்  ஒரு  நல்ல  உணர்வு  தானே.  காதல்  வயப்பட்ட  என்  மகன்  நல்ல  நிலையில்  அல்லவா  இருக்கவேண்டும்.  ஏன்  அவனது  நிலை  இவ்வாறு  உள்ளது?’.   

‘ஐயா!.  காதல்  ஒரு  நல்ல  உணர்வு  தான்.  ஆனால்  அது  காதலித்த  இருவரும்  சேர்ந்திருக்கும்  வரையில்  தான்  நல்லதாய்  இருக்கும்.  பிரிந்துவிட்டால்  தீயதாய்  மாறிவிடும்.  காதலின்  இந்தத்  தன்மைக்குப்  பெயர்  தான்  ‘காமம்’  ஆகும்.  இந்த  காமம்  ஒரு  நோயோ  பேயோ  அல்ல.  இதன்  பண்பு  எத்தகையது  என்றால்,  ஒரு  மேட்டுநிலத்தில்  விளைந்திருக்கும்  பசும்புல்லை  ஒரு  பசுமாடு  பலமுறை  சுற்றிச்  சுற்றி  வந்து  மேய்வது  போன்றதாகும்.  இங்கே  உங்கள்  மகனின்  மனம்  தான்  பசுமாடு.  அவனது  காதலி  தான்  மேட்டு  நிலம்.  அந்த  நிலத்தில்  விளைந்திருக்கும்  பசும்புற்கள்  காதல்  நினைவுகள்  ஆகும்.  உங்கள்  மகனின்  மனம்  காதல்  நினைவுகளை  அசைபோட்டுக்  கொண்டு  தனது  காதலியையே  எப்போதும்  சுற்றிச்சுற்றி  வருகிறது.  காதலியைத்  தவிர  வேறு  நினைவுகள்  அவனுக்குத்  தோன்றாததே  அவனது  மாற்றங்களுக்குக்  காரணம்.’  

முதியவர்  சொல்லி  முடித்ததும்  அடுத்த  கேள்வியை  ஆவலுடன்  தொடுத்தார்  தந்தை.  

‘அப்படியானால்  இந்தச்  சிக்கலுக்குத்  தீர்வு  இல்லையா?.  என்  மகன்  திருந்துவதற்கு  என்ன  தான்  வழி?’  

இதைக்  கேட்டதும்  முதியவரின்  உடல்  ஒருமுறை  குலுங்கியது;  முகத்தில்  பல்வேறு  உணர்ச்சிகள்  தோன்றி  மறைந்தன.  சமாளித்துக்கொண்டு  நிதானமாய்ச்  சொன்னார்.  

‘ஒரு  வழி  இருக்கிறது.  இந்தக்  காமம்  இருக்கிறதே  அது  நோயினைப்  போலன்றி  கூடவோ  குறையவோ  செய்யாது.  யானையின்  மதம்  போல  காலவரையறைக்கு  உட்பட்டதே  ஆகும்.  யானைக்கு  மதம்  பிடிப்பதைப்  போல  காமம்  திடீரென்று  தோன்றும்.  உண்ண  உணவு  கிடைத்ததும்  யானையின்  மதம்  அழிந்து  போவதைப்  போல  காமமும்  திடீரென்று  அழிந்து  போகும்.  அதாவது  காமத்திற்குக்  காரணமான  பெண்  கிடைத்துவிட்டால்  காமம்  உடனே  அழிந்துவிடும்.  உங்கள்  மகன்  காதலிக்கும்  பெண்ணைக்  கண்டறிந்து,  முடிந்தால்  அவளை  அவனுடன்  சேர்த்து  வையுங்கள்.  இதுவே  இந்த  சிக்கலுக்கான  தீர்வு  ஆகும்.’

தனது  மகனின்  சிக்கலுக்குத்  தீர்வு  கிடைத்துவிட்ட  மகிழ்ச்சியில்  முதியவரை  கைகூப்பித்  தொழுதார்  தந்தை.  பின்னர்  கேட்டார்.  

