5,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியங்கள் கண்டுபிடிப்பு
 

 

ிழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே அன்னியூரை அடுத்த சிறுவாலை கிராமத்தில் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 

உலகெங்கிலும் வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்களின் ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. கற்கால மனிதர்களின் கலை உணர்வையும், வாழ்விடங்களையும், வாழ்வியலையும் சித்திரிக்கும் இம்மாதிரியான ஓவியங்கள் தமிழகம் எங்கிலும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 

அவற்றில் விழுப்புரம் மாவட்டத்தில் கீழ்வாலை, செத்தவரை போன்ற இடங்களில் கிடைத்த ஓவியங்கள் தனி சிறப்புக்குரியவை. அவற்றின் காலம் கி.மு. 3,000 முதல் கி.மு 7,000 வரை என அறிஞர்கள் கருதுகின்றனர். அவற்றைப் போன்ற ஓவியத் தொகுதி ஒன்று விழுப்புரம் மாவட்டம், அன்னியூரை அடுத்த சிறுவாலையில் தற்போது கண்டுபிக்கப்பட்டுள்ளது.
 

சிறுவாலை கிராமத்துக்குக் கிழக்கே, கல் குவாரிகளால் உடைக்கப்பட்டு எஞ்சியுள்ள குன்றுகளில் ஒன்றில் இதனை அதியன் என்பவர் கண்டறிந்துள்ளார். அவர் அளித்த தகவலின் பேரில் சென்னைப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஜெ.ராதாகிருஷ்ணன், செல்வன், ஆர்வலர்கள் செந்தில்பாலா, ரவி உள்ளிட்ட குழுவினர் செவ்வாய்க்கிழமை சென்று ஆய்வு செய்தனர்.
 

இந்த ஓவியம் குறித்து ஆய்வாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியது:
 

5,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த ஓவியம் 1.5 மீட்டர் நீளமும், 50 செ.மீ. அகலமும் கொண்டுள்ளது. பொதுவாக இம்மாதிரியான ஓவியங்கள் வெள்ளை மற்றும் காவி நிறத்தில் இருக்கும். இது காவி நிறத்தில் சற்றே தெளிவற்ற நிலையில் உள்ளது. இது ஒரு இனக்குழு தலைவி, வேட்டையாடிய பிறகு தன் வீரர்களுடன் வேட்டையாடிய உணவை தமது இருப்பிடத்துக்கு இரண்டு வண்டிகளில் எடுத்துச் செல்வதுபோல அமைந்துள்ளது.
 

இது ஓர் சடங்கை உணர்த்துவதாகவோ, வேட்டையாடுதலை உணர்த்துவதாகவோ கூட இருக்கலாம். இதில் இதுவரை கிடைத்துள்ள தொல்பழங்கால ஓவியங்களை விட இரண்டு சக்கரங்களையும் வண்டியையும் தெளிவாக வேறுபடுத்தி அறிய முடிகிறது. இது புதிய கற்கால, பெருங்கற்கால வேட்டை சமூக மக்களின் நாகரிக வளர்ச்சியைச் காட்டும் முக்கிய ஆதாரம் என்றார்.
 

மற்றொரு ஆய்வாளரான செல்வன் கூறுகையில், இங்கே கிடைத்துள்ள பிற தடயங்களையும் கொண்டு பார்க்கும்போது இங்கே கற்கால மனிதர்கள் முதல் பல்வேறு சமூகங்கள் இங்குள்ள குகை, குன்றுகளில் வாழ்ந்து வந்தமையை அறிய முடிகிறது. மேலும், இப்பகுதியில் தேடினால் இன்னும் நிறைய வரலாற்று தடயங்கள் கிடைக்கலாம்.

இந்த கல்குவாரிகளால் பல அரிய தொல் சின்னங்கள் அழிந்து போயிருக்கின்றன. இது அதில் தப்பி பிழைத்தது அதிஷ்டவசமானது. அரசு இந்த தொல் சின்னங்கள் மீது அக்கறை கொண்டு, இவற்றைக் காப்பாற்ற முன்வேண்டும். பொதுமக்களுக்கும் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்பட்டால்தான் இவற்றைக் காப்பாற்ற முடியும் என்றார்.

 

நன்றி: தினமணி