தமிழ்மொழியும் பயன்பாட்டு நிலைகளும்

 

முனைவர் பூ.மு.அன்புசிவா
 

தாய்மொழி ஒரு இனத்தின் பண்பாட்டு வளர்ச்சிக்குப் பெரிதும் துணை நிற்கும் ஒரு கருவி. தாய்மொழியில் சிந்தித்துச் செயல்படுவதுதான் குழந்தைகளுக்கு இயற்கையாகவே சிறப்பாக அமையும் என்பது மொழி ஆராய்ச்சியாளர்களின் கருத்து. தாய்மொழியில் கல்வி கற்பித்து வரும் பல நாடுகளில் குறிப்பாக ஜப்பான், சீனா போன்ற நாடுகளின் அறிவுசார்ந்த பொருளாதார வளர்ச்சி இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். ஜப்பான் நாட்டில் படிப்பெல்லாம் ஜப்பானிய மொழியிலேயேதான் சொல்லித் தருகிறார்கள். இளம் சமுதாயத்துக்குச் நல்ல சூழ்நிலையை உருவாக்கித் தருவதிலும், மாணவர்களைப் பண்படுத்தி நல்ல குடிமக்களாக உருவாக்குவதிலும், நற்பண்புகளை விதைத்துச் சான்றோராக்குவதிலும் தாய்மொழியின் பங்கு இன்றியமையாதது. ஒரு நாட்டு மக்கள் அந்த நாட்டுக்குரிய உயர்ந்த பண்புகளுடன் விளங்க வேண்டுமானால் அந்த நாட்டு இளைஞர்களுக்கு உயர்தரக் கல்வி மட்டுமின்றி அனைத்துக் கல்வியையும் தாய்மொழி மூலமாகவே கற்பிக்க வேண்டும் என்பது அண்ணல் மகாத்மா காந்தி அவர்களின் பொன்மொழியாகும்.

தற்கால தமிழ் இலக்கியத்தின் முன்னோடியான பாரதி இவ்வாறு தமிழைப் புகழ்ந்துரைக்கின்றார்.

'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்' - பாரதி

'தமிழுக்கும் அமுதென்று பேர்- அந்தத்
தமிழ் இன்பத் தமிழெங்கள் உயிருக்குநேர்'
- பாரதிதாசன்,
என்று தமிழ் மொழியின் பெருமையையும் பாடியுள்ளனர்.


இலக்கியமும் பயனும்

காலத்திற்குக் காலம் மாறிவரும் மரபுகளையும், வரலாறுகளையும் தொகுத்து தரும் பேழையாக தமிழிலக்கியங்கள் இருக்கின்றன. பழங்கால மனித வாழ்விலிருந்து மலர்ந்த இலக்கியம், அடுத்து வரும் மனிதனின் வாழ்வைப் பண்படுத்துகிறது. ஒவ்வொரு கலையும் மனிதனின் வாழ்வைப் பண்படுத்தவே உள்ளன. மாந்தரின் வாழ்வை உயர்த்தவும், பண்படுத்தவும், இன்பம் தரவும், போராடுவதற்கு ஊக்கம் தரவும் இலக்கியங்கள் உதவ வேண்டும். நம் பழந்தமிழ் இலக்கணமான தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் நம் பண்பாட்டிற்கும் பெருமைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
உலகம் எவ்வளவு முன்னேறியதாக இருந்தாலும் அடிப்படை உணர்வுகள் மாறாததாகவே இருக்கின்றன. வீரம், காதல், தியாகம், பொறுமை, அன்பு, பண்பு, கயமை போன்ற உணர்வும் மாறாததாகும். இவற்றின் மெய்பாடுகளும் மாறாததாகவே இருக்கும். உலக மக்கள் எங்கு வாழ்ந்தாலும் அந்த உணர்வுத் தொகுப்புகளே இலக்கிய வடிவம் பெறுகின்றன. உணர்வு, கற்பனை இரண்டும் இலக்கியப் படைப்பிற்கு இன்றியமையாதனவாகும்.


