படைப்பிலக்கியவாதி தெணியானுக்கு இன்று 73 வயது

 

முருகபூபதி

 

 

திரும்பிப்பார்க்கின்றேன்

இலங்கை வடமராட்சியின் ஆத்மாவை வாசகர் உலகிற்கு முன்னிலைப்படுத்திய கதை சொல்லியின் வாழ்வும் பணிகளும் பரந்துபட்டது.


நீர்கொழும்பில் எங்கள் வீட்டு முற்றத்தில் எமது பொலிஸ் தாத்தா நட்ட மல்லிகைக்கொடி வளர்ந்து பூத்துக்குலுங்கியது.


தாத்தா இறந்தபொழுது அந்த மல்லிகைப்பந்தலுக்கு கீழே அவரது பூதவுடலை இறுதி அஞ்சலிக்கு வைத்தார்கள். சில மல்லிகை மலர்கள் அவர் மீது விழுந்த காட்சி என்னை பரவசப்படுத்தியிருக்கிறது. அப்பொழுது எனக்கு ஆறுவயது.


வீதியில் செல்பவர்களும் மல்லிகையை பறித்து முகர்ந்துகொள்வார்கள். பாட்டி வீட்டில் சுவாமி படங்களுக்கு தேவையானதை வைத்துக்கொண்டு எஞ்சியவற்றை கோயிலுக்கு கொடுத்துவிடுவார்கள்.


பின்னாளில் நான் வெளியே செல்லும்போதெல்லாம் எனது சேர்ட் பொக்கட்டுக்குள் ஒரு மல்லிகை மலரும் இருக்கும். அதன் வாசம் எப்பொழுதும் என்னுடன் தொடர்வது போன்ற உணர்வு. தாத்தா வைத்த மல்லிகை நான் பிறந்த காலத்திலிருந்து எனக்கு நெருக்கமானது.


அதேபோன்று
1970 இற்குபின்னர் நான் இலக்கியப்பிரவேசம் செய்தகாலத்தில் எனக்கு நெருக்கமானது ஒரு இலக்கிய இதழ். அதன்பெயரும் மல்லிகை. எப்படியோ மல்லிகை எனது வாழ்வில் இரண்டறக்கலந்து இணைந்து வாழ்கிறது.


தாத்தா
1950 களில் வைத்த மல்லிகை இன்றும் அங்கே பூக்கின்றது. ஆனால் - யாழ்ப்பாணத்தில் படைப்பாளி டொமினிக்ஜீவா மலரச்செய்த மல்லிகை இதழ் எமது தமிழ் மக்கள் போன்று நிர்ப்பந்தங்களினால் இடம்பெயர்ந்து கொழும்பில் சிறிது காலம் இலக்கிய மணம்பரப்பிக்கொண்டிருந்துவிட்டு தனது ஆயுளை நிறுத்திக்கொண்டதை மல்லிகையின் வாசத்தை நுகர்ந்த சுவாசப்பையினாலேயே பெருமூச்சும் விட்டு என்னை அமைதிப்படுத்திக்கொள்கின்றேன்.


எனினும் ஜீவா தொடங்கிய மல்லிகையில் இலக்கிய மணம் பரப்பிய பலர் இன்றும் எனது நெஞ்சத்தில் வாழ்ந்துகொண்டு சகோதர வாஞ்சையை மல்லிகை மணம் போன்று உணர்த்திக்கொண்டுதானிருக்கிறார்கள்.


அவர்களில் ஒருவர் நண்பர் தெணியான். அவருக்கு இன்று ஜனவரி
06-01-2015 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 73 வயது பிறக்கிறது. அவருக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டே இந்தப்பதிவைத் தொடருகின்றேன்.


1971 ஏப்ரிலில் மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சியினால் மாலையானதும் ஊரடங்கு அமுலுக்கு வந்துவிடும். படித்துவிட்டு வேலை தேடும்படலத்திலிருந்த எனக்கு அப்பொழுது கிடைத்த முதல் வேலை வீரகேசரியின் நீர்கொழும்பு பிரதேச நிருபர் பணி. எழுதினால்தான் ஏதும் கிடைக்கும். அக்காலத்தில்தான் எனக்கு யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான மல்லிகை இதழும் கிடைத்தது.


