கனவிலே ஒரு சிங்கம்

ஜெயந்தி சங்கர்

பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் பேரரசர் டாங் மிங் ¤வாங் தன் உறக்கத்தில் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் வந்த ஒரு சாதாரண குடிமகன் ஒருவன் துள்ளலான நடனமாடினான். அவனது முகம் அசைவுகள் எல்லாம் ஒரு சிங்கத்தினது போன்றிருந்தன. அவனது உடையோ கவர்ச்சியுடன் வண்ணமயமாக இருக்க, அவனைச் சுற்றி எட்டு முரசுகள் முழங்கின. கனவில் கண்டதை நினைத்தபடியே ஆச்சரியத்தில் சடாரென்று விழித்தெழுந்தார் மன்னர். தான் கனவில் பார்த்தவற்றை விளக்கி அன்றே சிங்க நடனத்துக்கான உடையைத் தயாரித்து சிங்கத்தைப் போன்ற நடனமும் அரங்கேற்ற ஆணையிட்டார். அன்றிலிருந்துவிழிக்கும் சிங்கம் என்ற பொருளில்ஸிங் ஷி என்றழைக்கப்பட்ட சிங்கநடனம் சீனக் கலாசாரத்தின் ஒரு பகுதியாகிப் போனது. சிங்க நடனத்தின் தோற்றம் குறித்துச் சொல்லப்படும் பல சுவாரஸியக் கதைகளில் இதுவும் ஒன்று.

ஆயிரமாண்டுகள் பழமை கொண்ட பௌத்த நாட்டுப்புறப் பாடல்களில் சிங்கநடனம் பற்றிய ஏராளமான குறிப்புகள் இருக்கின்றன. இத்தனைக்கும் சீன தேசத்தில் சிங்கங்களே இருந்ததில்லை. உண்மையான சிங்கங்களுக்கும் நடன சிங்கங்களுக்கும் உருவத்தில் நிறைய வேறுபாடுகள் நிலவுகின்றன என்பது ஒருபுறமிருக்க, விலங்குகளின் அரசனான சிங்கம் இன்றும் சீனக் கலாசாரத்தின் முக்கிய கூறுகளுள் ஒன்றாகவும் புனிதம், நல்லதிருஷ்டம், வலிமை ஆகியவற்றைக் குறிப்பதாகவும் கருதப்படுகிறது.

இந்த சிங்கநடனம் எங்கிருந்து வந்திருக்கலாம் என்ற கேள்விக்கு பதிலாக சீனத்தில் பல்வேறு கதைகள் இருந்தாலும், உறுதியாக இது தான் அதன் துவக்கம் என்று சொல்லக் கூடிய தெளிவு அப்பதிவுகளில் இல்லை. பௌத்தம் இந்தியாவிலிருந்து போயிருப்பதால் சிங்கநடனமும் இந்தியாவிலிருந்து சீனத்துக்குப் போயிருக்கலாம் என்ற ஒரு நம்பிக்கையும் நிலவுகிறது.

வணிகப்பாதையின் மூலம் இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையே நிறைய கலாசாரப் பரிவர்த்தனைகள் நிகழ்ந்திருக்கின்றன. வழியில் பயணிகள் கொடிய விலங்குகளிடமிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ள சிங்கநடனம் உதவியிருப்பதற்கான வரலாற்றுச் சான்றுகளும் இருக்கின்றன.

சிந்திரப் புத்தாண்டு பிறந்த நான்காம் நாள் முதல் பதினைந்தாம் நாள் வரை சீனாவில் சிங்க நடனக் குழுக்கள் கிராமம் கிராமமாகப் போய் ஆடுவார்கள்.

வீட்டின் எல்லாத் திசைகளிலும், முற்றத்தின் மூலைமுடுக்கெல்லாம் கூட சிங்கம் தன் கண்ணை உருட்டி விழித்துப் பார்க்கும். அவ்வாறு பார்த்தால் ஒளிந்து கொண்டிருக்கும் தீயசக்திகளும் துரதிருஷ்டங்களும் ஓடி விடும் என்பதே நம்பிக்கை. வீட்டினர் சிங்கத்தின் முதுகில் தம் குழந்தைகளை ஏற்றி இறக்கி பின்னர் ஐந்து வண்ண நூலிழை ஒன்றைப் பிடரியில் கட்டி குழந்தைக்கு ஆரோக்கியத்தையும் ஆயுளையும் அருளுமாறு சிங்கத்திடம் வேண்டுவர். ஒவ்வொரு இரவும் வீடுவீடாகப் போய் ஆடி, வீட்டார் கொடுக்கும் அரிசி பணம் போன்றவற்றைப் பெற்றுக் கொண்டு, அவற்றைத் தன் குழுவிற்காகச் சேமிப்பர். அத்துடன், ஒரு பங்கை எளியோருக்குக் கொடுத்து உதவுவார்கள்.

