சமச்சீர் கல்வியும் இன்றய தேவையும்

முனைவர் பூ.மு.அன்புசிவா


முன்னுரை:


'மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
கற்றார் ரனைத்திலர் பாடு'

என்ற திருவள்ளுவரின் திருக்குறள்படி, சமச்சீர் கல்வி அனைத்தினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாக அமையும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. சமச்சீர் கல்வி முறையில் தேவைப்படும் முக்கிய மாற்றம் என்னவென்றால், தாய்மொழியிலேயே உயர்கல்வி வரை படிக்க வழி செய்வதுதான். தாய்மொழியில் படித்தால் எந்த நெருக்கடியும் இல்லாமல் பாடத்திட்டத்தில் உள்ளதையும் தாண்டி, சுயமாக சிந்தித்து, அவரவர்க்கு ஆர்வம் உள்ள துறையில் சாதிக்க முடியும். அதற்காக ஆங்கிலம் அறவே வேண்டாம் என்று சொல்லவில்லை, கணிதம், அறிவியல் போல ஆங்கிலமும் மற்றொரு பாடமாகவே இருக்கவேண்டும். அதில் உள்ள இலக்கணங்களை முழுமையாக கற்று, எந்த வழியிலும் அந்த மொழியைப் பயன்படுத்தும் திறனை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் சமச்சீர் கல்வி பாடத்திட்டம் இருக்கும். சுயமாக யோசிக்கும் திறனை வளர்க்கும் வகையில் பாடத்திட்டங்களை அமைத்து, எதிர்காலத்தில் புதிய சமுதாயத்தை உண்டாக்கி, அதன்மூலம் வளமான தமிழகத்தை உருவாக்கும் வகையில் சமச்சீர் கல்வி அமையவேண்டும். இந்த சமச்சீர் கல்வியைப்பற்றி மேலும் விரிவாக இக்கட்டுரையின் மூலம் காண்போம்.

சமச்சீர் கல்வி ஓர் அறிமுகம்

நீண்ட நெடும் போராட்டத்திற்குப் பிறகு சமச்சீர் கல்வி பற்றிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மூன்று ஆண்டுகால கோரிக்கைகள், ஆய்வுகளைத் தொடர்ந்து சமச்சீர் கல்வி (நுளூரவையடெந ளவயனேயசன நனரஉயவiடிn) தமிழகம் முழுவதும் 2010 இல் அமல்படுத்தப்படும் என்று 26.08.2009 அன்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாநிலத்தில் உள்ள 4 வகையான கல்வி வாரியங்களை ஒருங்கிணைத்து பொதுக் கல்வி வாரியம் உருவாக்குதலும், பொதுப் பாடத்திட்டம் உருவாக்குவதுமே சமச்சீர் கல்வி என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மிக முக்கியம் வாய்ந்த பிரச்சனைகளான தனியார் பள்ளிகளுக்கு நிகரான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, கல்வித்தரத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பிரச்சனைகள் கருத்தில் கொள்ளப்படவில்லை. ஓரியண்டல், ஆங்கிலோ-இந்தியன், மெட்ரிக்குலேசன், மாநிலப் பாடத் திட்டம் என்று நான்கு பாடத் திட்டங்கள் இருப்பதை ஒழித்து, ஒரே பாடத் திட்டம் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துக் கொண்டிருந்தன. சமச்சீர் கல்வி முறை முதன் முதலில் 1837 ஆம் ஆண்டு அமெரிக்காவில் கல்வியாளர் 'மகாசூட்ஸ்' என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் நமது நாட்டிலும் ஒரே விதமான கல்வி முறை வரவேண்டும் என்பதை உறுதி செய்து இந்த சமச்சீர் கல்வி முறையை அறிமுகம் செய்து உள்ளது.