நண்பர் நீர்கொழும்பூர் முத்துலிங்கத்தை சந்திக்க மல்லிகை ஆசிரியர் ஜீவா வருகிறார் என அறிந்து நானும் நண்பர் செல்வத்தினமும் அங்கே ஒரு மாலை வேளையில் சென்றோம்.

(செல்வரத்தினம் தற்பொழுது பிரான்ஸில். நீர்கொழும்பூர் முத்துலிங்கம் மேல் உலகில். நான் அவுஸ்திரேலியாவில். ஜீவா கொழும்பு மட்டக்குளியில். யாழ்ப்பாணம் மல்லிகை காரியாலம் அந்த ஒழுங்கையில் இன்றும் மூடிக்கிடக்கிறது. கொழும்பு அலுவலகம் பற்றி எதுவும் தெரியாது) மல்லிகையில் அக்காலப்பகுதியில் நான் அடிக்கடி காணும் ஒரு படைப்பாளியின் பெயர் தெணியான். அவரது இயற்பெயர் நடேசு என்றும் தெணியான் அவரது மற்றும் ஒரு பெயர்இ புனைபெயர் என்றும் அவர் ஒரு பாடசாலை ஆசிரியர் என்றும் ஜீவா சொன்னார். மல்லிகையில் தெணியான் எழுதிய சிறுகதைகள் எனக்கு முன்பின் தெரியாத ஒரு புதிய உலகத்தை காண்பித்தது.

அந்த உலகத்தை அதற்கு முன்னர் கணேசலிங்கனின் நீண்ட பயணம் நாவலிலும் அதன் பின்னர் டானியலின் பஞ்சமர் நாவலிலும் படித்தேன். தீண்டாமை, ஆலயப்பிரவேசம், சாதித்துவேஷம், ஏற்ற தாழ்வு, வர்க்கப்போராட்டம் முதலான பல புதிய சொற்களை இவர்களின் படைப்புகளில்தான் காணமுடிந்தது.

தெணியானின் எழுத்துக்கள் எனது இலக்கியப்பிரவேச காலத்திலேயே எனக்கு மிகவும் பரிச்சயமாகியிருந்தபொழுது அவருடைய விடிவை நோக்கி நாவல் வீரகேசரி பிரசுரமாக வெளியானது. அப்பொழுது நீர்கொழும்பில் கணேசன் கபே என்ற சைவஹோட்டல்தான் வீரகேசரியின் நீர்கொழும்பு விற்பனை ஏஜண்ட். வீரகேசரி பிரசுரங்களும் அங்கே விற்பனைக்கு வந்தன. அந்த ஹோட்டல்தான் நீர்கொழும்பு நகரின் முதலாவது சைவஹோட்டல்.

தெணியானின் விடிவை நோக்கி நாவலை படித்துவிட்டு மல்லிகை ஜீவாவுக்கு கடிதம் எழுதி தெணியானின் பொலிகண்டி முகவரி பெற்று அவருக்கும் கடிதம் எழுதினேன். நீர்கொழும்பில் அவரது நாவலுக்கு வெளியீட்டு விழாவை நடத்தும் விருப்பத்துடன் அவரை அழைத்தேன்.

முன்பின் தெரியாத என்னைப்பற்றி ஜீவாவிடம் கேட்டுத்தெரிந்துகொண்ட தெணியான் தமது நண்பர்கள் தேவரையாளி இந்துக்கல்லூரி எழுதுவினைஞர் கிளாக்கர் அய்யா என நாம் அழைக்கும் இராசேந்திரம் மற்றும் சதானந்தன் என்ற ஆசிரியர் சகிதம் நீர்கொழும்புக்கு வந்திறங்கினார். இடதுசாரி ஆதரவாளரும் நீர்கொழும்பில் பூட்எம்போரியம் என்ற பாதணிக்கடையை நடத்தியவருமான தோழர் சதாசிவம் அவர்களின் இல்லத்தில் இவர்கள் மூவரும் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நீர்கொழும்பு இந்து இளைஞர்மன்ற மண்டபத்தில் விடிவை நோக்கி விழா எனது மாமனார் மயில்வாகனன் தலைமையில் நடந்தது. இவர் நீர்கொழும்பில் சாந்தி அச்சகம் நடத்தியவர் . அண்ணி என்ற இலக்கிய இதழை வெளியிட்டவர்.

