'கவியரசர் கண்ணதாசன் முதல் கவிஞர் வாலி வரை' மதராஸ் ஆர்ட்ஸ் கலாச்சாரக் கழகம் நடத்திய கருத்தரங்கம்    

புதுவை இராமன்    

விஞர்கள் பிறப்பதில்லை - கருவிலே திருவருள் பெற்றவர்களாக உருவாக்கப்படுகிறார்கள். அவ்வகையில் உலகில் வாழ்ந்து மறைந்த மாபெரும் கவிஞர்களின் கவிதைகள் அத்தனையும் காலத்தால் அழியாத நமக்குக் கிடைத்த அற்புத கருவூலம் என்பதை எவரும் மறுக்க முடியாதுஅவர்கள் எழுதிய அத்தனை கவிதைகளுமே காலத்திற்கு ஏற்ற வகையில் குறிப்பறிந்து, பொருளுணர்ந்து, அனைத்துச் சமுதாய வாழிவியல் நிலை அறிந்து, கலை கலாச்சாரத்தின் உயர்விற்கு பெருமை சேர்த்துள்ளன. யதார்த்தமாகவும், மொழியின் தாக்கத்துடன் மிக நுட்பமாகவும், தீர்க்க சிந்தனைக் கருத்துக்களைக் கொண்டதாய் அனைவரும் படித்தோ, கேட்டோ இன்புற வைத்து பயனடையச் செய்துள்ளதும் அவர்களின் கவிப் புலமைத்திறனுக்கும், ஆற்றல்களுக்கும் சான்றாக அமைந்து அன்று தொட்டு இன்று வரை அனைத்து கவி ஆர்வலர்களுக்கு மட்டுமின்றி கலை இலக்கிய ஆர்வலர்களுக்கும் மிக மகிழ்ச்சியையும், புத்துணர்வையும் தந்து கொண்டிருக்கிறது என்றால் மிகையில்லை. அதிலும்  அமரர்களாகிய கவியரசர் கண்ணதாசனும், கவிஞர் வாலி ஆகியோர் எழுதியுள்ள பல்லாயிரக்கணக்கான பாடல்கள் அனைத்தும் உலகம் உள்ள வரை அனைவராலும் போற்றப்பட்டு நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அந்த அளவிற்கு அவர்களின் படைப்புக்கள் அனைத்தும் பாமரன் முதல் படித்தறிந்த சான்றோர் வரை அனைவரையும் கவர்ந்துள்ளது தான் அவர்களின் கவித்துவத்திற்கு கிடைத்த பெரும் அங்கீகாரமாகும்.

அவ்வகையில் கனடாவில் உள்ள தமிழகத்தைச் சார்ந்த தமிழர்களின் கலாச்சார அமைப்பான மதராஸ் ஆர்ட்ஸ் கலாச்சாரக் கழகம் (Madras Arts & Cultural Association. Canada), கடந்த  அன்று பிற்பகல் கென்னடி - ஹை வே 14ல் அமைந்துள்ள ஆர்ய சமாஜ் மையத்தில் 'கவியரசர் கண்ணதாசன் முதல் கவிஞர் வாலி வரை' என்ற தலைப்பில் சிறப்பானதொரு கருத்தரங்கினை பேராசிரியர் திரு பசுபதி அவர்கள் தலைiயில் இம்மாபெரும் கவிஞர்களை நினைவு கூறி அஞ்சலி செலுத்தும் வகையில் பொருத்தமாய் நடத்தி வருகை புரிந்திருந்த அனைவரையும் இன்புற வைத்தது. இச்சிறப்பு நிகழ்விற்கு தமிழகத்திலிருந்து கனடாவிற்கு வருகை புரிந்துள்ள  புகழ் பெற்ற இலக்கியப் படைப்பாளியும், கவிதை உறவு என்ற மாத சஞ்சிகையை கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் வெளியிட்டு வரும் அதன் பிரதம ஆசிரியரும், கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இந்த ஆண்டு வழங்கிய இலக்கிய விருது பெற்றவருமான பேராசிரியர் திரு ஏர்வாடி ராதாகிருஷ்ணன் அவர்கள் பிரதம விருந்தினராய்க் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றிச் சிறப்பித்தார். இந்நிகழ்விற்கு இங்குள்ள பல கலை இலக்கிய ஆர்வலர்கள், கவிஞர்கள், படைப்பாளிகள், ஊடகவியாளர்கள் மற்றும் இச்சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