சமச்சீர் கல்வியின் நோக்கமும், விளக்கமும்

ஒரு செயலை செய்யத் தொடங்கும் முன் அதிலிருந்து ஒருவர் எதிர்பார்க்கும் முடிவு அல்லது விளைவே நோக்கம் எனப்படும். சமச்சீர் கல்வி என்பதை பாடத்திட்டங்களுக்கு இடையே உள்ள மேடுபள்ளங்களை நிரவுவது என்ற முறையில் கொச்சைப்படுத்திவிடக்கூடாது. சமூக இடைவெளிகளால் பொதுக்கல்வியில் இடைவெளிகள் உருவாவதைத் தவிர்ப்பதுதான் நமது நோக்கமாகும். சிறந்த கல்வியின் நோக்கம் விரும்பத்தக்கதாக, சமநிலைப்பட்டதாக (னுநளசையடெந, றநடட யெடயnஉநன) தனி மனிதன், சமூக நலன்களுக்கு உகந்ததாக இருக்கவேண்டும்.

எதிர்பாராத சில வேளைகளில் நிலைமைகளுக்கு ஏற்றபடி ஓரளவு மாறிக்கொள்ளக்கூடிய நெகிழ்ச்சி பெற்றதாகவும் இருக்கவேண்டும். அந்த நோக்கம் திட்டவட்டமானதாகவும், தெளிவானதாகவும், நடைமுறைக்கு செயல்படுத்த கூடிய விதத்திலும் அமையவேண்டும்.

1.உடனடி நோக்கம்
2.இறுதி நோக்கம்
3.தொழில் நோக்கம்
4.அறிவு அல்லது கற்றல் நோக்கம்
5.தனித்தன்மை நோக்கம் ஆகிய கல்வி நோக்கங்களை கொண்டுள்ளன.

'பணக்காரர்களின் குழந்தைகளுக்குத் தரமான கல்வியும், ஏழைக் குழந்தைகளுக்கு மலிவான கல்வி வழங்கப்படுவதைத் தடுக்கவும், பொதுப் பள்ளிகளில் தரமான இலவசக் கல்வி வழங்கவும், ஜனநாயகத்தின் உண்மையான பலனை ஏழைக் குழந்தைகளும் பெற வழி செய்யவும், ஒரே மாதிரியான தரமானக் கல்வியை வழங்கவும், ஒரே மாதிரியான பாடத் திட்டத்தை வழங்கவும், ஒரே மாதிரியான தேர்வு முறையை பயன்படுத்தவும், இறுதியாக இதன் வழியாக சமூகம் பிளவுபடுதலைச் சரி செய்ய,' அமெரிக்காவில் சமச்சீர் கல்வி முதன் முதலில் அமல்படுத்தப்பட்டது.

இந்நோக்கங்களைச் அடிப்படையாக கொண்டே தமிழகத்திலும் சமச்சீர் கல்விக்கான கோரிக்கை வலுப்பெற்றது. கடந்த
40 ஆண்டுகளில், கல்விப் பெருந்தகை கர்ம வீரர் காமராஜருக்குப் பிறகு, தமிழகத்தில் கல்வி வியாபாரம் ஆகிப் போனது என்பதில் இரு வேறு கருத்துக்களுக்கு இடமில்லை. ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு குழந்தை நிலையிலே உணரப்படும் சமூக நிலையாக மாறிவிட்டது. தமிழகமெங்கும் ஆயிரக்கணக்கான மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன. இப்பள்ளிகள் ஆங்கில மொழி வழிக் கல்வியைக் கற்பித்ததோடு, ஆங்கிலப் பண்பாட்டையும் (உதாரணமாக நமது தட்ப வெப்பத்திற்கு மாறான டை, ஷூ) கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வோடு தமிழ் மொழி, தமிழ்நாடு, இந்திய தேசம் ஆகியவற்றின் மீது எந்தப் பற்றும் இல்லாத இரண்டு மூன்று தலைமுறைகள் உருவாகி விட்டன. இவர்கள் எல்லாம் கம்ப்யூட்டர் எஞ்சினியர்களாக அமெரிக்காவில் செட்டிலாக ஆங்கிலப் பள்ளிகள் உதவியிருப்பது தவிர்த்து வேறு என்ன நன்மை கிடைத்திருக்கின்றது என்று கேட்கத் தோன்றுகிறது. சமச்சீரற்ற கல்வியால் ஏற்பட்டுள்ள விளைவுகளை நீக்கி நேர்மறைப் பலன்களை உருவாக்குவதும், ஏழை பணக்கார என்ற பாகுபாட்டை தளர்த்து, அனைவருக்கும் தரமான கல்வியை வழங்குவதே சமச்சீர் கல்வியின் நோக்கம் ஆகும்.