சிங்கப்பூர் போன்ற வேறு நாடுகளிலும் சிந்திரப் புத்தாண்டின் போது நிறைய இடங்களில் காண முடியக் கூடிய சிங்கநடனம் பலரும் நினைப்பதைப் போல வெறும் கண்ணைக் கவரும் வண்ணங்களுடனான நடன அசைவுகள் மட்டுமல்ல. அதையும் தாண்டி ஒரு சடங்காகவே சீனக் கலாசாரத்தில் விளங்கி வருகிறது. கண்ணைப் பறிக்கும் வண்ண உடைகளுடன் பலர் சேர்ந்து ஆடப்படும் சிங்கநடனம் காண்பதற்கு மிகவும் அழகானது. இருப்பினும், நடனத்தைக் குறித்து அறிந்த பிறகு காணும் போது மட்டுமே ஒவ்வொரு நடனப் பகுதிக்கும் பொருள் புரிந்து ரசிக்க முடியும்.

சீனாவின் வரலாற்றையும் கலாசாரத்தையும் தொடர்ந்து தன்னில் ஏற்றுக் கொண்டு உருவானதாக இருக்கிறது. சீனத்தின் தற்காப்புக் கலைகளிலும் சிங்க நடனத்துக்கு மிக முக்கிய இடமுண்டு.

புராணங்களின் படி, ஒரு சிறுகிராமம் எலிகள் பெருகியதால் அவதிப்பட்டது.

ஒருநாள் சிங்கம் ஒன்று தோன்றி எல்லா எலிகளையும் தின்று விட்டது. ஆனால், எலிகள் முழுக்க மறைந்ததும் கிராமத்து மக்களைத் தின்ன நினைத்தது சிங்கம்.

அங்கேயிருந்த புத்த பிக்கு சிங்கத்தை அடக்கி உட்கார வைத்து பௌத்தத்தைக் கற்பித்தார். சிங்கம் சாதுவாகி, கிராமத்தினரை எதிரிகளிடமிருந்து காத்தது.

இந்தக் கதையின் படி சிங்கம் காக்கும் கடவுள் நிலைக்கு உயர்த்தப்படுவதை நாம் காணலாம்.

இதே கதையைச் சிறுமாற்றத்துடன் சொல்வதுமுண்டு. கிராமத்தினர் சிங்கத்தின் தலையை வெட்டி விடுவர். அதன் பிறகு, போதிசத்வரின் அவதாரமான கருணை தெய்வம் குவான்யின் சிங்கத்தின் மீது இரக்கப்பட்டு அதன் தலையை உடலுடன் பொருத்தி ஒரு சிவப்பு ரிப்பன் கட்டி உயிர்ப்பிக்கும். இதனால் தான் இன்றும் சிவப்பு ரிப்பன் துரதிருஷ்டத்தை விரட்டும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

நன்றிபாராட்டும் விதமாக சிங்கம் பௌத்தத்தைத் தழுவும். குவான்யின் அதன் ஆசிரியையாக இருப்பார். ஒவ்வொரு ஆணின் ஆழ் மனதிற்குள்ளும் ஒரு பெண் மனமுண்டு என்பது இதன் தாத்பரியம் என்று நம்புபவர்களும் இருக்கிறார்கள்.

தீய சக்திகளிடமிருந்து நாட்டு மக்களைக் காக்கும் வாயிற் காப்போனாக விளங்குவது சிங்கம் எனும் பொதுநம்பிக்கை சீனர்களுக்கு முற்காலத்திலேயே இருந்திருக்கிறது. இன்றும் ஆலயங்கள் மற்றும் அதிகாரத்துவ கட்டடங்களின் வாயிலில் இருபுறமும் இரண்டு சிங்கங்கள் இருப்பதை நாம் பார்க்கலாம். ஆண் சிங்கம் வலதுபுறமும் பெண் சிங்கம் இடதுபுறமுமாக அமைந்திருக்கும். ஆண் சிங்கத்தின் வலது கால் கலைநயத்துடனான அலங்காரப்பந்து ஒன்றின் மீதும் பெண் சிங்கத்தின் இடது கால் கோப்பை ஒன்றின் மீதும் இருக்கும். சிங்கத்தின் பிடரி மயிரிலிருக்கும் சுருள்களின் எண்ணிக்கை அவ்விடத்து அதிகாரிகளின் அதிகார அந்தஸ்தைப் பொருத்தே அமையும். சீனத்தில் சிங்கம் ஆசிகளைக் கொடுக்கும் அதிருஷ்டத்தின் குறியீடு என்பதால் சுபநிகழ்வுகளுக்குரியது.

சிங்க நடனத்திற்கு ஒரு பெரும் வரலாறுண்டு. அதன் தோற்றம் குறித்த ஏராளமான சின்னச் சின்ன நாட்டார் கதைகளை தலைமுறை தலைமுறையாகச் சொல்லி வருகிறார்கள்.

சிங்க நடனத்துக்கு பல்வேறு புனித அர்த்தங்கள் சீனத்தில் நிலவுகின்றன.

