திறனாய்வு / விமர்சனம் தொடர்பாக நான்

 

கே.எஸ்.சிவகுமாரன
 


இந்த ஆண்டு ஒக்டோபர் முதலாந்திகதி எனக்கு 75 வயது ஆரம்பமாகிறது. 1953 முதல், சிறிய அளவிலும் பெரிய அளவிலும் செய்தித்தாள்கள் இலக்கிய ஏடுகள் ஆகியனவற்றில் எழுதி வருகிறேன். இவை ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சுதந்திரன் வாரப் பத்திரிகையின் 'வளர்மதி பக்கத்தில் தமிழிலும், ஜூனியர் டைம்ஸ் என்ற Times of Ceylon நாளிதழின் வளரிளம் பருவத்தினர்க்கான ஏட்டில் ஆங்கிலத்திலும் எனது எழுத்துத்துறைப் பிரவேசம் ஏற்பட்டது.

 

இவ்வாறு படிப்படியாக ஆரம்பித்து கடந்த 58 வருடங்களாக எழுதி வருகிறேன். ஓய்வு இல்லாமல் எழுதி வருகிறேன். ஏன் இப்படி எழுத வேண்டும் என்று, அக்கறையும், என்மீது அசூசையும் கொண்ட வாசகர்கள் நியாயமான கேள்வியை என்னிடம் கேட்கலாம்.

 

உண்மைதான். நானே இதனை என்னிடம் (என் மனதுடன்) விவாதித்தேன். ஆழ்ந்த யோசனையின் பின் உதித்த விடை: எழுதாமல் இருக்க முடியவில்லை. நான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறவேண்டும் என்ற உள்ளுணர்வு என்னை நச்சரித்துக் கொண்டேயிருக்கிறது.

 

ஆரம்பத்திலே சிறுகதை, கவிதை போன்ற ஆக்க இலக்கியங்களில் கவனம் செலுத்தி வந்தேன். படிப்படியாக எனது வாசிப்பு எல்லைகள் விரிந்து கொண்டே போயிற்று. வாசிக்க, வாசிக்க, நான் கற்றது கைம்மண்ணளவு என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்தேன்.

ஆங்கில மொழி மூலம் கற்றதனால், தமிழைவிட ஆங்கில நூல்களையே அதிகம் விரும்பிப் படித்து வந்தேன். எனது பால்யப் பருவத்தில் அணில், அம்புலிமாமா, கல்கண்டு, கண்ணன் ஆகியன எனது கற்பனை விஸ்தரிப்பையும், பகுத்தறிவையும் பெருக்க உதவின. எனது பெற்றோர் என் வாசிப்பு விருப்புக்கு உரமூட்டினர்.

 

தமிழைப் பொறுத்த மட்டில், ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், அமுதசுரபி, சிரஞ்சீவி, மோஹினி போன்ற சஞ்சிகைகள் இனிப்பூட்டின.

 

1948 ஆம் ஆண்டளவில், துப்பறிதல், பயங்கர, மர்ம, காமச் சுவை தரும் இதழ்களிலும், நூல்களிலும், எனது கவனம் செல்லத் தொடங்கியது. அந்நாட்களில் வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஜெகசிற்பியன், அகிலன், நா.பார்த்தசாரதி, சாண்டில்யன், ஆர்.வி, எல்லார் வி, விக்ரமன் போன்றோரின் நாவல்களைத் தேடித் தேடிப்படித்து வந்தேன். இப்படியிருந்த எனது இரசனை 1953 முதல் வேறு போக்கில் வளரத் தொடங்கியது.


'
கல்கி ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் 'அலை ஒசை தொடர்கதையாக 'கல்கி' சஞ்சிகையில் வாசித்தேன் ஆயினும், அந்நாவலை சமூக, அரசியல் பின்னணியில் வைத்துப் பார்க்கும் முதிர்ச்சியை நான் பெறவில்லை. இருந்தபோதிலும், 1968ஆம் ஆண்டளவில், எனது தேடல் முயற்சி காரணமாக எனது இரசனைப் பரிமாணம் விரிவு பெற ஆரம்பித்தது.


இலங்கையில் 1958ஆம் ஆண்டில் இடம்பெற்ற இனக்கலவரம் எனது தமிழ் உணர்வை அதிகரித்தது. அந்த நேரத்தில்தான், 'கல்கி கிருஷ்ணமூர்த்தியின் 'பொன்னியின் செல்வன்”, 'பார்த்திபன் கனவு ஆகிய நாவல்களைப் படிக்க நேர்ந்தது. தமிழர்களின் கற்பனை சார்ந்த வரலாற்றுப் பெருமைகளை உணரவும், பெருமிதம் கொள்ளவும், கல்கியின் எழுத்து நடையின் வசீகரத்தை இரசிக்கவும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.

