இன்றைய சமூகச் சூழலில் பாலியல் கல்வி அவசியமா?

இந்திராகாந்தி அலங்காரம்

பாலியல் கல்வி சமூகத்தில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை குறைக்கும் என்றும் விபச்சாரத் தொழிலை சட்டப்பூர்வமாக்கினால் காமவெறி பிடித்தலையும் ஆண்களுக்கு தங்கள் உணர்ச்சியை காசு கொடுத்து (காசில்லாதவன் என்ன செய்வான்?)மட்டுப்படுத்திக் கொள்ள உதவும் வடிகாலாக அமையும் என்றும் சமூக அக்கறையுள்ளவர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.

பாலியல் குறித்த அறிவின்மையால் பாலியல் வன்முறைகள் நடைபெறுகின்றன என்றால் அது சமீப காலங்களில் நடைபெறுவது போன்ற கொடூர வன்முறையாக இருக்காது. அதன் தன்மை வேறானதாக இருக்கும்.

பாலியல் கல்வி என்பது மனித உடலின் வளர்ச்சி பற்றிய அறிவியலை அடிப்படையாக கொண்டதுஇந்த அறிவியல் பெண் உடலை புரிந்து கொண்டதிலேயே சில சிக்கல்கள் உள்ளது.

உதாரணத்திறக்கு பெண் மூளை ஆணின் மூளையை விடச்  சிறியது என்ற ஒரு விஞ்ஞானக் கட்டுக்கதை உள்ளது. மூளையின் அளவை எதைக் கொண்டு தீர்மானிக்கிறார்கள்? ஆணோ பெண்ணோ அவரவரது மண்டையோட்டின் அளவைப் பொறுத்து மூளையின் அளவு இருக்கும்.. பெண்ணின் மூளையின் அளவு சிறியதென்றால் மண்டையோடும் சிறியதா? எல்லா ஆண்களுக்கும் மண்டையோடு பெரியதாக இருக்குமா? எந்த அளவு பெரியதாக இருக்கும்? ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறந்த பெண் குழந்தைக்கு மரபணுப்படி அந்த ஆணின் மண்டையோடு அமைந்தால் அது எப்படி சிறியதாக இருக்க முடியும்? மண்டையோடு மட்டும் தந்தைக்குரியதுபோல் பெரிதாக இருந்து மூளை மட்டும் சிறிதாக, விளாம் பழத்துக்குள் இருக்கும் சதை போல இருக்குமா? மருத்துவத்தின் அடிப்படையில் மூளைக்கும் மண்டையோட்டிற்கும் நடுவில் திரவமோ, வெற்றிடமோ, ரத்தக் கட்டுகளோ இருந்தால்  அது ஒரு உடல் குறைபாடு அல்லது நோய். அந்த நபர் இறந்து போக வாய்ப்புள்ளது.

பெண்ணின் மூளை அளவிலிருந்து அந்த கட்டுக்கதை அவளது சிந்தனை முறைக்கு நீட்டிக்கப்படுகிறது. அடுத்து மருத்துவத்தில் எங்கு பார்த்தாலும் கர்ப்ப்பை, மார்பகப் புற்று நோய் விளம்பரங்கள்.. இந்த நோய் பெண்களுக்கு மட்டுந்தான் வரும் என்பது உண்மை. ஆனால் இந்தப் புற்றுநோய்  மட்டுமே பெண்களுக்கு வரும், வருகிறது என்று கூறுவது எதனால்?

மாதவிடாய் காரணமாக, பெண்ணுக்கு ஆணைவிட குறைவான சிவப்பணுக்கள் இரத்தத்தில் இருக்கும், இருந்தால் போதும் என்கின்றனர். மாதவிடாய் காரணமாக ரத்த இழப்பு ஏற்படுவதால் பெண்ணுக்கு ஆணைவிட கூடுதலாக அல்லது குறைந்தபட்சம் ஆணின் அளவுக்காவது சிவப்பணுக்கள் இருக்க வேண்டும். அதுதான் சரியானது. இந்த சமூகத்தில் ஆம்பிளை சிங்கமாக, பொருளீட்டுபவனாக வளர்வதற்கு உடல் அளவில் அதிக கவனம் எடுத்து வளர்க்கப்படுவதால் பெரும்பாலான பெண்களுக்கு இந்த ரத்தச் சோகை பிரச்சினை உள்ளது.

ஆனால் மருத்துவம் பெண் என்றாலே சிவப்பணுக்கள் குறைவாகத்தான் இருக்கும் (அதாவது பெண் என்றாலே அவளது உடம்பினுள் கருப்பை இருக்கும் என்பது போன்ற) கருத்தை வலியுறுத்தி வருகிறது. பெண்ணுக்கு மாதவிடாய் காரணமாக ஏற்படும் இரத்த இழப்பை ஈடுகட்டும் விதமாக அவர்களுக்கு கூடுதலாக இரத்தச் சிவப்புணுக்கள் இருக்க வேண்டும். அதற்கேற்ற உணவை பெண் உண்ண வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும். அதற்குத்தான் விஞ்ஞானம்.

