வீரமாமுனிவரின் எழுத்து வரிவடிவச் சீர்திருத்தம்


பா. வளன் அரசு

 

தினெட்டாம் நூற்றாண்டில் தமிழகத்துக்குத் திருமறைத் தொண்டராக வருகை தந்த வீராமுனிவர் 1711 முதல் 1747 வரை முப்பத்தாறு ஆண்டுகள் ஒப்பற்ற தமிழ்த் தொண்டராகவும் திகழ்ந்தார். தைரியநாதர், மலர்களின் தந்தை, வீரமாமுனிவர், திருமதுரைச் செந்தமிழ்த் தேசிகர், வீரஆரியன், இசுமத்து சந்நியாசி ஆகிய ஆறு பெயர்களால் அழைக்கப்பெற்ற இத்துறவி அயல்நாட்டுத் துறவியர், தமிழகத் துறவியர் போன்ற வாழவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய யோசேப்பு என்னும் தச்சுத் தொழிலாளியின் அறுபதாண்டு வாழ்வியலைத் தேம்பாவணி என்னும் கலைக் காப்பியமாக வழங்கியுள்ளார். போர்ச்சுக்கல் நாட்டு பொம்பேரு மலையில் வேதத்துக்காக உயிர் துறந்த கித்தேரியாளின் பத்தாண்டு வாழ்வியலை நாட்டுப்புற பனுவலாக நல்கியுள்ளார். அன்னை மரியாளின் புகழ்பரப்பும் காவியமாகத் திருக்காவலுர் கலம்பகத்தை அருளியுள்ளார். வேதியர் ஒழுக்கம் என்னும் ஏடு தமிழ் உரைநடை பயிலும் மாணவர்க்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. வேதவிளக்கம் தமிழில் பொருள் அட்டவனை தந்த முதல் நூலாகும். வாமன் சரித்திரம் செந்தமிழ் நடைக்கும் பரமார்த்தகுருவின் கதை கொடுந்தமிழ் நடைக்கும் சான்று கூறும் வகையில் தமிழ்இலத்தீன் அகராதியின் பின்னிணைப்பாக அமைந்துள்ளன. எட்டுப் பாநடை இலக்கணப் புத்தகங்களும் மூன்று மருத்துவச் சுவடிகளும் இரண்டு மடல்களும் திருக்குறள் இலத்தீன் மொழிபெயர்ப்பும் வீரமாமுனிவரின் வித்தகப் பணிகளுக்கு மணிமகுடங்கள் ஆகும்.
 

வீரமாமுனிவர் இயற்றிய நான்கு இலக்கண ஏடுகளுள் ஒன்றான தொன்னூல் விளக்கம் ஐந்திலக்கணமும் கூறும் வீறுநடை நூலாகும். எழுத்தினை நாற்பது நூற்பாக்களாலும், சொல்லினை நூற்றிரண்டு நூற்பாக்களாலும, பொருளினை ஐம்பத்தெட்டு நூற்பாக்களாலும், யாப்பினை நூறுநூறு பாக்களாலும், அணியினை எழுபது நூற்பாக்களாலும் எடுத்துரைக்கும் வீரமாமுனிவரின் இலக்கணத் தெளிவு வியந்து பாராட்டத்தக்கது. புலமைத் தமிழைச் செந்தமிழ் எனவும் பேச்சுத் தமிழைக் கொடுந்தமிழ் எனவும் வரையறை செய்துள்ளார். 1728 ஜனவரி 29ம் நாளன்று கொடுந்தமிழை எழுத்து, பெயர், வினை, சொல், எண் என்னும் ஐந்து இயல்களாகவும் இருநூறு செய்திக் கூறுகளாகவும் ஈந்துள்ளார். 1730ம் ஆண்டு செப்டம்பர் பதின்மூன்றாம் நாளன்று எழுதி முடித்த செந்தமிழ் இலக்கணம் நூற்றிருபது செய்திக் கூறுகளை விரித்துரைக்கிறது. அயல்நாட்டால் தமிழில் பாப்புனைவதற்கு வாய்ப்பாகத் திறவுகோல் என்னும் பெயரால் யாப்பு நூலை இலத்தீன் மொழியில் தந்துள்ளார்.
 