 

இந்த விதமான அனுபவம் இலக்கியத்தை ஒரு மனோரதிய (Romantic Approach) அணுகுமுறை மூலம் சுவைக்கத் தொடங்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அதன் பின்னர் முதிர்ச்சித் தன்மை ஆழமாக வேரூன்றத் தொடங்கியது.

 

1959ஆம் ஆண்டிலே 'எழுத்து என்ற தமிழ் நாட்டு இலக்கிய விமர்சன ஏட்டை அமரர் கனகசபாபதி கைலாசபதி மூலம் படிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது.

 

அக்காலப் பகுதியில் ஏற்கனவே ஆங்கில மொழி மூலம், உலக இலக்கியங்களைப் படித்துக்கொண்டு வந்தேன். அப்படைப்புகளின் திரை வடிவங்களைப் பார்த்து வியப்புற்றேன். அவ்பெயார் கெமு, ப்ரான்ஸ் கஃப்கா, ஜோன் போல் சாத்ரே, நட்ஹம்ஸன், அன்டன் செகோப், லியோ டோல்ஸ்டோய் போன்றோரின் படைப்புகளைப் படித்து அனுபவிக்கக் கற்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தேன்.

 

இணையான போக்காக Literary Criticism எனப்படும் திறனாய்வு தொடர்பான நூல்களைப் படித்தும் வந்தேன். ..ரிச்சடஸ், எப்.ஆர்.லீவிஸ், ஹென்றி ஜேம்ஸ், .எம்.போர்ஸ்டர், ஜேம்ஸ் றீவிஸ் போன்றோரின் திறனாய்வு சம்பந்தமான நூல்களைப் படித்துக்கொண்டிருந்தேன்.

 

இவ்வாறான பின்னணியில், 'எழுத்து' ஏட்டைப் படித்துப் பார்த்த பொழுது, அந்த இதழ்கள் கரும்புச் சுவையாய் இனித்தன. எனவே 'எழுத்து' ஏட்டிற்கு எனது சில கட்டுரைகளை எழுதிவந்தேன். அவை பிரசுரமாயின. அதன் ஆசிரியர் அமரர் சி.சு.செல்லப்பா தொடர்ந்து எழுதும்படி அடிக்கடி எனக்குத் தபால் மூலம் கேட்டுக் கொண்டிருந்தார்.

 

அந்நாட்களில் வெங்கட் சாமிநாதன், தருமுசிவராமு, வல்லிக்கண்ணன் ஆகியோர் கடிதம் மூலம் என்னுடன் தொடர்பு கொண்டனர்.


வெங்கட் சாமிநாதன், அமரர் .நா.சுப்ரமணியனின் நூல்கள் சிலவற்றை எனக்கு அனுப்பி வைத்தார்.

 

அமரர் கைலாசபதி, திறனாய்வுத் துறையில் ஈடுபடும்படி என்னைத் தூண்டினார். அவர் பணிப்பின் பேரில் 'நாவலாசிரியர் வரிசையில் வரதராசனின் இடம் என்ற பொதுத் தலைப்பின் கீழ், மு..வின் நாவல்களை வைத்துத் திறனாய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார். அவர் எழுதிய 'நெஞ்சில் ஒரு முள் என்ற நாவலை நான் 'விமர்சித்து எழுதினேன். அது பிரசுரமாயிற்று.

 

பின்னர் என்னை ஒரு விமர்சகராகச் சிலர் கருதிக்கொண்டு அப்பட்டியலில் என் பெயரையும் சேர்த்து எழுதினர். நானும் 'விமர்சனம் என்பது Literary Criticism தான் என்று எண்ணிக் கொண்டேன்.

 

ஆனால் பின்னர் 'இலக்கிய விமர்சனம்' என்றால் கண்டிப்பது Criticize என்றுதான் பலர் அர்த்தம் கொண்டனர் என்பதை அறிந்து கொண்டேன். 'எழுத்து ஏட்டில் வெங்கட் சாமிநாதனும், தருமுசிவராமுவும் ஆளையாள் தாக்கி, Personal ஆக எழுதி வந்தனர்.

 

இலங்கையிலும் 'இலக்கிய விமர்சனம்” என்பது கண்டிப்பதையே முதல் நோக்கமாகக் கொண்டது என்ற மருட்சி வளரத் தொடங்கியது. இந்தப் போக்கு எஸ்.பொ. எனப்படும். எஸ்.பொன்னுத்துரை முதல் பலராலும் பின்பற்றப்பட்டது.

 

'விமர்சனம் என்ற சொல்லை அகராதி அர்த்தத்தில் 'கண்டனம்' என்று அர்த்தப்படுத்திச் சிலர் எழுதி வருவது எனக்கு அதிருப்தியைத் தந்தது.

 

எனவே என்னையும் 'விமர்சகன்' என்று பட்டியலிடும்போது அவ்விதம் செய்வோர் எனது நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் வேறு எதிர்பார்த்து நின்றனர்.

 

எனவேதான் நான் செய்வது 'விமர்சனம் அல்ல, 'திறனாய்வு தான் செய்கிறேன் என்று திரும்பத் திரும்ப எழுதிவந்துள்ளேன்.

