'ஒன்றுக்கும் உதவாதவன்' நூல் வெளியீடு


உரை:எஸ்.ராமகிருஷ்ணன்

 

 

 

சென்னையில் உயிர்மை நடாத்திய .முத்துலிங்கத்தின் 'ஒன்றுக்கும் உதவாதவன்' நூல் வெளியீட்டின்போது திரு எஸ்.ராமகிருஷ்ணன் ஜனவரி 2012ல் ஆற்றிய உரை.

 

( ஒலியிலிருந்து எழுத்துறஞ்சி திரு )

 

ல்லோருக்கும் வணக்கம். என்னுடைய மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். முத்துலிங்கத்தினுடைய கட்டுரைத் தொகுப்பைப் பற்றி பேசுவதற்காக நான் இன்று இங்கு வந்திருக்கிறேன். முத்துலிங்கத்தினுடைய ஒரு தீவிரமான வாசகனாகத்தான் நான் என்னை எப்போதுமே கருதுகிறேன். அவருடைய கட்டுரைகள் அல்லது  கதைகள் எந்த இதழில் வெளிவரும்போதும் அதைத் தேடிப் படித்து உடனடியாக அந்த படைப்பு மேல் வந்து ஒரு எதிர்வினையாற்றக் கூடிய ஒரு ரசிகனாகத்தான் நான் எப்போதுமே இருந்து கொண்டிருக்கிறேன்.

 

இப்பகூட நான் வந்து இன்னிக்குக் காலையில என்னைப் பார்ப்பதற்காக ஒரு நண்பர் வந்திருந்தார். அவரிடம் சொன்னேன் இன்று மாலையில் நான் முத்துலிங்கத்தினுடைய புத்தக வெளியீட்டு விழாவிற்கு போகிறேன் என்றுநண்பர் உடனே கேட்டார் என்னிடம் அப்ப விழாவிற்கு முத்துலிங்கம் வருவாரல்லவா? அப்ப அவரை சந்திக்கலாம் அல்லவா? என்று. நான் சொன்னேன் முத்துலிங்கம் இங்கு இல்லையே, அவர் கனடாவில் வசிக்கின்றார் என்று. உடனே அவர் ஆச்சரியத்துடன் கேட்டார் கனடாவில் அவருடைய பையன் பொண்ணு யாராவது இருக்கிறார்களா? அதுதான் அங்கு வசிக்கிறாரா? என்று. இல்லை அவர் கனடாவில்தான் வசிக்கிறார் என்று சொன்னபோது அவருக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. அப்படியா சொல்கிறீர்கள். அவர் வந்து தமிழ்நாட்டில் எங்கோ திருநெல்வேலி பக்கம் வசிப்பதாகத் தானே நாங்க நினைத்துக் கொண்டிருந்தோம். இவ்வளவு வருடமாக தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார். இப்பகூட பார்த்தேன் ஒரு இதழில் அவருடைய கட்டுரை வெளியாகியிருந்தது. சில மாதங்களுக்கு முன்பு அவருடைய சிறுகதைகள் வெளியாகியிருந்தது. அவர் தமிழ்நாட்டில் தென்பகுதியில் குறிப்பாக திருநெல்வேலிக்குப் பக்கத்தில் எங்கோ வசித்துக் கொண்டிருப்பவர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். நீங்க அவர் கனடாவில் என்று சொல்கிறீர்களே. அப்ப அவர் நம்மாளு இல்லையா அப்படி என்று கேட்டார். நான்  நம்மாளு என்றால்... எப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டேன். இல்லீங்க அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், இப்போ கனடாவில் போய் இருக்கிறார் என்று சொல்றீங்களா என்று கேட்டார். இல்லை அவர் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர். அவர் உலகத்தில் பாதி நாடுகளில் பயணம் செய்து வேலை பார்த்திருக்கிறார். கனடாவில் வசிக்கிறார். ஆனால் அவருடைய எழுத்தின் வழியாக நமக்கு ஒரு நெருக்கத்தை உருவாக்கியிருக்கிறார். இப்ப சென்னையில் வசிப்பதுபோல மதுரையில் வசிப்பதுபோல நம்மகூடவே வசிக்கிறார்.

 

நம்மகூடயே இருக்கிற ஒரு எழுத்தாளர் அவர். அவர் இங்கதான் இருக்கிறார் நம்மகூடத்தான் இருக்கிறார். இந்த அரங்கத்தில நம்மகூட அவர் இல்லாதபோதும்கூடஅவர் நம்முடைய நெருக்கத்தில் இருக்கிறார். அவர் நம் கைதொடும் தூரத்தில் இருக்கிறார். இப்ப அசோகமித்திரன் என் அருகில் இருப்பதைப் பார்க்கும்போது எனக்கும் அவருக்கும் இடையில வந்த சின்ன  அந்நியோன்யத்தைப் போலத்தான் முத்துலிங்கத்தையும் உணர்கிறேன். அவருக்கும் எனக்கும்  இடையில் ஒரு தொடுதல் இல்லையே தவிர  அந்த அந்நியோன்யம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அவ்வளவு நெருக்கமாக ஒரு எழுத்தின் வழியாகவே இருக்கிறார். இவ்வளவுக்கும் வேடிக்கை என்னவென்றால் நான் இதுவரைக்கும் முத்துலிங்கத்தைச் சந்தித்ததே கிடையாது. ஆனால் முத்துலிங்கத்தின் ஒவ்வொரு கதை படிக்கும்போதும் முத்துலிங்கத்தை நான் தொடுவதை உணர்கிறேன். முத்துலிங்கத்தினுடைய அந்தக் கைகளினுடைய வெம்மையை என்னால் உணர முடியும். அப்ப முத்துலிங்கம் தன் எழுத்தின் வழியாக என்னை அல்ல படிக்கக்கூடிய ஒவ்வொருவருடைய தோளிலும் கைபோட்டுக் கொண்டு ரொம்ப அன்பாக பழகுகிறார். நிறைய நேரங்களில் ஒரு எழுத்தாளன் ஒரு வாசகனின் மனதில் ஒரு பிம்பத்தை உருவாக்குகின்றான். அந்த பிம்பம் எப்படி இருக்கணும் ஒரு நண்பனைப்போல சிலருக்கு உருவாகும். சிலருக்கு ஒரு தந்தையைப்போல ஒரு ஆசானைப்போல ஒரு வழிகாட்டியைப்போல இருக்கும். எனக்கு முத்துலிங்கத்தை ரொம்ப  வயது வித்தியாசம் இல்லாத ஒரு சகோதரனோடு பேசும்போது இப்பதான் அவர் அந்த உலகத்தைக் கடந்து போயிருப்பார் நாம் அதற்குப் பின்னாடி வரும்போது நமக்கு ஒரு பரிவோட இந்த உலகத்தைக் காட்டித் தரக்கூடிய பேசக்கூடிய கேலி செய்யக்கூடிய எல்லா விடயங்களிலும் ஒரு மூத்த சகோதரனோடு நமக்கு இருக்கக்கூடிய உறவைப்போலத்தான் முத்துலிங்கத்தினுடைய எழுத்து இருக்கிறது. அது அவருடைய எல்லா எழுத்திலும் இருக்கு. அவருடைய புனைகதைகளிலும் இருக்குஇ கட்டுரைகளிலும் இருக்கு.

