கனகி சுயம்வரம்

அனலை ஆறு இராசேந்திரம்

ழத்தில் எழுந்த சிற்றிலக்கியங்களில் 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த கனகி புராணம் என்னும் கனகி சயமரம் சிறப்பு மிக்கதாகும். வண்ணை நகரில் வாழ்ந்த நடனக்கலை வல்லளான கனகி என்னும் கணிகை மீது பாடப்பட்டது இந்நூல். ஏறத்தாழ நூனூறு விருத்தப்  பாக்களில், புலவர் நட்டுவச் சுப்பையனார் யாத்தளித்த இதன் பெரும்பகுதி காலத்தீயின் வாய்ப்பட்டு நம் கைக்கெட்டாது மறைந்து போயிற்று. ஆறு விழுக்காடு செய்யுள்களே கிடைத்துள வாயினும், அவை கொண்டு நூலின் நோக்கையும் போக்கையும் அறிய இயலுவதாகிறது.

கனகி கவர்ச்சியாலும் நடனக்கலைத் திறத்தாலும் அக்கால ஆடவர் பலரைத் தன் காலடிக்கீழ் வீழ்த்திய வரலாறும், அவளிடம் சிற்றின்ப நலம் துய்த்தோர் நோய் கொண்டு, பாய் கண்டு நின்ற நிலையும் பிறவும் நூலிற் சிறப்பாகப் பேசப்படுகின்றன. சொல், பொருள், தொடை, ஓசை, அணி அழகுகள் விரவிவர முத்தும் பவளமும் கொண்டிழைத்த ஆரம்போல வடமொழியும் தென்மொழியும் கைகோர்த்து நிற்க புலவர் படைத்தளித்த கவிகள் அற்புதமானவையாகும். கனகியின் அங்க அழகுகளும், அவளுடன் தொடர்பு வைத்திருந்த மேட்டுக்குடி ஆடவர்களின் பெயர்களும் குணப் பாங்குகளும், ஈற்றில் நோயால் அவர்கள் துன்புற்ற நிலையும் நூலில் மிக அழகாகச் சித்தரிக்கபட்டுள்ளன.

இன்றைக்கு எழுபத்தைந்து ஆண்டுகள் அளவில் கனகி புராணச் செய்யுள்கள் சிலவற்றின் திறமுணர்ந்த மதுரைத் தமிழ்ச் சங்கத்தைச் சார்ந்த சான்றோர் நூல் முழுவதையும் தேடித் தருவோர்க்கு ஐநூறு உரூபா பரிசு அளிப்பதாக (யாழ்ப்பாணம் ஆ.தி.பா.அ.சங்கத்தினர்க்கு) அறிவித்த காலை, தமிழ் மக்கள் நாவில் பயின்று வந்த இப்பாடல்கள் திரட்டப்பட்டனவெனத் தெரிகிறது. அனைத்துச் செய்யுள்களையும் ஒன்று திரட்டத் தமிழ் ஆர்வலர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் தோல்வியுற்றன வாயினும், சேகரிக்கப்பட்ட இருபத்தி நான்கு செய்யுள்களும் நூல் முழுமையையும் தெரிந்துகொள்ள வழிகாட்டும் பெற்றியனவாய் அமைந்திருப்பது வியப்புக்குரியதே. இப்பணியில் பல ஆண்டுகள் பெரிதும் முயன்ற பேரறிஞர்களான நவாலியூர் திரு.ந.சி.கந்தையாபிள்ளை, வட்டுக்கோட்டையூர் திரு.மு.இராமலிங்கம் ஆகியோர் என்றும் ஈழத்தமிழர் நெஞ்சத்தே அமர்ந்திருக்கும் பேற்றுக்கு உரியராயினர். இந்நூலினைக் கற்ற பேராசிரியர் முனைவர் க.கைலாசபதி அவர்கள் ''அக்காலப் பிரபுக்களின் சீரழிந்த ஒழுக்க நெறியினையும் பொதுவான தார்மீக வீழ்ச்சியையும் நுண்ணிய அனுபவ உணர்வுடன் கனகி புராணம் சித்தரிக்கிறது'' எனக் கருத்துரைத்தார்.