சமச்சீர் கல்வி காலத்தின் கட்டாயத் தேவை

இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படும் கல்வி பல்வேறு வேறுபாட்டு வடிவங்களைக் கொண்டது. மாநிலக் கல்வி வாரியம், மெட்ரிக்குலேசன் கல்வி வாரியம், ஆங்கிலோ-இந்தியன் கல்வி வாரியம் மற்றும் ஓரியண்ட கல்வி வாரியம் என பல்வேறு வாரியங்கள் மூலமாகக் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 82ரூ மாணவர்கள் மாநிலக் கல்வி வாரியத்திலும்,
16& மாணவர்கள் மெட்ரிக்குலேசன் வாரியத்திலும், வெறும் 2ரூ மாணவர்கள்ஆங்கிலோ-இந்தியன் கல்வி வாரியம் மற்றும் ஓரியண்டல் கல்வி வாரியத்திலும் பயின்று வருகின்றனர். இவர்களுக்குப் பாடத்திட்டங்கள், பயிற்றுமொழிகள், தேர்வு முறைகள், கட்டணங்கள் மற்றும் அமைப்பு முறைகள் வௌ;வேறாக இருக்கும்போது சமூகத்தின் இணக்கம் கேள்விக்குறியாகி விடுகிறது. ஏற்கனவே படிநிலைச் சமூகமாக இருக்கும் இச்சமூகத்தில் இத்தகைய வேறுபாட்டு வடிவங்கள் சமூகத்தை மென்மேலும் பிரித்தாள்கிறது. எனவேதான் எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரியானத் தரமானக் கல்வி, பொதுவானத் தேர்வு முறை, ஒரே மாதிரியானப் பாடப்புத்தகங்கள், ஒரே மாதிரியான கற்பிக்கும் முறை, ஒரே மாதிரியான புதிய வழிமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய சமச்சீர் கல்விமுறை அவசியமாகிறது.

சமச்சீர் கல்வியின் உண்மையான கிராம சுயாட்சி முறை:

சமச்சீர் கல்வி முறையினால் எல்லாக் கல்வி நிறுவனங்களும் தரமுள்ள, சமமானக் கல்வியைத் தரமுடியும். எல்லாக் கல்வி நிலையங்களிலும் அடிப்படை வசதிகள், கல்வி சாதனங்கள், விளையாட்டு மைதானங்கள் கட்டாயமாக அமைக்கப்பட்டிருக்கும். பயிற்சி பெற்ற, ஆற்றல் நிறைந்த ஆசிரியர்களால் கல்வி நிலையங்களும், மாணவர்களும் ஆற்றல்படுத்தப்படுவர். கற்பித்தல் முறைகளும் மாணவர்களை விடுதலைப்படுத்துவதாகவும் அமையும் கல்வியும், கல்வி முறையும், தலித்துகள், பழங்குடியினர் உடல் ரீதியாக, மற்றும் மனரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கும் ஆற்றல் பெற்ற குழந்தைகளை உள்ளடக்கியதாகவும் அமையும். பயிற்று மொழி ஆற்றலை வளர்க்கவும், வளப்படுத்தவும் உதவுமேயன்றி அது பயத்தினை உருவாக்கும் தண்டனையாக இருக்காது. இந்தச் சமச்சீர் கல்வி மூலம் உண்மையானக் கிராம சுயாட்சியினை உருவாக்கிட முடியும். இதன் மூலம் அரசியல் சட்டம் (எண் 45 வலியுறுத்தும் கட்டாய இலவசக் கல்வியினை எல்லாக் குழந்தைகளுக்கும் அறிமுகம் செய்ய முடியும்.

