பாரிஸ் மாநகரில் நடைபெற்ற விழாவில் மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவனுக்குக் கௌரவம்..!

ஓவியா (பாரிஸ்)

தங்கப்பதக்க மாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்..!!

'தமிழ்த் தேசிய உணர்வை, தமிழரசுக் கட்சியை அன்று பட்டினங்கள் முதல் கிராமங்கள் வரை, மேடைகள் முதல் வீடுகள் வரை எடுத்துச் சென்றவர்களில் முதன்மை வகித்தவர் நாவேந்தன். அன்று ஐம்பதுகள் முதல் தனது பேச்சாலும், எழுத்தாலும் தமிழ்மக்களைத் தட்டியெழுப்பியவர். அவரது வீறுகொண்ட இலக்கிய ரசம் பொங்கும் பேச்சாற்றலும், எதிரிகளைச் சுட்டிடும் உணர்வுமிக்க எழுத்தாற்றலும் நிகரற்றவை. அன்று அவரைப்போல பேச வேண்டும் என ஆசைப்பட்டவர்களில் நானும் ஒருவன். அவர் வழியில் சிறுவயதிலேயே பேச்சாற்றல், எழுத்தாற்றலை வளர்த்துக்கொண்டு, முற்போக்குச் சிந்தனையாளராகப் பரி ணமித்து, இன்று பல்துறை வித்தகராக விளங்கும் அவரது சகோதரர் வி.ரி.இளங்கோவன் சாதனையாளராகக் கௌரவிக்கப்படுவது மகிழ்ச்சிக்குரியதும் பாராட்டத்தக்கதுமாகும்.'

இவ்வாறு, பாரிஸ் மாநகரில் அண்மையில் நடைபெற்ற பிரான்ஸ் 'ஆர். ரி. எம். பிறதர்ஸ்' நிறுவனத்தின்
22-வது 'கலைத்தென்றல்' விழாவில் சிறப்புரையாற்றிய 'கல்விச்சேவையாளர்' சி. காராளபிள்ளை குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசுகையில், 'தமிழ் இலக்கிய - சுதேச மருத்துவ அறிவு இளங்கோவனின் குடும்பச் சொத்து. அவரது பெற்றோர் தமிழிலக்க்pய - மருத்துவ அறிவு நிரம்பப் பெற்றவர்கள். தமிழகத்தில் அழ. வள்ளியப்பாபோல், இலங்கையில் இன்று சிறுவர் இலக்கியத்தில் பெரும்பணியாற்றும் கல்வியாளர் த.துரைசிங்கம், கொழும்பு பல்கலைக்கழகச் சட்டபீட பீடாதிபதி வி. ரி. தமிழ்மாறன், மருத்துவர் த. சிவானந்தன் ஆகியோரும் இளங்கோவனின் சகோதரர்களே. அவரது மனைவி பத்மா இளங்கோவனும் சிறுவர் இலக்கியப் படைப்பிற்கான விருதினைத் தமிழகத்தில் பெற்றவர். குடும்பத்தில் அனைவரும் எழுத்தாற்றல் மிக்கவர்களாக விளங்குவது பாராட்டுக்குரியது. தனது தேடுதல்கள் மூலம் மார்க்சிஸ சிந்தனைகளை வரித்துக்கொண்ட இளங்கோவன், அந்த வழிநின்று சொல் - செயலில் பிறழ்வின்றி தொடர்ந்து செயற்பட்டு வருபவர். மக்களைக் கனவு நிலையில் மாயாவாதங்களுக்குள் இழுத்துச்செல்லும் வழிகளைக் கூறாது, எமது சந்ததியினரின் எதிர்காலத்தையிட்டு யதார்த்தபூர்வமாகச் சிந்தித்து விடயங்களை எழுத்திலும் பேச்சிலும் தரும் மக்கள் படைப்பாளி, சாதனையாளர் இளங்கோவன் கௌரவிக்கப்படுவதையிட்டு கலை இலக்கிய அபிமானிகள் மகிழ்ச்சியடைய வேண்டும்' என்றார்.