சித்திர மறையோர் வீதி
     சிறந்திடும் வண்ணை யூர்க்குக்
கத்தனாம் வைத்தீ சர்க்குக்
     கனத்ததோர் நடனம் செய்யும்
குத்திர மனத்த ளாகும்
     கொடியிடை கனகி நுற்கு
பித்தனா யுலாம ராலிப்
     பிள்ளையான் காப்ப தாமே!


நூலைப் பிள்ளையார் வணக்கத்துடன் ஆரம்பிக்கும் புலவர் ''பாட்டுடைத் தலைவி கனகி'' என்பதும், அவள் கட்டழகால் ஆடவர்களைத் தன் வலையில் வீழ்த்திப் பொருள் கவரும் வஞ்ச மனமுடைய பொதுமகள்' என்பதும் தோன்ற ''குத்திர மனத்த ளாகும் கொடியிடைக் கனகி'' என்று குறிப்பிடுகிறார்.

நாட்டுப் படலம் கனகியை நமக்கு அறிமுகம் செய்யும் முறையில் அமைந்துள்ளது. ஒன்பான் சுவைகளில் ஒன்றான காமம் கறிக்கு உப்புப்போல் கவிதையில் இடம்பெற வேண்டும் என்னும் சான்றோர் மரபை புலவர் இங்கு மீறிச் செல்கிறார்.

''...................................................
செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடிய ளாகி
அஞ்சொலிள மஞ்ஞையென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்''
என,

காமவல்லி சூர்ப்பனகையின் நடையையும் கோலத்தையும் தீட்டிக் காட்டி அவளை நம் மனக்கண்முன் நிறுத்தும் கவிச்சக்கரவர்த்தி போல காமவல்லி கனகியின் கொங்கைகளைப் பல்வேறு கோணத்தில் படம் பிடித்துச் காட்டுவதன் மூலம் அவள் கவர்ச்சிப் பேருருவை நம்மனக் கண்முன் நிறுத்துகிறார் புலவர்.
 

தடித்தடி பரந்திட் டெழுந்து பூரித்து
     தளதளத் தொன்றோ டொன்றமையாது
அடர்த்தி மையாத கறுத்த கணதனால்
     அருந்தவத் தவருயிர் குடித்து
வடத்தினு ளடங்கா திணைத்தகச் சறுத்து
     மதகரிக் கோட்டினும் கதித்துப்
படத்தினும் பிறங்கும் சுணங்கணி பரந்து
     பருமித்த துணைக்கன தனத்தாள்.


''தடித்து, அடிபரந்து மகிழ்சியால் வீங்கிப் பூரித்து, ஒன்றோடு ஒன்று நெருங்கி, கண்ணிற்பட்ட தவத்தின் மிக்கோர் உயிரைக் குடித்து, அடக்கிக் கட்டிய இரவிக்கைகளைக் கிழித்து, மதம் பொருந்திய யானையின் கொம்புகளைக் காட்டினும் வீறுடையனவாய் தேமல் அழகுறப் படர்ந்து விளங்கும் பெருத்த கொங்கைகளை உடையாள் கனகி'' என்னுமிடத்தே காமச் சுவையின் எல்லை மீறுகை தெற்றெனத் தெரிகின்ற தன்றோ!.

மழையுடன் கூடிய புயற்காற்று நாட்டுள் விளைக்கும் சேதம்போல், வீதிவழிச் சென்ற கனகி ஆடவரிடை ஏற்படுத்திய தாக்கம் அளப்பரியது

நடந்தா ளொருகன்னி மாராச
     கேசரி நாட்டிற் கொங்கைக்
குடந்தா னசைய ஒயிலாய்
    அதுகண்டு கொற்றவரும்
தொடர்ந்தார் சந்யாசிகள் யோகம்
    விட்டார் சுத்த சைவரெல்லாம்
மடந்தா னடைத்துச் சிவ
    பூசையும் கட்டி வைத்தனரே.