முந்நூற்று எழுபது நூற்பாக்களில் ஐந்திலக்கணமும் மொழியும் தொன்னூல் விளக்கத்தில் தொல்காப்பியரையும் நன்னூலாரையும் ஏற்றிப் போற்றி, 'நீட்டல் கழித்தல் குறில் மெய்க்கிருபுள்ளி' என்று எடுத்தியம்பி உரையும் வரைந்துள்ளார். கொடுந்தமிழ் இலக்கண நூலுள், தாம் புதிதாகக் கண்டுபிடித்து விண்டுரைக்கும் எழுத்து வரிவடிவச் சீர்திருத்தம் பற்றிக் கூறியுள்ளார். 'எகர ஓகரக் குறில் நெடில்களை வேறுபடுத்திக்காட்டப் புதிய முறையைக் கண்டுபிடித்திருக்கிறேன்' என்பதைப் பணிவாகப் கூறிக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். குறில, நெடில் வடிவக் கொம்புக் குறியீடுகளைச் சுட்டிக் காட்டியுள்ளார். பலர் அவற்றை ஏற்றுப் பின்பற்றுவதாகவும் பெருமிதத்தோடு குறித்துள்ளார். (விதி.3) மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஊஞ்சல் மண்டபத்தில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டில் குறில் நெடில் வேறுபாடுகள் காணப்படுவதை ஐராவதம் மகாதேவன் போன்றோர் எடுத்துக்காட்டியுள்ளனர். 'தினமணி' இதழில் வந்த கட்டுரைக்கு விளக்கம் வழங்கும் வகையில் முனைவர் வி.மி. ஞானப்பிரகாசம் அடிகளார் 'நம் வாழ்வு' இதழில் விரித்துரைத்துள்ளார். வீரமாமுனிவர் காலத்திலேயே 1738 ஆம் ஆண்டு தரங்கம்பாடியில் 'கொடுந்தமிழ் இலக்கணம்' என்னும் பேச்சுத்தமிழ்நூல் அச்சேறிப் பலருக்கும் பயன்தந்தது. இரேனியுசு என்னும் செருமானிய அறிஞர் தமிழ் இலக்கணம் தரவும், சார்ச்சு யுக்ளோ போப்பையர் தமிழ் இலக்கணம் எழுதவும் கொடுந்தமிழ் இலக்கணமே முன்னோடி நூலாகும்.
 

ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இரண்டாம் சங்கத்தில் எழுந்ததாகக் கருதப்படும் தொல்காப்பியம் ஓராயிரத்து அறுநூற்றுப் பத்து நூற்பாக்களில் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூவிலக்கணமும் கூறுகிறது. எழுத்து என்றாலே ஒலியன் என்ற விளக்கம் வழங்குகிறது. அகரம் முதல் னகரம் முடிய முப்பது எழுத்துகள் முதல் எழுத்துகள் எனவும் குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் ஆகிய முன்றும் சார்பெழுத்துக்கள் எனவும் எடுத்தோதியுள்ளது. வரிவடிவம் பற்றிப் பேசும்போது 'மெய்யெழுத்து எல்லாம் புள்ளியோடு நிலையல் எனவும் எகர ஓகரத்து இயற்கையும் அற்றே' எனவும் கூறுகிறது. பதினெட்டு மெய் எழுத்துகளுடன் இரண்டு உயிர் எழுத்துகளும் புள்ளி பெற்று வரும் என்று தெரிவித்துள்ளது. எகர ஒகரங்களின் மீது புள்ளியிட்டு எழுதினால் குறிலாகவும், புள்ளியிடாது எழுதினால் நெடிலாகவும் கருதியுள்ளனர். எரி நெருப்புக்கு ஏரிக்கும் வேறுபாடு புள்ளி உண்மையாலும் இன்மையாலும் உணரப்பட்டன. ஒதிய மரத்துக்கும் ஓதியாகிய கூந்தலுக்கும் ஒகர எழுத்தின் மீது புள்ளி பெறுவதும் புள்ளி பெறாததும் கொண்டு கண்டுணர்ந்தனர். வீரமாமுனிவர் எளிதாகவும், தெளிவாகவும் எல்லோரும் ஏற்றுப் போற்றும் வகையில் எகர ஒகரங்களைப் புள்ளியிடாது எழுதிக் குறிலாகவும் ஏகார ஓகாரங்களைக் கீழே கோடும் கழித்தும் நெடிலாகவும் பயன்படுத்த வழிகாட்டினார். மேலும் ஒற்றைக் கொம்பு இரட்டைக் கெம்பு வரிவடிவங்களை உயிர்மெய் எழுத்துக்களும் பயன்படுத்தச் செய்தார் 'மெய்' என்றும் 'மேய்' என்றும் குறில் நெடில் வேறுபாடு அறிந்து எல்லோரும் எழுதத் தொடங்கினர். அச்சுத்துறையின் வரவாலும் அறிவியல் உறவாலும் எழுத்து வரிவடிச் சீர்திருத்தம் மிக விரைவாகப் பரவியது வீரமாமுனிவர் உருவாக்கிய குறில் நெடில் சீர்திருத்த வடிவங்கள் பெயர், பொருள், தொடை, தொகை, என்னும் நால்வகைக் கூறுகள் கொண்ட வீரமாமுனிவரின் சதுரகராதியிலும் இடம் பெற்றன என்று அந்நூலின் முன்னுரையில் வீரமாமுனிவர் விளம்பியுள்ளார்.
 