அதை விடுத்து, பெண்ணுக்கு ரத்தச் சிவப்பணுக்கள் குறைவாகத்தான் இருக்கும் என்பதும், அதனால் அவள் உடல் நிலையைப்  பாதிப்புக்குள்ளாக்குவதும், அதை ஒட்டி ஏற்படும் படபடப்பு மனப் பதற்றம் இவற்றை வைத்து பெண்கள் என்றாலே உணர்ச்சி வசப்படுவார்கள், படபடவென பொரிந்து தள்ளுவார்கள் என்று வரையறுப்பதற்கும் எதற்கு விஞ்ஞானம்? இந்த உடல்கூறால் ஏற்படும் பாதுகாப்பின்மையும், வாழ்க்கை குறித்த அச்சமும் பெண்ணை ஒரு ஒட்டுண்ணி போல ஆணைச் சார்ந்து வாழ்பவளாக மாற்றுவதில் பெரும்பங்கு வகிக்கிறது. பாதுகாப்பின்மையின் விளைவாக ஏற்படும் மனஉளைச்சலை வெளியில் காட்ட விடாத சமூகம், அதையும் மீறி வெளிப்படுத்தும் பெண்ணுக்கு பழமைவாதிகள் என்றால் பேயோட்டுவார்கள், நவீன சிந்தனாவாதிகளும், மருத்துவமும் ஹஸ்டீரியா என்று பெயர் குத்தி ஒரு வழி செய்து விடுவார்கள்.

ஆரோக்கியத்தின் வரையறை

பெண் என்பவள் குழந்தை பெறும் ஒரு இயந்திரம். அந்த இயந்திரத்தின் முக்கியப் பாகம் கர்ப்பப் பை. அது ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதில் ஏற்படும் ஆரோக்கியமின்மை மட்டுமே பெண் உடலின் நோய் அல்லது குறைபாடு என்கிற பார்வை நிலவுகிறது.   ஒரு ஆலை முதலாளிக்கு தன் தொழிலாளர்கள் அடுத்த நாள் தன் தொழிற்சாலைக்கு வந்து வேலை செய்யுமளவிற்கு ஆரோக்கியமாக இருந்தால் போதும். அதன் அடிப்படையிலேயே தொழிலாளியின்  கூலியை முதலாளி தீர்மானிக்கிறான். அது போல குழந்தை பெற்றுக் கொள்ளும் அளவிற்கு தகுதியான உடலோடு இருந்தால் போதும் என்ற அளவில்தான் பெண்ணின் உடல் ஆரோக்யமும் அணுகப்படுகிறது.

அதேபோல் குழந்தைப் பிறப்பைத் தடுப்பதிலும் கருத்தடை முறைகள் அனைத்தும் பெண்கள் மீதுதான் பயன்படுத்தப்படுகின்றன.

சாதி பிரச்சினை வரும்போது, பெரும்பாலும எல்லாச் சாதிகளும் நாங்கள் ஒரு காலத்தில் ஆண்ட பரம்பரையினர் என்று கூறிக்கொள்வார்கள். ஆனால, அரசு சலுகை என வரும்போது நாங்கள் எல்லாரும் வறுமைக் கோட்டுக்கு கீழே என்று இறஙகி வந்து விடுவார்கள். அது போல பெண் ஆணின் கைபட்டு குழந்தைப் பெற்றால்தான் முழு மனுசி ஆகிறாள், பிறவிப் பயன் அடைகிறாள், என்று பெருமையடித்துக் கொள்ளும் ஆண் பார்வையுள்ள சமூகம், குழந்தைப் பிறப்பை தடை செய்வது என்றவுடனே, பெண் மட்டுமே தன்னந்தனியாக குழந்தை பெற்றுக் கொள்வதைப்போலவும், அதில் அவளுக்கு மட்டுமே நூறு சதவீதப் பொறுப்பு உள்ளது போலவும், ஆண்களுக்கு அதில் எவ்வித பங்குமே இல்லாதது போலவும் கர்ப்பத்தடை முறைகள் அனைத்தையும்  பெண் உடல் மீது சுமத்தி விடுகிறது,

பாலியல் வன்முறை என்கிற ஆண் அதிகாரத்தை வெளிக்காட்டிய குற்றவாளிக்குக் கூட வேதியியல் ஆண்மை நீக்கம் செய்வதைக் கண்டிக்கிறது (பக்க விளைவுகள் வந்திருமாம், மனித உரிமை மீறலாம்) இந்த ஆண் சமூகமும், அரசும். ஆனால் பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்ணைஇரட்டை விரல்முறையில் மருத்துவப் பரிசோதனைக்கு இவ்வளவு காலமும் உட்படுத்தியது பற்றி எந்த சமநீதி, சமூக நீதி பேசிய ஆண்களும் கூட எதிர்க்கவில்லை. டெல்லிச் சம்பவத்திற்கு பிறகுதான் அது குறித்த விழிப்புணர்வே லேசாக வந்துள்ளது. இது போன்ற அங்கீகரிக்கப்பட்ட வன்முறைகள் எந்த ஆண் கண்ணிற்கும் தெரிவதேயில்லை.