ஊடகவியலாளர் எஸ்.கே.இராஜென் பேசுகையில், 'பத்திரிகையாளராக, கவிஞராக, எழுத்தாளராக, வானொலி - தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளராக, நடிகராக, சிறந்த பேச்சாளராக, சித்த ஆயுர்வேத மருத்துவராக, சமூகப் பணியாளராக, முற்போக்குச் சிந்தனையாளராக விளங்கும் இளங்கோவன் கௌரவிக்கப்படுவது மகிழ்ச்சிக்குரியது. ஈழத்து இலக்கியத்துறை தொடர்பான தகவல்கள் நிறைந்துள்ள பொக்கிசப் பெட்டகம் இளங்கோவன் என்றால் மிகையல்ல. ஈழத்தமிழர்களின் அரசியல் வரலாற்றை விரிவாக எழுதக்கூடிய ஆளுமை கொண்டவர். அதுபோன்றே ஈழத்து இலக்கிய வரலாற்றுப் பதிவையும் மேற்கொள்ளக்கூடியவர். அந்தப் பணியை இளங்கோவன் மேற்கொள்வது புலம்பெயர்ந்த எம் சந்ததியினர்க்குப் பயனுடையதாகும்' என்றார்.

பிரான்ஸ் 'ஆர்.ரி.எம்.பிறதர்ஸ்' சார்பில் தங்கப்பதக்க மாலை இளங்கோவனுக்கு அணிவிக்கப்பட்டது.

'கிறகெறி தங்கராஜா ஞாபகார்த்த விருதினை' பிரான்ஸ் - இலங்கை இந்திய வர்த்தகர் சங்கத் தலைவர் செ. சிறிபாஸ்கரன் இளங்கோவனுக்கு வழங்கினார்.

'கலைவேந்தன்' சாமுவேல் பெஞ்சமின் ஞாபகார்த்த விருதினை மூத்த கலைஞர் 'ஆண்டவர்' பெஞ்சமின் இம்மானுவேல் இளங்கோவனுக்கு வழங்கினார்.

இளங்கோவன் தனது ஏற்புரையில், பாரிஸ் மாநகரில் பலவருடங்களாகக் 'கலைத்தென்றல்' விழாவினைத் தொடர்ந்து சிறப்புற நடாத்திவரும் பிரான்ஸ் 'ஆர். ரி. எம். பிறதர்ஸ்' நிறுவனத்தின் பணியினைப் பாராட்டியதோடு, அதன் நிர்வாகி பிரபல கலைஞர் இரா. குணபாலனது கலை முயற்சிகளுக்கு மக்கள் என்றும் ஆதரவளித்து ஊக்குவிக்க வேண்டும் என்றார்.

மூத்த கலைஞர் பெஞ்சமின் இம்மானுவேல், செல்வராசா சந்திரமணி ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர். விழாவில் 'காஸ்-லே-கோணேஸ்' (புயசபநள-டநள-புழநௌளந) நகரத் துணை முதல்வர் சேர்ஜியா மகேந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். கலைஞர் டெமியன் சூரி உட்படப் பலர் உரைநிகழ்த்தினர்.

பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றுப் பரிசில்களும் வழங்கப்பட்டன. சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது. பிற்பகல்
2:30 மணிக்கு ஆரம்பமாகிய 'கலைத்தென்றல்' விழா இரவு 11. 00 மணிவரை நீடித்தது.

பிரபல அறிவிப்பாளர் 'இன்தமிழ்க் குரலோன்' எஸ். கே. இராஜென், ஞானசீலி சிறிதர், இரா. குணபாலன் ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தனர்.

விழாவில் 'ஆர். ரி. எம். பிறதர்ஸ்' சார்பில் இரண்டு இலட்சம்
(200000) ரூபா யாழ் விழிப்புலனற்றோர் சங்கத்திற்கென வழங்கப்பட்டமை கவனத்திற்குரியது.

விழாவில் கௌரவிக்கப்பட்ட மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவனுக்கு அண்மையில்
(02-10-2014) தமிழ்நாடு கு. சின்னப்பபாரதி இலக்கிய அறக்கட்டளை விருதும் (ரூபா பத்தாயிரம் - 10000 - விருதுச் சின்னம் - சான்றிதழ்) கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

  


 

 

 www.tamilauthors.com