 

அவரிடமே ஒரு கேள்வி கேட்கிறாங்க உங்களுடைய கட்டுரைகளில் இருக்கக்கூடிய உண்மை எவ்வளவு கற்பனை எவ்வளவு  என்று. அவர் அதற்கு ஒரு அழகான பதில் சொல்லியிருக்காரு முத்துலிங்கம். என்னன்னா சமையல் குறிப்புகளில் ஒரு வரி இருக்கும் நீங்க கவனிச்சிருப்பீங்களா உப்பு அப்படின்னு போட்டுட்டு பின்னாடி 'தேவையான அளவுன்னு' போட்டிருப்பாங்க. அப்படித்தான் நானும் கட்டுரை எழுதும்போது அதில  கற்பனையைத் தேவையான அளவு பயன்படுத்துகிறேன். எது உண்மை எது கற்பனை என்பது தேவையானளவு பயன்படுத்துவது தான் எழுத்து என்றார். நம்மகூடயே இருந்து எழுதிக் கொண்டிருக்கிற ஒரு முக்கியமான எழுத்தாளர் அவர். அதனால்தான் ஒவ்வொரு முறையும் தமிழனுடைய முன்னோடிப் படைப்பாளிகளை மூத்த தலைமுறை எழுத்தாளர்களைப் பற்றிய ஒரு பட்டியலை பட்டியலிடும்போதெல்லாம் அந்தப் பட்டியலில் . முத்துலிங்கத்தினுடைய பெயர் இருந்துகொண்டே இருக்கும். அவர் நம்முடைய ஒரு மூத்த சகோதரரைப் போன்ற ஒரு எழுத்தாளர்தான். அவருடைய கட்டுரைகளை நாம் தொடர்ந்து வாசிக்கிறோம். இந்தப் புத்தகத்திற்குக்கூட அவர் என்ன தலைப்பு வைத்திருக்கின்றார் என்று பாருங்க 'ஒன்றுக்கும் உதவாதவன்'. தன்னை ஒரு ஒன்றுக்கும் உதவாதவனாக யார் ஒருவர் முன்னாடி நிறுத்துகிறாரோ அவர் நிச்சயமாக எல்லாம் தெரிந்தவராக ஞானம் மிக்கவராகத்தான் இருப்பார் என நாம் நம்புகிறேன். ஏன் அப்படியென்றால் அவரால் மட்டும்தான் தனக்கு ஒன்றுமில்லாதவன் என்று சொல்லிக் கொள்வதற்கான எளிமை வரும்.

 

அப்புறம் முத்துலிங்கத்திடம் இருக்கக்கூடியது அவருடைய நகைச்சுவை. சொல்லவே வேண்டாம். அவர் ஒருவரைதான் நாம் படிக்கும்போது சிரிக்காமல் வாசிக்கவே முடியாது. பல இடங்களில். இன்னொன்னு இருக்கு. எனக்கு தனிப்பட்ட முறையில் நான் முத்துலிங்கம் படிக்கும்போதெல்லாம். ஒவ்வொரு முறையும் நான் பெரும்பான்மையான புத்தகங்கள் படிக்கும்போது பென்சில் வைத்துக்கொண்டு படிப்பேன். சில நேரங்களில் நான் குறிப்பு எடுப்பேன். எல்லா நேரங்களிலும் அந்தப் பென்சில் கையிலேயேதான் இருக்கும். அதிக தமிழ்ப் புத்தகங்கள் படிக்கும்போது இந்தப் பென்சிலுக்கு வேலையே இருக்காது. அதைக் கீழே வைத்துவிட்டுதான் தமிழ்ப் புத்தகங்கள் படிப்பேன். ஆனால் முத்துலிங்கம் படிக்கும்போது மட்டும்தான் நான் அந்த பென்சிலுக்கு அதிக வேலை கொடுக்கக்கூடிய ஒரு எழுத்தாளர். நிறைய புள்ளிவிபரங்கள் குறிப்புகள் புதிய புத்தகங்கள் தகவல்கள் கொடுத்துக் கொண்டே இருப்பார். நிறைய நேரங்களில் என்ன பண்ணுவேன் என்றால் அவர் எந்தப் புத்தகத்தைப் படித்திருக்கின்றாரோ அந்தப் புத்தகத்தை உடனடியாகத் தருவித்து நான் அதைப் படித்துப் பார்ப்பேன். முத்துலிங்கத்துக்கு அறிந்தது எனக்குக் கிடைக்குமா அப்படி என்று. சொல்லப் போனால் முத்துலிங்கம் அந்தவகையில் மற்ற எல்லா எழுத்தாளர்களையும்விட ஒரு முன்னோடி எழுத்தாளர். உடனடியாக சமகால உலக இலக்கியங்களை அவரளவுக்கு தேடிப் படித்தவர் இருப்பாரா என்று தெரியாது. சினிமாவும்சரி இலக்கியங்களும்சரி பயண அனுபவத்திலும்சரி ஒரு அன்றாட வாழ்க்கையில் ஒரு தொலைக்காட்சியில் வரக்கூடிய ஒரு நிகழ்ச்சி உட்பட அவர் குறிப்பிடக்கூடிய எல்லாமே முக்கியமானது.

 

அப்ப அவர் தேர்வு செய்கிறார். என்னென்னா வாழ்க்கையில நல்ல விசயங்களாகவே தேர்வு செய்து அவற்றுக்கூடாகவே ஒரு பயணத்தைப் பண்ணிக் கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகின்றது. இதில இருக்கக்கூடிய எல்லாக் கட்டுரைகளும் அந்த முத்துலிங்கத்தினுடைய உலகத்திலிருந்து உருவானதுதான். எனக்கு முத்துலிங்கத்தைப் பற்றி நினைக்கும்போது எப்போதுமே இரண்டு விம்பங்கள் அல்லது உருவங்கள் என் மனதில் தோன்றிக் கொண்டேயிருக்கிறது. ஓன்று சார்லி சாப்ளினுடைய ஒரு இமேஜ். சார்லி சாப்ளினுடைய உருவம். சார்லி சாப்ளினுக்கு என்ன இருக்கிறது என்றால் தன்னுடைய பசி உட்பட தன்னுடைய சொந்த வாழ்க்கை உட்பட எல்லாத்தையும் கேலி செய்யவும் சிரிக்க வைக்கவும் முடியும். மிகுந்த பசியோட போய் சாப்பிட உட்காரும்போது எதிரில் இருக்கக்கூடியவன் அந்த உணவை தட்டிப் பறித்தா அவனோட சண்டை போடுவதைக்கூட சாப்ளின் வந்து நகைச்சுவையாகக் காட்டுவார். ஒரு நேரத்தில்கூட சாப்ளின் பசிக்காக வருத்தப்படுகிறாரே என்று நம்மால் உணரவே முடியாது. ஒரு வேடிக்கை. இதெல்லாம் தாண்டி தன்னுடைய சொந்தத் துயரத்தையே அதைத் துயரம் என்று எடுத்துக் கொள்ளாமல் ஒரு விளையாட்டு வேடிக்கை என்று எடுத்துக் கொள்ளக்கூடிய மனப்போக்கு சாப்ளினிடம் இருந்தது. கிட்டத்தட்ட அதே மனப்போக்கு அதேபோல உலகத்தினுடைய சகல காரியங்களையும் சிந்தித்துப் பார்த்து அனுபவித்து அதிலிருந்து கற்று திரும்ப வந்து அதில் மேன்மையுறுவதல்ல அதிலேயே கரைந்து போற ஆளாகத்தான் அவர் இருக்கிறார்.