பெண்ணுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்படுவது ஒரு புறமிருக்க, அந்த முறைகள் பெண்ணின் ஒட்டு மொத்த உடல், மன நலத்தை சிதைப்பதாக யந்திரத்தனமாக உள்ளது. தனிப்பட்ட முறையில் தன் கணவன் மட்டுமல்ல அரசே ஒவ்வொரு பெண்ணின் கருப்பை மீதும் அதிகாரம் செலுத்திக் கொண்டிருக்கிறது.மருத்துவம் அறிவியல் பூர்வமாக இருந்தாலும், அறிவும், உணர்வும், உள்ள பெண்ணிண் உடலில் உள்ள கருப்பையை வெறும் பிள்ளை பெறும் இயந்திரத்தின் முக்கியமான ஒரு பாகமாகப் பார்க்கும் பார்வைதான் இதில் ஆதிக்கம் செலுத்துகிறது. பல வருடங்கள் முன்பே .மார்க்ஸ் அவர்கள் எழுதியநமது மருத்துவ நலப் பிரச்சினைகள்என்கிற நூலில் இது நன்கு விளக்கப்பட்டுள்ளது.

ஆணுக்கும் இதே மருத்துவம் விஞ்ஞானப் பூர்வமானக் கருத்தடை முறையை வைத்துள்ளது. அதைச் செய்வதால் எந்த உடல் நலக்கேடும் விளையாது. வழக்கம் போல் வேலை செய்யலாம் என்றெல்லாம் உத்திரவாதம் கொடுக்கிறது. செய்கிறவர்களுக்கு தலைக்கு ஆயிரம் ரூபாய் தரத் தயாராகவும் உள்ளது அரசு. ஆனால் யாரும் செய்யத் தயாராயில்லை.

அடுத்து தாய்மையை புனிதப்படுத்தும் பார்வையின் உச்சமாய் தாய்ப்பால் கொடுப்பது மட்டுமே தாய்மை என்று சுருக்கப் பட்டுள்ளது. விலங்குகள் கூட தாய்ப்பால் கொடுப்பதற்கும் அப்பால் ஒரு குறிப்பிட்ட காலம் முழுப் பொறுப்புடன் தன் குட்டிகளைப் பேணுகிறது. அறிவும், சிந்திக்கும் திறனும், உணர்வும் உள்ள பெண்ணுக்குத் தெரியாதா இவையெல்லாம்.

பெண்ணுக்கு தன் சொந்த உடலின் மீது அதிகாரம் இல்லை. அவள் விருப்பத்தின் பேரில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. தன் கர்ப்பபை மீது தனக்கே அதிகாரம் இல்லாமல் ஜடத் தன்மையாக குழந்தை பெற நிர்பந்திக்கப் படும் நிலைக்கு பெண் தள்ளப்படுகிறாள். ஊரார் முன்பாக தான் குழந்தை பெற தகுதியான உடலுடையவள் என்பதை நிரூபிக்கவும், (குழந்தை பெறாத பெண் இந்தப் பிறவியின் பயனை அடையாதவளாகவும், ஒரு மாற்றுத் திறனாளியை விட மோசமாகவும் கருதப்படுகிறாள்) இந்த குடும்பவாழ்க்கை, அதையொட்டிய சமூக அந்தஸ்து பறிபோய்விடுமோ என்கிற அச்சத்திலும் இருக்கும் ஒரு பெண் குழந்தை பெற்றுக் கொண்டால் அவளது தாய்மை உணர்வு என்ன லட்சணத்தில் இருக்கும். இவ்வாறு அவளது சுதந்திரம் பறிக்கப்படுவதை உணராமல் தடுத்து வைப்பதற்கு உருவாக்கப்பட்டவைதான் இந்த தாய்மை, தியாகம் என்கிற glorification. இந்தக் கருத்தியலும் மருத்துவத்தில் ஊடாடும்.

அதனால்தான் மருத்துவம், தாய்ப்பால் என்னவோ சர்வரோக நிவாரணி என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறது. எய்ட்ஸ் போன்ற நோய் வந்த பெண்கள் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டினால் குழந்தை நல்ல ஆரோக்கியமாக வளருமா? அதற்கும் எய்ட்ஸ் நோய்தான் வரும். அந்தக் குழந்தைக்கு தாயின் ரத்தம் மூலம் கிடைத்த எய்ட்ஸைக் குண்ப்படுத்தும் எதிர்ப்பு சக்தியை அதே தாய்ப்பாலால் கொடுத்து விடமுடியாது.

இது ஆண்களின் உடம்பில் நிகழாத ஒருவிசயம் என்ற அடிப்படையிலிருந்து அது மகத்துவமாக ஆண் உலகால் கருதப்படுகிறது.