அரசகேசரி என்னும் மன்னவன் ஆண்ட யாழ்ப்பாண நாட்டு வீதியில் கொங்கைகள் அசைய கனகி ஒயிலாய் நடந்தாள். அவள் நடைகண்டு பல்வேறு வகையினரான ஆடவர்களும் தம் சிந்தை இழந்து செயல் துறந்து நின்ற தன்மையைச் செய்யுள் சிறப்புறச் சொல்கிறது.

சுயம்வரப் படலத்தில் கனகியை நாடியோர் பட்டியலை வெளியிட்டு, அவர்கள் அனைவரையும் வெளியுலகுக்கு அம்பலப்படுத்துகிறார் புலவர். பாடல்கள் தோழி கூற்றாக அமைந்துள்ளன.

கனகியிடம் சென்றோர் வீட்டு வாயிலில் அவள் கடைக்கண் பார்வை நோக்கிக் காத்துக் கிடக்கின்றனர். அவ்வேளை, தோழி ஒவ்வொருவரையும் அவர்தம் ஊர், பெயர், தொழில், தகுதி முதலியன எடுத்துச் சொல்லிக் கனகிக்கு அறிமுகம் செய்வதாக அமைந்துள்ள கவிதைகள் எள்ளற் சுவைக்குத் தக்க எடுத்துக் காட்டுக்களாய் விளங்குகின்றன. இவ்விடத்தே புலவர் சுப்பையனார் நளவேண்பா ஆசிரியரை நினைவூட்டி நிற்கிறார்.

பொன்னி அமுதப் புதுக்கொழுந்து பூங்கமுகின்
சென்னி தடவும் திருநாடன் - பொன்னிற்
சுணங்கவிழ்ந்த பூண்முலையாய் சூழமரிற் றுன்னார்
கணங்கவிழ்ந்த வேலனிவன் காண்


''பொன்னின் நிறத்தில் தேமல் படர்ந்திருக்கும் அணிகள் விளங்கும் கொங்கைகளை உடையாய்! சூழ்ந்த போரின் பகைவர் கூட்டம் இறந்துபடுதற்குக் காரணமான வேற்படையை உடைய இவனைப் பார்!. இவன் பொன்னி நதியின் அமுதம் போன்ற புதுநீர் அழகிய கமுக மரங்களின் உச்சியினைத் தொடும் வளங்மிக்க சோழநாட்டு மன்னனாவான்''

தமயந்தியின் சுயம்வரத்திற்குச் சென்றிருந்த சோழ மன்னனைத் தோழி அவளுக்கு செய்யும் இவ்வறிமுகம், கனகியிடம் வந்திருந்த மானிப்பாயாரைத் தோழி அவளுக்குச் செய்யும் கீழ்க்கண்ட அறிமுகத்துடன் ஒப்புநோக்கிப் பார்க்கத் தக்கதாகும்.

ஈட்டும் தனத்தையே விரும்பி
     இரண்டு தனமும் தான்கொடுத்து
மூட்டும் காமக் கனலெழுப்பும்
     முகில்போல்; அளகக் கனகமின்னே!
நாட்டுப் புறத்தி லிருப்போரில்
     நல்ல வுடையும் பொய்ம்மொழியும்
காட்டும் மானிப் பாயாரைக்;
     கண்ணாற் பாரும் பெண்ணாரே!


''நின்னிடம் வருவோர்க்கு பணத்திற்காக முலைகளைக் கொடுத்து காமத்தீயை அவர்பால் வளர்க்கும் கனகே! உடம்பில் நல்ல உடையும் வாயிற் பொய்ப்பேச்சும் கொண்டு விளங்கும் மானிப்பாயிலிருந்து வந்த நாட்டுப்புறத்தவரான இவரை கண்திறந்து பார்ப்பாயாக!.''