கணிப்பொறியம் தமிழும்

இருபதாம் நூற்றாண்டில் மனிதர்களுக்கு மின்சாரம் எவ்வாறு அடிப்படையானதும், பிரிக்க முடியாததுமாக ஆகிவிட்டதோ, அதே போன்று கணிப்பொறியும் நம் வாழ்வில் பிரிக்க முடியாத இன்றியமையாத ஒன்றாக மாறிவருகிறது. கணிப்பொறியின் தோற்றம் என்பது ஏறக்குறைய சில ஆண்டுகளுக்கு முன்பு தான். ஆனால் அதன் வளர்ச்சி என்பது அசுரவேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் மணிக்கணக்கில் நாம் செய்ய வேண்டிய வேலைகளை ஒரு சில மணித்துளிகளில் கணிப்பொறி செய்து முடிப்பது தான்.


தமிழ்மொழியும் ஆய்வும்

தமிழ்மொழி தனக்கே உரிய கட்டுக்கோப்பான இலக்கணங்களை உள்ளடக்கிய திட்டமிட்ட மொழி. நன்னூல், தொல்காப்பியம் முதலிய அனைத்துத் தமிழ் இலக்கண நூல்களும் மொழி ஆய்விற்கு பெரிதும் பயன்படும். கணிப்பொறி உருவாக்கத்திலிருந்து இலக்கண உருவாக்கத்திற்கு நம் முன்னோர்கள் படைத்துள்ள சொத்து என இதனைக் கூறலாம். இலக்கணங்கள் விதிகளாகச் சொல்லப்பட்டுள்ள விதம் இத்துறைக்குப் பெரிதும் பயன்படும். மேலும் தமிழ் ஒட்டுநிலை மொழியாக உள்ளதால் பிரித்துக் காட்டுவதற்கும் எளிமையாக இருக்கும் பகுதி - விகுதி - சந்தி - சாரியை என்ற மரபு சார்ந்த அணுகு முறையும் சிந்திக்கத் தகுந்த ஒன்றாகும். தமிழும், கணிப்பொறியும் ஒன்றிணைந்து 'தகவல் யுகப் புரட்சியே' உலகத் தமிழ் மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது.


திருநீலகண்ட நாயனார் நாள்தோறும் சிவபெருமானின் பாதங்களை வாழ்த்தி வழிபடும் இயல்பினர். சைவ சமயப் பெருநெறியே உண்மையான பொருள் நெறி என்பதையுணர்ந்து பொய் சொல்லாமல் அறநெறியில் வாழ்ந்தார். சிவனடியார்களுக்கு வேண்டிய பணிவிடைகள் செய்து வாழ்ந்தார். அவ்வாறு வாழ்ந்து வந்த காலத்தில் பரத்தையரிடத்தில் உறவு கொண்டு திரும்பிய அவரிடம் திருமகளைப் போன்ற அழகுடைய அவரின் மனைவி ஊடல் கொண்டார். மனைவியின் ஊடலைத் தீர்க்கத் திருநீலகண்டர் பலவாறு கூறினார். அமைதி பெறாத தம் மனைவி 'தீண்டுவீராயின் எம்மைத் திருநீலகண்டம்' என்று வெறுத்துத் தடுத்தார்.


குறுந்தொகை
191 பாடலில் மரக்கிளையில் தத்தம் துணைகளோடு கூடியிருந்த பறவைக் கூட்டங்கள், துணையைப் பிரிந்திருப்போர் வருந்துமாறு தம் இனிய குரலினாலே அகவும், அதனைக் கேட்டும் திரும்பி வராத தலைவர் நமக்கு அன்னியர் ஆனார். அதனால் அவர் மீண்டும் வந்தால், எம் கூந்தலைத் தொட்டு ஒப்பனை செய்யாதே எம்மையும் தொடாதே என்று கூறுவேன்.
குறுந்தொகைத் தலைவி 'என்னைத் தொடாதே' என்று தலைவனைப் பார்த்துக் கூறுவேன் எனத் தோழியிடம் கூறுகிறாள். திருநீலகண்டரின் மனைவியோ தன் கணவரிடத்திலேயே 'என்னைத் தொடாதீர்' என்று கூறுகிறாள்.


விருந்தோம்பல்

'விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோன் மாண்புகள்'

என்று தொல்காப்பியம் குடும்பத் தலைவியின் பண்புகளைக் குறிப்பிடுவதிலிருந்து விருந்து போற்றுதல் மகளிர் கடமைகளில் தலையாய ஒன்றாய் இருந்தது என்பது தெரிகின்றது. அமுதத்தைத் தன் சுவையால் வெல்வதும் நல்ல தாளிப்பு மணம் கொண்டதும் உண்ண உண்ணத் தெவிட்டாதது தான் உணவை, வந்த விருந்தினர்க்கு வரையாது வழங்கி வாழ்கின்ற மகளிர் என்ற புறநானூறு இலக்கியமானது விருந்து போற்றும் இல்லற மகளிரைப் போற்றுகின்றது.


