எஸ்.பொவுக்கு இயல் விருது


2010ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் இலக்கியத்தின் முக்கியமான முன்னோடியான எஸ்.பொன்னுத்துரை ஆகிய எஸ்.பொவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் 1500 டொலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லட்சுமி ஹோம்ஸ்ரோம், அம்பை, ஐராவதம் மகாதேவன், கோவை ஞானி போன்றவர்களைத் தொடர்ந்து விருதுக்குரியவராக இவ்வருடம் தேர்வு செய்யப்பட்டிருக்கும் எஸ்.பொ, அறுபது வருடங்களுக்கு மேலாக தமிழ் இலக்கியத்துக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.

1932இல் யாழ்ப்பாணத்தில் பிறந்த எஸ்.பொன்னுத்துரை சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரிப் பட்டதாரி. இலங்கையிலும் நைஜீரியாவிலும் ஆசிரியராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவர். இலங்கைப் பாட விதான சபை, திரைப்படக் கூட்டுத் தாபனம் ஆகியவற்றிலும் சில காலம் கடமை ஆற்றியவர். தன் பதின்ம வயதுகளிலேயே எழுத்துத் துறையில் கால் பதித்த அவர் இன்றுவரை ஓய்வொழிச்சலின்றி எழுதி வருவதுடன் சுவைபடப் பேசும் பேச்சாளர்கூட. அவருடைய முதல் நாவல் 'தீ'. மற்றவர் எவரும் எழுதத் துணியாத சுயபாலுறவை 1960 இல் சொன்னபோது பண்டிதர்கள், புனிதர்கள் அவரைத் ‘துடக்கு’ எனச் சொல்லித் தூர விலக்கினார்கள். அவருடைய ‘வீ’ சிறுகதைத் தொகுதி பல்வேறுபட்ட மொழியாளுமைகளையும் பரிசோதனைச் சிறுகதைகளையும் வெளிக்கொண்டு வந்தது. அவருடைய இரண்டாவது நாவல் ‘சடங்கு.’ அக்கால மத்தியதர வர்க்க அரச எழுது வினைஞரின் வாழ்க்கையையும் யாழ்ப்பாணப் பின்னணியையும் அவற்றுக்கேயுரிய மொழி, அங்கதம், வாழ்வியல் கூறுகளுடன் யாழ்ப்பாண பேச்சு வழக்கில் யதார்த்தமாக கையாண்ட சிறிய, ஆனால் சக்தி வாய்ந்த, நாவல் அது. அவரின் ‘நனவிடை தோய்தல்’ 1940, 50 யாழ்ப்பாண சமூகத்தை அழகாகப் படம் பிடித்த புகைப்படக் கருவி.

இவரது நேர்காணல்கள், கட்டுரைகள் அடங்கிய 'இனி ஒரு விதி செய்வோம்' என்ற நூலும் பிரசித்தமானது. சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என இருபத்தைந்துக்கு மேலான நூல்களை எழுதியுள்ள எஸ்.பொ சமீபத்தில் வெளியிட்ட 'மாயினி' நாவல் பெரும் விவாதத்திற்குள்ளாகியது. இந்திய அமைதி காக்கும் படை ஈழத்தில் நிலைகொண்டிருந்தபோது நடைபெற்ற நிகழ்வுகள் நாவலில் நுட்பமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. சுமார் இரண்டாயிரம் பக்கங்களில் 'வரலாற்றில் வாழ்தல்' என்ற தமது சுயசரிதை நூலையும் எழுதியுள்ளார். ஓர் ஈழத்து எழுத்தாளரின் வாழ்வையும், சமகால இலக்கிய ஆளுமைகளையும், இலங்கை அரசியலையும் ஒருங்கே கூறுகிறது இந்நூல். 'தேடல்தான் புதிய அனுபவங்களையும் புதிய தரிசனங்களையும் புதிய விளக்கங்களையும் புதிய ஆர்வங்களையும் புதிய உற்சாகங்களையும் புதிய ஞானத்தையும் கொண்டுவந்து சேர்க்கிறது' என்று சொல்லும் எஸ்.பொ இன்றும் தமிழ் சேவையில் தமிழுக்கு புதிய பரிணாமத்தையும் புதிய முகத்தையும் தந்துகொண்டிருக்கிறார்.
 

 

 

 www.tamilauthors.com