மல்லிகை ஜீவ, மு.கனகராஜன், த.மணி, மு.பஷீர், தெளிவத்தை ஜோசப், இரகுபதி பாலஸ்ரீதரன்இ (தற்போதைய கொழும்பு தமிழ்ச்சங்கத்தலைவர்) இலக்கிய ஆர்வலர் எம்.ஏ. கிஷார் - நிலாம் (தற்போதைய தினக்குரல் ஊடகவியலாளர்) ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றினர்.

நீர்கொழும்பு மாநகரசபை உறுப்பினர் ஜெயம் விஜயரத்தினம் மங்கள விளக்கேற்றினார். நீர்கொழும்பில் எமது இலக்கிய வட்டத்தினால்
27-10 - 1973 ஆம் திகதி சனிக்கிழமை மாலை நடத்தப்பட்ட அந்த விழாவிற்கு கொழும்பிலிருந்து வீரகேசரி பொது முகாமையாளரும் வீரகேசரி பிரசுரங்களின் பதிப்பாளருமான பாலச்சந்திரன் வாழ்த்துச்செய்தியை தந்தியில் அனுப்பியிருந்தார்.

வீரகேசரி நீர்கொழும்பு ஏஜன்ட் சார்பில் அவர்களின் பணியாளர் வரதன் என்பவர் நூலின் பிரதிகளுடன் வந்திருந்தார். அப்பொழுது விடிவை நோக்கி நாவலின் விலை என்ன தெரியுமா...? ஆச்சரியம் வேண்டாம். இரண்டு ரூபா இருபத்தி அய்ந்து சதம்.( சுள.
2.25) அதிசயம். ஆனால், அதுதான் உண்மை.

ஒரு பெரிய நிறுவனம் வெளியிட்டுள்ள நூலுக்கு இந்த முருகபூபதி ஏன் வீணாக சிரமப்பட்டு ஒரு விழாவையே நடத்துவதற்கு ஓடித்திரிகிறார் என்று எங்கள் ஊரிலும் கொழும்பிலிருந்த சில எழுத்தாளர்களும் என்னை விமர்சித்தனர்.

அதற்கு நான் சொன்னபதில்: தெணியான் எமது ஊர் தமிழ் மக்களுக்கு யாழ்ப்பாணத்தின் ஒரு கால கட்டத்தின் ஆத்மாவை காண்பிக்கின்றார். பிரதேசங்கள் இலக்கியத்தினாலும் இணையவேண்டும். வீரகேசரி முன்மாதிரியான பணியை முன்னெடுத்திருக்கிறது. அதற்கு ஆதரவு தெரிவித்தால் அதன் பலனை ஈழத்து இலக்கிய உலகம்தான் அறுவடை செய்யும்.

காலப்போக்கில் வீரகேசரி பிரசுரமும் தனது ஆயுள் மூச்சை நிறுத்தியது. மல்லிகையும் தனது சுவாசத்தை நிறுத்தியது. ஆனால், மல்லிகையினாலும் வீரகேசரியினாலும் உருவாக்கப்பட்ட இலக்கிய உறவுப்பாலம் மிகவும் உறுதியாக நீடித்து வாழ்ந்துகொண்டுதானிருக்கிறது. அதன் பெறுபேறாகவும் தெணியான் பற்றிய இன்றைய எனது மனப்பதிவையும் கருதமுடியும்.