பௌத்தத்தில் பௌத்தக் கோட்பாடுகளைக் காக்கவென்று இருந்த போதிசத்வர் தான் சிங்கம் என்றொரு நம்பிக்கையுண்டு. பௌத்த ஆலயங்களில் நடக்கும் சிங்க நடனத்தில் பல நேரங்களில் சிங்கத்துக்கு இணையாக ஒரு புத்தரும் உடன் நடனமாடுவதைக் காணலாம். சிங்கத்துடன் விளையாடியும் தேடலில் உதவியும் செய்வார் இந்த புத்தர். புத்தருக்கு தோழராகவும் ஏவலாளாகவும் சிங்கத்தைக் கருதுவர் பௌத்த சமயத்தார். சிலநேரங்களில் சர்க்கஸ்களில் இருக்கும் கோமாளியைப் போன்றும் இந்த புத்தர் இருக்கக் காணலாம். பெரிய தொந்தி வயிறும் உருண்டு திரண்ட பிருட்டங்களும் கொண்ட இந்த கோமாளி புத்தர் சிங்கத்தைக் கேலி செய்வார்.

பௌத்தத்தில் ஒரு கதை சொல்வார்கள். 'லூங் ஜி' எனும் புனித காளானைத் தேடும் சிங்கம். அந்தக் காளான் நோய்களைக் குணப்படுத்தும் அரிய சக்தி வாய்ந்தது.

புத்த பிக்கு ஒருவரும் அதே காளானுக்கான தேடலில் இறங்குவார். இருவரும் சேர்ந்து தேடும் போது வழியில் பிக்கு சிங்கத்துக்கு பௌத்த சமயக்கூறுகளை எடுத்துரைப்பார். கற்பிக்கும் பிக்குவை சிங்கம் ஆபத்துகளிலிருந்து காக்கும். ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு தேடுதலில் இறங்குவர். இவ்வகையான நடனத்தில் புனித தேடலில் பிக்குவைக் காப்பதால் சிங்கம் பௌத்தத்தை காக்கும் காவலனாகிறது. சிங்கம் தேடும் பொருள் அருமருந்து. ஆகவே சிங்கமும் ஒரு வைத்தியன்.

பழஞ்சீனத்தில், தொடர்ந்து நாட்டில் பஞ்சமும் வறட்சியும் நிலவிய ஒருகாலத்தில் ஊருக்குள் ஒருநாள் ஒற்றைக் கொம்புடனான பூதம் தோன்றி மறைந்தது. அன்றிலிருந்து பஞ்சமும் வறட்சியும் மறைந்து போனது. அந்த பூதத்துக்கு நியான் என்று மக்கள் பெயர் சூட்டினர். நியானைப் போற்றும் விதமாக மூங்கில்களும் காகிதமும் கொண்டு அதன் உருவத்தை உண்டாக்கினர்.

மூங்கில் குறுத்துகளில் வெடி மருந்தை நிரப்பி ஊரெங்கும் சிவப்புத் தோரணங்களும் அலங்காரங்களும் அமைத்தனர். ஒவ்வொரு ஆண்டும் அறுவடை விழாவைக் குறிக்கவும் தீயசக்திகளை விரட்டவும் சிங்க நடனமாடி, வாண வேடிக்கைகள் மற்றும் சரவெடிகள் கொளுத்திக் கொண்டாடினர். இந்த நடனம் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்கிறது என்பதற்கு இதைப் போன்று பல்வேறு ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

இதே கதையை வேறு மாதிரியும் சொல்வார்கள். சீனத்தின் சந்திரப் புத்தாண்டின் முதல் நாளில்  கிராமங்களுக்குள் புகுந்து கால்நடைகளையும் பயிரையும் கோழி போன்ற வீட்டுப் பிராணிகளையும் அழித்து நாசம் செய்தது நியான் என்ற ஒரு கொடிய மிருகம். அவ்வாறான ஒருநாளில் புத்த பிக்கு ஒருவர் கிராமத்துக்கு வந்தார். நடந்தவற்றையெல்லாம் நேரில் பார்த்தார். அடுத்த புத்தாண்டுக்கான ஏற்பாடுகளில் இறங்கினார். தற்காப்புக்கலைகள் அறிந்திருந்த ஊர்மக்களைத் திரட்டி ஒரு குழுவை உருவாக்கி, அவர்களின் உதவிடன் சிங்கத்தைப் போன்ற ஒரு பெரிய உருவத்தை உருவாக்கினார். அத்துடன் நின்று விடாமல், மூங்கில் குறுத்துகளுக்குள் வெடிமருந்தை நிரப்பச் சொன்னார். கிராமத்தை சிவப்பு நிறத்தால் அலங்கரிக்கச் செய்தார். அதற்கடுத்த ஆண்டு நியான் வந்த போது அதை எதிர்கொள்ள உருவாக்கப் பட்ட உருவத்தை எடுத்துக் கொண்டு வீரர்கள் முன்னால் ஓட, பின்னால் ஓடிய மற்ற கிராமத்தினர் கையில் கிடைத்த சட்டி, பானை, பாத்திரம் என்று எல்லாவற்றையும் ஒன்றோடு ஒன்று தட்டியும் முட்டியும் பேரோசை எழுப்பியபடி ஓடினர். அத்துடன் வீட்டிலேயே செய்த சரவெடிகளை வழியெங்கும் கொளுத்திப் போட்டனர். சிலரோ பெரிய சிவப்புக் கொடிகளையும் பதாகைகளையும் ஆட்டிக் கொண்டு நடந்தனர். இதையெல்லாம் பார்த்து மிகவும் பயந்துபோன நியான் கிராமத்தை விட்டு ஓடோடிப் போய்விட்டது. அப்போதிலிருந்து சீனர்கள் சீனப்புத்தாண்டின் போது நியான் வந்துவிடாமல் முன்னெச்சரிக்கையாக அதை விரட்ட மட்டுமின்றி சுப நிகழ்ச்சிகளில் தீயசக்திகளை விரட்டவும் சிங்கநடனம் ஆடினர்.