தாயின் உடல் என்னவாக இருக்கிறதோ, என்ன உணவை உண்கிறாளோ, என்ன மன நிலையில் இருக்கிறாளோ அதிலிருந்து தான் தாய்ப்பாலின் மகத்துவம், மருத்துவக் குணம் தீர்மானிக்கப்படும். (நமது சமூகம் சாதிய சமூகமாக இருந்தாலும் சாதிக்கொரு உணவை வைத்திருந்தாலும், பெண்ணிண் பேறு கால உணவு வகைகள் அந்தந்தச் சாதிக்கேற்றவாறு இருக்கிறது. நமது சாதி ஒழியாவிட்டாலும் இது போன்ற உணவு முறைகளும் அது குறித்த அறிவும் மட்டும் உலகமயமாக்கலின் விளைவாய் மறைந்து வருகிறது.)

அதில் உலக சுகாதார நிறுவனங்கள் வேறு தாய்ப்பால் குழந்தைகளுக்கு அவசியம் என்று அறிவுரை கூறுகிறது. இந்த அரிய கண்டுபிடிப்பை உலக சுகாதார நிறுவனம் கண்டறிந்து சொல்ல வேண்டிய அவசியமென்ன? அதுபோக தாய்ப்பால் கொடுத்தால் பெண்களின் மார்பழகு பாதுகாக்கப்படும் என்று கூடுதல் அறிவுரையை எதற்கு கூறுகிறது. சமூக மறு உற்பத்திக்கான பெண் உடலை, ஆண் உடலை விட கூடுதல் பொறுப்புடையதாய் இயற்கை படைத்துள்ளதுஅது அதன் இயல்போடு பார்க்கப்பட்ட வரை பிரச்சினையில்லை. எப்போது பெண்ணின் மார்பு அழகுக்கானதாக நுகர்வுக்கானதாக மட்டும் பார்க்கப்படுவது ஆரம்பமானதோ அன்று வந்த பிரச்சினைகள் இவையெல்லாம்.

விஞ்ஞானம் கையாளப்படும் விதம்.

ிஞ்ஞானப் பூர்வமாக பெண் உடலை புரிந்து கொண்ட சில மருத்துவர்கள் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் தந்ததில்லையா? டாக்டர் பிரகாஷ் வெளியில் தெரிந்த உதாரணம். கர்ப்பமாக இருந்த பெண்ணை பரிசோதிக்கிறேன் என்று வல்லுறவு கொண்ட சம்பவம் தமிழ்நாட்டில் நடக்கவில்லையா? சென்ற மாதம் சென்னையில் நடந்த ஒரு பாரட்டு விழாவில் ஒரு மருத்துவர், ‘பெண்களுக்கு உகந்த இடம் சமையல்றைதான், அவர்கள் வெளியில் வருவதும் செல்போனில் பேசிக் கொண்டு திரிவதும்தான் நாட்டில் அதிக பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கிறதுஎன்று ஒரு பொது நிகழ்விலேயே கருத்து தெரிவித்துள்ளார். எனில். அவரிடம் தனிப்பட்ட முறையில் மருத்துவத்திற்கு வரும் பெண், ஒரு பொது வெளியில் இயங்கும் பெண்ணாக இருந்தால் அவர் அந்த நோயாளியை எப்படி அணுகுவார்குறிப்பிட்ட மருத்துவர்களின் தனிப்பட்ட குணத்தால் இந்த தவறுகள் ஏறபடுகிறது என்றும், இதைப் பொதுமைப்படுத்த முடியாது என்றும் நீங்கள் கூறலாம். ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால் மனித உயிரைப் பாதுகாக்கும் மருத்துவத்தை இச்சமூகத்தில் பணத்தாசையால் பணம் கறக்கும் மருத்துவமாக சிலர் மாற்றுவதில்லையா? மருத்துவமும் ஒரு விஞ்ஞானம் தான் என்றாலும் நாங்கள் செய்வதைச் செய்து விட்டோம் மற்றவை கடவுள் கையில்தான் என்று  விஞ்ஞானத்துக்குப் புறம்பாக கூறும் மருத்துவர்கள் இல்லையா. அது போலத்தான் விஞ்ஞான அடிப்படையிலான மருத்துவத்தை கற்றிருந்தாலும், அவர்கள் சமூக அளவில் பெண் பற்றி வைத்திருக்கும் மதிப்பீடும இதில் ஆதிக்கம் செலுத்தும் என்கிறேன்.

ஒரு சமூகத்தில் பணமும் மதமும் அது சார்ந்த கலாச்சாரமும் மனிதனை எப்படி அணுகுகிறதோ, பெண்ணை எப்படிப் புரிந்து கொள்கிறதோ, அதே புரிதல் மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மனதிலும் இருக்கும். அதுவும் அவர்களது செயல்பாடுகளில் வெளிப்படத்தான் செய்யும், வெளிப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

மனித குலத்தை இயக்கும் முக்கியமான உணர்வு எது?

ன்று சித்த மருத்துவத்தில் ஆண் மலடு, ஆண்மைக்குறைவு என்று மூச்சுக்கு முன்னூறு முறை விளம்பரம் செய்யப்படுவதைப் பார்த்து எல்லா ஆண்களும்நம்மீது எவ்வளவு அக்கறை வைத்திருக்கிறது இந்த மருத்துவம்என்று சந்தோசமடைகிறார்களா? அவ்விளம்பரங்களைக் கண்டு எரிச்சலடையும் ஆண்கள் இல்லையா? காரணம் என்ன? அதை மீறிய அதற்கு அப்பாற்பட்ட அன்றாட வாழ்வும் பிரச்சினைகளும் அவர்களுக்கு உள்ளது என்பதுதான்.