காலம் எதற்கும் பதில் சொல்லிக்கொண்டுதானே இருக்கும்.
1970 களில் மல்லிகை ஜீவா வடமராட்சி படைப்பாளிகள் வரிசையில் எனக்கு முதல் முதலில் அறிமுகப்படுத்தியது தெணியானை மாத்திரம்தான். ஆனால, காலப்போக்கில் பேராசிரியர் சிவத்தம்பி, சோமகாந்தன், நெல்லை. க.பேரன், ராஜ ஸ்ரீகாந்தன், கருணையோகன், வதிரி சி.ரவீந்திரன், நவம், கலாமணி, வன்னியகுலம், சிறிபதி, ரவிவர்மா, வல்வை அனந்தராஜ், அநாதரட்சகன், ராஜேஸ் கண்ணன், பரணீதரன், எம்.கே.முருகானந்தன், புலோலியூர் சதாசிவம், புலோலியூர் தம்பையா, புலோலியூர் இரத்தினவேலோன், துஷ்யந்தன், (குப்பிழான்) சண்முகன்.... என்று.... இப்படி எத்தனைபேர் எனக்கு அறிமுகமானார்கள். சிலர் நெருக்கமானார்கள்.

தெணியான்
சிறுகதை,  நாவல், விமர்சனம், நூல் அறிமுகம், பத்தி எழுத்துக்கள் உட்பட தம்மைக்கவர்ந்த ஆளுமைகள் குறித்தும் (பேராசிரியர் சிவத்தம்பி, மல்லிகை ஜீவா) எழுதியிருப்பவர். நான் அறிந்த மட்டில் தெணியானின் நூல்கள் சில பின்வருமாறு:

சிறுகதை : சொத்து - மாத்து வேட்டி - இன்னொரு புதிய கோணம் ஒடுக்கப்பட்டவர்கள் - தெணியானின் ஜீவநதிச் சிறுகதைகள்

நாவல் : விடிவை நோக்கி - கழுகுகள் - பொற்சிறையில் வாடும் புனிதர்கள் - மரக்கொக்கு - காத்திருப்பு - கானலில் மான் - தவறிப்போனவன் கதை - குடிமைகள்.
குறுநாவல்: சிதைவுகள் - பனையின் நிழல்

கட்டுரை : இன்னும் சொல்லாதவை - நெஞ்சில் பதிந்துள்ள நினைவுகளில் பேராசிரியர் கா. சிவத்தம்பி.

கடந்த
2014 ஆம் ஆண்டு அவருக்கு சாகித்தியரத்னா என்னும் உயரிய விருதும் கிடைத்தது.

 

ஏற்கனவே அவர் பெற்ற விருதுகள் வருமாறு:

கலாபூஷணம் விருது - இலங்கை தேசிய சாகித்திய விருது -தமிழ்நாடு நாமக்கல் சின்னப்ப பாரதி அறக்கொடை விருது - கொழும்பு கொடகே விருது - வட - கிழக்கு ஆளுனர் விருது.

தெணியான் வடமராட்சியில் பொலிகண்டியில்
1942 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6 ஆம் திகதி பிறந்தார். வதிரி தேவரையாளி இந்து பாடசாலையில் கல்வி கற்ற தெணியான், பின்னாளில் இந்தப்பாடசாலை கல்லூரியாக தரம் உயர்ந்த பின்னரும் சிரேஷ்ட ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

தெணியான் கொழும்புத்துறை ஆசிரியப்பயிற்சிக்கலாசாலையில் பயின்ற காலத்தில் ஒரு மேட்டுக்குடி சாதிமான் அவருடைய விரிவுரையாளராக இருந்தார். அவரும் ஒரு தமிழ்ப்புலமையாளர்தான். அச்சமயம் தேசிய சாகித்திய விருது சிறுகதைக்காக டொமினிக் ஜீவா எழுதிய தண்ணீரும் கண்ணீரும் தொகுதிக்குத்தான் கிடைத்தது.

இலங்கையில் முதல் முதல் தமிழ்ச்சிறுகதைக்கு தேசிய சாகித்திய விருது பெற்றவர்தான் டொமினிக்ஜீவா. ஆனால், அதனை சகிக்க முடியாத தெணியானின் விரிவுரையாளர் ஒரு நாள் விரிவுரையின்பொழுது, ' மாணவர்களே உங்களுக்கு ஒரு செய்தி தெரியுமா...? இலங்கையில் ஒரு நாவிதனுக்கு சாகித்திய விருது கிடைத்துள்ளது ' - என்று சொல்லி ஏளனமாக சிரித்துள்ளார்.