 

இன்னொரு விம்பம் இருக்கிறது. அது என்னன்னா ஆர்.கே. லட்சுமணனின் கார்ட்டூனில் வரும் மிஸ்;டர் பொதுசனம் என்று சொல்லக்கூடிய ஒரு கதாபாத்திரம் வருவார். அவர் வந்து எல்லா இடத்துக்குள்ள இருந்து கொண்டும் அவர் ஒரு பார்வையைப் பார்ப்பார். ஒரு விமர்சனத்தை வைப்பார். அந்த விமர்சனம் என்னவா இருக்குமென்றால் ரொம்பக் கூர்மையான அரசியல் விமர்சனமான இருக்கும். சமூக விமர்சனமாக இருக்கும். அறத்தைக் கைவிட்ட விசயத்தைப் பற்றிய ஏதாவதாக இருக்கும். அப்படி அந்த பொதுஜனத்தைப்போல விமர்சிக்கக்கூடியவராகவும் முத்துலிங்கம் இருக்கின்றார். அங்கதம் என்று சொல்லக்கூடிய பகிடி என்று சொல்லக்கூடிய அந்தக் கேலியில் முத்துலிங்கத்துக்கு இணையான இன்னொரு எழுத்தாளரைச் சொல்ல முடியாது. நிறைய நேரங்களில் நான் அதில் புதுமைப்பித்தனைத்தான் பெரிய ஆள் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன். புதுமைப் பித்தனைப்போல கேலி செய்து படைப்புகளினூடாக போகிற போக்கில் ஒரு சவுக்கடி கொடுப்பதுபோல எழுதிவிட்டுப் போகிற இன்னொருத்தரைப் பார்க்க முடியாது என்று. முத்துலிங்கம் அவரைப்போல அநாயசாமாக நிறைய இடங்களைக் கடந்து போயிருக்கிறார்.

 

ஒரே ஒரு சம்பவம். இந்த தொகுப்பில் ஒரு கட்டுரை வருகிறது. ஓரு இளைஞன் வந்து தன்னுடைய மாமியாருக்கு புத்தாண்டுப் பரிசாக ஏதாவது கொடுக்க வேண்டும் என்பதற்காக ஏதாவது பரிசு கொடுக்க நினைக்கிறான். அவர்கள் வயதானவர்கள். என்ன கொடுக்கலாம் என்று யோசித்துவிட்டு மிக விலையுயர்ந்த ஒரு இடத்தை இந்த இடம் என்னவென்றால் ஒரு இடுகாடு. இடுகாட்டிலே சிறந்த இடத்தைத் தேர்வு  செய்து விலை கொடுத்து வாங்கினால் நீங்கள் இறந்து போனீர்கள் என்றால் அந்த இடத்தில் அவர்களை அடக்கம் செய்து கொள்ளலாம். இப்படி ஒரு இடத்தை விலைக்கு வாங்க வேண்டும். அப்படி ஒரு இடத்தை விலைக்கு வாங்கி மாமியாரிடம் கொண்டு சென்று பரிசாகக் கொடுக்கிறான். கொடுத்து இது என்னுடைய பரிசு வைத்துக் கொள்ளுங்கள். அந்த அம்மா நினைக்கிறாங்க எவ்வளவு என்மேல பாசமாக இருந்தால் ஒரு பெரிய விலை கொடுத்து என் மரணத்திற்கு அப்புறம் என்னுடைய கல்லறை அமைய வேண்டிய இடமாக இருக்க வேண்டும் என கொடுத்திருக்கிறார் என. ஒரு ஆண்டு முடிகிறது. அந்த ஆண்டு முழுக்க அந்த மாமியார் அந்த மருமகன் எது செய்தாலும் பாராட்டிக் கொண்டேயிருக்கிறார். அடுத்த ஆண்டு தொடங்கும்போது இந்த ஆண்டு என்ன பரிசு கொடுப்பார் என அந்தம்மா காத்துக்கொண்டேயிருக்கும்போது அந்த மருமகன் எதுவுமே கொடுக்க மாட்டேனென்கிறார். அந்தம்மா கேட்கிறாங்க ஏன் போன ஆண்டு எனக்கு பரிசு கொடுத்தீங்களே. இந்த வருடம் கொடுக்கவில்லையே என்று சொல்லும்போது அவன் சொல்கின்றான் போன ஆண்டு கொடுத்த பரிசை நீங்க பயன்படுத்தவேயில்லையே. இப்படி நீங்க பயன்படுத்தாம விட்டிங்கன்னா அது என்னை அவமானப்படுத்துவது மாதிரி இருக்கிறது. அத நீங்க பயன்படுத்துவீங்க என்று நம்பித்தானே வாங்கிக் கொடுத்தேன் அப்படின்னு சொல்றான். அதுதான் அந்த ஒரு சொல் வழியாக அவர் இந்த ஒரு கட்டுரைக்கூடாக அவர் வேறேதோர் விசயத்தைச் சொல்லிக் கொண்டே வருகிறார். வரும்போது அப்படி போகிறபோக்கில் இதை சொல்லிவிட்டுப் போகிறார். அதுதான் அந்த முத்துலிங்கம். இந்த நகைச்சுவையினுடைய வலிமையே என்னன்னா சுவாரசியத்துக்கு மட்டுமல்ல அதன் வழியாக அவர் சொல்ல வந்த விசயத்தை அப்படியே ஒரு சாட்டையடிபோல சொல்லிவிட்டுப் போகக்கூடியதாக இருக்கிறது.

 

 

 

அவருக்குள்ள இரண்டு முகம் இருக்கு. முத்துலிங்கத்துக்கு இரண்டு முகம் இருக்கிறதாக நான் நினைக்கிறேன். ஒன்று அவருடைய இளமையிலிருந்து இலங்கையில் வாழ்ந்து புகலிட வாழ்க்கைக்காகப்போன இளமைப்பருவம். அது கிட்டத்தட்ட இருபத்தைந்து வயதுக்குட்பட்டவரைக்கும் இருக்கிற அவருடைய ஆழ்மன நினைவுகள். அந்த நினைவுகளில் இருக்கக்கூடிய குடும்பம் இலங்கையின் போர்ச்கூழல் அதற்கு முன்பிருந்து அங்கேயிருந்த வாழ்க்கை அதில அவர் கற்றுக் கொண்ட சங்க இலக்கியங்கள் தொடங்கி தமிழினுடைய அத்தனை செவ்விலக்கியங்களும் கொண்ட ஒரு முகம். நிறைய தருணங்களில் அவர் செவ்விலக்கியங்களைப் பற்றிக் குறிப்பாக குறுந்தொகையோ அல்லது ஒரு நற்றிணைப் பாடலைப் பற்றியோ அல்லது அந்தப் பழைய செவ்வியல் பிரதிகளில் ஏதாவது ஒரு மேற்கோளையோ அவர் பயன்படுத்தும்போது அதற்கு அவர் பயன்படுத்துகின்ற மொழியும்சரிஇ நெகிழ்வும்சரி முழுக்க வேறான ஒன்று. அந்த ஒரு முத்துலிங்கம் ஒரு மகத்தான ஒரு தமிழ்மரபினுடைய ஒரு தொடர்ச்சியைப்போல வருகிறவரா இருக்கிறார். அதில அவருக்கு இருக்கக்கூடிய புலமை அசாத்தியமானது. அவர் ஒவ்வொரு சொல்லையும் எண்ணிப் படித்திருக்கிறார் என்பது நமக்குத் தெரிகிறது. அதேபோலத்தான் காதல் பெண்கள் அனுபவம். அதைப்பற்றி எழுதக்கூடியது எல்லாமும் இருக்கு.