கலை, விளையாட்டுகள் மற்றும் வகுப்பறை தண்டனைகள்

தமிழக பள்ளிக் கல்வியில் விளையாட்டு ஒரு ஒதுக்கப்பட்ட பாடமாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. மொத்தம் சுமார் 35 ஆயிரத்துக்கும மேற்பட்ட பள்ளிகளில் போதிய விளையாட்டு மைதானமே இல்லை என்பதே இதனை மெய்ப்பிக்கிறது. விளையாட்டு ஆய்வாளர் பணியிடங்களை துணை இயக்குநர் பணியிடமாக உயர்த்தி, போதுமான நிதி வழங்கி, மாவட்ட அளவில் கண்காணிப்பாளர்களை நியமிக்கவேண்டும். கட்டாய விளையாட்டுப் பயிற்சியுடன், ஓவியம், கைத்தொழில், பாடுதல், ஆடுதல், நீச்சல், தற்காப்புக் கலைகள், மேடைப் பேச்சு, நுண்கலைகள், யோகா போன்றவை பயிற்று விக்கப்படவேண்டும். கல்விச் சுற்றுலா, விழா கொண்டாட்டம், துப்பரவு செய்தல், கலைப் பொருள்கள் சேகரித்தல், பொருட்காட்சி அமைத்தல், சேமிப்பு போன்றவை ஊக்குவிக்கப்படுவது அவசியம்.

மாநிலத்தில் ஆங்கிலப் பாடத்துக்கு பயந்து இடை நிற்கும் மாணவர்களைக் காட்டிலும், வகுப்பறை தண்டனைகளால் கல்வியைக் கைவிடுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பள்ளியில் ஆங்கிலத்தில் பேசியதற்கு தண்டனை அளிப்பது, படிக்கவில்லை என்று கூறி வார்த்தைகளால் காயப்படுத்துவது, பாலியல் தொல்லை கொடுப்பது, உள்நோக்கத்துடன் வலி உண்டாகும் விதத்தில் அடிப்பது போன்ற மனித உரிமை மீறல்களுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். படிக்காத மாணவர்களை தண்டிப்பதால் பாடங்களை மனப்பாடம் செய்தல், இடைநிற்றல், உடல் பாதிப்பு ஆகியவற்றையே சாதிக்க முடியும் சிறந்த மாணவனாக உருவாக்க முடியாது என்பதை ஆசிரியர்கள் உணரச் செய்யவேண்டும்.

அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள்

இப்போதைய நிலையில் தமிழகத்தில், அரசுப் பள்ளிகளின் சூழலுக்கு முக்கியத்துவம் இல்லாத நிலை உள்ளது. இரைச்சல் மிகுந்த நகரின் மத்தியில், கான்கிரீட் காடுகளுக்கு இடையில், எந்தவித வரைமுறைகளும் இல்லாத கிடங்குகளாக பள்ளிகள் காட்சியளிக்கின்றன. பொதுக்கல்வி முறை அமல்படுத்தப்பட்ட பிறகு தொடங்கப்படும் புதிய பள்ளிகளுக்கு தேவையான சுற்றுச்சூழல் அமைந்திருக்க திட்டமிடுதல் அவசியம். தனியார் பள்ளிகளுக்கு நிகரான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது அவசியத் தேவை. மாணவர்களுக்கு எல்லாவிதமாக பருவநிலையையும் தாங்கக் கூடிய நல்ல விசாலமான வகுப்பறை, தனித்தனி இருக்கைகள், நாற்காலி, மேஜைகள், கதைப் புத்தகங்கள் புதிர் புத்தகங்கள் அடங்கிய நூலகம், கற்றல் கருவிகள், மாணவர்களின் ஐம்புலன் அறிவையும் வளர்க்கும் விதமான சூழல் அமையவேண்டும். உள்ளாட்சிகளில் வசூலிக்கப்படும் கல்வி வரியை முறையாக கல்வி சம்பந்தப்பட்ட செயல்களுக்கே செலவழிக்க வேண்டும்.