வடக்கிற்கு வெளியே பிறந்து வாழ்ந்த எனக்கு இதுபோன்ற செய்திகள் யாவும் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருந்தன. பின்னாளில் தமிழக எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் நாவலுக்கு இந்திய சாகித்திய அக்கடமி விருது கிடைத்தபொழுது அவருடன் டெல்லி பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய மற்றுமொரு தமிழ்ப்பற்றாளர் சொன்னாராம்.

'இந்திராபார்த்தசாரதியின் நூலுக்கு கிடைக்காது போனாலும் அவர் அணியும் பூநூலுக்காவது கொடுத்திருப்பார்கள்' என்று. இந்திராபார்த்தசாரதி அவுஸ்திரேலியாவுக்கு வந்து மெல்பனில் எனது இல்லத்தில் சில நாட்கள் தங்கியிருந்தபொழுது இந்த வேடிக்கையை சொல்லிச்சிரித்துவிட்டு தாம் பூநூலே அணிவதில்லை என்றார்.

எனக்கு மகாகவி பாரதி கனகலிங்கம் என்ற தலித் சிறுவனுக்கு பூநூல் சடங்கு செய்த தகவல்தான் உடனடியாக நினைவுக்கு வந்தது.

தெணியான், வடமாகாணத்தின் ஆத்மாவை பிரதிபலித்த படைப்புகளையே அதிகம் தந்தவர். இவரே சாதிப்பிரச்சினையின் ஆழமான அடிவேரை சித்திரித்த கூடுதலான கதைகளை எழுதியிருப்பவர். டானியல் சண்முகதாஸனின் பீக்கிங் சார்பு அரசியலை சேர்ந்தவராக இருந்தபோதிலும் தெணியான் மாஸ்கோ சார்பு இடதுசாரி அரசியல் கட்சி சார்ந்து இருந்தபோதிலும் தனது வாரிசாகவே தெணியானை கொண்டாடியவர்.

உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் இராசலிங்கம் அவர்களை தமிழர் விடுதலைக்கூட்டணி நிறுத்தியபொழுது மாற்று அரசியல் இயக்கத்திலிருந்துகொண்டே அவருக்காக மேடைகளில் தோன்றி அவரது வெற்றிக்கு பக்கபலமாக நின்றவர் தெணியான். ஆனால்இ தமிழ் இனவுணர்வு பேசிய தமிழர் விடுதலைக்கூட்டணியினர் தெணியானின் படைப்புலகத்தை அங்கீகரித்தார்களா...? என்பது எனக்குத்தெரியாது.

இலங்கை அரசியலில், வடக்கில் பிரதானமாக தொழிற்பட்ட வலது - இடது கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஆயுதம் ஏந்திய தமிழ் இயக்கங்களினால் காலப்போக்கில் செயல் இழந்தாலும் விஜயானந்தன் (கம்யூனிஸ்ட்), அண்ணாமலை (நவசமசமாஜி) ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டு பலர் மௌனிகளாக்கப்பட்டாலும் வடபகுதியில் ஒரு கால கட்டத்தில் தேநீர்க்கடை பிரவேசம் ஆலயப்பிரவேசப்போராட்டங்களில் முன்னின்று போராடியவர்கள் இடதுசாரிகளே. அவர்களின் போராட்டத்தின் பெறுபேறுதான் இன்றைய நிலை.

எனினும் யாரோ சொன்னது போன்று சாதி ஒழியவில்லை துப்பாக்கிகளின் பின்னால் மறைந்திருக்கிறது என்ற கதைதான் நீடித்தது. ஆனால் உள்நாட்டுப்போர் 2009 இல் முடிந்த பின்னர் இன்றும் கதை உள்நாட்டிலும் புகலிடத்திலும் வேறு மாதிரித்தான் தொடர்கிறது.