மனிதனுக்கு உள்ள ஒரே உன்னதமான உணர்வு, காம உணர்வு என்பது போலவும்அதற்காக மட்டும் உடல் ஆரோக்கியத்தை பேணுவது, அதை ஒட்டி ஏற்படும் நோய்கள், நோய் தடுப்பு முறைகளைப் பற்றி ஆராய்வது என்பதிலும் ஓர் அரசியல் உள்ளதுமனிதன் எவ்வாறு தோன்றினான்? அமெரிக்காவில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால் நமக்கு என்ன பாதிப்பு வருகிறது? ஏன் பாதிப்பு வர வேண்டும்? நாம் விளைவித்த உணவுப் பொருளின் விலைபொருளை நாம் ஏன் தீர்மானிக்க முடியவில்லைஅவற்றின் விலையை யாரோ எங்கிருந்தோ தீர்மானிக்கிறார்களே எப்படி? இது போன்ற கோடிக்கணக்கான விசயங்கள் வானுக்கும் மண்ணுக்கும் இடையில் இருக்கிறது.  இதைப் பற்றிய அறிவின்றி, மனிதர்கள் தான் வாழும் சமூகம், பொருளாதாரம், அரசியல் என்ன நிலையில் இருக்கிறது, அதில் நாம் என்னவாக இருக்கிறோம், நம் பங்கு என்ன என்ற எந்தப் பிரக்ஞையுமின்றி வாழ்வதற்கு இந்த உணர்வைத் தூண்டி விடுவது அவசியமாக இருக்கிறது. (இதன் பொருள் மனிதர்கள் காம உணர்வைத் துறந்து வாழ வேண்டும என்பது அல்ல. அதன் பங்களிப்பு இவ்வளவு பூதாகரப்படுத்தபடுவதில் உள்ள அரசியலை கூற வருகிறேன். அவ்வளவுதான்.)

அதன் பின்னணியில்தான் ஆபாச சிடிக்கள் போன்ற இதர சமாச்சாரங்கள் விற்பனையாகின்றன. அதைத் தயாரித்து விற்க அனுமதிக்கிற சமூகம் மனநோயின் பாதிப்பிலெல்லாம் இதைச் செய்யவில்லை. அதன் விளைவு என்னவாக இருக்கும் எனற அறிவோடுதான் அனுமதிக்கிறது. பெண் ஆணுக்கான பாலியல் பயன்பாட்டுப் பொருள் மட்டுமல்ல, எல்லாவற்றிற்குமான பயன்பாட்டுப் பொருளாக மநு முதல் இன்றைய நவீன சிநதனைவரை பரப்பபடுவதும் அதனால்தான். இந்தக் கருத்தை வலுவேற்றும் வகையிலும் கூட பாலியல் கல்வி வடிவமைக்கப்பட வாய்ப்புள்ளது.

ஆண் குறித்த சமூக கருத்தாக்கங்கள்

ண் ஒன்றுமே தெரியாத குழந்தை மாதிரி (அதாவதுஅந்தவிசயத்தில் மட்டும்) தோல்வியைத் தாங்கமாட்டான், பெண்ணுக்கு அவள் பிறந்த மறுநாளே தாய்மையுணர்வு கொப்பளிக்க ஆரம்பித்து விடும், பெண், ஆணை குழந்தையைப் போல நடத்த வேண்டும், அவனது தேவை எதுவானலும் மனம் கோணாமல் பூர்த்தி செய்ய வேண்டும், அந்த அளவு பக்குவம் பெண்ணுக்கு விரைவிலேயே வந்து விடும் என்றும்கூறுவார்கள். (ஆனால் பெண்ணுக்கு மற்ற அறிவெல்லாம் வராது, வரக்கூடாது. பெண்ணுக்கும் ஆணுக்கும் திருமண வயதில் வித்தியாசத்தை அரசே கடைபிடிப்பதன் காரணமும் இதுதான். முப்பது வயது தாண்டிய ஆண்கள் கூட சிறிதும குற்ற உணர்வின்றி பள்ளியில் படிக்கும் பெண்களை காதலிப்பதும் திருமணம் செய்வதும் இதனால்தான். பெண்களும் இந்தக் கருத்திற்கு பழக்கப்படுத்தப்படுவதாலும் இது நிகழ்கிறது.)

