சங்க இலக்கியக் காட்சிகள் - காட்சி 18

 

பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா, அவுஸ்திரேலியா               

 

 

(பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும் சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.)

 

சிறைப்பட்டாள் தலைவி! முறைப்பட்டாள் தோழி!

 

மருகூர்ப்பட்டினம் என்று ஓர் ஊர். அழகான ஊர். அந்த ஊரிலே ஒரு பெரிய வீடு. அந்த வீட்டிலே செல்வம் நிறைந்து கிடக்கிறது. கிழக்குத் திசையிலே காலைநேரத்தில் உதித்து எழுகின்ற சூரியன் தனது கதிரின் வெப்பத்தால் மக்களின் கால்களில் சூடேற்றுகிறான். பகல்பொழுது ஆரம்பமாகின்றது. செல்வம் நிறைந்த அந்தப் பெரிய வீட்டிற்கு விருந்தினர்கள் வருகிறார்கள். பொற்றொடியணிந்த பெண்கள் அவர்களை விருந்தோம்புகின்றார்கள். அந்த விருந்தினர்களுக்கு உணவு பரிமாறுவதற்கு முன்னர் கொக்கின் இறகினைப்போன்ற வெண்மை நிறமான சோற்றை காகங்களுக்குப் போடுகிறார்கள். காகங்கள் அந்தச் சோற்றை உண்ணுகின்றன. சோற்றை உண்ட காகங்கள் பறந்து செல்கின்றன. மாலைவேளை வருகின்றது. பசிய கண்களையுடைய அந்தக் காகங்கள் அங்காடித்தெருவில் நிழலில் குவிக்கப்பட்டுள்ள இறால்மீன்களைக் கவர்ந்து சென்று உண்ணுகின்றன. பின்னர் அங்கிருந்து கடற்கரைக்குப் பறந்து செல்கின்றன. அங்கே மரக்கலங்கள் நங்கூரமிட்டு நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றன. கடலிலிருந்து கரைக்கு வந்து மோதுகின்ற அலைகளால் அந்த மரக்கலங்கள் அசைந்துகொண்டிருக்கின்றன. அவற்றின் கூம்பிலே போய் இந்தக் காகங்கள் அமர்ந்துகொள்ளுகின்றன. அத்தகைய அழகு நிறைந்தது மருகூர்ப்பட்டினம்.

அந்த மருகூர்ப்பட்டினத்தைப் போலவே அழகு நிறைந்தவளான தலைவியின் கைகளிலே நெருக்கமாக அணிந்திருந்த ஒளிவீசும் அழகிய வளையல்கள் கழன்று விழுகின்றன. அதனை அவளது அன்னை கண்டுவிடுகின்றாள். தன் மகள் பருவ உணர்ச்சிக்கு ஆட்பட்டுவிட்டாள் என்றும், யாருடனோ அவள் காதலில் வீழ்ந்துவிட்டாள் என்றும் அவள் சந்தேகப்படுகின்றாள். அதனால் மகளைக் கட்டுக்காவலில் வைக்கிறாள். எங்கும் போக முடியாதவாறு அவள் வீட்டிலேயே காவலிடப்படுகிறாள். உண்மையில் அவளுக்கு ஒரு காதலன் இருக்கிறான். தினமும் அவனைத் தனியாகவும். தன் தோழியுடனும் அவள் சந்திப்பாள். இனி அது முடியாது என்று ஆகிவிடுகிறது. அதனால் அவளின் தோழி தலைவனைச் சென்று காணுகின்றாள். தலைவியின் நிலைமை பற்றி அவனிடம் எடுத்துரைத்து, விரைவாக வந்து தலைவியை மணம்புரிவதைப்பற்றி எண்ணுமாறு கூறுகிறாள்.

இத்தகையதொரு காட்சியைத் தருகின்ற பாடல் ஒன்று நற்றிணையிலே இடம்பெறுகின்றது.

பாடல்:

பல்பூங் கானல் பகற்குறி மரீஇச்
செல்வல் கொண்க செறித்தனள் யாயே
கதிர்கால் வெம்பக் கல்காய் ஞாயிற்றுத்
திருவுடை வியநகர் வருவிருந்து அயர்மார்
பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த
கொக்குகிர் நிமிரல் மாந்தி, எற்பட
அகலங்காடி அசைநிழல் குவித்த
பச்சிறாக் கவர்ந்த பசுங்கண் காக்கை
தூங்கல் வங்கத்துக் கூம்பிற் சேக்கும்
மருங்கூர்ப் பட்டினத் தன்னவிவள்
நெருங்கேர் எல்வளை ஓடுவ கண்டே


(நற்றிணை. பாடல் இல: 258 நெய்தல் திணை. பாடியவர்: நக்கீரர்)

'நெய்தல் நிலத்தவனே! தனது கதிரின் வெப்பத்தால் மக்களின் கால்களில் சூடேற்றுமாறு, கீழ்த்திசை மலைகளிலே தோன்றி எழும் சூரியனும் வந்து பகல் பொழுதை உண்டாக்கிவிட்டான். செல்வம் நிறைந்த நமது பெரிய வீட்டிற்கு விரந்தினர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களை விருந்தோம்பப் பொற்றொடியணிந்த பெண்கள் கொக்கின் இறகினைப்போன்ற வெண்மை நிறமான சோற்றைப் போட்டனர். அந்தச் சோற்றை உண்ட பசுங் கண்களையுடைய காகங்கள் மாலைவேளையில் அங்காடித்தெருவில் நிழலில் குவிக்கப்பட்டுள்ள இறால்மீன்களைக் கவர்ந்தசென்று உண்ணும். பின்னர் கடற்கரையிலே அலையடிப்பதால் அசைந்துகொண்டிருக்கின்ற மரக்கலத்தின் கூம்பிலே போய் அமர்ந்துகொள்ளும். அத்தகைய மருகூர்ப்பட்டினத்தைப் போன்ற அழகுள்ளவளான இவளின் கைகளிலே நெருக்கமாக அணிந்திருந்த ஒளிபொருந்திய அழகிய வளையல்கள் கழன்று விழுவதை இவளது அன்னை கண்டுவிட்டாள். கண்டதனால் இவளைக் காவலில் இட்டுவிட்டாள். அதனால் நான் தனியாகவே வந்த அதைச் சொன்னேன். நான் எனது இல்லத்திற்குச் செல்கிறேன். நீ விரைவாக வந்து அவளை மணம்புரிவதைக் கருது.' என்று தலைவனிடம் தோழி கூறுவதாக இந்தச் செய்யுள் உள்ளது.

இதனைப் பாடிய புலவரான நக்கீரர் தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தில் வாழ்ந்தவர். ஓப்பற்ற புலமை மிக்கவராகத் திகழ்ந்தவர். 'உண்பது நாழி, உடுப்பவை இரண்டே, பிறவும் எல்லாம் ஓரொக்கும்மே'(புறநாநூறு 189) என்று அக்காலத்திலேயே சமத்துவக் கருத்துக்களை உரத்துப்பாடிய பேரறிஞர்.


                                                                                                (காட்சிகள் தொடரும்....................................)

 

 

 

 

srisuppiah@hotmail.com