சங்கத் தலைவர் டாக்டர் ரகுராமன் அவர்கள் அனைவரையும் வரவேற்று முன்னுரை ஆற்றி விழா நாயகர்களை அறிமுகப்படுத்தி வைத்தார். தலைமையுரை ஆற்றிய பேராசிரியர் டாக்டர் பசுபதி அவர்கள் கவிஞர் கண்ணதாசனையும், கவிஞர் வாலியையும் பற்றி மிகச் சுருக்கமாக தனது கருத்துக்களை முன் வைத்தார். குறிப்பாக இருவருமே தமிழ்த்திரைப்படத்துறையில் இரு துருவ நடசத்திரங்களாய் ஜொலித்தவர்கள் என்பதற்கு சான்றாக பலவித மேற்கோள்களை எடுத்துரைத்ததோடு, கடந்த வாரம் மறைந்த கவிஞர் வாலியைப் பற்றி அனைத்து ஊடகங்களும், வானொலி, தொலைக்காட்சி போன்றவையும், இணைய தள தகவல்களும் இது வரை எந்தவொரு கவிஞனுக்கும் அளிக்கப்படவில்லை என்பதையும் சூட்டிக்காட்டி, அவர்களது கவிதைகள் அத்தனையும் இனிமை, இளமை, புதுமை என்று புகழாரம் சூட்டினார்அவரது உரையைத் தொடர்ந்து பிரதம விருந்தினர் பேராசிரியர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன் அவர்களோ ஒரு மூத்த இலக்கியவாதியாகவும், பிரபல கவிஞராகவும், தனக்கும் இக்கவிஞர்களுக்கும் உள்ள தொடர்பு, நட்பு, திரைப்படத்துறையில் அவர்கள் பெற்ற புகழ், சாதனைகள், அரசியல், திரைப்படத்துறையில் உள்ள இசை, இயக்குனர்கள், நடிகர்கள் மெல்லிசைப் பாடகர்கள், கதாசிரியர்களிடையே ஏற்பட்ட கருத்து மோதல்கள், ஆகியவற்றையும், கவிஞர் வாலிக்கு வாலி என்ற பெயர் ஏற்பட்ட விபரத்தையும், இரு கவிஞர்களின் பாட்டெழுதும் திறன், தமிழக முன்னாள் முதல்வர் திரு எம்.ஜி.ஆர் மற்றும் இசை இயக்குனர் திரு எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரின் மதிப்பும், நட்புணர்வும் தான் இவ்விரு மேதைகளின் சாதனைகளை உலகறிய வைத்து பெருமைப்படுத்தியுள்ளதை விவரித்தார். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து கவிஞர்களையும் ஒன்றிணைத்து கவிஞர் வாலியை அனைத்துக் கவிஞர்களும் சந்தித்து உரையாடி, புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பாக ஒரு மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வினை தான் தமிழகம் திரும்பியதும் நடத்த இருந்ததாகவும்ஈ அதற்கு திரு வாலி மனதார பாராட்டி சம்மதித்தது நிறைவேறாமல் போனதை தனக்கு பெரும் இழப்பாகும் என்றார். மேலும் திரைப்படத்துறையில் ஒரு சில படங்களுக்கு இவர்கள் பாடல்கள் எழுதும் போது ஏற்பட்ட சம்பவங்களை மிக நகைச்சுவையுடன் விவரித்தது, நம்மில் பலர் அறிந்திருக்க முடியாததாகும். இடைவேளையைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பங்குகொhண்ட பிரபலங்களான டாக்டர் சுந்தர்ராஜன், பேராசிரியர் சங்கர், கவிஞர் புகாரி, எழுத்தாளர் அகில், கவிதாயிணி உஷா மதிவாணன் ஆகியோரும் நானும் இரு கவிஞர்கள் பற்றிய கருத்துக்களை மலரும் நினைவாகப் பகிர்ந்துகொண்டோம்.

இரு கவிஞர்களும் காலத்தில் அழியாத கவிநாயகர்களாக உலகை வலம் வந்து தமிழ்கூறும் நல்லுகம் உள்ளவரை அனைவரின் மனதிலும் நீக்கமற நிலைத்திருப்பார்கள் என்பதை அன்றைய கருத்தரங்கம் நினைவஞ்சலியாக அமைந்து ஒரு இனியதோர் மாலைப்பொழுதாய் அமைந்தது.