திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திரா இன்று காலமானார்.

 

தென்னிந்தியாவின் பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திரா சுகயீனம் காரணமாக இன்று முற்பகல் 11 மணிளவில் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் தனது 74ஆவது வயதில் காலமானார்.

 

மாரடைப்பு காரணமாக இன்று காலை சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

இயக்குனராகவும், ஒளிப்பதிவாளராகவும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய திரை உலகில் மாத்திரமின்றி இந்தியிலும் பல படங்களை இயக்கியவர் பாலு மகேந்திரா

 

மட்டக்களப்பில்1939ம் ஆண்டு பிறந்த இவர் 1971ம் ஆண்டு நெல்லு என்ற மலையாள படத்தில் ஒளிப்பதிவாளராக திரையலகிற்கு அறிமுகமானார்

 

தனது தந்தையால் ஒளிப்பதிவு மீது ஆர்வம் கொண்ட இவர், இந்திய சினிமாவில் இயக்குனர், எழுத்தாளர், படதொகுப்பாளர், ஒளிப்பதிவாளர் என பல பரிமாணங்களில் வலம் வந்தவர்

 

இலங்கையில் தனது பள்ளி படிப்பை முடித்த இவர், லண்டன் பல்கலைக்கழகத்தில் பட்டபடிப்பை முடித்தார். பின்னர் புனேயில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கழகத்தில் ஒளிப்பதிவு பயின்ற இவர், அதற்காக தங்க பதக்கமும் பெற்றுள்ளார்

 

இயற்கை வெளிச்சத்தில் எளிமையான, அதே சமயம் பிரமிக்க வைக்கும் அழகை காட்டி படம் எடுப்பதில் பாலு மகேந்திரா கைதேர்ந்தவர். இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய முதல் படமான நெல்லு படத்திற்காக கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதினை பெற்றார்

 

சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய இயக்குநர் பாலுமகேந்திரா  1979ம் ஆண்டு ஆழியாத கோலங்கள் படம் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.

 

மூடுபனி, மூன்றாம் பிறை, நீங்கள் கேட்டவை, ரெட்டைவால் குருவி, வீடு, சந்திய ராகம், வண்ண வண்ணப் பூக்கள், மறுபடியும், சதிலீலாவதி, ராமன் அப்துல்லா, ஜூலி கணபதி, அது ஒரு கனாகாலம் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். சமீபத்தில் தலைமுறைகள் என்ற படத்தையும் இவர் இயக்கி உள்ளார்

 

பாலுமகேந்திரா 5 தேசிய விருதுகளையும், 3 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளையும், 2 நந்தி விருதுகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் சினிமா வரலாற்றில் பாரிய இழப்பாக இயக்குநர் பாலுமகேந்திராவின் மரணம் அமைந்துள்ளது.

 

 

நன்றி: வீரகேசரி