'குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பது தேசத்தின் அவமானம்" - நூலக வாசகர் வட்டத்தில் பேச்சு

தொகுப்பு: கவிஞர் மு.முருகேஷ

வந்தவாசி.ஜூன்.19. வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தில் நடைபெற்ற உலகக் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்புத் தின ' சிந்தனைச் சாரல்' சிறப்பு நிகழ்வில், கல்வி கற்கும் வயதில் வருமானத்திற்காக குழந்தைத் தொழிலாளிகள் இருப்பது ஒரு தேசத்தின் அவமானமான செயலாகும் என்று நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் பேசும்போது குறிப்பிட்டார்.

கிளை நூலகர் கு.இரா.பழனி அனைவரையும் வரவேற்றார்.

வந்தவாசி அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மு.அன்புக்கரசி 'குழந்தைகளும் புத்தகங்களும் 'எனும் தலைப்பிலும், பொறியியல் கல்லுரி மாணவர் நாகா அதியன் 'நானும் புத்தகங்களும்' எனும் தலைப்பிலும் கருத்துரையாற்றினார்.

நிகழ்விற்கு, தலைமையேற்ற நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் 'குழந்தைத் தொழிலாளர் இனி வேண்டாம்' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.அவர் பேசும்போது, சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆன போதிலும், நமது தேசத்தில் இன்னும் குழந்தைத் தொழிலாளர் இருக்கிறார்கள் என்பது மனிதநேயமுள்ள ஒவ்வொருவரின் மனசாட்சியையும் வருத்தமடையச் செய்யும் விஷயமாக உள்ளது.

5 வயது முதல் 14 வயதுவரை அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி வழங்க வேண்டும் என்கிற சட்டம் நம் நாட்டில் நடைமுறையில் இருந்தும், அதன் பலனை இன்னும் பெற முடியா நிலையில் குழந்தை உழைப்பாளிகள் உள்ளனர். முந்தைய கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் சுமார் ஒரு கோடியே இருபத்தாறு இலட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கின்றார்கள். உத்திரப்பிரதேசம் மாநிலம் இந்தியாவிலேயே அதிக குழந்தைத் தொழிலாளர்களைக் கொண்டுள்ளது.சுமார் 19 இலட்சம் குழந்தைகள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பசியின் பொருட்டு குழந்தைக் கல்வி தடை பட்டுவிடக்கூடாது என்பதற்காக இந்தியாவிலேயே முன்னோடியாக பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தது தமிழகம் என்பதில் நாம் பெருமை அடையலாம்.

2004 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, தமிழக அளவில் தருமபுரி மாவட்டம் 10,126 குழந்தைத் தொழிலாளர்களைக் கொண்டு முதலிடத்தில் உள்ளது. நமது திருவண்ணாமலை மாவட்டம் 1436 குழந்தைத் தொழிலாளர்களுடன் 14ஆவது இடத்தில் உள்ளது. நமது மாவட்டத்தில் 225 குழந்தைத் தொழிலாளர்களுடன் புதுப்பாளையம் ஒன்றியம் முதலிடத்தில் உள்ளது. எந்த ஒரு நாட்டிலும் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பது அந்த தேசத்தின் அவமானமாகவே அமையும் என்றார்.

'தமிழ்ச் சான்றோரை கெளரவித்தல்' எனும் நிகழ்வில், கீழ்வில்லிவலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜே.வசந்த ராவ் பாராட்டப் பெற்றார்.

ரூபாய்.ஆயிரம் செலுத்தி நூலகப் புரவலர்களாக ச.காசிஇசாமி.சீனிவாசன், க.சண்முகம், சுரேஷ்பாபு, ஜே.வசந்த ராவ் ஆகியோர் இணைந்தனர்.

மூன்றாம் நிலை நூலகர் பூ.சண்முகம் முன்னிலை வகித்தார்.
ஊர்ப்புற நூலகர் ஜா.தமீம் நன்றி கூறினார்.

படக் குறிப்பு:
வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தில் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற ' சிந்தனைச் சாரல்' குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு சிறப்பு நிகழ்வில் பங்கேற்ற அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மு.அன்புக்கரசிக்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் நினைவுப் பரிசு வழங்கியபோது எடுத்த படம். அருகில் கிளை நூலகர் கு.இரா.பழனி, மூன்றாம்நிலை நூலகர் பூ.சண்முகம்,
ஊர்ப்புற நூலகர் ஜா.தமீம் ஆகியோர் உள்ளனர்.