கம்பனில் முரண்


பேராசிரியர
் கி.நடராஜன்


ம்பர் கையாண்ட அணிகள் பல; உத்திகள் பல. முரண் தொடை என்ற ல்ஹழ்ஹக்ஹஸ்ரீற்ண்ர்ய் ஐக் கம்பர் பல பாடல்களில் கையாண்டுள்ளார். கம்பர் கையாண்டதைப் போல தமிழிலே வேறு எந்தக் கவிஞரும் கையாண்டதில்லை. ஒரு பாட்டிலே ஒரு பாத்திரத்தின் இருவேறு மன நிலைகளை எடுத்தியம்புகின்றார் கம்பர். ஆரண்ய காண்டத்தில் இலக்குவனால் மூக்கறுபட்டு சூர்ப்பணகை பின்பு ஜனஸ்தானத்தில் வந்து கரதூஷணாதியர்களிடம் முறையிட்டாள். அவர்களையும் இராம இலக்குவர் வதம் செய்யவே நேரே தன் அண்ணன் இராவணனிடம் வந்து தனக்கு நேர்ந்த அவமானத்தையும் தான் மூக்கறுபட்டதையும் எடுத்துக்கூறி புலம்பினாள் சூர்ப்பணகை. இராவணன்

கேட்டான் ''நீ யாது செய்தனை? இப்பெருங்கேட்டை உனக்கு விளைவித்தது யார்?'' என்று.

சூர்ப்பணகை மிகவும் சாமர்த்தியமாகப் பதில் சொல்கிறாள். ''இரண்டு மானுடர்கள் நம் வனத்திற்கு வந்திருக்கிறார்கள்; அவர்களுடன் ஒரு பேரழகி வந்திருக்கிறாள். அவளை உனக்காகக் கொண்டு வர எண்ணி முயன்ற போது என்னை இப்படி மூளியாக்கி விட்டனர் அந்த மானிடப்பதர்கள். அந்தச் சீதை எப்படிப்பட்ட அழகி தெரியுமா?'' எனச் சீதையின் அழகையெல்லாம் வருணித்துக்கொண்டே சென்றாள்.

சீதையின் பேரழகைக் கேட்டவுடனேயே இராவணன் தன்னை அடியோடு மறந்தான். தன் தங்கை மூக்கறுபட்டு, மானமிழந்து நிற்பதை மறந்தான், தன் உறவினர்கள் கரதூஷணர்கள் கொல்லப்பட்டதையும் மறந்தான்; தான் பெற்றிருந்த பெரிய வரங்களை எல்லாம் மறந்தான். இவற்றையெல்லாம் ஏன் மறந்தான் என்று கேட்டால், மன்மதனின் பாணங்கள் அவன் உடலின் மீது பாய்ந்ததால், சீதையின் வடிவழகை மட்டும் மறக்காமல் தன் நெஞ்சில் நிறுத்தி வைத்தான். இதோ கம்பனின் வியத்தகு வித்தக வரிகள்:


கரனையும் மறந்தான் தங்கை மூக்கினைக் கடிந்து நின்றான்
வரனையும் மறந்தான் உற்ற பழியையும் மறந்தான் வெற்றி
அரனையுங் கொண்ட காமன் அம்பினான் முன்னைப்பெற்ற
வரனையும் மறந்தான் கேட்ட மங்கையை மறந்திலாதான்.


இப்பாடலின் சிறப்ப, கம்பர் பயன்படுத்திய முரண்தான். மறந்தான், மறந்தான், மறந்தான் என அடுக்கிக்கொண்டே போய், இறுதி வரியில் மறந்திலாதான் என்று பாடலைக் முத்தாய்ப்பாக முடித்துள்ளார். தன் தங்கைக்கு நேர்ந்த பழியைத் துடைக்க கரனைக் கொன்றவர்களைப் பழி தீர்க்க, அவன் எண்ணவில்லை. ஆனால் சீதையையே எண்ணமாஞ் சிறையில் அடைத்தான்.

அனைத்தையும் மறந்தவன் சீதையையும் மறந்திருக்கலாம். மறந்திருந்தால், இராமன் கையால் இறந்திருக்க நேராது. இலங்கை அரசாட்சியைத் துறந்திருக்க நேர்ந்திராது. ஆனால் மன்மத பாணங்கள் அவன் மார்பில் பாய்ந்திடவே இராவணன் தன்னை மறந்தான், தன் தங்கையை மறந்தான், தான் பெற்ற வரங்களையே மறந்தான். இப்படி மறந்தான், மறந்திலாதான் என்ற முரணைப் பயன்படுத்தி இராவணனது மனநிலையில் ஏற்பட்ட மாற்றத்தை கம்பனால் மட்டுமே இவ்வளவு சிறப்பாகப் பாடமுடியும்.

முரணை வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் சிறப்பாகப் பயன்படுத்துவதில் கம்பர் ஷேக்ஸ்பியரையும் மில்டனையும் ஒத்து விளங்குகிறார்.

 


நன்றி: தினமணி

 

 

 

 www.tamilauthors.com