இந்த மாற்றங்களையும் வெகு நுட்பமாகப்பதிவு செய்திருப்பவர் தெணியான். அவருக்கு இந்த சமூகப்பிரச்சினைகளை சிறுகதைகளாக நாவல்களாக பதிவு செய்வதற்கு எந்த மனத்தடையும் இருந்ததில்லை. தெணியான் அடிநிலை மக்களுக்காக மாத்திரம் குரல் எழுப்பியவர் அல்ல.

கோயில்களில் பூசகர்களாக பணியாற்றும் பிராமண சமூகத்தினரின் துயரங்களையும் - அவர்கள் கோயில் முதலாளிகளினாலும் அறங்காவலர்களினாலும் அடக்கி ஆளப்படும் கொடுமைகளையும் பொற்சிறையில் வாடும் புனிதர்கள் என்ற நாவலில் சித்திரித்தார்.
இந்நாவல் தொடர்பாக இலங்கையில் கொழும்பு விமான நிலையத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றையும் இங்கு கூறுதல் பொருத்தமானது.

அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்காக கொழும்பிலிருந்து புறப்பட்ட எனக்குத்தெரிந்த ஒரு தமிழ் குடும்பத்தினரிடம் தெணியான் எழுதிய பொற்சிறையில் வாடும் புனிதர்கள் நாவலின் சில பிரதிகளை எனக்காகவும் எனது இலக்கிய நண்பர்களுக்காகவும் நண்பர் ராஜஸ்ரீகாந்தன் கொடுத்தனுப்பியிருக்கிறார். விமான நிலையத்தில் பொதிகளை சோதனை இட்ட அதிகாரி ஒருவரின் கண்களில் இந்த நாவல் தென்பட்டுவிட்டது.

அவருக்கு தமிழ் வாசிக்கத்தெரியும் போலும். நூலின் முகப்பு அட்டையில் சிறை என்ற சொல்லும் இருந்தமையினால் அவர் உஷாராகி குறிப்பிட்ட பயணிகளை துருவித்துருவி விசாரித்துவிட்டு அந்தப்பிரதிகளை பறிமுதல் செய்துவிட்டார். காரணம் தெளிவானது. குட்டிமணி - ஜெகன் உட்பட சிலர் வெலிக்கடை சிறையில் 1983 இல் கொல்லப்பட்டார்கள். அச்சம்பவத்தில் உயிர்தப்பிய சிலர் மட்டக்களப்பு சிறைக்கு மாற்றப்பட்டார்கள். அங்கு அடுத்தடுத்து நடந்த சிறை உடைப்பில் சிலர் தப்பிச்சென்றார்கள். அவர்களில் சிலர் இன்று வெளிநாடுகளில். சிலர் அரசியலில். அமைச்சரானவர்களும் உண்டு.

ஆனால், அன்று விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தெணியானின் பொற்சிறையில் வாடும் புனிதர்களுக்கு என்ன நேர்ந்தது...? என்பதுதான் தெரியவில்லை. இத்தனைக்கும் அந்தப்பொற்சிறை வடமாகாண அந்தணர்களின் துயரம் சொன்ன கதைதான் என்பதையாவது அதனை பறிமுதல் செய்த அதிகாரி படித்து தெரிந்துகொண்டிருந்தால் சில வேளை அவரும் தெணியானின் வாசகர்களில் ஒருவராக இணைந்திருப்பார்.

தெணியான் மல்லிகை ஜீவாவுக்கு மணிவிழா வந்த காலத்தில் விழாக்குழுவில் இணைந்து ஜீவாவுக்காக ஒரு மலரையும் தொகுத்திருக்கிறார். பின்னாளில் ஜீவா மல்லிகையை கொழும்பில் நிறுத்தியவேளையில் தினக்குரலில் ஜீவா பற்றி நீண்ட தொடரையும் எழுதினார். பல சந்தர்ப்பங்களில் அரசியல் கருத்து முரண்பாடுகளினால் முகம் திருப்பிக்கொண்டிருந்த ஜீவாவுக்கும் - டானியலுக்கும் இடையில் தெணியான் பாலமாகவே இருந்து அவர்களை மீண்டும் நெருங்கிவரச்செய்தார்.