 

இன்னொரு முத்துலிங்கம் இருக்கிறார் அவர் முதியவராக வேலையிலிருந்து ஓய்வு பெற்று கனடாவில் வந்து வசித்துக் கொண்டு தன்னுடைய பிள்ளைகளைப் பார்ப்பதற்காக அமெரிக்காவுக்கு வந்து போய்க் கொண்டிருக்கக்கூடிய அதே நேரத்தில் தன்னுடைய வாழ்வினுடைய முதுமையை வெறுமனாகக் கழித்துவிடக்கூடாது என்று ஒவ்வொரு துளியிலும் எதையாவது தேடிக் கொண்டேயிருக்கிற முத்துலிங்கம். ஓய்வில்லாம முத்துலிங்கம் எதையாவது செய்து கொண்டேயிருக்கிறார் என்பதை இந்தக் கட்டுரையில் படிக்கலாம். என்ன செய்கிறார் என்றால் தன்னுடைய மரபணு தொடர்ச்சியைக் கண்டுபிடிப்பதற்காக நாஷனல் ஜியோகிரபியில் வரக்கூடிய ஒரு நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு தன்னுடைய மூதாதையர்களின் மூதாதையர்கள் யாராக இருப்பாங்க. எந்தக் குரங்கிலிருந்து தான் பிறந்திருப்பேன் அப்படிங்கறத கணக்கிடுவதற்காக அவர் பணம் செலவழித்து தன்னுடைய வேலையாக செய்கிறார். இன்னொரு பக்கம் வண்டியோட்டுகிறார். வெளியில போகிறார். புத்தகம் படிக்கிறார் நாடகம் பார்க்கிறார். சினிமா பார்க்கிறார். கடந்த காலத்தோடு தொடர்புடைய அத்தனை விடயங்களையும் திரும்ப நிகழ்த்திப் பார்த்துக்கொண்டே இருக்கிறார். ஓய்வெடுப்பதேயில்லை. முத்துலிங்கம் முழுக்க தன்னை ஏதாவது ஒரு செயலில் ஈடுபடுத்திக் கொண்டேயிருப்பவராக இருக்கிறார். இந்த இரண்டு முத்துலிங்கமும் அவருடைய கட்டுரைகளில் மாறி மாறி வராங்க. ஓன்று தன்னுடைய கடந்தகால நினைவுகளைப் பற்றிப் பேசக்கூடியவர். இன்னொன்று இந்த சமகால வாழ்க்கையில நடக்கக்கூடிய விஷயங்களில். இரண்டு பேரின் மனநிலையும் ஒரே போலத்தான் இருக்கிறது. இருபத்தைந்து வயதில் அவருடைய வாழ்க்கை எப்படி தொடங்கியதோ அதே நிதானம் அதேபோல விருப்பத்தோடதான் அறுபது வயதிலயும் இருக்கிறார்.

 

அவர் அதிகம் எழுதாத பகுதி ஆனால் எனக்கு ரொம்ப முக்கியம் என்று தோன்றியது அவருடைய மத்திய வயது. திருமணமாகி வாழ்க்கையினுடைய நெருக்கடிகளுக்காக அவர் வேறுவேறு நாடுகளுக்கெல்லாம் போகிறார். அந்த வாழ்க்கையைப் பற்றி அவர் எழுதும்போதெல்லாம் அவருக்கு இருக்கக்கூடியது அவமானம், வெறுப்பு, கசப்பு. இதைப்பற்றி தொட்டுக் காட்டிவிட்டுத்தான் போவாரே தவிர அதை ரொம்ப பகிர்ந்து கொள்ளவே மாட்டார். கிட்டத்தட்ட அவர் தன்னுடைய வாழ்வின் பாதிப் பகுதியைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளாமலே இருக்கிறார். ஒரு பெரிய மௌனம் அவருக்குள் இருக்கிறது. ஆனால் அவர் பகிர்ந்து கொள்ளக்கூடியது எல்லாமே என்னன்னா இன்னைக்கு இருக்கக்கூடிய வாழ்க்கை. பொதுவாக முதுமை அடைந்தவுடனே எல்லோருமே முதுமையைப் பற்றி ஒரு விரக்தியும் ஒரு சோர்வும் இன்னும் சொல்லப்போனா உடல் தளர்ச்சியின் வழியாக மனம் தளர்வையும் கொண்டிருப்பாங்க. அவரே ஒரு வரியில் எழுதுகிறார் எல்லாப் பொருட்களும் பழுதாகிறதில்லையா ஒரு கார் வாங்கினால் அதை பல நாட்கள் ஓட்டினால் அந்தக் கார் பழுதடைந்து விடுகிற மாதிரி மனிதனுடைய மூளையும் பழுதடைந்துவிடுமா என்ன? எழுத்தாளனுடைய மூளை பழுதடையாதாஹெம்மிங் வேயைப் பற்றி எழுதும்போது சொல்றாரு அதுவும் ஒரு காலத்தில் துருப்பிடித்துபோய் கொஞ்சம் கொஞ்சமாக நசிந்துபோய் விடுமோ என்று அவர் நம்புகிறாரோ என்று. ஆனால் அது முத்துலிங்கத்தினுடையது அல்ல.

