கோவை, இலக்கிய சந்திப்பு (29-03-2012)


"பிற இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும்'

கோவை: "தமிழ் இலக்கியம் வளம் பெறவேண்டும் என்றால், சிறந்த பிற மொழி இலக்கியங்களை, தமிழில் மொழி பெயர்க்க வேண்டும்,'' என, எழுத்தாளர் சித்தன் பேசினார்.

கோவை, இலக்கிய சந்திப்பு சார்பில், தமிழில் வெளி வந்துள்ள,
11 நூல்களின் அறிமுக விழா, நடந்தது. இதில், ஏழு தமிழ் நூல்கள் மற்றும் மலையாளத்தில் இருந்து, தமிழுக்கு மொழி பெயர்த்துள்ள, நான்கு நூல்கள், அறிமுகம் செய்யப்பட்டன.

மலையாளத்தில், புனத்தில் குஞ்சப்துல்லா எழுதிய, மீஸான் கற்கள், மஹ்சர் பெருவெளி மற்றும் ஸ்ரீகுமார் எழுதிய ஒரு அமர கதை ஆகிய, நூல்களை குளச்சல் மு.யுசுப் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

இந்நூல்களை, எழுத்தாளர் சித்தன் அறிமுகப்படுத்தி பேசியதாவது:

புனத்தில் குஞ்சப்துல்லா எழுதியுள்ள, இரண்டு நூல்களும், 19ம் நூற்றாண்டின், இறுதி காலத்தில், கேரளாவில் வாழ்ந்த, இஸ்லாமிய மக்களின் வாழ்க்கையை பின்னணியாக கொண்டு, எழுதப்பட்டுள்ளன. இந்நாவலில், அச்சமூகத்தில் நேர்ந்த, இழப்புகள், துயரங்கள், வாழ்வின் நிரந்தரமற்ற தன்மை ஆகியவற்றை, வெளிப்படுத்துகின்றன.

அக்காலத்தில் இருந்த, ஆண் பெண் உறவு மற்றும் கற்பு நிலை, சமூக கட்டுப்பாட்டுக்குள் சிக்காமல் இயல்பாக இருந்தது என்பதையும், அந்நிலை மாறும்போது, அடிதட்டு மக்களின் வாழ்க்கை சிதைவுக்கு உள்ளாவதை, இந்நாவல் விவரிக்கிறது.
ஸ்ரீகுமாரின், "ஒரு அமர கதை' நாவல், பின் நவீனத்துவம் மற்றும் மாந்திரீக எதார்த்த பாணியில், எழுதப்பட்டுள்ளது.

11ம் நூற்றாண்டு வரை, சிறப்பாக இருந்த, சக்தி வழிபாட்டு முறை, சமூக விரோதிகளால், எவ்வாறு பின்னுக்கு தள்ளப்பட்டது என்பதையும், எவ்வாறு பெண்கள் ஒடுக்கப்பட்டு, ஆணாதிக்க முறை வளர்ந்தது என்பது பற்றியும், சித்தரிக்கிறது.

இன்னமும், பல நாடுகளில் ரகசியமாக பின்பற்றப்பட்டு வரும், தாந்திரீக வழிபாட்டு முறை பற்றிய தகவல்கள், இந்நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழ் இலக்கியம் வளம் பெறவேண்டும் என்றால், இது போன்ற, சிறந்த பிற மொழி இலக்கியங்கள், தமிழில் மொழி பெயர்க்கப்பட வேண்டும். இவ்வாறு, எழுத்தாளர் சித்தன் பேசினார்.

இலங்கை எழுத்தாளர் அகில், மொழிபெயர்ப்பாளர் மு.யுசுப், கோவை ஞானி, சூலூர் வரலாற்று ஆசிரியர் கவுதமன், புது எழுத்து இதழ் ஆசிரியர் மனோன்மணி, கவிஞர்கள் நித்திலன், மீனாட்சி சுந்தரம், ஜான்சுந்தர், சோழநிலா மற்றும் இலக்கிய அமைப்பாளர்கள் பென்இளவேனில், இளஞ்சேரல், தியாகு உள்ளிட்டோர், பங்கேற்றனர்.

 

 

நன்றி: தினமலர் 

 

 

 www.tamilauthors.com