சங்க இலக்கியக் காட்சிகள் - காட்சி 15

 

பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா, அவுஸ்திரேலியா               

 

 

(பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும் சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.)

 

அவளைக் கண்டான், அனைத்தையும் மறந்தான்!

அவன் ஒரு கட்டிளம் காளை. அழகிய உருவம். இனிய உணர்வுகள் நெஞ்சத்தில் எழுச்சிபெற்று விளையாடும் பருவம். ஊரிலே அவனுக்கு நல்ல பெயர். உழைப்பால் உயர்ந்தவன், ஒழுக்கத்தில் சிறந்தவன், உள்ளத்தால் நல்லவன் என்று எல்லோராலும் விரும்பப்படுபவன். அவனது ஊரிலும், அயலூர்களிலும் உள்ள இளம் பெண்கள் அவனிடம் மயங்கினார்கள். அவனோடு உறவாட விரும்பினார்கள். அவனின் அழகிலே சொக்கிய பரத்தையர்கள் தம்மிடம் அவன் சிக்க மாட்டானா என்று ஏங்கினார்கள். ஆனால் அவனோ யாருக்கும் பிடி கொடுக்காமல் இருந்தான்.

எதிர்பாராத விதமாக ஒருநாள் அவனின் கண்ணிலே பட்ட ஒருத்தி அவன் கருத்திலே நுழைந்தாள். அவனது இதயத்தைக் கவர்ந்தாள். வசீகரமான அவளது கண்கள் அவனைச் சுண்டியிழுத்தன. வாளிப்பான அவளது உடலை வாரியணைக்க உள்ளம் துடித்தது. இரகசியமாக அவளின் இருப்பிடம் தேடிச் சென்றான், தனிமையில் அவளைக் கண்டான், தனது விருப்பத்தைச் சொன்னான், அவளது உள்ளத்தை வென்றான். அன்று முதல் களவிலே அவளோடு உறவாடி மகிழ்ந்து வந்தான். அவளையன்றிப் பிறரோடு எந்த உறவையும் கொள்ளாதவனாக இருந்தான். நண்பர்களை மறந்தான். அவளுக்காகத் தன் உயிரையும் கொடுப்பதற்குத் துணிந்தான். தன் வாழ்வின் பயனே அவள்தான் என்று எண்ணி மற்றெல்லாவற்றையும் வெறுத்தான். ஊரறிய அவளைத் திருமணம் செய்துவாழ்வதே இருவருக்கும் சிறந்தது என்று தெரிந்திருந்தும், அதையெல்லாம் எண்ணிப்பார்க்காமல், எண்ணிப்பார்க்க நேரமில்லாமல் களவு உறவிலேயே அவளோடு களித்து மயங்கிக் கிடந்தான்.
சில நாட்களில் அவர்களின் களவு உறவுபற்றிய செய்தி ஊரிலே கசியத் தொடங்கியது. அவனைப்பற்றிய நல்லெண்ணம் குறையத் தொடங்கியது. முன்னர் அவனக்கிருந்த மதிப்பு மறையத் தொடங்கியது.

அதனால் கவலையுற்ற அவனது நண்பன் அவனக்கு அறிவுரை கூறுகின்றான். களவு உறவை விட்டுவிடுமாறு வற்புறுத்துகின்றான். நண்பனின் அறிவுரைக்குப் பதிலாகத் தன் மனநிலை பற்றி நீண்டதொரு விளக்கத்தை அவன் கூறுகின்றான். ' இங்கே பார் நண்பா! நற்பண்பு, நட்பைப் பேணுதல், நாணம் முதலிய எல்லாவகையான நற்குணங்களையும் அறிந்து நடப்பதில் உன்னைவிட சிறந்தவனாகத்தான் நான் இருந்தேன். ஆனால், என் மனதைக்கவர்ந்த அழகியாகிய அவளது கவர்ச்சியான கண்களைக் கண்டபின்னர் எல்லாவற்றையுமே இழந்துவிட்டேன். இனிச் செய்வதற்கு ஒன்றுமில்லை. அவளோடு உறவாடுதலேயன்றி வேறெதையும் என்னால் செய்யமுடியாது' என்று கூறுகின்றான்.

நற்றிணையில் இடம்பெற்றுள்ள கீழ்க்காணப்படும் பாடல் இத்தகையதொரு காட்சியை நமது மனக்கண்ணின் முன்னே கொண்டுவந்து நிறுத்துகின்றது.


நயனும் நண்பும் நாணுநன்கு உடைமையும்
பயனும் பண்பும் பாடறிந்து ஒழுகலும்
நும்மினும் அறிகுவென் மன்னே! கம்மென
எதிர்த்த தித்தி ஏர்இள வனமுலை
விதிர்த்துவிட் டன்ன அந்நுண் சுணங்கின்
ஐம்பால் வகுத்த கூந்தல் செம்பொறித்
திருநுதல் பொலிந்த தேம்பாய் ஓதி
முதுநீர் இலஞ்சிப் பூத்த குவளை
எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரிமதர் மழைக்கண் காணா ஊங்கே


(நற்றிணை பாடல் இல: 160. குறிஞ்சித்திணை. பாடியவர்: (தெரியவில்லை)


இதன் கருத்து:

அடிவயிற்றில் அழகிய தேமலை உடையவள், அள்ளித் தெளித்தது போன்றிருக்கும் பொன்னிறமான புள்ளிகளைக் கொண்ட வனப்பான மார்பகங்களைக் கொண்டவள், ஐந்து பகுதிகளாக வகுத்துப்பின்னி முடித்த கூந்தலைக் கொண்டவள், சிவந்த நெற்றியிலே கவினுறப் படிந்துகிடக்கும் தலை மயிர்களைக் கொண்டவள், நீண்டகாலமாகப் பொய்கையிலே நிலைபெற்றுக் கிடந்த நீரில் பூத்திருக்கும் இரண்டு குவளை மலர்களை எதிரெதிரே தொடுத்துவைத்ததைப்போல அமைந்திருக்கும் சிவந்த ரேகைகள் படர்ந்த கண்களையடையவள் - அத்தனை அழகி அவள். அவளை நான் காண்பதற்கு முன்னர் நற்பண்பு. நட்பு, நாணம், பண்பு, பாடறிந்து ஓழுகுதல் எல்லாவற்றையும் அறிந்து அவற்றிற்கமைவாக நடப்பதில் உன்னைவிச் சிறந்தவனாகத்தான் நான் இருந்தேன். அவளைக்கண்டபின்னர் - அவளோடு உறவாடத் தொடங்கிய பின்னர் - அத்தனையையும் இழந்துவிட்டேன். இனிமேல் அவற்றைப்பற்றிப் பேசிப் பயன் என்ன?

உள்ளத்தை முற்றாகக் கவர்ந்துவிட்ட ஒருத்தியின் உறவு கிடைத்துவிட்டால், உலக வாழ்வின் உன்னத குணங்களையும், சிறப்பான நடத்தையையும்கூட, மனிதன் பொருட்படுத்தாமல் விடுகின்ற நிலைமை பண்டைத் தமிழகத்திலும்கூட இருந்திருக்கிறது என்பதை இந்தக் காட்சி நமக்கு எடுத்துக்காட்டுகின்றது.


                                                                                                (காட்சிகள் தொடரும்....................................)

 

 

 

 

srisuppiah@hotmail.com