தெணியானின் இயல்பு எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பது அல்ல. தண்ணீர் ஊற்றி அணைக்கும் தன்மையானது. எமது ஈழத்து இலக்கிய உலகில் எம்மவரினால் மூட்டப்பட்டிருக்கும் எரிநெருப்பை அணைக்கவேண்டிய காலக்கடமையும் இன்னமும் அவருக்கு இருப்பதாகவே கருதுகின்றேன்.

தெணியான் ஈழத்து இலக்கிய உலகில் நான்காவது தலைமுறைப்படைப்பாளி. அவருடைய வாழ்வையும் பணிகளையும் சிறப்பாக பதிவு செய்தது கனடா காலம் இதழ். பேராசிரியர் சிவத்தம்பி, சேரன், செங்கை ஆழியான், கலாநிதிகள் சுப்பிரமணியன், கலாமணி மற்றும் முருகபூபதி, கனகசபாபதி ஆகியோரின் தெணியான் பற்றிய மதிப்பீட்டு ஆக்கங்கள்
2009 ஆம் ஆண்டு காலம் இதழில் வெளியாகின. இதனை வெளியிட்ட காலம் ஆசிரியர் செல்வமும் காலம் ஆசிரியர் குழுவினரும் பாராட்டுக்குரியவர்கள். தெணியானின் படைப்புலகம் பற்றிய மதிப்பீட்டு ஆக்கங்கள் இன்றும் புகலிடத்தில் பல இணையத்தளங்களிலும் இலங்கையில் பல இதழியல் ஊடகங்களிலும் வெளிவந்தவண்ணமிருக்கின்றன.

தொடர்ந்தும் தெணியான் பேசப்படுவார். மதிப்பீடுகளுக்குட்படுத்தப்படுவார்.

அவர் ஆசிரியப்பணி மேற்கொண்டிருந்த காலத்தில் அவுஸ்திரேலியாவில் இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தினதும் வடமாகாண மாணவர் கண்காணிப்பாளராக தொண்டு அடிப்படையில் சேவையாற்றினார். நிதியத்தின் ஆரம்பகால ஆண்டு அறிக்கைகளில் அவரது பெயரும் இடம்பெற்றுள்ளது.

தெணியான்
1988 இல் எமது கல்வி நிதியம் பற்றிய தகவல்களை செய்தியாக யாழ்ப்பாணத்தில் அச்சமயம் வெளியான எஸ்.திருச்செல்வம் ஆசிரியராகவிருந்த முரசொலி பத்திரிகையில் வெளியிட்டதைத்தொடர்ந்து மேலும் பல மாணவர்கள் எம்மைத்தொடர்புகொண்டு கல்விக்கான உதவிகைளப் பெற்றனர். வடக்கில் நூற்றுக்கணக்கான போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மாணவக்குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றுவதற்கும் தெணியான் துணையாக நின்றார் என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியுடன் நினைவு கூர்தல் பொருத்தமானது.

உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்த பின்னர் நீண்ட பெரிய இடைவெளியின் பின்னர் (இருபத்திமூன்று வருடங்களின் பின்பு) வடமராட்சிக்கு தெணியானைப்பார்க்கச்சென்றேன். வல்லிபுரக்கோயிலை நான் பார்த்தது இல்லை. இக்கோயில் பற்றி எனது மனைவி அடிக்கடி பிரஸ்தாபித்து நனவிடை தோய்தலில் ஈடுபடுவாள். நான் அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு
2010 ஜனவரியில் சென்றவேளையில் விமானநிலையத்தில் வழியனுப்ப வந்த மனைவி 'நிச்சயம் நீங்கள் தெணியானையும் பார்க்கப்போவீர்கள். அவரிடம் சொன்னால் உங்களை வல்லிபுரக்கோயிலுக்கு அழைத்துச்செல்வார் ' என்று சொன்னாள்.

