சங்க இலக்கியக் காட்சிகள் - காட்சி 6

 

பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா, அவுஸ்திரேலியா               

 

 

(பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.)

 

காதல் ஓரிடம் கல்யாணம் வேறிடமா?

 

அவள் ஒரு சிறந்த அழகி. திருமணப்பருவத்திலே இருக்கிறாள். அவளைப் பெண்கேட்டுப் பலர் வந்துகொண்டிருக்கிறார்கள். இதுவரை வந்தவர்கள் யாரும் அவளுக்குப் பொருத்தமானவர்களாக இல்லை. அதனால் சரியான பொருத்தமான மாப்பிள்ளை கிடைக்கும் வரை அவளது திருமண நாள் தள்ளிக்கொண்டே போகின்றது. பெண்கேட்டு இன்னமும் பலர் வந்துகொண்டேயிருக்கிறார்கள்.

வருகின்ற யாரைiயுமே அவளுக்குப் பிடிக்கவில்லை. தனது பெற்றோருக்கு யாரையாவது பிடித்துவிட்டால் திருமணம்தான். ஓவ்வொரு கணமும் அதை நினைத்து அவள் அச்சத்தில் துடித்துக்கொண்டிருந்தாள். திருமணம் என்றால் மகிழ்ச்சியடையவேண்டிய அவள் கவலைப்படுகின்றாள் என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கவேண்மே! இருக்கிறது.

அவள் ஒருவனைக் காதலிக்கிறாள். காதலென்றால் சாதாரண காதல் அல்ல. அவளது காதலன் தினமும் யாருக்கும் தெரியாமல் அவளைக்காண வருவான். இருவரும் சந்திப்பார்கள். தழுவிக்கொள்வார்கள். நீண்டகாலமாக இது நடந்துவருகிறது. தவிர்க்கமுடியாத ஏதோ ஒரு காரணத்தால் அவன் ஒருநாள் வராவிட்டாலும் அவளால் தாங்கமுடியாது. கண்ணீர்விட்டு அழத் தொடங்கிவிடுவாள். இந்தவிடயமெல்லாம் அவளின் பெற்றோருக்குத் தெரியாது. அவளின் செவிலித் தாய்க்கும் தெரியாது. ஆனால் அவளின் தோழிக்குமட்டும் தெரியும்.

பெண்கேட்டு இப்படியே பலர் வந்துகொண்டிருந்தால், அவ்வாறு வருபவர்களில் யாரையாவது அவளின் பெற்றோர் ஏற்றுக்கொண்டுவிடுவார்களோ என்று கவலைப்படுகிறாள், அவளின் காதல் தொடர்பை அறிந்த அவளது தோழி. இதனை இப்படியே விட்டால் சரிவராது, இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்று அவள் நினைக்கிறாள். அதனால், உறுதியான ஒரு செயற்பாட்டில் இறங்குகிறாள். அழகிய தலைவியின் செவிலித் தாயிடம் சென்று அவளின் காதல் பற்றிக் கூறுகிறாள். காதலனை ஒருநாள் காணாது விட்டாலும் கண்ணீர் வடிப்பவள் உன் மகள். அந்த அளவுக்கு அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள். அவனைத்தவிர வேறுயாரையும் உன் மகள் விரும்பமாட்டாள். இதுதான் அவளின் நிலைமை. தயவுசெய்து இதனைப் பரிந்துகொள்ளுங்கள். எனவே மாப்பிள்ளை பார்ப்பதை விட்டுவிட்டு, அவள் விரும்புகின்றவனுக்கே அவளை மணமுடித்துக்கொடுப்பதுதான் எல்லோருக்கும் நல்லது என்று சொல்கிறாள்.

ஐங்குறுநூறில், புணர்தலும் புணர்தல் நிமித்தமும் உரிப்பொருளான குறிஞ்சித் திணைக்குரிய பாடல்களை எழுதிய புகழ்பெற்ற புலவராகிய கபிலர் பாடிய ஒரு பாடலில் இந்தக்காட்சியை நாம் காணலாம். அந்தப்பாடல் பின்வருமாறு: .


'அலங்குமழை பொழிந்த அகன்கண் அருவி
ஆடுகழை யடுக்கத் திழிதரும் நாடன்
பெருவரை யன்ன திருவிறல் வியன் மார்பு
முயங்காது கழிந்த நாள் இவள்
மயங்கிதழ் மழைக்கண் கலிழும் - அன்னாய்!'

                                                          (ஐங்குறுநூறு பாடல் இல:
220)

இதன் பொருள்: அன்னையே! அசைகின்ற மேகங்கள் பொழிகின்ற மழையினால், அகன்று பரந்து வீழ்கின்ற அருவி, (காற்றில்) ஆடிக்கொண்டிருக்கும் மூங்கில்கள் நிறைந்த மலைப்பகுதியிலே எந்நேரமும் ஒழுகிக்கொண்டே இருக்கும். அத்தகைய மலையைச் சேர்ந்தவன் மலை நாடன். மாமலைபோன்ற அவனது வெற்றி பொருந்திய அழகிய அகன்ற மார்பைத் தழுவாது விட்ட நாட்களில் உன் மகளின் மலர் போன்ற கண்கள் நீரைச் சொரியும். இதனை நீ அறிவாயாக.

அதாவது, ஒருநாள் மலைநாடனைத் தழுவாது விட்டாலும் அன்றெல்லாம் அழுதழுது கண்ணீர் வடிப்பவள் உன் மகள். அந்தளவு அவனோடு காதல் கொண்டிருப்பவளின் உள்ளம் வேறு யாரையும் தழுவுவதற்கு இடம் தருமா? எனவே, அவனுக்கே அவளை மணம் முடித்துக் கொடுத்துவிடு என்பது தெளிவான கருத்து.


                                                                                                                          

                                                                                                 (காட்சிகள் தொடரும்....................................)

 

 

 

 

srisuppiah@hotmail.com