'வடிவக் குழப்பம் வளரா திருக்க

அடிகள் திருத்தம் அறிந்தோர் படிக்க

எளிதாக உள்ளதனை எண்ணியே உள்ளம்

களித்திடக் கைகூப்பு வார்'
 

என்று வீரமாமுனிவ மாலைகள் என்னும் நூலாசிரியர் நவில்கிறார். (.64)
 

எழுத்து வரிவடிச் சீர்திருத்தம் தெளிவுக்கு மாறாகப் புதிராகப் போய்விடக்கூடாது. இகரத்தின் குறில் நெடில் வேறுபாடு , என்று முறையே முடிவில் சுழியின்றியும் சுழிகொண்டும் அமைந்திருந்தன. கி, கீ என்று உயிர்மெய் எழுத்து வரிவடிவங்கள் போன்று இயல்பாக இருந்தன. ஆனால் 'இகாரம்' எப்படியோ 'ஈகாரம்' என்று மாறியது புரியாத புதிராக அமைந்துள்ளது, பகரத்தைத் தலைமாற்றிக் போட்டு இருபுள்ளிகள் உள்ளேயும் வெளியேயும் இடம் பெற்றுள்ளன.
 

ஈரோட்டுப் பெரியார் இராமசாமி அவர்களின் நூற்றாண்டினையொட்டித் தமிழக அரசின் பதின்மூன்று வரிவடிவச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. ஆகாரத்தில் மூன்றும், ஒகரத்தில் மூன்றும், ஓகாரத்தில் மூன்றும், ஐகாரத்தில் நான்குமாக அவை விளங்குகின்றன. கை எழுதுவது போன்றே ணை, லை, ளை னை ஆகிய உயிர்மெய் எழுத்துக்களை எளிதாகவும் தெளிவாகவும் எழுதி வருகின்றோம். அரசின் சார்பில் கல்வி அமைச்சர் தந்த அறிவிப்பால் பாடப்புத்தகங்கள் முதல் நூலகப் புத்தகங்கள் மற்றும் அறிக்கைகள் அனைத்தும் புதிய வரிவடிவ மாற்றத்துடன் அமைவது இன்றியமையாதது என்று அரசகட்டளை ஆயிற்று தமிழகப் புலவர் குழுத் தலைவர் மூதறிஞர் .சு.. மாணிக்கம் மேலும் புதிய வரிவடிவ மாற்றங்கள் எதுவும் கொண்டு வந்தால் குழப்பங்கள் கூடும் என்று தெளிவுறுத்தியுள்ளார்.
 

தமிழறிஞர் கூற்றுக்கு மாறாக, அறிவியல் மற்றும் பொறியியல் பெருமக்கள் உயிர் எழுத்துக்களின் எண்ணிக்கையைப் பன்னிரண்டிலிருந்து பத்தாகக் குறைக்கவும் தமிழ் மொழியைச் சிதைக்கவும் தொடர்ந்து முயன்று வருகின்றார். ஐகார ஓளகாரங்களை விடுத்து, அகரத்தோடு யகர வகர ஒற்றுகளை இணைத்துப் போலிகளைப் பயன்படுத்தத் தூண்டி வருகின்றனர். தலை என்றும் விலை என்றும் எழுதுவதை தலய், விலய், என்றெல்லாம் எழுதவியலாது. கணிப்பொறியைச் சுட்டிக்காட்டியும் வேறு பலவாறும் தொலைநோக்குப் பார்வையின்றி எழுத முனைவது வருந்தத்தக்க செயலாகும்.
 

இத்தாலிய நாட்டிலிருந்து தமிழகத்துக்க வந்து முப்பது அகவைக்குப் பிறகு தமிழைக் கற்றுத் தெளிந்து திருக்குறள் முதலாய இலக்கியங்களையும் தமிழ் மொழியையும் உலகறியச் செய்து தேமதூரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்று தூண்டிய வீரமாமுனிவர் என்றுமுள தென் தமிழை இயம்பு இசையாம் புகழ் கொண்டவராகத் திகழ்கிறார்.

 

நன்றி: பிறதுறைத் தமிழியல்.


 

 

 

 www.tamilauthors.com