வரலாற்று பதிவுகளின்படி சிங்கநடனம் ஹ்ஹான் காலத்தின் போது துவங்கியது என்றும் ஒருசாரார் சொல்வர். பேரரசர் ஹ்ஹான் வூ தீக்கு மரியாதை செய்ய வந்திருந்தார் ஒரு வெளிநாட்டுத் தூதுவர். தூதுவருக்கு மரியாதைச் செய்ய பேரரசர் சிறப்பான வரவேற்புக்கும் விருந்துக்கும் ஏற்பாடு செய்திருந்தார்.

சிறப்பு விருந்தினர்களை உற்சாகப் படுத்தவென்று மாளிகைக் கலைஞர்கள் பல்வேறு விலங்குகளைப் போன்ற உடைகளணிந்து அவையில் நடனமாடினர். கொஞ்ச நேரத்துக்குக் கூர்ந்து கவனித்து ரசித்துக் கொண்டே வந்த வெளிநாட்டுத் தூதுவர், ‘சிங்கம் இல்லையா?’ என்று சுட்டிக் காட்டிக் கேட்டார். பேரரசரோ, அந்த மாதிரியான விலங்கு தங்கள் நாட்டில் இல்லையே என்று விளக்கினார். தன் நாட்டுக்குத் திரும்பிய தூதுவர், உடனே மாமன்னருக்குப் பரிசாக ஒரு சிங்கத்தை அனுப்பி வைத்தார். பட்டுச் சாலை வழியாக மேற்கிலிருந்து சீனத்துக்குக் கொண்டு வரப்பட்டது ஒரு சிங்கம். இந்தக் கதையின் படி, சிங்க நடன உடையில் அரங்கேற்றி ஆடும் பழக்கம் அப்போது தான் துவங்கியது.

முன்னொரு காலத்தில் காங் மாநிலத்தில் பச்சைப்பசேல் என்று மிகவும் செழிப்பான ஒரு சிற்றூர் இருந்தது. ஆனால், அங்கே ஓர் ஓநாய்க் கூட்டம் உலாவியது. அந்த ஓநாய்கள் நகருக்குள் வந்து கால்நடைகளையும் மக்களையும் கொன்று பெரும் அட்டகாசம் செய்தன. ஒரு நாள், சூரியாஸ்தமனத்தின் போது ஓநாய்கள் ஊருக்குள் புகுந்து கொடூரங்கள் செய்த போது திடீரென்று வானில் ஒரு இடி இடித்தது. அங்கிருந்து பூமியை நோக்கி வந்தது ஒரு விலங்கு.

பொன்னிறப்பிடரி மயிருடன் இடியைப் போல கர்ஜித்துக் கொண்டு கீழிறங்கி ஓநாய்களைத் தாக்கியது. அதைத் தொடர்ந்து வரிசையாக ஏராளமான சிங்கங்கள் கீழிறங்கி வந்து ஓநாய்க் கூட்டத்தை அழித்தன. இந்நிகழ்ச்சியைக் கண்டது ஒரு வாலிபக்கூட்டம். அந்த இளைஞர்கள் ஒவ்வொரு முறை ஓநாய்க்கூட்டம் வந்த போதும் சிங்கத்தைப் போலவே உடையைத் தயாரித்து கர்ஜனை போன்ற பேரோசையுடன் ஆடி ஓநாய்களை விரட்டத் துவங்கினர். தெருவெங்கும் வாத்திய இசையின் பேரோசையும் சிங்க உருவங்களும் ஓநாய்களை விரட்டின. தொடர்ந்து விரட்டப்பட்ட ஓநாய்கள் ஊரை மறந்து ஓடிப் போயின. அன்றிலிருந்து தீமையின் மீதான வெற்றியைக் கொண்டாட மட்டுமின்றி தீய சக்திகளை விரட்டவும் சீனர்கள் சிங்க நடனத்தை ஆடினர். இன்றோ சிங்கநடனம் பரிணாமம் பெற்ற ஒரு கலையாகவே வளர்ந்துள்ளது.

சிங்க நடன உடையும் சிங்க முகமூடியும் உடலும் வாலும் மிகுந்த வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப் படுகின்றன. காகிதத்தை அரைத்து மூங்கில்களின் துணையுடன் சிங்க முகம் செய்யப்பட்டு வண்ணம் தீட்டப் படுகிறது. அலுமினியம் அல்லது PVCயைக் கொண்டும் சிங்கமுகத்தை உருவாக்குகிறார்கள். சிங்கத்துக்கு நெற்றியில் ஒரு கொம்பும் ஒரு கண்ணாடியும் இருக்கும். பின்னர் அலங்காரங்களும் நுட்பமாக சேர்க்கப்படும்.

