சங்க இலக்கியக் காட்சிகள் - காட்சி 3

 

பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா, அவுஸ்திரேலியா               

 

 

(பண்டைத் தமிழ மக்களின வாழ்க்க முறைகளையும> பண்பாட்டினையும படம்பிடித்துக்காட்டும சான்றுகளாகத திகழும்சங்க இலக்கியங்கள குறித்துரைத்த நிற்கும சுவைமிகுந்த காட்சிகள வெளிப்படுத்தும கட்டுரைத்தொடர.)

 

காட்சி 3

 

காதலா ? செல்வமா?

 

காட்சி இரண்டில் இடம்பெற்றதைப் போன்ற மற்றுமொரு காட்சியைச் சித்தரிக்கும் இன்னுமொரு பாடலையும் பார்ப்போம். இதுவும் நற்றிணையிலேயே இடம்பெறுகின்றது.
வளமாக வாழ ஆசைப்பட்டான் ஒருவன். அதற்குப் பொருள் வேண்டும். சொந்த ஊரிலேயே இருந்தால் பெருமளவு பொருளைச் சம்பாதிக்க முடியாது. எனவே வெளியூர் சென்று பொருளீட்ட முனைந்தான். அவனது மனம் அதைத்தான் வலியுறத்தியது. ஆனால் அதேவேளை, அவ்வாறு தான் வெளியூர் சென்றால், தன் உள்ளத்தில் குடிகொண்டுள்ள காதலியைப் பிரியவேண்டி ஏற்படும் என்று அவனுக்கு வேதனையாக இருந்தது. ஒருநாள்கூட அவளைப் பிரிந்திருக்க அவனால் முடியாது. பொருள்தேடிப் போகவும் வேண்டும். அவளைப் பிரியாது இருக்கவும் வேண்டும். இரண்டையும் செய்வது என்பது இயலாது. ஏனெனில் அவளைத் தன்னொடு கூட்டிச் செல்ல முடியாது. ஆதனால், ஏதாவது ஒன்றை இழந்தே ஆகவேண்டிய நிலைமை. அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தன் மனதிடம் சொல்லுகின்றான். அந்த மனந்தானே பொருளீட்டும் ஆசையை உண்டாக்கியது. எனவே அந்த மனதிடம் தன் இக்கட்டான நிலைமையையும், அதனால் தான் எடுத்திருக்கும் தீர்மானத்தையும் கூறுகின்றான். தானே தன்மனதிடம் சொல்லிச் சமாதானப்படுத்துகிறான். அவனது தீர்மானம் என்னவாயிருக்கும்? வேறென்னவாயிருக்க முடியும்? மலைபோன்ற செல்வத்தைக்கூட இழக்க அவனால் முடியும். ஆனால் காதலியோடு களித்திருப்பதை இழந்துவிட அவனால் முடியவே முடியவில்லை.

மாக்கொடி அதிரற் பூவொடு பாதிரித்
தூத்தகட்டு எதிர்மலர் வேய்ந்த கூந்தல்
மணம்கமழ் நாற்றம் மரீஇ, யாம் இவள்
சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கி
வீங்கு உவர்க் கவவின் நீங்கல் செல்லேம்
நீயே, ஆள்வினை சிறப்ப எண்ணி, நாளும்
பிரிந்துறை வாழ்க்கை புரிந்து அமையலையே
அன்புஇலை வாழி என் நெஞ்சே! வெம்போர்
மழவர் பெருமகன் மாவண் ஓரி
கைவளம் இயைவது ஆயினும்
ஐதே கம்ம, இயைந்துசெய் பொருளே!


(நற்றிணை, பாடல் இல:
52. பாலைத்திணை.  பாடியவர்: பாலத்தனார்)

எனது மனமே! குரிய கொடியையுடைய அதிரல் செடியின் மலருடன், தங்கத் தகட்டினைப்போல் விளங்குகின்ற பாதிரிப் பூக்களையும் எதிரெதிரே சூடியிருக்கும் கூந்தலையுடையவள் என் காதலி. அதனால் அவளின் கூந்தலில் கமழுகின்ற நறுமணத்தினை நுகர்ந்துகொண்டே அவளின் பொன்னணி பூண்ட மார்பகங்களை என் மார்போடு சேருமாறு இறுக அணைத்து இருவருக்குமிடையே காற்றுக்கூட நுழையாத அளவிற்குத் தழுவிக்கொள்வேன். அத்தகைய இன்பச்சுவை மிகுந்த அணைப்பை விட்டுவிட்டு நான் எங்கும் போக மாட்டேன். என் மனமே! பொருளீட்டி வாழும் வாழ்விலேயே உன் எண்ணம் இருக்கிறது. எனவேதான் அவளைப் பிரிந்து வாழும் வாழ்க்கையை விரும்புகிறாய். அதனால், உனக்கு என்னிடத்தில் அன்பே இல்லை. நீ வாழ்க! பேராற்றல் கொண்ட மழவர்களின் பெருந் தலைவனாகத் திகழ்ந்தவன் ஓரி என்ற வள்ளல். அவனைப்போல நானும் வாரிவழங்கிப் புகழடையக்கூடிய அளவுக்குப் பெருஞ்செல்வம் எனக்குகிடைக்கப் பெற்றாலும் நான் அதனை விரும்பமாட்டேன். பொருள்தேடும் முயற்சி உனக்கே வாய்க்கட்டும். (என்னை விட்டுவிடு நான் என் காதலியைப் பிரியவே மாட்டேன்) என்பது இந்தப் பாடலின் கருத்து.

ஓரி என்பவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன். மலைபோன்ற செல்வத்திற்கு அதிபதியாக இருந்தவன். வாரிவழங்குவதிலே மாபெரும் வள்ளலாகத் திகழ்ந்தவன். அத்தகையவனது செல்வத்திற்குச் சமமான செல்வம் கிடைப்பதென்றாலும். அது காதலியைச் சிலகாலம் பிரிந்திருந்தால்தான் கிடைக்குமென்றால்- அது எனக்குத் தேவையில்வை. கணமேனும் அவளைப் பிரியமாட்டேன் என்று, தடுமாறும் தன் மனதிற்குத் திடமான தன் முடிவைச் சொல்கின்ற தலவனின் காதல் உள்ளத்தைப் படம்பிடித்துக் காட்டுகின்ற இந்தப் பாடல் சங்ககால மக்களின் காதல் வாழ்வின் அற்புதக் காட்சிகளில் ஒன்றல்லவா?

அந்தக்காலத்தில் செல்வத்தைவிடக் காதலுக்கு எவ்வளவு மரியாதை கொடுத்திருக்கிறார்கள் பாருங்கள்!

                                                                                                                          

                                                                                                 (காட்சிகள் தொடரும்....................................)

 

 

 

 

srisuppiah@hotmail.com