 

உண்மையில் 'திறனாய்வு என்றால் என்ன? என்ற நூலிலும் எனது கருத்தை விளக்கியிருக்கிறேன். எப்படி எழுதியும் என்ன பிரயோசனம்? நான் எழுதுபவற்றைப் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

 

மேற்கிலேயே காலாவதியான பிறநாட்டு இலக்கியச் சிந்தனைகள் Modernism, Post modernism, Structuralism, Post structuralism, Deconstruction போன்ற இலக்கியப் போக்குகள் அரைகுறை விளக்கத்துடன் தமிழ் நாட்டுச் சிற்றேடுகள் மூலம் படித்து வரும் நமது உள்ளூர் விமர்சகர்கள் (ஆங்கில மூலங்களை இவர்கள் படிக்கிறார்களா என்பதில் எனக்குச் சந்தேகம்), எனது எழுத்தை விரும்பாததில் ஆச்சரியமில்லை.

 

தவிரவும், இரசனை, பகுப்பாய்வு போன்றவற்றின் அடிப்படையில் 'நடைமுறைத் திறனாய்வை (Practical crtticism) பல்துறைசார் திறனாய்வு போன்ற அடிப்படைகளில் எழுதும் நான் இப்போதைய 'விமர்சகர்கள் போல் எழுவதில்லைத்தான். பெரும்பாலானவர்கள் விமர்சனமோ, திறனாய்வோ, கண்டித்தலை உள்ளடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

 

நானோ, கண்டிப்பதைப் பெரும்பாலும் தவிர்த்து வந்திருக்கிறேன். இது ஏனெனில்,

'
விமர்சகர்கள் செய்யும் விரிவான ஆழமான ஆய்வுகளில் நான் நாட்டம் கொள்வதில்லை. அவ்வகையான எழுத்தை எழுத நம்மிடையே நிறையப்பேர் இருப்பதனால், அவர்கள் அதைச்செய்யட்டும் என்று விட்டுவிட்டு, சாதாரண வாசகர்களின் ரசனை விருத்திக்கு உதவும் முகமாக எனது இரசனைக் கட்டுரைகளை 'பத்தி எழுத்துக்கள் மூலம் எழுதி வருகிறேன். அதாவது உயர்மட்ட வாசகர்களுக்காக எழுதுபவர்களுக்கும், ஒன்றுமே விபரமாகத் தெரிந்து வைத்திருக்காத வாசகர்களுக்கு மிடையே ஒரு பாலமாகத்தான் எனது எழுத்து அமைகிறது. இன்னொன்று, குறிப்பிட்ட ஒரு படைப்பில் குறைபாடுகள் அதிகம் இருந்தால், அப்படைப்புகளை நான் கணிப்புக்குள் கொண்டு வருவதில்லை. அக்குறைபாடுகளை, Private ஆக அவர்களிடம் எடுத்துச் சொல்வேன்.

 

எனது ரசனையே எனது கணிப்பு. ஒரு படைப்பை முதலில் ரசிக்கப் பழக வேண்டும். எழுதியவரின் நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதன்பின் அவருடைய நோக்கம் நிறைவுறுகிறதா என்று பார்க்கவேண்டும். இதுவே எனது திறனாய்வின் முதற்படி. மற்றப்படி, எனது அரசியல் கோட்பாடுகள், பொருளாதாரச் சிந்தனைகள், பண்பாட்டு விழுமியங்கள் போன்றவற்றைத் திணித்துத் திறனாய்வு செய்வதில்லை. இதனால், மாற்றுக் கருத்துடைய 'விமர்சகர்கள்”, என்னை ஏளனமாகப் பார்ப்பதில் வியப்பில்லை.

 

இருந்தபோதிலும் நான் தொடர்ந்து 'திறனாய்வை” எனது இரசனைப் போக்கிலேயே எழுதிவருவேன். பயனடைபவர்கள் ஏற்பார்கள். எஞ்சியவர்கள் தொடர்ந்து 'கண்டனம்' செய்து வருவர். அதனால் என்ன? புத்தம் புதுக்கருத்துக்கள் உருவாகட்டும். நல்லதுதானே.

 

இன்னொரு விஷயம் ஆங்கிலத்தில் எழுதும்பொழுது இவ்விதமான கண்டனங்களை நான் எதிர்நோக்குவதில்லை. படிப்பவர்கள் விஷயமறிந்தவர்களாய் இருப்பதுதான் இதற்குக் காரணம் போலும்.

 

இக்கட்டுரையை படித்தவர்களுக்கும், இதழாசிரியருக்கும் எனது நன்றி.

 

 
நன்றி: ஞானம்

(பவளவிழா நாயகன் கே.எஸ்.சிவகுமாரன் அவர்களுக்கு தமிழ்ஓதர்ஸ்.கொம்மின் வாழ்த்துக்கள்)
 

 

 

 

kssivakumaran@yahoo.com