 

முத்துலிங்கம் தன்னை ஒரு செயல்பாட்டாளராகத் தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருக்கிறார். அதனாலதான் அங்காடியின் முன்னால அவருடைய கார் நிறுத்தியிருக்காரு. பின்னாடி ஒரு பொண்ணு வந்து காரில இடித்து விடுகிறார். அந்தக் கார் இடித்த ஒரு விபத்தைப் பற்றி எழுதும்போதும்கூட சஞ்சலமேயில்லை. அந்தக் காரிலிருந்து முத்துலிங்கம் இறங்குகிற மாதிரியே தெரியவில்லை. ஒரு பௌத்த துறவி இறங்குகிற மாதிரி இருக்கிறார். துறவி மாதிரி இறங்கி அந்தக் கார் இடித்த பெண்ணிடம் வந்து எதற்காக இந்தக் காரை இடித்தீர்கள்? நாம் பொலிசிடம் போகலாமா? என்று. அந்தப் பொண்ணு பயப்படுகிறார். பயப்படுவதைச் சொல்வதற்கு முத்துலிங்கம் ஒரு அழகான உவமையைச் சொல்கிறார். அது இப்பதான் பிறந்த ஒரு ஆட்டுக்குட்டி தரையில நிற்பதற்குக் காலை ஊன்றுவதற்கு முடியாம நடுநடுங்கும் இல்லையா. அப்படி ஒரு நடுநடுக்கத்தோடதான் அந்தப் பொண்ணு காரைத் திறந்து வந்தார். என்ன ஒரு அழகான... ஒரு விபத்து நடக்குது. அந்த விபத்தில சம்பந்தப்பட்டிருக்கிற பெண் எப்படி இறங்கி வந்தா என்று... இறங்கி வந்தவுடனே அவர் அந்தப் பெண்ணுடன் பேசுகிறார். அவரிடம் முகவரி வாங்கிக் கொள்கிறார். விபத்து நடந்ததற்கான அந்த இழப்பீடு எவ்வளவோ செலுத்தணுமோ அதற்காக எடுத்துப் போகிறார். காரை சரி பண்ணுகிறார். அந்தப் பெண்ணிடம் நூறு டாலர் தரவேண்டும் என்று சொல்கிறார். அந்தப் பெண் சொல்கிறார் நான் உங்களுக்கு பணம் அனுப்பி விடுகிறேன் என்று. ஆனால் அந்தப் பெண் அந்தப் பணத்தைக் கொடுக்கவில்லை. ஒவ்வொரு முறையும் அவர் தொடர்பு கொள்ளும்போதும் அந்தப் பணத்தைத் தந்துவிடுகிறேன் என்கிறார். ஒருமுறை அந்தப் பெண் சொல்கிறார் நான் படித்துக் கொண்டிருக்கிறேன் அதனால என்னால இப்ப பணம் தர முடியாது என்று. அப்ப அவர் கேட்கிறார் பல்கலைக்கழகத்தில் நீங்க என்ன பண்றீங்க என்று. அதற்கு ஆராய்ச்சி பண்றேன் என்கிறார். அப்ப ஐம்பது டாலர் கொடுத்தா போதும் அப்படீங்கறார். அப்பகூட அவருக்குள்ள இருக்கிற பௌத்த ஞானிதான் பேசுகிறார் என்னவென்றால் எனக்கு பணம் வேண்டியதில்லை. இழப்பீடுங்கிறது நீங்க செய்த தவறை சுட்டிக்காட்டுவதற்கானதுதான். அதற்கு ஐம்பது டாலர் கொடுங்கள் என்றதற்கு அந்தப் பெண் கொடுக்கவேயில்லை.

 

எழுதிக் கொண்டு வரும்போதே சொல்கிறார் அவள் என்னை முதன்முதலாக அந்தக் காரைவிட்டு இறங்கின அன்னைக்கே ஏமாற்றலாம் என முடிவு பண்ணிவிட்டாள். நான்தான் இவ்வளவு காலமாக காத்திட்டேயிருக்கிறேன். எவ்வளவு தடவை நான் அந்த நம்பிக்கையை வைத்திருக்கிறேன். கடைசியில கோபப்பட்டு ஒரு நாள் அவளுக்கு ஒரு கடிதத்தை எழுதுகிறார். அதாவது என்னை நீ ஏமாற்றி இந்த ஐம்பது டாலரோட சந்தோஷமா வாழலாம். உனக்கும் நாளைக்குத் திருமணம் நடக்கலாம். உன்னுடைய குழந்தை குட்டிகளெல்லாம் வரலாம். உன் வாழ்க்கையில் நீ மேம்பாடு அடையலாம். அன்னைக்கு நீ ஏதாவது ஒரு கட்டத்தில உன் பேரப்பிள்ளைகளிடத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும்பொழுது ஒரு வயதானவருடைய காரை இடித்து அந்தாளுக்கு ஐம்பது டாலர் கொடுக்காமல் போய்விட்டேன் என்கிற கதையைக்கூட சுவாரசியமா சொல்லலாம் அப்படீன்னு ஆவேசமாக கடிதத்தை எழுதிவிட்டு கடைசியாக சொல்றாரு. இப்படி ஒரு கடிதத்தை அந்தப் பொண்ணுக்கு நாம அனுப்பணுமா என்ன? அந்தளவுக்கு தரம் தாழ்ந்தா போய்விட்டேன், வேண்டாம் அனுப்பவேயில்லை என்று.

 

 

 

