சான் பிரான்சிஸ்கோவில் முத்தமிழ் விழா !

தகவல்: சதுக்கபூதம்

சான் பிரான்சிஸ்கோ: சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்றம் சார்பில் முத்தமிழ் விழாவும், சேவியர் தனி நாயகம் அடிகளாரது நூற்றாண்டு விழாவும் வளைகுடா பகுதி சான் ரொமானில் கடந்த சனிக்கிழமை (13-07-2013) வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

காலை முழுவதும் வளைகுடா பகுதி தமிழர்கள் நடத்திய தமிழ் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழிசையில் இந்து, கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய பாடல்களுடன் சங்க இலக்கிய பாடல்களும் நல்லிசையுடன் பாடப்பட்டன.

முக்கியமாக அயல்நாட்டில் வளர்ந்தாலும், தமிழ் பாடல்களை குழந்தைகள் தெளிவான தமிழில் அழகாக உச்சரித்து பாடியது அனைவரையும் கவர்ந்தது. இசை நிகழ்ச்சியில் பரதநாட்டியமும் இடம் பெற்றது. மதியம் நடந்த இயல் விழாவில் தமிழ் சான்றோர்களது பேச்சு இடம் பெற்றது. தமிழ் ஆராய்ச்சி மற்றும் உலக தமிழ் மாநாடு போன்றவற்றிற்கு காரணகர்த்தாவாகவும்இ தமிழின் புகழை நமக்கு நாமே பேசுவதை விடுத்து உலகில் உள்ள பிற நாட்டவர்களிடமும் பரவ செய்த சேவியர் தனிநாயகம் அடிகளார் பற்றி பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை மற்றும் விஜயலட்சுமி ரங்கராஜன் ஆகியோர் விரிவாக பேசினர்.

கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் பிளேக் வென்ட்வொர்த் கலிபோர்னியா பல்கலைக்கழக பெர்க்லி வளாகத்தில் தமிழ் கல்வியினை மேம்படுத்த வேண்டிய முயற்சிகள் பற்றி கூறினார். திரு சி.மகேந்திரன் அவர்கள் இன்றைய சூழ்நிலையில் உலகளாவிய தமிழர்களை எதிர் நோக்கியிருக்கும் பிரச்சனைகள் குறித்து பேசினார். பேராசிரியர் நிர்மலா மோகன் நாடக தமிழ் என்ற தலைப்பில் சங்க காலத்திலிருந்து இந்த காலம் வரை தமிழில் வளர்ந்த நாடகக்கலை பற்றி பேசினார். பேராசிரியர் இரா. மோகன் அவர்கள் தமிழ் உலா என்ற தலைப்பில் பேசினார். அவரது
100வது நூலான கவிதை களஞ்சியம் என்ற நூல் இவ்விழாவில் வெளியிடபட்டது.தமிழ் மன்றத்தின் தலைவர் திரு ஜெயக்குமார் இவ்விழாவை தொடங்கி வைத்தார். தமிழ் மன்றத்தின் பணிகளையும் இனி நடக்க இருக்கும் நிகழ்வுகள் பற்றியும் துணை தலைவர் திரு ஆறுமுகம் விவரித்தார். திரு தயா அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

 

நன்றி - இரா.இரவி