சிலப்பதிகாரமும் இல்லற வாழ்வின் பெருமைக்குக் காரணமான விருந்தோம்பலின் சிறப்பினைக் கூறுகிறது.


விருந்துபுறந் தீருஉம் பெருந்தன் வாழ்க்கையும் -(சிலப்பதிகாரமும்)
கம்பரும் கோசல நாட்டுப் பெண்களின் விருந்தாற்றும் பண்பைப் போற்றுகின்றார்.
'................... ஈதலும் வைகலும்
விருந்தும் அன்றி விளைவன யாவையே' - (கம்பராமாயணம்)

பாவேந்தர் பாரதிதாசன் தம்முடைய 'குடும்ப விளக்கு' என்னும் நூலில் விருந்தோம்பல் என்று ஒரு தலைப்பையே படைத்துக் காட்டியுள்ளார்.

சமூகவியல்

தமிழ் என்பது இலக்கியத் தமிழ் என்ற வரையறையுடன் நின்றுவிடாது, பொறியியல் தமிழ், சட்டத்தமிழ், மருத்துவத் தமிழ், கணினித் தமிழ் என்று பல்வேறு படி நிலைகளில் வளர்ச்சி பெற்று வருகின்றது.


இலங்கையில் மருத்துவப் படிப்பு தமிழ் வழியில்தான் கற்பிக்கப்படுகின்றது. தமிழ் வழியாக மருத்துவம் பயின்ற மாணவர்கள் உலகம் போற்றும் மருத்துவர்களாகப் பரவி இன்றும் மருத்துவத் தொண்டாற்றி வருகின்றனர். மருத்துவப் படிப்பைத் தமிழ்வழி பயில்வதற்குரிய பல அடிப்படை மருத்துவ நூல்களை இலங்கையில் மொழியாக்கம் செய்துள்ளனர். ஆனால் அதைப் பயன்படுத்துவதற்குத் தமிழ் நாட்டில் தடையாக இருப்பதற்கு முக்கிய காரணம் தமிழை மழலையர் பள்ளியிலிருந்து பல்கலைக் கழகம் வரை பயிற்று மொழியாக நடைமுறைப்படுத்தாமல் இருப்பதுதான். 'எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என்ற நிலையை அனைத்து துறையிலும் தாய்மொழித் தமிழை நடைமுறைப்படுத்துவதே இதற்குத் தீர்வாக அமையும். வரலாற்றுக்கு முற்பட்ட காலங்களில் மனிதனின் வாழ்வுநிலையை அறிஞர்கள் செம்புக் காலம், செம்புகற்காலம், இரும்புகாலம் என்று மூன்று வகையாகப் பிரித்துள்ளனர்.


சங்க இலக்கியமும் செம்புக்காலமும்

சங்க இலக்கியத்தில் செம்பு பற்றிய குறிப்புகள் பலவாறு காணக்கிடக்கின்றன.


'செம்பொற் புனை கலந்து அம்பொரிக் கலத்தை
பாலும் பல உண்ணாள்'

என்ற குறுந்தொகைப் பாடலில் செம்பொன்னாகிய கலத்திலே பொரிபோட்டு கலக்கப்பெற்ற பாலும் மிகுதியாக உள்ளது. அதைத் தலைவி உண்ணாதவளாக இருந்தாள் என்று குறிக்கப்படுகிறது.


'செம்பு இயன்றன்ன செய்உறி நெடுஞ்சுவர்'
மதில்களில் செம்பினைப் பொருத்துவது பற்றிய குறிப்பு நெடுநல்வாடையில் காணப்படுகிறது.


சங்க இலக்கியத்தில் 'செம்பு' என்று குறிக்கப்படுவது தனித்த உலோகத்தை மட்டுமே! 'செம்பொன்' என்பது செம்பும் தங்கமும் கலந்த நிலையைக்குறிக்கும். தென்னிந்தியாவில் செம்பு அதிகமாகக் கிடைக்கும்' கனிமமாகும். சங்க இலக்கியங்களில் 'செம்புலப் புறவு', செம்புலப் பெயல் நீர்' என்றும் குறிக்கின்றன. பொதிய மலைக்கு செம்மலை என்ற ஒரு பெயரும் உண்டு.