சமச்சீர் கல்வியில் ஆசிரியர்

சமச்சீர் கல்வி ஒரு புதிய பயணத்தை நோக்கி பயணம் செய்ய இருக்கிறது. இந்த பயணத்தில் புதிய மாற்றங்களையும், புதிய ஏற்றங்களையும், கற்றல் கற்பித்தல் முறைகளையும் இதன் மூலம் காணலாம். இனிவரும் தலை முறையினரிடம் ஒரு உந்து வேக தாக்கத்தை சமச்சீர் கல்வி அனைவரிடத்திலும் ஏற்படுத்தும் என்பதில் ஐயமும் இல்லை. சமச்சீர் கல்வியினால் ஆசிரியர்களும், புதுமையான திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், கற்றல் கற்பித்தல் முறைகள் மூலம் புதிய யுத்திகளை மாணவர்களிடம் கையாளவும், நல்ல மாணவர்களை உருவாக்க முடியும் என்பதை நாம் உணர்ந்துக்கொள்ளவேண்டும். சமச்சீர் கல்வியில் ஆசிரியரின் பங்கு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஒரே மாதிரியான கல்வி முறையை எதிர்க்கொள்ளும் ஆசிரியர்களுக்கு இதமான இன்பத்தையும், மனநிறைவான மகிழ்ச்சியையும் மாணவர்களிடம் இனிவரும் காலங்களில் எதிர்பார்க்கபடும் என்ற நம்பிக்கையை இச்சமச்சீர் கல்வியின் மூலம் குளிர்காய இருக்கின்றோம் என்பதை நினைக்கும் போது, சமச்சீர் கல்வியில் ஆசிரியரின் பங்கு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

சமச்சீர் கல்வி எதிர்நோக்கும் சவால்கள்

அதிகாரம் கை நழுவிப் போவதை விரும்பாத தனியார் பள்ளிகள், தங்கள் பள்ளிகளில் பல்வேறு நவீன வசதிகளை ஏற்படுத்தி, பெற்றோர் மற்றும் மாணவர்களைக் கவர முயற்சிக்கலாம். நடப்பாண்டில் இதுவரை 300க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் சி.பி.எஸ்.இ. கல்வித்திட்டத்தை நடத்துவதற்காக மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனியார் பள்ளிகள் அனைத்தும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளாக உருமாறி, தங்களது வசூல் வேட்டையை தொடர்ந்து நடத்தும் அபாயம் உள்ளது. சமச்சீர் கல்வித் திட்ட அமலுக்கு வந்த பிறகு தங்கள் பள்ளிகளில் இந்தந்த வசதிகள் இருக்கின்றன என்று கூறி விளம்பரப்படுத்துவதை அரசு தடை செய்யவேண்டும். சி.பி.எஸ்.இ. பள்ளிகளையும் மாநில அரசு கட்டுப்படுத்தும் வகையில் சட்டம் இயற்றவேண்டும்.

முடிவுரை:

சமச்சீர் கல்வி ஒரு தேசியத் தேவை. இந்த கோரிக்கையின் அடிப்படையான உளப்பாங்கு பரிதாப உணர்வோ, பரிவுணர்ச்சியோஅல்ல, ஏதோ இல்லாதவர்களுக்கு ஒரு கவளம் உணவை தாராள மணப்பான்மையுடன் தருவதைப் போன்ற மேட்டுக்குடி அணுகுமுறை ஜனநாயக, சமத்துவ நோக்கங்களுக்கு முரணானது. இது பாச உணர்ச்சியுடன், என்னைப்போல என் சகோதர மக்களுக்கும் நிறைவாக இருக்க வேண்டுமெனவும் ஒரு உளப்பாங்கு
(MiNdset) இதில் தேவை. மனித நேயம் மட்டுமல்ல, மனித நியாயமும் இதில் நம்மை வழி நடத்த வேண்டும் அந்த உளப்பாங்கும், அணுகுமுறையும் தான் உண்மையான நாட்டுப்பற்றை அதாவது தேசபக்தியை வெளியிடுவதாகவும், நடைமுறைப்படுத்துவதாகவும் அமையும்.

 

 

முனைவர் பூ.மு.அன்புசிவா
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-
641 028
பேச:
098424 95241,98438 74545.

 

 

 

 www.tamilauthors.com