உள்ளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் விசையை அழுத்தி சிங்கத்தின் காதுகள் மற்றும் கண்களை நடனத்துக்கேற்ப அசைப்பார்கள். விசையென்றில்லாமல் வெறும் நூலிழையாகவும் இருக்கும். சிங்கத்தின் வாயும் திறந்து மூடக் கூடியதாக இருக்கும். புசுபுசுவென்ற வாலினடியில் குச்சியைச் சேர்த்திருப்பதால் வால் ஆடும்போது சிங்கத்தின் வால், நிஜ சிங்கம் போன்ற லேசான பிரமையை ஏற்படுத்துவது போலிருக்கும். அப்படியே இருந்தாலும் நிஜ சிங்கத்திற்கும் இந்த சிங்கத்திற்கும் எந்த ஒற்றுமையும் இருக்காது. சிங்கத்தின் உடலில் இருக்கும் நபர் நெளிந்தும் வளைந்து வாலை ஆட்டுவார். ஒரு சிங்கத்தை இயக்க குறைந்தது இருவர் வேண்டும். பெரும்பாலும், இரண்டு பேர் தான் ஆடவும் ஆடுவார்கள். ஒரே ஆள் ஆடும் சிறிய சிங்கங்களும் உண்டு.

நடன அமைப்பில் சிற்சில வேறுபாடுகளுடன் ஆடும் குழுக்களைக் காணலாம். எனினும், எட்டு முக்கிய கூறுகள் சிங்க நடனத்துக்குரியன. அவை, உறக்கம், விழிப்பு, விளையாட்டு, தேடல், சண்டை, உணவுட்கொள்ளுதல், கண்மூடுதல், உறங்குதல் ஆகியன. இவற்றில் சிலவற்றை விட்டுவிட்டு ஆடுவோருமுண்டு. ஒவ்வொரு பாகத்தையும் நீட்டி நீண்ட நேரம் ஆடுவதுமுண்டு. ஒரு கனவிலே போன்ற அனுபவத்தை அளிக்கக்கூடிய சடங்கு நடனமானது துவங்குவது உறக்கத்தில்; முடிவதும் உறக்கத்தில். பெரிய மத்தளங்களும் முரசுகளும் ராட்சத அளவிலான பெரிய ஜால்ராக்களும் மணிகளும் கொண்டது சிங்கநடனம். சரவெடிகளும் முக்கியம். பேரோசையுடன் வாத்தியங்கள் ஒலிக்கும். அதுவே சிங்கத்தை எழுப்பும். எழுந்ததும் சலிப்புற்றுக் காணப்படும் சிங்கம் உறுமியும், கர்ஜித்தும் சுற்றிசுற்றி வரும். பிறகு, குனிந்து கூட்டத்தை வணங்கி இசைக்கேற்ப ஆட ஆரம்பிக்கும். இசை துரிதமாகி ஆட்டமும் வேகம் கொண்டு உச்சத்தைத் தொடும். இப்போது சிங்கத்திற்குப் பசிக்கும். தீனியைத் தேட ஆரம்பிக்கும். ச்சின் எனப்படும் தழையைத் தேடும். தேடி எடுத்து வாயில் போட்டு தன் வாயிலிருந்து கூட்டத்தை நோக்கி துப்பும். சரவெடிகள் வெட்டிக்க எல்லோரும் உற்சாக கோஷங்கள் எழுப்புவர்.

சிங்க நடனத்துக்கே ஆன்மீகப் பின்னணியுண்டு. நடன ஆரம்பத்திலான உறக்கம் எனும் கட்டம் மூன்று பகுதிகளைக் கொண்டது. உறங்கி, விழித்து, தூய்மைப் படுத்துதல். விழிப்பு ஆன்மாவின் எழுச்சியைக் குறிக்கிறது. தூய்மைப் படுத்துதலோ பழையவற்றைக் கழிந்து புதியனவற்றை ஏற்றுக் கொள்வதைக் குறிக்கிறது. தன் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் தூய்மைப் படுத்திவிட்டு தலையை மூன்று முறை சிலுப்பிக் கொள்ளும். பிறகு தான் தரையிலிருந்து எழும்.

மூன்று முறை சிலுப்பிக் கொள்வது பூரண தூய்மையையும் முழுமையையும் குறிக்கும். உடலை மட்டுமின்றி ஆன்மாவையும் தூய்மைப்படுத்திக் கொண்டு விட்டதால் சிங்கம் இப்போது புனிதமானது. ஆகவே, அது அனைவருக்கும் ஆசி வழங்கும்.

மூன்று முறை கூட்டத்தை நோக்கிக் குனிந்து வணங்குவது அதிருஷ்டத்தைக் கொண்டு வருவதாகக் கருதப்படுகிறது. பொதுவாகவே, சீனத்தில் மூன்று முறை குனிந்து வணங்குதல் என்பது பெரிய மதிப்பிற்குரியது. மூன்று வணக்கம் என்பது பழைய மரபான அரச மாளிகையை மூன்று கட்டங்களாக தூய்மைப் படுத்துவதையும் குறிக்கும்.

 சுற்றிச் சுற்றி வரும் சிங்கம் விளையாடும் பகுதியில் தன் சாகசங்களைக் காட்டும். கூரையின் மீதேறி, கீழே குதித்து விளையாடும் சிங்கங்களுமுண்டு.