ஆண்களால் எதையுமே அடக்கிக் கொள்ள முடியாது (இப்படியே சொல்லிக் கொடுத்து வளர்த்து தான் தெருவோரத்தில் ஆடு மாடுகள் போல சிறுநீர் கழிப்பது.), எந்த வலியையும் தாங்கிக் கொள்ள முடியாது (இதற்குள் இருப்பது பெண்ணின் பிரசவ வலி மிக அதிகமானது. அதை ஆணுக்கு இயற்கை அளிக்கவில்லை என்பது தான்.) என்று சமூகத்தில் நிலவும் பல (உளவியல்) கருத்துக்கள் பாலியல் குறித்த புரிதல்களிலும் ஆதிக்கம் செலுத்தும். சமூகத்தில் நிலவும் எல்லாக் கருத்தியல்களுக்கும் அப்பாற்பட்ட சுத்த சுயம்புவான அறிவியல் கருத்தாக பாலியல் குறித்த அறிவு உருவாகி விடாது இச்சமூகத்தில்.

ஆண், பெண் மொத்த உடலமைப்பு பற்றியும், அதில் இனப்பெருக்கம் சார்ந்த உடல் மாற்றங்களை பற்றிய அடிப்படைகளைக் கற்றுத்தர வேண்டும். ஏனெனில் உடல் என்பது உணர்வும், அறிவும் கொண்ட ஒரு முழுமை. அதில் இனப்பெருக்க உறுப்பும், அது சார்ந்த ஹார்மோனும் ஒரு பகுதி. இனப்பெருக்க உறுப்பு உடலில் உள்ள மூளை, சிறுநீரகம், இதயம், நுரையீரல் இதர முக்கியமான உறுப்புகளோடு தொடர்புடையது. பதின் வயதில் நம் கண்ணுக்கு  வெளியில் தெரிகிற உடல் உறுப்பு மட்டும் வளர்ச்சியுறாதுஉடலின் அனைத்து உறுப்புகளும் மாறும், அதுவும் நாம் என்ன வாழ்நிலையில் வாழ்ந்து, எந்த வகையான ஆரோக்கியமான உணவை உண்கிறோமோ அதற்கேற்றாற் போல  மாறும். அதோடு நம்மைச் சுற்றியுள்ள சமூகம் நமக்கு கொடுக்கும் அறிவும், கருத்தும் இந்த வளர்ச்சியில் பெரும் பங்கு செலுத்தும்.

மனிதர்களின் உடலை பல பாகங்கள் கொண்ட யந்திரமாக கருதி, அதன் ஒவ்வொரு உறுப்பிற்கும் தனித்தனியாக மருத்துவம் பார்க்கும் இந்த மருத்துவ முறையே அடிப்படையில் சரி செய்யப் பட வேண்டும். இதயம், பல் கண் காது, சிறுநீரகம், நுரையீரல், எனத் தனித்தனி பாகங்களால் ஆனதல்ல உடல். அவற்றை தனித் தனியாக கழட்டினால் இயங்காது. அவற்றை இயக்கும் உயிர்சக்தி அதைப் புரிந்து கொள்ளும் சிந்தனை, அறிவு, உணர்வு என எல்லாவற்றாலும் ஆன கூட்டியக்கம்தான் உடல்அந்த உடலின் உறுப்புகள் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஒன்றின் நலக்குறைபாடு மற்றதைப் பாதிக்கும். சிந்திக்கும் முறையைப் பாதிக்கும், அறிவைப் பாதிக்கும். அது போல நமது சிந்தனையும், அறிவும், உணர்வும் உடலைப் பாதிக்கும்இந்த அடிப்படையிலா பாலியல் கல்வி வடிவமைக்கப் பட்டுள்ளது?

மனிதர்கள் பிறந்ததிலிருந்து தினமும சாப்பிடுகிறோம். அந்த உணவு உடலுக்குள் எங்கு போய் சேருகிறது என்னவாக மாறுகிறது என்கிற அடிப்படை அறிவில்லாமல் தினமும் உணவுண்டு மலம் கழித்துக் கொண்டு வாழலாம். ஆனால் குறிப்பிட்ட பருவ வயதில் பாலுணர்வு சம்பந்தப்பட்ட உறுப்புகள் வளர்ச்சியை மட்டும் அறிந்து கொள்ளாவிடில் குடி முழுகிவிடும் என்று கூறுவது நாம் உயிர் வாழ அவசியமான பசி உணர்வை விட காம உணர்வுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் வெளிப்பாடுதான். காமம் தணியாமல் உயிர்வாழ்ந்து விடலாம், ஆனால் வயிற்றுப் பசியைத் தணிக்காமல் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும், முட்டாளாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் உயிருடன் வாழ முடியாது. மனித குலம் வாழ முடியாது. அழிந்து விடும். இந்த கருத்தை மறுத்து காம உணர்வுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கருத்திற்குப் பின்னும் அரசியல் உள்ளது என்பது நாம் அறிந்ததே. பாலியல் உணர்வு என்பதை அன்பும், புரிந்துணர்வும், அறமும் சார்ந்த உறவாக இல்லாமல் ஒரு நுகர்வு அம்சமாகப்  பார்க்க வைக்கும் அரசியல் தான் அது. உண்ண ஆரோக்கியமான உணவும், வசதியான வாழ்விடமும், போதுமான உழைப்பும், தன் பொழுதுகளை ஆக்கப்பூர்வமாக கழிக்கும் சூழலும், தன் விரும்பியவற்றைக் கற்கும்  சுதந்திரமும், தங்கள் உணர்வை மதிக்கத் தெரிந்த சமூகமும் வாய்க்கப் பெற்ற ஆணுக்கும் பெண்ணுக்கும் பாலியல் கல்வி அவசியமேயில்லை