‘ஐயா!.  தங்களது  உதவிக்கு  மிக்கநன்றி.   தங்களது  பெயரை  நான்  தெரிந்து  கொள்ளலாமா?’.  

‘என்  பெயர்  கந்தன்.  எல்லோரும்  என்னை  ‘மிளைப்பெருங்கந்தன்’  என்றே  அழைப்பார்கள்.  இந்த  மலையின்  கீழே  தான்  நான்  தங்கி  இருக்கிறேன்.  சரி,  எனக்கு  நேரமாகி  விட்டது.  வருகிறேன்.’  

சொல்லிவிட்டு  முதியவர்  மெதுவாக  வீட்டிலிருந்து  வெளியில்  வந்தார்.  மலைக்காற்று  அவரது  முகத்தை  வருடிக்கொண்டு  சென்றது.  காமத்தின்  தன்மைகளைப்  பற்றி  அருமையான  சொற்களால்  இவ்வாறு  பாட  ஆரம்பித்தார்.  

காமம்  காமம்  என்ப;  காமம்
அணங்கும்  பிணியும்  அன்றே;  நினைப்பின்
முதைசுவல்  கலித்த  முற்றா  இளம்புனம்
மூதா  தைவந்தாங்கு
விருந்தே  காமம்  பெரும்  தோளோயே.

 

- குறுந்தொகை - 204.

காமம்  காமம்  என்ப;  காமம்
அணங்கும்  பிணியும்  அன்றே;  நுணங்கிக்
கடுத்தலும்  தணிதலும்  இன்றே;  யானை
குளகு  மென்று  ஆள்  மதம்  போல
பாணியும்  உடைத்தது  காணுநர்ப்  பெறினே.

 

- குறுந்தொகை  - 136.

பாடி  முடித்துவிட்டு  தெருமுனையைக்  கடக்கும்  முன்னர்  திரும்பிப்  பார்த்தார்  முதியவர்.  இன்னும்  அவரை  நோக்கிக்  கைகுவித்து  வணங்கியவாறு  நின்று  கொண்டிருந்தார்  தந்தை.  அவ்வளவுதான்!  அதுவரை  முதியவர்  அடக்கி  வைத்திருந்த  உணர்வுகள்  எல்லாம்  ‘மடைதிறந்த  தண்ணீர்  போல’  கட்டுப்பாட்டை  மீறி  வெளிப்பட்டன.  முகத்தைத்  திருப்பிக்கொண்டு  விம்மி  விம்மி  அழ  ஆரம்பித்தார்;  கண்ணீர்  பெருகி  வழிந்தது.  நடந்த  நிகழ்வுகள்  மனதில்  நிழலாக  ஓட  உள்ளுக்குள்  இறைவனை  உருக்கமுடன்  தொழுது  வணங்கினார்.  

‘கடவுளே!  இவர்களை  நீ  தான்  இனி  காக்கவேண்டும்!   இவரது  மகன்  உயிருக்குயிராய்க்  காதலித்தது  எனது  மகளைத்  தான்  என்பதையோ  இதை  அறியாமல்  நான்  எனது  மகளை  வேறொரு  ஆடவனுக்கு  மணம்  முடித்து  வேற்று  நாட்டிற்கு  அனுப்பி  வைத்துவிட்டேன்  என்பதையோ  இவர்  அறியமாட்டார்.  அறியாமையால்  விளைந்த  இந்தத்  தவறு  இப்போது  தான்  எனக்குத்  தெரியவந்தது.  இந்த  உண்மையை  அவரிடத்தில்  சொல்லவும்  முடியாமல்  மெல்லவும்  முடியாமல்  தவிக்கிறேன்.  என்னை  மன்னித்து  அருள்வாயா?’.

                             

                                                                           

                                      

vaendhan@gmail.com