என் கணக்கு எண் கணக்கு


கவிஞர் மா. உலகநாதன்


விவேக சிந்தாமணி சிக்கலான (எண்ணும் எழுத்துமான) பாடல் ஒன்றினைத் தந்து அதில் ஒரு வேண்டுகோளையும் வைத்துள்ளது. வரிந்து கட்டிக் கொண்டு வரி வரிவரியாய் வரும் வேண்டுகோள் யாருக்கு என்று எண்ணுகிறீர்கள்? காதலிக்குத் தான்!

காதலன் ஒருவன் தன் காதலியிடம் தன் ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டுவதாக இப்பாடல் அமைந்துள்ளது . எல்லாம் ஓரே கணக்கு மயம் போங்கள!;

ஒரு நான்கும் ஈரரையும் ஓன்றே கேளாய்
உண்மையாய் ஐயரையும் அரையும் கேட்டேன்
இரு நான்கு மூன்றுடனே ஒன்றும் சொல்லாய்
இம் மொழியைக் கேட்டபடி ஈந்தாயாயின்
பெருநான்கும் அறுநான்கும் பெறுவாய் பெண்ணே
பின்னை ஓர் மொழிபுகல வேண்டா இன்றே
சரிநான்கும் பத்து மொரு பதினைந்தாலே
சகிக்கமுடி யா(து) இனி என் சகியே மானே!


ஒருநான்கும் ஈரரையும் ஒன்றே
(4+1/2+1/2+1=6) ஒரு நான்கோடு இரண்டு அரையும் ஒன்றும் சேர்வதால் உருவாகும் ஆறு என்ற எண் குறிக்கும் ராசியான கன்னியே! பன்னிரனண்டு இராசிகளில் ஆறாவது இராசி கன்னிப் பெண்ணைக் குறிக்கிறது). கேட்பாயாக.

உண்மையாய் ஐயரையும் அரையும்: உண்மையாய் ஐந்து அரைகளோடு அரை
(5x1/2+1/2=3) சேர்வதால் வரும் மூன்று என்ற எண்குறிக்கும் கிழமையாகிய செவ்வாயை ( உன் சிவந்த வாயை)க் கேட்டேன்.

இரு நான்கு மூன்றுடனே ஒன்றும் சொல்வாய் :இரண்டு நான்கு மூன்றுடனே ஒன்றும்
(4+4+3+1=12). பன்னிரண்டு என்னும் எண்குறிக்கும் நட்சத்திரமாகிய உத்தரத்தை  அதாவது விடையை பதிலை)க் கூறுவாயாக.

இம்மொழியைக் கேட்டபடி ஈந்தாயாயின்; நான் கூறிய இந்த வாசகத்தில் சொன்னவாறு நீ எனக்கு உன் செவ்வாயை நல்குவாயின் பெருநான்கும் பெறுவாய் பெண்ணே: நான்கோடு ஆறு நான்கு சேர்த்து உண்டாக்கும்
(4+6x4=28)  இருபத்தெட்டு என்னும் எண் குறிக்கும் தமிழ் ஆண்டான ( தமிழ் ஆண்டுகள்60-ல்).

இருபத்தெட்டாம் ஆண்டு ஜெய ஆண்டு ஜெயத்தை ( வெற்றியை) நீ பெறுவாய்
பெண்ணே:

பின்னை ஓர் மொழிபுகல வேண்டா இன்;றே: மங்கையே இனியும் நானொரு வார்ததை சொல்லத் தேவையில்லை அல்லவா?

சரி நான்கும் பத்து மொரு பதினைந்தாலே: நான்கொடு பத்தும் ஓரு பதினைந்தும் சேர்வதாலே உண்டாகும்
(4+10+15=29) இருபத்தொன்பது எண்ற எண் குறிக்கும் சரியான தமிழ் வருடமான மன்மதனால் (காமன் படுத்தும் பாட்டினால்)

சகிக்கமுடி யா(து) இனி என் சகியே மானே: என் சகியே! மானே இனிச் சகிக்க முடியாது. என் தோழியே! மான் போன்றவளே! இனிமேல் என்னால் காமவேதனையைத் தாங்கிக் கொண்டிருக்க முடியாது.

நீதிக் கருத்துகள் மட்டுமல்லாது நினைந்து நினைந்து கற்பதற்கும் கற்ற வழி ஓழுகுதற்கும் ஏற்ற ஓழுகலாறுகளை செய்யுள் வடிவிலே தந்து. காலத்தால் அழியாது நிற்கிறது விவேக சிந்தாமணி


துணையான நூல்:

கவிஞர் பத்மதேவன் உரையாசிரியர்..... விவேக சிந்தாமணி ( மூலமும் உரையும்)
கற்பகம் புத்தகாலயம்....சென்னை
17

கவிஞர் மா. உலகநாதன்
தருநீலக்குடி – அஞ்சல்
612101

கும்பகோணம்-வழி

 

 

 

 www.tamilauthors.com