மானிப்பாயாரைத் தொடர்ந்து, நாட்டுக் கோட்டையிலிருந்து ஈழம் வந்து புடவை வாணிபம் செய்த நல்லாண்டப்பன் என்னும் செட்டியை கனகிக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றாள். அடுத்து, மல்லாகம் நவாலி என்னும் ஊர்களைச் சேர்ந்த இளைஞர் இருவர் பற்றித் தோழி சொல்கிறாள். புத்தூர் மணியகாரன் சின்னையன், தம்பு உடையானுடன் அங்கு வந்திருந்த சேதியை மறுபாடல் சொல்கிறது. கனகியின் மையலில் வீழ்ந்த கோவிற் குருக்கள் ஒருவரை அடையாளம் காட்டுகிறது இன்னொரு பாடல். ''சிவப்பிரகாசம் என்பானும் அவன் தம்பியும் ஒரே நேரத்தில் அவள் வீட்டிற் காணப்பட்டனர்'' என்று சொல்கிறது அடுத்து வரும் பாடல்.

கனகியிடம் சென்றிருந்த கிறித்தவராகிய நியூற்றன் என்பானை அறிமுகம் செய்யும் முறை சுவையானது.

தாலக் கனியொன் றினுக்காகத்
     தரைமேல் மாந்தர் பலர்திரண்டு
வேல்கத் திகள்கொண் டெறிந்துமிக
     விசயம் பொருதும் வளநாடன்
மால்பற் றியநெஞ் சினனாகி
    வந்தான் கனகே மன்றலுக்கு
நீலக் கருங்கார் மேகநிற
    நியூற்ற னிவன்காண் நேரிழையே!


இரு காணிகளின் எல்லையில் விழும் ஒரு பனம்பழத்தின் உரிமைக்காக, இரு பகுதியினராய்க் குழுமி, கத்தி வேல் கோடரி முதலியன கொண்டு போரிடும் யாழ்ப்பாணத்தார் பழக்கத்தை இங்கு எள்ளல் செய்கிறார் புலவர்.

அடுத்த அறிமுகத்தில் அந்நாளில் ஊர்காவற்றுறை பெரிய துறைமுக நகரமாய் விளங்கிய வரலாற்று உண்மை குறிப்பிடப்படுகிறது.

ஊரார் சுணங்கு தோற்றாமல்
    உயர்சாந் தணிந்து வடம்பூட்டி
வாரான் மறைக்கும் தனக்கனகே!
    வரிவண்டூத முகையவிழும்
நீராற் பொலிந்த சரவைவளர்
    நெய்தல் நிலத்தான் வங்க நிறை
ஊராத் துறைக்கு மணியமிவன்
    உடையார் அருணா சலத்தின்மகன்


சரவணையிற் பிறந்து வளர்ந்தவனும், உடையார் அருணாசலத்தின் மகனும் ஊர்காவற்றுறை மணியகாரனாகக் கடமையாற்றியவனுமான பெருமகன் ஒருவன் ''கனகியிடம் சென்றிருந்தமையை மேற்குறிப்பிட்ட செய்யுள் சொல்கிறது. வண்டுகள் வரிப்பாட்டை ஊத அரும்பு மலர்கின்ற, நீர்வளம் பொலிந்த அழகிய ஊராய் சரவணை விளங்கிய கோலம் சிந்தையைக் கவர்கிறது.