இரும்புக் காலம்

சங்க இலக்கியங்களில் இரும்பைப் பற்றியப் பல குறிப்புக் காணப்படுகின்றன. எஃகு என்றே இரும்பைக் குறிப்பிடுகின்றன.

'பொருந்தா மன்னர் அருஞ்சமத்து உயர்ந்து
திருந்து இலை எஃகும் போல'

என்றும் அகநானூற்றில் இரும்பு பற்றிக் குறிப்புகள் உள்ளன.


குறுந்தொகைப் பாடலில் செம்பொன்னாகிய கலத்திலே பொரிபோட்டு கலக்கப்பெற்ற பாலும் மிகுதியாக உள்ளது. அதைத் தலைவி உண்ணாதவளாக இருந்தாள் என்று குறிக்கப்படுகிறது.


'செம்பு இயன்றன்ன செய்உறி நெடுஞ்சுவர்'
மதில்களில் செம்பினைப் பொருத்துவது பற்றிய குறிப்பு நெடுநல்வாடையில் காணப்படுகிறது.


சங்க இலக்கியத்தில் 'செம்பு' என்று குறிக்கப்படுவது தனித்த உலோகத்தை மட்டுமே! 'செம்பொன்' என்பது செம்பும் தங்கமும் கலந்த நிலையைக்குறிக்கும். தென்னிந்தியாவில் செம்பு அதிகமாகக் கிடைக்கும்' கனிமமாகும். சங்க இலக்கியங்களில் 'செம்புலப் புறவு', 'செம்புலப் பெயல் நீர்' என்றும் குறிக்கின்றன. பொதிய மலைக்கு செம்மலை என்ற ஒரு பெயரும் உண்டு.


வெண்கலப் பயன்பாடு

தமிழ் மக்கள் வாழ்வில் வெண்கலத்தின் பயன்பாடு பிரிக்க முடியாத ஒன்றாகும். புதுமணமான தம்பதியருள் மணமகனுக்கு முதல் உணவு வெண்கலக் கும்பாவில் கொடுப்பது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாகும். வெண்கலத்தைத் தட்டினால் 'கிண்' என்று ஓசை வரும்.


'செல்வச் சிறா அர் சிறடிப் பொருந்த
போலஞ் செய் கிண் கிணி'.

என்று குறுந்தொகைப் பாடலில் வெண்கலத்தைப் பற்றிய ஓசைக்குறிப்பு உள்ளது.


தொகுப்பரை

தமிழ்மொழி மிக மிகத்தொன்மை வாய்ந்த மொழி. இத்தமிழ் மொழிக்குரிய எழுத்து வடிவங்கள் எந்தக் காலத்தில் தோன்றியது என்பது ஒரு கேள்விக்குறியாவே உள்ளது. இக்காலத்தில்தான் தோன்றியது என்று திட்டவட்டமாகக் கூற முடியாத நிலையில் தான் நம் தமிழறிஞர்கள் உள்ளனர். தற்போது நமக்குக் கிடைத்துள்ள ஆதாரங்களைக் கொண்டு தமிழின் உண்மை வரலாற்றை ஆய்வோம். மொழி என்பது காலந்தோறும் மாறக்கூடிய ஒன்று. அதற்குத் தமிழ் மொழியும் விதிவிலக்கன்று. தமிழ் என்பது இலக்கியத் தமிழ் என்ற வரையறைக்கு மட்டும் அடங்காது. காலத்திற்கேற்றவாறு மாறி வந்துள்ளது. தற்கால அறிவியல் வளர்ச்சியை எம்மொழி உள்வாங்கித் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறதோ அம்மொழியே காலப்போக்கில் நிலைபெறும். தமிழ் மொழியும் வளர்ந்து வரும் அறிவியல் புதுமைகளுக்கு ஏற்றவாறு மாறி வருகிறது. ஆனால் இந்த மாற்றத்தைத் திட்டமிட்டு செய்தால் நவீன யுகத்திற்கு ஏற்றவாறு தமிழை நாம் உருவாக்க முடியும். தமிழ் என்பது இலக்கியத் தமிழ் என்ற வரையறையுடன் நின்று விடாது. பல்வேறு நிலைகளில் வளர்ச்சி பெற்று வந்தாலும் தற்போது இவ்வளர்ச்சியானது போதுமானதாக இல்லை என்பதே உண்மை.

 

முனைவர் பூ.மு.அன்புசிவா
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்
- 641 028
பேச :
9842495241.

 

 

 www.tamilauthors.com