மனைவி பேச்சைத்தட்டாமல் தெணியானுடன்தான் வல்லிபுரக்கோயிலை தரிசித்தேன். எம்முடன் வந்தவர் முன்னாள் இலக்கிய விமர்சகரும் பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியின் முன்னாள் அதிபருமான நண்பர் எம்.சிறிபதி.

தெணியானின் பிறந்த தினம்
2012 ஜனவரியில் வந்தபொழுது நான் இலங்கையில் நின்றேன். ஜீவநதி ஆசிரியர் கலாமணி பரணீதரன் தங்களது இல்லத்தில் தெணியான் பிறந்த தின நிகழ்வை நடத்தி அதற்கு தலைமை ஏற்க என்னை அழைத்தார். அன்றைய நிகழ்வில் தெணியானின் ஜீவநதி சிறுகதைகள் நூலும் இன்னும் சொல்லாதவை நூலும் தெணியானின் படைப்புகள் மீதான பார்வைகள் என்ற நூலும் வெளியிடப்பட்டது.
இன்னும் சொல்லாதவை நூல் பற்றி நான் எழுதிய மதிப்பீட்டு உரையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தேன்.

நாவலாக எழுதியிருக்கவேண்டிய ஒரு படைப்பு சுயவரலாறாகியுள்ளது. தெணியான் ஒரு கதை சொல்லி. சிறுகதைகள், நாவல்கள் உட்பட சில தொடர்களும் கட்டுரைகளும் எழுதியிருப்பவர். அவரது எந்தவொரு படைப்பை உன்னிப்பாகப்பார்த்தாலும் அவர் ஒரு சிறந்த கதைசொல்லி என்ற முடிவுக்கே வாசகர்கள் வந்துவிடுவார்கள். 'இன்னும் சொல்லாதவை' நுலைப்படித்தபோது எனக்கு உடனடியாக நினைவுக்கு வந்தவர் தமிழ்நாட்டின் கரிசல் இலக்கிய மைந்தன் கி.ராஜநாராயணன். அவரும் சிறந்த கதை சொல்லி. அத்துடன் பிரதேச மொழிவழக்குகளை அநாயசமாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லவல்லவர். தெணியான் எங்கள் தேசத்தின் வடமராட்சிக்கதை சொல்லி. இந்நூலின் பதிப்புரையில் பின்வரும் பந்தி எனக்கு முக்கியத்துவமாகப்பட்டது. ஒரு எழுத்தாளனது புனைவுலகை தரிசித்து அதில் லயித்துக்கிடக்கும் வாசகனுக்கு அந்த எழுத்தாளனது சொந்த வாழ்வைப்பற்றிய இரகசியங்களை அறிந்துகொள்ளும்போது அந்த எழுத்தாளனைப்பற்றி உருவாக்கிவைத்திருக்கும் மனக்கோட்டை உடைந்து சிதறுவதே இயல்பு. இதனால்தானோ என்னவோ பல பிரபலங்கள் தங்களது சொந்த வாழ்வை வெளிப்படுத்துவதில்லை. தங்களது சுற்றம், நட்பு இவற்றின்மீது வெளிச்சம்படாமல் கவனமாகப்பார்த்துக்கொள்கின்றனர். இந்நிலைக்கு மாறாக தெணியானின் வாழ்வனுபவங்களை படிக்கும்போது அவர் மீதான நமது மதிப்பு பல மடங்கு கூடுகிறது. அவருடன் நெருக்கத்தை அதிகப்படுத்துகிறது.

ஆம், தெணியான் எங்கள் நெஞ்சத்துக்கு என்றும் நெருக்கமானவர்தான். அவருக்கு எனது நல் வாழ்த்துக்களை பல்லாயிரக்கணக்கான மைல் தொலைவிலிருந்து தெரிவிக்கின்றேன். தொலைவு மைல்கணக்கில் மாத்திரம்தான். ஆனால், நெருக்கம் அருகில்தான்.




 

http://www.tamilauthors.com/writers/sri%20lanka/Theniyaan.html

 




 

 

 www.tamilauthors.com