சங்க இலக்கியக் காட்சிகள் - காட்சி 13

 

பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா, அவுஸ்திரேலியா               

 

 

(பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும் சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.)

 

இன்பமெல்லாம் எனக்குத் துன்பமயம்!

அலைகடல் தாலாட்டும் அழகானதொரு கிராமம் அது. நல்ல வளமானதும் கூட. 'காண்ட வாயில்' என்பது அந்த ஊரின் பெயர். காலம் தவறாமல் வானம் பொழிகின்ற மழை வளம்மிக்க அந்த ஊரிலே மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவே காணப்படுவார்கள். வற்றாத நீர் நிறைந்த குளங்கள் அங்கே உள்ளன. தோட்டங்களும் துரவுகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன. தோட்டங்களைச் சுற்றி மரங்களாலான வேலிகள் உள்ளன. மக்களின் குடிமனைகள் பனையோலைகளையும் முட்களையும் கொண்டு அமைக்கப்பட்ட வேலிகளால் சூழப்பட்டிருக்கின்றன. அந்தப் பனையோலைகள் அடிக்கடி சரசரவென்ற சத்தத்தை எழுப்பிக்கொண்டிருக்கின்றன.

வானுயர்ந்த பனை மரங்கள் ஊரெங்கும் நிறைந்துள்ளன. மீனவர்கள் நாள் தவறாமல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வார்கள். வரிகள் முதலிய கொடுப்பனவுகளை பொய்யுரையாது செலுத்தும் வழக்கமுள்ள அந்த மீனவர்கள் தாம் பிடித்த மீன்களை ஊர்மக்களுக்குக் கூவி விற்கின்ற சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது. இனிமையான பனங்கள்ளை அருந்தியவர்கள் போதை மகிழ்ச்சியில் எழுப்புகின்ற ஆரவாரம் இன்னொருபக்கம் கேட்டுக்கொண்டிருக்கின்றது.

இவ்வாறு அந்த ஊரிலே மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள். இத்தனை அழகும், இத்தனை வளமும், இத்தனை மகிழ்வும் இருந்தாலும் அந்த ஊரிலுள்ள இளம்பெண் ஒருத்திக்கு மட்டும் அத்தனையும் எவ்வித இன்பத்தையும் கொடுக்கவில்லை. ஏனென்றால், அவளது உயிருக்குயிரான காதலன் இப்போது அவளோடு இல்லை. வேலை காரணமாக வெளியூருக்குச் சென்றிருக்கிறான். அதனால், அவன் வரும் வரையில் தனிமையில் வாடிக்கொண்டிருக்கும் அவளுக்கு அழகிய அந்த ஊர் பொலிவிழந்து கிடப்பதைப்போலத் தோன்றியது.

ஊரின் இயற்கை வளங்களெல்லாம் அவளின் இதயத்தைத் தொடவேயில்லை. மற்றவர்களிடம் நிலவுகின்ற மகிழ்ச்சி அவளது உள்ளத்திலே உலவவில்லை. அவளைச்சுற்றி எல்லாம் சரியாகவே இருந்தாலும், முறையாகவே நடந்தாலும் காதலனின் பிரிவு அவளுக்குத் தருகின்ற வேதனையால் இன்பமெல்லாம் துன்பமாகவே அவளுக்குத் தோன்றுகிறது.

காதலன் திரும்பி வந்தால்தான் அவளின் வேதனை தீரும். அவளைத் தழுவும்போதுதான் ஊரின் மகிழ்வும் அவளின் உள்ளத்தை வருடும். அவனோடு கலந்து உறவாடும்போதுதான் ஊரவர்கள் அடைகின்ற இன்பம்கூட அவளின் உள்ளத்தின் கதவுகளைத் தட்டும். அதுவரை அவளுக்கு இருக்கின்ற எல்லாமே இல்லாதனவாகவே இருக்கின்றன.

இத்தகைய காட்சியைப் பின்வரும் பாடல்மூலம் உணர்ந்து இரசிக்கலாம்.

பாடல்:

வேட்டம் பொய்யாது வலைவளம் சிறப்பப்
பாட்டம் பொய்யாது பரதவர் பகர
இரும்பனந் தீம்பிழி உண்போர் மகிழும்
ஆர்கலி யாணர்த்து ஆயினும், தேர்கெழு
மெல்லம் புலம்பன் பிரியின் புல்லெனப்
புலம்புஆ கின்றே – தோழி! கலங்குநீர்க்
கழிசூழ் படப்பைக் காண்ட வாயில்
ஒலிகா வோலை முள்மிடை வேலிப்
பெண்ணை இருவரும் ஆங்கண்
வெண்மணற் படப்பை எம் அழுங்கல் ஊரே


(நற்றிணை. பாடல் இலக்கம்:
38. நெய்தல் திணை. பாடியவர் உலோச்சனார். )

இதன் கருத்து:

தோழியே! காண்டவாயில் என்னும் நமது ஊர் கலங்கிய தண்ணீருடன் மரத்தடிகளாலான கால்கள் சூழ்ந்த தோட்டங்களையும், முற்றிய பனையோலையையும் முட்களையும் சேர்த்து அடைக்கப்பட்ட வேலிகளையும் கொண்டது. உயர்ந்து வளர்ந்த பனைமரங்கள் அங்குள்ளன. அங்கேயிருக்கும் வெண்மணல் திடலிலே உள்ளது சந்தடிமிக்க நமது சேரிப்பகுதி. கடலில் மீன்பிடித்தல் என்றுமே தவறாமல் நடைபெறும் சிறப்பு நமது ஊருக்குண்டு. மீனவர்கள் கிடைத்த மீன்களைப் பொய்யுரைக்காது வரிசெலுத்தி, விலைகூறி விற்றுக்கொண்டிருப்பார்கள். அங்கே கருமையான பனையின் இனிமையான கள்ளைக் குடித்தவர்கள் மகிழ்ந்திருப்பார்கள். இவ்வாறு வளமும், மகிழ்ச்சியும், ஆரவாரமும் உடையதாக நமது ஊர் இருந்தாலும், தேரில் வந்து நம்மை மகிழ்ச்சிப்படுத்துகின்றவனும், கடல்சூழ்ந்த நாட்டவனுமான நம் தலைவன் நம்மைப் பிரிந்திருப்பதனால் இவை எல்லாமே களையிழந்து கிடப்பனபோல நமக்குத் துன்பத்தைக் கொடுக்கின்றவையாய் உள்ளனவே! நான் என்ன செய்வேனடி? (என்று தலைவி தோழியிடம் கேட்பதுபோலத் - தலைவியின் கூற்றாக இந்தப்பாடல் அமைந்துள்ளது)



 


                                                                                                (காட்சிகள் தொடரும்....................................)

 

 

 

 

srisuppiah@hotmail.com