இப்படியே, வட்டுக்கோட்டைக் கணக்கன் சுப்பு, கோப்பாய் முத்துக்குமாரு, கறுவற்றம்பி, நன்னி, செல்வநாயகம், ஆனைக்கோட்டை ஆறுமுகம், வைத்தியன் பெரியதம்பி, மாலை கட்டும் பண்டாரம், சூனன், உடுவில் ஒற்றைக் கையன், திருமலைச் சின்னையன் என்போர் கனகியிடம் வந்திருந்ததாகப் பாடல்கள் கூறுகின்றன. இவர்களில் ''திருமலைச் சின்னையன்'' கனகியின் மனத்துக்குப் பிடித்தவனாயிருந்தான் என்கிறாள் தோழி.

பெயரறியா படலத்துக்குரிய ஒரு பாடல் கனகியின் காமவலைச் சிக்கலினின்று தம்பிக்கொண்ட நால்வரை அடையாளம் காட்டுகிறது.

நன்னிய ருறிய றிந்தார்
    நடுவிலார் பூண்டு கொண்டார்
சின்னியோ டொன்றி விட்டான்
    செங்கை யொன்றி லாதசொத்தி
முன்னுளோர் பாட்டைக் கண்டு
    முத்தரும் கைச லித்தார்
நன்னிய கனகி பாடு
    நடுராசி ஆயிற் றன்றே!


''கனகியைக் கூடியோர் நோய்கொண்டு, பாய்கண்டு நின்ற துன்பத்தைக் கண்டு நன்னியர், நடுவிலார், ஒன்றைக் கையன், கோப்பாய் முத்துக்குமாரு ஆகியோர் அவள் தொடர்பை அறுத்துக்கொண்டனர். இவர்கள் வெளியேறக் கனகியின் செல்வாக்குக் குறைந்து, பிழைப்புக் கெடலாயிற்று'' என்பது இங்கு தெரிகிறது.

வெட்டை காண் படலத்துச் செய்யுள்கள் இரண்டும் விளக்கில் வீழ்ந்த விட்டில்களென கனகியுடன் தொடர்பு வைத்திருந்தோர் பெற்ற விளைவைப் பேசுகின்றன.

வெட்டை என்னும் வியாதி தலைப்பட்டுத்
தட்டுக் கெட்டுத் தனித்தனி ஆடவர்
பொட்டுக் கட்டிய பூவையி னாலென்று
முட்டுப் பட்டனர் மூத்திரம் பெய்யவே!

செட்டித் தேர்த்தெருத் தேவ டியார்களுள்
மெட்டுக் காரி கனகியை மேவியோர்
தட்டுப் பட்டுத் தலைவிரி கோலமாய்
முட்டுப் பட்டனர் மூத்திரம் பெய்யமே!


தேரோடும் செட்டித் தெருவில் வாழ்ந்த கணிகையருள் பகட்டுக்காரியாகிய கனகியைக் கூடியோர் மேகநோய் கொண்டு, இனவுறுப்பும் புண்பட்டு சீழும் குருதியும் விந்தும் வடிய, தங்கள் நோய் தாங்க முடியாதோராய் நிலைதடுமாறி  சிறுநீர் கழித்தற்கே இயலாது தலையிற் கைவைத்தவாறு துடித்தனர் என அவை கூறுகின்றன.

கணிகையர் உறவால் ஏற்படும் கேட்டை எடுத்துச் சொல்லி மானிடரை நல்வழிப் படுத்தும் முறையில் அமைந்த கனகிபுராணம் முழுமையாகக் கைக்கெட்டாது போனமை தமிழர் தம் நற்பேறின்மையே ஆகும். மற்றைய புராணங்களின் போக்கிலிருந்து மாறுபட்டு பொதுமகள் ஒருத்தியின்  வாழ்வைப் பாடுபொருளாய்க் கொண்டெழுந்த காரணத்தால் புரட்சிப் புராணம் எனப் போற்றத்தக்க இந்நூல், ஈழத்தெழுந்த ஓர் அரும்பெரும் இலக்கியச் செல்வம் என்பதற்குக், கிடைத்த செய்யுள்களே தக்க சான்றானவையாம்.
 

analaiaraj@hotmail.com