ஆனால் மதிப்பீடுகள் இல்லாத ஒரு வாழ்க்கையில வாழ்ந்துகிட்டேயிருக்கிறோம். அவர் அந்தப் பொண்ணைப் பற்றி எழுதும்போது சொல்கிறார் அந்தப் பொண்ணு வந்து வசதியான ஒரு வீட்டைச் சேர்ந்தவள் என்பது அவளுடைய காரில் தெரிகிறது. அவளுடைய உடைகளில் தெரிகிறது. ஆனால் அவள் இன்னொரு மனிதனுக்குச் செய்த தவறுக்காக ஒரு ஐம்பது டாலரைக் கொடுக்கிற ஒரு அறம்கூட இல்லாதவளாக இருக்கிறாள். குற்றமே சொல்லல. மாறாக என்ன சொல்றாருன்னா நம்முடைய சமகால சூழல் என்கிறது உலகம்பூரா ஒன்றுபோலதான் இருக்கிறது. எப்படின்னா மனித அறங்களுடைய வீழ்ச்சியை நாம பார்த்துக் கொண்டேயிருக்கிறோம். அடிப்படை விஷயங்களில்கூட மனிதர்கள் ஒருவரையொருவர் ஏமாற்றத் துணிகிறார்கள். தன்னுடைய தவறுக்கு தவறு என்று நல்லாத் தெரிந்தால்கூட ஏற்றுக் கொள்ள மறுக்கிறாங்க. யாராவது சுட்டிக்காட்டும்போது சம்பந்தப்பட்டவரைத்தான் கோபப்படுகிறார்களே தவிர திருத்திக் கொள்ள முற்படவே மாட்டேனென்கிறார்கள். இதன்மேல அவருக்கு ஆழமான கோபம் இருக்கிறது. ஆனால் இந்தக் கோபத்தை அவர் கோபமாக வெளிப்படுத்தினதே கிடையாது. மாறாக ஒரு நகைச்சுவையாக்கிட்டாரு. நகைச்சுவையாகக் காட்டும்போது நமக்கு படிக்கும்போது அந்தப் பெண்மேல்  ஒரு ஆழமான கோபம் வருகிறது. ஒருவரைத் திட்டமிட்டு ஏமாற்றுவது என்பதை ஒருவர் செய்யும்போது ஏன் நாம அத செஞ்சிகிட்டே போகணும். இது ஒரு வெறும் பெண்ணுக்கும் விபத்துக்கும் சம்பந்தப்பட்ட விடயம் அல்ல. உலகம் தெரிந்து தொடர்ந்து பலரோட வாழ்க்கையிலயும் இதேபோல உறவுகள் வழியாக அலுவலகத்திலும்சரி அல்லது நெருக்கமான சூழ்நிலைகளிலும்சரி ஒருவர் தெரிந்து ஏமாற்றப்படுவதை சகித்துகிட்டுப் போகணுமா இல்லையா. அப்ப எதிர்ப்பை எப்படிக் காட்டணும் என்னும்போது அவர் கடிதம் எழுதிட்டாரு. அந்த இடத்தில்தான் அவர் ஒரு எழுத்தாளராக இருக்காரு. தன்னுடைய எதிர்ப்பைக் காட்டணும் என்கிற கோபம் இருக்கு. அனுப்ப மறுக்கிறாரு. அங்கே எங்கோ ஓர் இடத்தில ஆழமாக எனக்குத் தோன்றுகிறது நாம எல்லாருக்குள்ளயும் ஒரு அறம் இருக்கிறது என்னன்னா விட்டுக்கொடுத்துப் போகலாம். ஒன்றை இழக்கலாம். ஒன்றை விட்டுக்கொடுக்கலாம். தவறை திருத்துவதற்கான சந்தர்ப்பத்தை நாம அவர்களுக்கு வழங்கிட்டே இருக்கலாம். அதன்வழியாக ஒருவேளை அவர்கள் திருந்தாவிட்டாலுங்கூட அதன்வழியாக நாம் அந்த மனப்பாரத்திலிருந்து விடுபடலாம் இல்லையா. அப்ப முத்துலிங்கத்தினுடைய கட்டுரை தோற்ற அளவில் ஒரு எளிமையான விபத்துஇ விபத்து சார்ந்த ஒரு பெண்ணாக இருக்கு. ஆழமாக இன்னொரு விடயத்தை வலியுறுத்துகிறது என்னன்னா வாழ்க்கையில் நிறைய விஷயங்களுக்கு நீங்கள் கோபப்படுங்கள் ஆனால் அதைத் தெரிவிப்பதற்கான வழியை உண்டாக்கிக் கொள்ளுங்கள். அதை வெறும் கோபமாக்கிடாதீங்க. மாறாக அதைத் தெரிவிப்பதற்கான புதிய வழியைக் கண்டுபிடியுங்க. இன்னொன்று அந்தக் கோபத்திலுங்கூட நீங்க என்னவா இருக்கிறீங்க என்பதை யோசிச்சிட்டேயிருங்க. இந்தச் சம்பவம் நடந்த அதற்கப்புறம் அவர் தன்னுடைய வாழ்க்கை மாறுகிறத சொல்லிகிட்டே வருகிறார். அந்த வாழ்க்கை மாற்றங்களுக்குப் பின்னாடி ஒரு உண்மை இருக்கு. என்னன்னா எல்லா பெரிய விபத்துகளுமேகூட காலமாற்றத்தால் ஒன்றுமில்லாமலே ஆகிவிடும். அது ஒரு சாதாரண சம்பவம்தான். வெறும் நிகழ்ச்சிதான். நினைவூட்டக்கூடிய ஒரு விடயந்தான்.

 

அங்காடியில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு இதுபோன்ற ஒரு புத்தாண்டு தினத்தில் ஒரு பரிசு கொடுக்கிறார். யார் யாருக்கெல்லாம் புத்தாண்டு பரிசு கொடுக்கலாம் என்னும்போது ஒரு  பல்பொருள் அங்காடியில் இருக்கக்கூடிய அதை நிர்வகிக்கிற பெண்ணுக்கு பரிசு கொடுக்கும்போது அந்தப் பெண் எனக்காகவா பரிசு கொடுக்கிறீங்க என்று கேட்கிறா. ஆமாங்க உங்கள பார்க்கிறேன். இந்தப் பல்பொருள் அங்காடியில் உட்கார்ந்து கொண்டு இங்க வரக்கூடிய எல்லோரோடும் பேசிச் சிரிச்சு வரவேற்கிறீங்க. இது உங்களுடைய பணிதான். ஆனா அத நீங்க முழுமையாக செய்கிறீங்க இல்லையா. அதுக்காக உங்கள நான் பாராட்ட விரும்புகிறேன் அப்படின்னு அந்தப் பெண்மணிக்கு ஒரு பரிசு கொடுக்கும்போது அத அவங்க வாங்கிட்டுச் சொல்றாங்க 'உங்கள் வாழ்த்தொலி உங்கள் உதட்டிலிருந்து கடவுளுடைய காதுக்குப் போகட்டும்' என்று. அதாவது ஒரு வாழ்த்து எப்படி இருக்கணும் என்றால் ஒருத்தருடைய உதட்டிலிருந்து இன்னொரு காதுக்குப் போகணும். அது கடவுளுடைய காதுக்கே போகட்டும். ஏனென்றால் ஒருவர் மனதறிந்து வாழ்த்துகிறார். அந்தப் பரிசுகள் என்பது வெறுமனாக ஒருத்தருக்குக் கொடுக்கப்படக்கூடியதொன்றல்ல. மாறாக அவருடைய தேவை இவ்வளவு காலமாக ஒரு பொது இடத்தில் ஒருவர் வந்து உபசாரகராக உட்கார்ந்து செஞ்சிட்டே இருக்கக்கூடிய சேவையை அவர் கணக்கில எடுத்துக்கணும் என்று நினைக்கிறார். அப்புறம் அந்தப் பெண். அந்தக் கட்டுரையிலேயே ஒரு அழகான வரி வருகிறது அந்தப் பெண் போர்த்துக்கீசியப் பெண். நீங்க எப்பவும் கோபப்படும்போது ஏன் போர்த்துக்கீசிய மொழியிலேயே கோபப்படுகிறீர்கள் என்கிறார். அதற்கு அந்தப் பெண் சொல்கிறார் 'போர்த்துக்கீசிய மொழியில நிறைய வசைச் சொற்கள் இருக்கிறது. ஆங்கிலத்தில் அவ்வளவு வசைச் சொற்கள் இல்லை. அதனால கோபத்துல பேசுறதுக்கு போர்த்துக்கீசிய மொழிதான் ஏற்றது' என்கிறார். அப்ப உடனே இவர் சுட்டிக்காட்டுகிறார் எங்க நாட்டையும் போர்த்துக்கீசியர்கள்தான் ஆண்டார்கள். அவர்களுடைய வசை மொழிக்கு அதிக சந்தர்ப்பங்களை நாங்கள் கொடுத்திருப்போம். ஒருவேளை உங்கள் வசைச் சொற்கள் எல்லாம் அதிகமானதுகூட எங்களை ஆண்டதாலதான் இருந்திருக்கும். அப்படி சொன்னவுடன் அவ கேட்கிறா உங்களுடைய நாடு என்ன என்று. இவர் இலங்கை என்று சொல்கிறார். உங்க ஊரில போர்த்துக்கீசியர்கள் வாழ்ந்தார்களா? வந்து எங்களை ஆக்கிரமித்து அடிமையாக்கி எங்கள் நாட்டை ஆண்டார்கள். ஏதோ ஒரு உறவு இருக்கு எங்களுக்கு அப்படின்னு அவர் சொல்லி முடிக்கும்போது அந்த அம்மா வந்து தான் போர்த்துக்கீசிய மொழியில பேசுகிறபோதுதான் தன்னுடைய இயல்பு இருக்கிறது. தனக்கு ஏதோ ஒரு மனிதன் வந்து தன்னுடைய அந்தரங்கமான இடத்திலிருந்து தன்னுடைய தாய்மொழியில்தான் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறான் என்பதை அந்த அம்மா சொல்கிறார்.