மனித குல வளர்ச்சி, தனிமனித வளர்ச்சி, உளவியல், மனித ஆளுமை இவற்றில் பாலியலின் பங்கு என்ன என்பதை அறிவுப் பூர்வமாக, அறிவியல் பூர்வமாக ஆராய்வது அவசியமானது. அதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் எல்லா உணர்வுகளையும் மனித வாழ்க்கையையும் தீர்மானிப்பதே பாலியல் உணர்வுதான் என நம்ப வைப்பதில் அரசியல் உள்ளதுஅதனால்தான் ஒரு ஆண் அல்லது பெண் இளமையாய் இருக்கிறார் என்பதைக் குறிக்க எதிர்பாலினரை ஈர்ப்பது என்பதுதான் அளவுகோலாக உள்ளது. மனித மறு உற்பத்திக்கு நூறு சதவீதம் தகுதியான உடலை இளமைக் காலம் கொண்டுள்ளது என்கிற அடிப்படையில் தான் இதைப் பார்க்க முடியும். ஆனால் இந்த இளமைக்கால பருவ வயதிற்குப் பின்னும், முன்னும் வாழ்க்கை இல்லையா? ஒரு ஆண் அல்லது பெண் குழந்தை, சிறுவன், சிறுமி மனதோடு உலகை அறிந்து கொள்ள விரும்பும் மன நிலையை சாகும் வரை கொண்டிருப்பதை நாம் ஏன் சிலாகிப்பதில்லை? உயர்வாக கருதுவதில்லை. அதற்காக மகிழ்ச்சி அடைவதில்லை.

விலங்குகளைப் பொறுத்த வரை பாலுணர்வு அது சார்ந்த நடவடிக்கைகள், இயற்கையால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் உள்ள உணர்வாக ஏற்கனவே தீர்மானிக்கப் பட்டுள்ளது. ஆனால் அதிலிருந்து வேறுபட்டவனாக, பண்பட்டவனாக தன்னைக் கருதிக் கொள்ளும் மனிதன் அந்தப் பாலுணர்வை இருபத்திநாலு மணிநேரமும் அதைப் பற்றியே சிந்திப்பதையும் நடைமுறைபடுத்துவதையுமே நாகரீகமாக, அறிவு வளர்ச்சியாக, அறிவியலாக கருத வைக்கப் படுகிறான். அதன் அடிப்படையிலேயே வாழ்வைத் தீர்மானிக்கிறான். அதனால்தான் ஆணும் பெண்ணும் எதிர்ப்பாலை எந்தளவிற்கு ஈர்க்கிறார்களோ அநத அளவிற்கு உயர்ந்தவர்கள் வெற்றியடைந்தவர்கள் என்ற கருத்தில் மன அமைதி கொள்பவர்களாக உள்ளார்கள். அவ்வாறு பயிற்றுவிக்கப்படுகிறார்கள். ஆனால் பண்பட்ட மனிதன் இந்தப் பாலுணர்வை தன் கட்டுக்குள் அன்பு சார்ந்த ஆண் பெண் நட்புணர்வாக மாற்ற வேண்டும்.
 

இதற்கு என்ன செய்யலாம்?

டல் குறித்த அறிவியல், அதன் அடிப்படையிலான மருத்துவம் இவை இரண்டும் பெண் பற்றிய விளக்கங்களில் தவறு செய்துள்ளன. அது தவிர இதை பயன்படுத்துகிற மருத்துவர்களிடம் உள்ள பெண் பற்றிய சமூகப் புரிதல் வேறு தன் பங்கை ஆற்றுகிறது. இதிலிருந்து உருவாக்கப்படும் பாலியல் கல்வி பல சிக்கல்களைக் கொண்டுள்ளது என்பதைத்தான் இவ்வளவு நீளமாக விளக்க முயற்சித்திருக்கிறேன்

பாலியல் கல்வி தேவையில்லை என்கிற கருத்திற்கு மாற்றாக முதலில், தான் ஒரு பாலியல் ஜந்து மட்டுமே அல்ல என்றும், வேறு சில அடிப்படைக் காரணிகளும் மனித வாழ்விற்கு ஆதாரமானது என்ற புரிதலின் அடிப்படையில் ஆண் வளர்க்கப் பட வேண்டும்.