பெரிய ஒரு பந்தை வைத்தும் விளையாடும். உருண்டை வடிவம் முழுமையைக் கொண்டது. அது வலிகளையும் துயர்களையும் ஆற்றவல்லது. இந்தப் பந்து பூமிப்பந்தைக் குறிப்பதால் இவ்விளையாட்டு இயற்கைக்கும் மனிதனுக்குமான தொடர்பைக் குறிப்பதாகவும் சொல்வர். மிகவும் விலை மதிப்புள்ளதும் அனைவரும் வேண்டுவதுமான நிகழ்வு என்பதைக் குறிக்க இந்தப் பந்துக்கு பதிலாக பெரிய ஒரு முத்து ஒன்றையும் விளையாடக் கொடுப்பார்கள்.

 தேடலின் போதும் சிங்கம் விளையாட்டு காட்டும். ஆன்மாவுடனான போரில் வெல்ல உணவுக்கான தேவையிருக்கிறது. இந்தத் தேடலில் வென்றால் சிங்கம் தீரனாகும்.

இந்தத் தேடலின் போது பல்வேறுஇடர்கள் அமைப்பது சிங்க நடனப் போட்டிகளில்.

ஒன்றுக்கு மேற்பட்ட சிங்கங்கள் நடனமாடினால் உணவுக்கான தேடலின் போது சில வேளைகளில் சண்டை நடக்கும். தேடலின் முடிவில் உணவைக் கைப்பற்றும் சிங்கத்துடன் மற்ற சிங்கங்களும் உணவை முற்றுகையிடும். ஒரே குழுவைச் சேர்ந்த இரு சிங்கங்களாக இருந்தாலும் சண்டை நடக்கும். சாகசத்தைக் காட்டக் கிடைத்த வாய்ப்பை கலைஞர்கள் நழுவ விடுவதில்லை.

 கோஸ், ஆரஞ்சு போன்றவை தவிர பசுந்தழைகளுடன் ரொக்கம், தங்கம் போன்றவையும் பொதிந்து வைக்கப்பட்டிருக்கும். ஆரஞ்சு நீண்ட ஆயுளையும் வாழ்வில் முழுமையையும் கொடுக்கக் கூடியது. செல்வத்தையும் அதிருஷ்டத்தையும் குறிக்கும் தழையை மென்று கூட்டத்தின் மீது துப்பும். குழுவினர் பொருளை எடுத்துக் கொண்டு, நடனத்தின் இறுதியில் பங்கிட்டுக் கொள்வர். சிங்கம் கொடுக்கும் ஆசிகளுக்கும் அதிருஷ்டத்துக்கும் பிரதி மரியாதையாகக் கொடுக்கப்படுவதே பணம். பசுந்தழைக்கு சீனத்தில் 'ச்சோய்' என்பார்கள்.

செல்வத்தைக் குறிக்கும் சீனச் சொல்லும் இதே போன்று ஒலிக்கும். ஆகவே, இந்தத் துப்புதல் செல்வத்தையும் அதிருஷ்டத்தையும் எல்லோருக்கும் அளிப்பதையே குறிக்கிறது.

 கீரை தழைகளைத் துப்புவதற்கு பதிலாக நவீன யுகத்தில் 'செல்வமும் ஆரோக்கியமும்' என்றோ 'நூறாண்டிருங்கள் மகிழ்வுடன் இணைந்து' என்பது போன்ற அதிருஷ்ட வரிகள் எழுதப்பட்ட அழகிய பட்டுப் பதாகையைச் சுருட்டி வைத்துத் துப்புவதைப்போல நடனத்தில் மாற்றங்களைக் கொணர்ந்துள்ளனர்.

 தேடலும் ஆசி வழங்குதலும் முடிந்ததும் கண்மூடும் கட்டத்துக்கு வரும் சிங்கம். தன் தாடியைத் தூய்மைப்படுத்திக் கொண்டும் மீண்டும் மூன்று முறை குனிந்து வணங்கும். நடனத்தின் இறுதியைக் குறிக்கிறது இது. அந்த நடனக்குழுவின் அனுபவத்தைப் பொருத்து தாடியின் நீளம் அமையும் என்பது சுவாரஸியமான விஷயம்.

 இறுதியில் உறங்குதல். பணிக்கப் பட்டதைச் செய்து முடித்த திருப்தியுடன் சிங்கம் மீண்டும் தன் வேகத்தைப் படிப்படியாகக் குறைத்து ஓய்வு நிலைக்குத் திரும்பும். சிங்கம் தூங்க ஆரம்பித்ததும், கூட்டத்தினர் தன்னிலை பெறுவர்.

தீயசக்திகள் விரட்டப்பட்டு, அதிருஷ்டம் அருளப்பட்டதுடன் கனவு கலைந்தாற்போல கூட்டத்தினர் நிஜவாழ்வுக்குத் திரும்புவர். சிங்கநடனம் கண்டு ஆசி பெற்றோர் புதுவாழ்க்கையைத் துவங்குவதாகக் கருதுகிறார்கள் சீனர்கள்.

 சிங்க நடனத்தின் இசை முரசு கொட்டியும் ஜால்ராக்கள் முழங்கியும் மணிகள் அடித்தும் துவங்கும். இந்த மூன்று வாத்தியங்களும் இன்றியமையாதவை.