 

அந்தக் கட்டுரையினுடைய இறுதியில் வருகிறது ஏதோ ஒரு பிரச்சனை நடக்கிறது. அவர்கள் இடமாற்றம் பண்ணப்படுகிறார்கள். இவர் போய்ப் பார்க்கிறார். திரும்ப அவர்கள் இரண்டு பேரும் தங்கள் நெருக்கடியைப் பகிர்ந்து கொள்ளும்போதும் அவர்களுடைய போர்த்துக்கீசிய மொழியிலதான் பேசியிருக்கிறார்கள். வசைகளுக்காக மட்டுமல்ல துயரத்தைத் தீர்ப்பதற்காகவும் நீங்கள் உங்கள் தாய்மொழியில்தான் பேசிக் கொள்ள முடியும். வேற மொழி உங்களுக்கு உதவவே உதவாது. அப்ப என்ன நடந்தது தெரியல. ஆனால் அவர்களுக்குள்ள பேசிக் கொண்டிருக்கும் போர்த்துக்கீசிய மொழியின் வழியாக யாரோ ஒருவர் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார். யாரோ ஒருவருக்கு துயரம் நடந்திருக்கிறது என்பதை அழகாக வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறார்.

 

இவருடைய எல்லாக் கட்டுரைகளுக்குள்ளுமே ஒரு பகுதி ஒரு சிறுகதை இருக்கிறது. இந்த சிறுகதைக்கு முன்னும் பின்னும் நிஜமான வாழ்க்கை எழுதுகிறதனால அது ஒரு கட்டுரையாகிக்கிட்டேயிருக்கு. அதுலதான் முத்துலிங்கம் ஜெயிக்கிறார். அவர் வாழ்க்கைக்கு ரொம்ப நெருக்கமாகத் தன்னுடைய கட்டுரைகளைக் கொண்டு வந்துவிடுகிறார். கொண்டு வந்துவிட்டு கதைக்கும் கட்டுரைக்கும் வேறுபாடு இல்ல அதனாலதான் அவருடைய சிறுகதைகளெல்லாம் ஒன்றுதொடுத்து ஒரு நாவலாகிறது. அப்படி சிறுகதைகளையெல்லாம் ஒன்றுசேர்த்து ஒரு நாவல் வடிவத்துக்கு கொண்டு வந்திருக்கக்கூடிய முயற்சிய முத்துலிங்கம்தான் செய்திருக்கிறார். அந்த நாவலில் வரக்கூடிய சம்பவங்களெல்லாம் வெவ்வேறு சிறுகதைகள்தான். இப்ப இந்தக் கட்டுரைக்குள்ளுமே நிறைய சிறுகதைகள் ஒளிந்திருக்கிறத நான் பார்க்கிறேன்.

 

 

 

அப்புறம் அவருக்கு இருக்கக்கூடிய விருப்பம் பார்த்தீர்களென்றால் விளையாட்டில தொடங்கி சினிமா அதிலயும் ரொம்ப வணிக கேளிக்கை சினிமா வரைக்கும் எல்லாவற்றையும் ரசிக்கக் கூடியவராக இருக்கிறார். அவருக்கு ரொம்ப ரொம்ப பிடித்தமான கதாநாயகியாக பத்மினி இருக்கிறார். பத்மினியைப்; பற்றி எழுதுகிற முத்துலிங்கம் எப்பவுமே வேற ஒருவர்தான். அந்தப் பத்மினியைப் பற்றி எழுதத் தொடங்கினவுடனே முத்துலிங்கத்தினுடைய வயது காணாமல் போய் அவர் வந்து ஒரு  டூரிங் தியேட்டரில படம் பார்க்கிற இளவயதில இருந்த அந்த பத்மினி மேல் காதலுற்ற ஒரு ஆளாக மாறிவிடுகிறார். இப்ப சமீபமாக ஒரு மலர் வெளியிட்டாங்க. அந்த மலரில எல்லா முக்கியமான எழுத்தாளர்களும் தனக்கு விருப்பமான ஒரு நடிகையைப் பற்றிஇ அவர்களுடைய நினைவுகளைப் பற்றிஇ  எழுதியிருந்தாங்க. அதில நான்கூட சாவித்திரி பற்றி எழுதியிருக்கேன். முத்துலிங்கம் பத்மினி பற்றிதான் திரும்பவும் எழுதியிருக்கிறாரு. அவருக்கு பத்மினியின் மேல இருப்பது ஒரு அளப்பரிய காதல். அவர் ஒரு கேள்வி கேட்கிறாரு பத்மினியிடம் வந்து நீங்கள் சிவாஜி கணேசனை காதலித்தீர்கள்தானே ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று. இதுவரைக்கும் உலகமே கேட்கத் தயங்கிய ஒரு கேள்விய நேரடியா அவர் வீட்டிலேயே கேட்கிறார். பத்மினி  அவர் தேவர் இல்லையா அப்படி என்கிறாங்க. அதையும் குறிப்பிடுகிறார். சொல்லிட்டு எனக்கு அந்த வரியை படிக்கும்போது முத்துலிங்கத்துக்குள்ள இருந்த ஒரே தயக்கம் அவரதான் காதலிக்கல இல்ல அப்ப என்னை ஏன் காதலிக்க மறுக்கிறீங்க என்பது. அவர் உண்மையில் பத்மினியால் காதலிக்கப்பட வேண்டுமென்று நினைத்துக் கொண்டேயிருக்கிறவரு. பத்மினி என்கிற நடிகையினுடைய பேரழகின் முன்னாடி அவரைப் பற்றி எழுத எழுத அவருடைய ஒவ்வொரு சொல்லிலும் அவருடைய நடனத்தினுடைய வசீகரம் இருந்துகிட்டே இருக்கிறது. அதனாலதான் பத்மினியைப் பற்றி எழுதுகிற முத்துலிங்கம் முழுக்க முழுக்க வேறொருத்தர். ஏதோ ஒரு சின்ன குறிப்பிலகூட அவர் பத்மினியை வந்து ஒரு நடிகை என்று சாதாரணமாக எழுதிவிடவே மாட்டார். அப்ப ஏதோ அவருடைய ஆதர்ச சங்கிலியில ஒருத்தரப்போல பத்மினிக்கு ஒரு இடம் கொடுத்திருக்கிறாரு.