பாலியல் தினவைத் தீர்த்து கொள்வது மட்டும்தான் ஆண் பெண்ணுக்கான உறவு நிலை என்பதை ஆண் மனதிலிருந்து அழிக்க வேண்டும். குழந்தைப் பிறப்பில் ஆதிகால ஆண் தனக்கு எந்தச் சம்மந்தமும இல்லையென முட்டாள் தனமாக இருந்ததுபோலன்றி, குழந்தைப் பிறப்பில் தன் பங்கின் முக்கியத்துவத்தை, அதன் உணர்வுபூர்வமான மகத்துவத்தை உணர்ந்த ஆணாக மாற வேண்டும. (இதை உணர்ந்த ஆண்கள் அனைவரும் அதை பெண்ணை ஆதிக்கம் செய்யப் பயன்படுத்தவில்லை.) பெண் உடல் குறிப்பிட்ட காலம் கருவைச்சுமப்பதும் பாலுட்டுவதும் இயற்கையின் ஓர் அம்சம். ஆனால் இந்த வகையான எவ்வித உடல் நிர்பந்தமுமின்றி, இயற்கையின் நிர்பந்தமுமின்றி தன் குழந்தை மீது ஒரு ஆண் அன்பு செலுத்துவது அதற்காக வாழ்வது  மனிதாபிமானத்தின் தொடக்கப் புள்ளி. அந்த தந்தைப் பாசம் இங்கு போற்றப்படுவதில்லை. அதனாலேயே ஆண், தனக்கும் பெண்ணுக்குமான உறவை வெறும் பாலியல் நோக்கிலேயே புரிந்து கொள்கிறான். இதுதான் காம உணர்வை மனிதனின் பிரதான  உணர்வாகப் புரிந்து கொள்வதற்கான அடிப்படை.

இந்தச் சமூகத்தில் ஒரு பெண், பெண்ணாக வளர்க்கப்படுவதில்லை, ஒரு தாயாகத்தான்  வளர்க்கப்படுகிறாள். ஆனால், ஒரு ஆண் ஆணாக மட்டுமே வளர்க்கப்படுகிறான். அவ்வாறின்றி ஒரு ஆண் மெல்லுணர்வு கொண்ட தந்தையாகவும், அதன் மகத்துவத்தை உரிய காலத்தில் அறிந்தவனாகவும் வளர்க்கப் பட வேண்டும். இந்த தந்தை உணர்வை, பெண்களுக்கு சிறு வயதிலிருந்தே தாய்மை உணர்வை உணர்த்துவது போல் ஆணகளுக்கும் உணர வைத்தால் அது பல நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.

தந்தையுணர்வு மிக்க  மனிதனாக இந்தச் சமூகத்தில் வாழும் எந்த ஆணும் இது போன்ற வன்கொடுமைகளைச் செய்வதில்லை. இளவயதில் இது போனற கருத்துள்ளவர்கள் கூட தனக்கு குழந்தை பிறந்தால், குறிப்பாக பெண் குழந்தை பிறந்தால் ஒரு நல்ல அப்பாவாக மாறும் போது பெண் குறித்த மதிப்பீடுகள் மாறி விடுகின்றன.

இன்றும் தன் மகளைப் பத்திரமாக வைத்துவிட்டு தன் மகளையொத்த பெண்ணை மானபங்கப்படுத்துவதும், கவர்ச்சிப் பொருளாக ரசிப்பதும் இந்தச் சமூகம் சொல்லிக் கொடுத்த, தான் ஒரு பாலியல் ஜந்து என்கிற  ஆண்மனமும், பெண்ணை ஏமாற்றிச் சுரண்ட பயன்படுத்தப்படும் தாய்மைப் புகழ்பாடுதலும்தான்.

ஆண் முதலில் மனிதனாக வளர்க்கப் பட வேண்டும் அதன் பிறகுதான் அவனால் பெண்ணை சகமனுசியாக அணுக முடியும்அப்படிப் பட்ட ஆரோக்கியமான சூழல் வரும்போது வடிவமைக்கப்படும் பாலியல் கல்வி வேறு மாதிரியானதாக இருக்கும். அதற்கு முன்பாக, சும்மா இருப்பதற்கு எதையாவது செய்ய வேண்டும் என்று  பாலியல் கல்வியை வழிமொழிவதை விட மேற்சொன்ன கருத்தை  வழிமொழியலாம் என்பதையே வலியுறுத்துகிறேன்.

பாலியல் கல்வியை இன்றைய சமூகத்தில் கொட்டிக் கிடக்கும் கேவலங்களோடு கற்றுக் கொடுத்தால், ஒன்று முன்பு போல பதினான்கு வயதில் ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும. அல்லது பெண் பதினான்கு வயதிற்குப் பிறகு வெளியே போகும் போது தன் கர்ப்பத்தைத் தடுத்துக் கொள்ளவேண்டியவற்றை பெண்ணுக்குச் சொல்லிக் கொடுத்து அனுப்ப வேண்டும் (அதிஉயர் கலாச்சாரம்??!!). 

அதோடு பாலியல் தொழிலையும் சட்டபூர்வமாக்கி டாஸ்மார்க் கடைபோல அரசே எடுத்து நடத்த வேண்டும. (அப்போதும் காசில்லாதவன் இது போன்ற பாலியல் வன்முறையில்தான் மிகத் தீவிரமாக ஈடுபடுவான்.) அதன்பிறகு, சமூகம் நாகரீகத்தில் மிகப் பெரிய மைல்கல்லை ஒரே பாய்ச்சலில் தாண்டி விட்டதாய் நாமெல்லாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்???!!!

 

indiragandhi1971@gmail.com