இசைகேட்டு தான் சிங்கம் கண்விழித்து எழுந்து அருளும். இசை வாத்தியங்கள் வட்ட வடிவம் கொண்டவை. அது முழுமையையும் புத்துயிர்ப்பையும் குறிக்கும்.

தீயசக்திகளை விரட்ட சரவெடிகளின் ஓசையும் இசையுடன் இணைந்து சிங்கத்துக்கு உதவும். நெருப்பின் வடிவம் சிங்கத்தின் நெற்றியிலும் பொறிக்கப் பட்டிருக்கும். சரவெடிகளிலிருந்து கிளம்பும் புகையானது வத்திப்புகைக்கு ஈடானது. எழுந்து வந்து அருளவென்று சிங்கத்தை அழைக்கும் போது அதற்கு செய்யப்பட்ட மரியாதையாகவும் கொள்ளப் படுகிறது.

 கூட்டு முயற்சியில் ஆடும் கலைஞர்கள் இசைக்கேற்பவும், தாளகதிக்கேற்பவும் ஆடுவர். தலையும் வாலும் கரணங்களுக்கும் அசைவுகளுக்கும் ஏற்ப ஒத்திசைவுடன் அசைதல் வேண்டும். வாலின் மீது தலை உட்காருவது இரண்டு கால்களிலா ஒரு காலிலா என்பதில் துவங்கி முதல் தலையை வாலில் பொருத்திக் கொண்டு கரணம் அடிப்பது என்று ஏராளமான உத்திகள் உண்டு. குழுவுக்குக் குழு பாணியில் வித்தியாசங்கள் காட்டினாலும் ஆடுவதற்குக் கிடைக்கும் தளத்தின் பரப்பளவைப் பொருத்தும் அவ்வந்த நேரத்தில் சின்ன மாற்றங்கள் செய்து கொள்வதுண்டு.

 இந்தச் சிங்க நடனத்தின் சிங்கத்தை தென்சீன மற்றும் வடசீன சிங்கங்கள் என்று பொதுவாய்ப் பிரிக்கலாம். தென்சீனச் சிங்கமானது விழிக்கும் சிங்கம் என்றறியப் படுகிறது. அசைவுகளில் வலுவையும் பலத்தையும் காட்டும் இது உயிரோடிருக்கும் சிங்கத்தைப் போலவே தீவிரம் கொண்டது. நடனக் கலைஞர்களின் திறனை மிக அதிகம் கோரும் இந்தச் சிங்க நடனத்தில் நிச்சயம் கீரையையும் தழையையும் மென்று துப்பும் பகுதியுண்டு. அத்துடன் சிங்கத்தை கேலி செய்யும் பெரிய தலையுடனான புத்தரும் இருப்பார். தென்சீன நடனம் தான் அதிக பிரபலம். ஏனெனில், இதன் அசைவுகள் நளினம் நிறைந்தவை. பெரிய கண்களுடன் சிங்கங்கள் வண்ணங்கள் கண்ணைப் பறிக்கும் விதத்தில் இருக்கும். இருவர் ஆடும் இரண்டு சிங்கங்களாகத் தான் இந்நடன வகை பெரும்பாலும் அமையும்.

இந்தவகைச் சிங்கத்தின் முகம் யாழியைப் போலிருக்கும். தாளத்துக்கேற்ற தலை அசைவுகளே முக்கியமாக இருக்கும்.

 வடசீனத்து சிங்க நடனம் அரசவையில் அரச குடும்பம் மற்றும் அதிகாரிகளை மகிழ்விக்க ஆடப் பட்டது. இது வடசீனப் பகுதிகளில் மிகவும் பிரபலம்.

சிங்கம் சிவப்பு, ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும். பெண் சிங்கத்துக்கு பச்சையும் சில நேரம் இருக்கும். பொன்னிறப்பிடரியுடன் புசுபுசுவென்றிருக்கும். உச்சியில் பொன்னிற அலங்காரமிருக்கும். இந்த நடன வகை கரணங்கள் பலவற்றைக் கொண்ட சாகசங்கள் நிறைந்த நடனமாக இருக்கும்.

இந்தச் சிங்கங்கள் நான்கு கால்களுடனும் பிடரி மயிருடனும் நிஜ சிங்கத்தை ஒத்திருக்கும். கால்களின் விதவிதமான அடவுகளே நடனத்தில் முக்கியத்துவம் பெறும்.

 விழாக்களிலோ போட்டிகளிலோ ஒரு குழுவுக்கும் இன்னொரு குழுவுக்குமிடையில் பரஸ்பர மரியாதை பாராட்டுதல் முக்கியம். ஒரு குழு இன்னொரு குழுவை வழியில் சந்திக்கும் போதும் ஆலயத்தையோ முக்கிய அலுவலகத்தையோ கடந்து செல்லும் போதும் முரசொலிப்பார்கள். ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும் குழுக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்தட்டை கொடுத்து வாழ்த்தட்டை பெறுவர்.

சந்திப்புகளின் போது சிங்கங்கள் வாயை மூடிக் கொண்டும் தலையாட்டாமலும் காலை உதைக்காமலும் இருக்க வேண்டும். போட்டிகளில் சிங்கநடனக்குழு யாழி நடனக்குழுவைக் கண்டால் மரியாதை செலுத்த வேண்டும். இல்லையென்றால் யாழி சிங்கத்தைச் சூழ்ந்து கொண்டு தாக்கும்.