 

இன்னொரு பக்கம் பார்த்தால் அவருக்கு விருப்பமான எழுத்தாளர்களெல்லாம் கிளாசிக்கலினுடைய மாஸ்ரர்ஸ். தோல்ஸ்ரோய், தாஸ்தாவெஸ்கி, செக்கோவ், ஹெமிங்வே, ஃபாக்னர் அப்படி உலகத்தில யாரெல்லாம் செவ்விலக்கியங்களோட பிரதான எழுத்தாளர்களோ அவர்கள் அத்தனை பேரைப் பற்றியும் எழுதியிருக்கிறார். செக்கோவைப் பற்றி இப்பகூட ஒரு கட்டுரை எழுதியிருக்கிறாரு. தோல்ஸ்ரோயினுடைய ஒரு முக்கியமான சிறுகதையை எடுத்துக் கொண்டு அந்தச் சிறுகதையை ஒப்பிட்டு எழுதியிருக்கிறாரு. நிறைய வாசிக்கவும் வாழ்க்கையைக் கொண்டு போகவும் இருக்கக்கூடிய ஒரு முக்கியமான சமகாலப் படைப்பாளி அவர். ஆனால் அவருடைய கட்டுரைகள் என்பது வெறும் படித்துக் கடந்துபோய்விட வேண்டிய கட்டுரைகள் என்று நான் சொல்ல மாட்டேன். மாறாக அவருடைய ஆதங்கங்கள் எல்லாமே வெளியில இருந்தால்கூட தமிழகத்தின்மீது தமிழ் வாழ்க்கையின் மேல இருந்துகிட்டே இருக்கு. இங்கு நாம் தவறவிட்ட நிறைய விஷயங்களைக்கூட அங்கேயிருந்து அவர் சுட்டிக்காட்டிக் கொண்டேயிருக்கிறார்.

 

எங்கள் கிராமங்களிலெல்லாம் ஒன்று உண்டு. என்னென்னா யாராவது ஒருவருடைய அண்ணனோ மாமாவோ ராணுவத்துக்குப் போயிருவாங்க. பல ஆண்டுகள் இராணுவத்திலிருந்துவிட்டு திரும்பி வந்த பிறகு அவர் எப்ப பேசினாலும் திடீரென அவர் இந்தியில பேசுவாரு. திடீரென்று ராஜஸ்தானைப் பற்றிப் பேசுவாரு. திடீரென்று இராணுவத்தைப் பற்றிச் சொல்வாரு. துப்பாக்கியப் பற்றி சொல்வாரு. அந்த இராணுவ வீரருக்கு அந்த ஊரில அவருடைய எல்லா செயல்களிலும் ஒரு முக்கியத்துவம் இருந்துகிட்டேயிருக்கும். அதேநேரத்தில் அவர் ஒரு விளையாட்டுக்காரராகவும் இருப்பாரு, குடிப்பவராகவும் இருப்பாரு. அவர் ஒரு முன்மாதிரியாக இருப்பாரு. அந்த ரோலைத்தான் தமிழிலக்கியத்திலே எப்பவுமே செஞ்சிட்டு இருக்காரு முத்துலிங்கம்.

 

முத்துலிங்கத்தினுடைய ஒரே ஒரு கட்டுரையைச் சொல்லி இந்த உரையை முடித்துக் கொள்ள விரும்புகிறேன். இதில வந்து முக்கியமான கட்டுரை என்று நான் நினைக்கிறது என்னென்னா nursery rhymes என்று சொல்லக்கூடிய இந்தக் குழந்தைகளுக்கான பாடல்களை யாரோ ஒருவர் கேட்கிறார் என்று சொல்லிவிட்டு அதனோட தமிழில பாடல்கள் இல்லையே என்று அவர் பாவண்ணனுக்கு ஒரு கடிதம் எழுதுறாரு. பாவண்ணன் தமிழில சில பாடல்களை எழுதி அவருக்கு திரும்பி அனுப்பி தர அதை ஒரு பெண் தன்னுடைய குழந்தைகளுக்குக் கற்றுத் தருவதைத்தான் அந்தக் கட்டுரையில் எழுதுகிறார். எழுதிக் கொண்டு வரும்போதே சொல்கிறார் அந்தப் பெண்ணுக்கு இந்த ஒவ்வொரு பாடலுக்கும் அழகாக இசையமைத்துப் பாடத் தெரியும். என்னென்னா ஒரு முறை பாடியது போல மறுமுறை இருக்காது என்பதால குழந்தையால அதப் பின்பற்ற முடியவில்லை. சொல்லிக் கொண்டே வந்து இதற்கு மாற்றாக ஆங்கிலத்தில் இருக்கும் அந்த nursery rhymes அத்தனையும் எடுத்திருக்கிறாரு. அதைத் தமிழ்ப்படுத்திப் பார்க்கிறாரு. நாம எந்த nursery rhymes குழந்தைப் பருவத்தில படிக்கிறோமோ அந்த பாடல் nursery rhymes களுக்கும் ஆங்கிலத்தில் இருந்து தமிழ்படுத்தினால் அதற்குள் இருப்பது அத்தனையுமே அடி, குத்து, வெட்டு, வன்முறை, கொலை. இன்னும் சொல்லப் போனால் எதையெல்லாம் குழந்தைகள் தெரியக்கூடாதோ அத்தனையும் அந்தக் குழந்தைகள் பாடலுக்குள்ள இருக்கு. நிறத்துவேஷம், இனத்துவேஷம், மதத்துவேஷம் அத்தனையும் இருக்கு. அதை அவர் சுட்டிக்காட்டிச் சொல்கிறார். அதில் மூன்று குருட்டு எலிகளைப் பற்றிய பாட்டு இருக்கு. கிட்டத்தட்ட அதுபோலதான் அந்த சமூகமே இருந்திருக்கு. அதை நாம் ஏன் கற்றுக் கொள்ள வேண்டும் என்று. இன்றைக்குக்கூட நம்முடைய பிள்ளைகள் வந்து தமிழ்ப் பாடல்கள் தெரியாதவர்களாகத்தான் வளர்கிறார்கள். அவர்களுக்கு ஆரம்பப் பாடத்தில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கான பாடல்களிலேயே அதிக பாடல்கள் அழ.வள்ளியப்பாவினுடைய பாடல்கள் இருக்கு. ஆனா அதைப் பாடி யாரும் சொல்லித் தருவதில்லை. ஆனால் அவரைத் தவிர இந்த ஐம்பது வருடங்களில் வேறு புதிய குழந்தைகளுக்காக எழுதுகிறவர்கள் வந்திருக்கிறார்களா என்றால் இல்லை. ஆனால் இவர் எழுதுகிறார் என்னவென்றால் அப்படி ஒரு குறுந்தகடு எங்கோ வெளியிட்டு கனடாவில் என் நண்பர் வீட்டில் கேட்டேன். அந்த பாடல்களை ஒவ்வொரு தமிழரும் கேட்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்று. கிட்டத்தட்ட அவர் எழுதி ஒரு பதினைந்து ஆண்டுகளாக நானே தேடிக் கொண்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் இருந்தும் அது கிடைக்கவே இல்லை. அப்ப எங்கே இருந்தோ ஒருவருக்கு தமிழகத்தின் அந்த உண்மையான குரல் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. அந்தக் குரலைக் கேட்டுக் கொண்டு தன்னுடைய சொந்த வாழ்க்கையினுடைய துயரத்தை, தனிமையை எல்லாவற்றையும் தாண்டி முத்துலிங்கம் தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருக்கிறார். அந்தவகையில் தமிழ் இலக்கியத்தினுடைய மிக முக்கியமான ஒரு முன்னோடி ஆளுமை. அவரை என் மனம் நிறைந்த வாழ்த்துக்களைச் சொல்லி இந்த உரையை முடித்துக் கொள்கிறேன்.