 சீனாவில் சிங்கநடனம் கற்றுக் கொடுக்கப்படாத குங்பூ பள்ளியே இல்லை.

தலையைப் பிடித்தாடுவதற்கு தனிப்பயிற்சியும் வாலைப்பிடித்தாடுவோருக்கு தனிப்பயிற்சியும் உண்டு. இரண்டு பயிற்சியையும் மேற்கொண்ட ஆர்வலர்களுமிருப்பார்கள். நடனத்துக்கான வாத்திய இசையையும் கற்பிப்பார்கள். சிங்கத்தின் தலையைப் பிடித்தாடும் குழு உறுப்பினர் பெரும்பாலும் குழுத்தலைவனாக இருப்பான். அவன் வாத்தியங்கள் இசைப்போரிடம் செய்கையிலேயே இசையின் வேகத்தைக் கூட்டவும் குறைக்கவும் சொல்வான்.

 குங்பூவின் பிறப்பிடம் பௌத்த மடாலயங்கள் என்பதை நாம் எல்லோருமே அறிவோம். 1644ல், மன்சூரியர்கள் சீனாவைத் தாக்கிய போது பௌத்த ஆலயங்களும் பௌத்தர்களும் அழிக்கப்பட்டனர். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மக்கள் பௌத்த அடையாளத்தைத் தவிர்த்தனர். ஆனால், அதற்கு பதிலாக நாடெங்கிலும் தற்காப்புக்கலைகள் கற்பிக்கும் பள்ளிகளைத் துவங்கினர். கடைக்காரகளும் வணிகர்களும் சிங்கநடனத்தை விரும்பியதால், தற்காப்புக்கலை மாணவர்களே ஆட ஆரம்பித்தனர். பௌத்தத்துடன் தொடர்பு கொண்டிருந்த சிங்க நடனமானது அப்போதிலிருந்து தான் குங்பூ பள்ளிகளுக்குரியதாக மாறிப் போனது.

 மரபுப்படி சிங்கநடனம் பெண்களுக்கு மறுக்கப் பட்டது. தாவோ கோட்பாட்டின்படி பெண் 'யின்'னாக இருக்கிறாள். சிங்கமோ 'யாங்'. இரண்டும் சேர்வது முறையன்று. மாதவிடாயிலிருக்கும் பெண்கள் சிங்க முகத்தைத் தொடவே கூடாது.

ஏனெனில், அவர்கள் தூய்மையற்றிருக்கிறார்கள். ஆனால், பெண்களுக்கு வாத்தியங்களை இசைக்கும் உரிமையுண்டு ஆகவே, குழுக்களில் வாத்தியம் இசைக்கும் பெண்களைக் காணலாம். பிற்காலங்களில் மெதுவாக பெண்களும் சிங்க நடனமாட அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இரண்டு நடனக் கலைஞர்களும் பெண்களாக இருத்தல் வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. நவீன உலகில் ஆணுடன் பெண் ஆடுவதும் ஆங்காங்கே நடக்கிறது. என்றாலும் கூட, அதை இன்னமும் இழுக்கென்று கருதும் சிந்தனைப் போக்கே பரவலாக நிலவுகிறது. காலப்போக்கில் இதுவும் ஏற்றுக் கொள்ளப்படலாம் என்பதே பரவலான கருத்து.

 இக்காலத்திலும் பள்ளிகளிடையே சிங்க நடனப்போட்டிகள் வைத்து பெரிய அளவிலான பரிசுகள் வழங்கப் படுகிறது. முன்பெல்லாம் பயில்வதிலும் பயிற்றுவிப்பதிலும் உள்ளார்ந்த ஈடுபாடிருந்தது. சமீபத்தில் தான் இப்பள்ளிகள் வணிகமயமாகின. தாவோ பௌத்த ஆலயங்களின் குடமுழுக்குகள், விழாக்கள், பிறந்த குழந்தைக்குப் பெயரிடும் விழா, உல்லாச நிகழ்ச்சிகள் மட்டுமின்றி பாரம்பரிய பாணியிலான திருமணங்களிலும் புதிதாக கடை திறக்கும் போதும் புதிய வியாபாரம் ஆரம்பிக்கும் போதும் கூட சிங்க நடனத்துக்கு இக்காலத்திலும் ஏற்பாடு செய்கிறார்கள். சிங்க நடனம் அதிருஷ்டத்தைக் கொணரக் கூடியதென்று நம்புபவர்கள் நடனக்குழுவுக்கு பணப்பரிசளிக்கிறார்கள்.

அவ்வகையில் சிங்க நடனம் கூட வணிகமாகிறது. குழுவின் அனுபவத்தைப் பொருத்து சிங்க நடனத்துக்கான கட்டணமும் உயரும். முன்பெல்லாம் மாளிகைகளில் அரசர்களுக்கு முன்பு உயரிய கலையாக ஆடப்பட்டும் வளர்த்தெடுக்கப்பட்டும் வந்த சிங்க நடனம் இப்போதெல்லாம் கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஒரு பொது நிகழ்ச்சியாகிவிட்டது.
 

 jeyanthisankar@gmail.com