கொன்றை வேந்தன்


கவிஞர் இரா. இரவி


வையார் பாடிய ‘கொன்றை வேந்தன்’ குழந்தைகளுக்கு என்று பெரியவர்கள் படிப்பதில்லை. கொன்றை வேந்தன் பொருள் புரிந்து, கூர்ந்து படித்தால் வாழ்க்கைக்கு வழி காட்டும். ஒளி கூட்டும்.

கொன்றை வேந்தனில்
91 கருத்துக்கள் இருந்தாலும், அனைத்தும் அருமை என்றாலும், ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கை விதைக்கும் கருத்துக்கள் எவை என்று ஆராய்ந்த போது கிடைத்தவை உங்கள் பார்வைக்கு. இரத்தினச் சுருக்கமாக ஒரே ஒரு வரியில் உன்னதமாக உயர்ந்த கருத்துக்களைப் பாடி உள்ளார் ஔவையார்.

கீழோ ராயினுந் தாழ உரை

உனக்குக் கீழ்ப்பட்டவரிடத்தும் பணிவாகப் பேசு.

அலுவலகங்களில் தனக்கு மேல் உள்ள அதிகாரிகளிடம் அளவிற்கு அதிகமாக பணிந்து பேசுவது தனக்கு கீழ் உள்ள பணியாளர்களிடம் அதிகாரம் செய்வது, ஆணவமாக பேசுவது நாட்டில் நடந்து வரும் நடப்பு. ஆனால் ஔவையார் சொல்கிறார். உன்னை விட படிப்பில், பணத்தில், பதவியில் கீழ் உள்ளவர்களிடம் அன்பாக நடந்து கொண்டால் அவர்கள் நம்மை மதிப்பார்கள். ஆணவமாக நடந்து கொண்டால் மதிக்க மாட்டார்கள். இந்த உளவியல் ரீதியான உண்மையை ஒற்றை வரியில் உணர்த்தி உள்ளார்.

தொழில் நட்டம் ஏற்பட்டால் சிலர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். தேர்வில் தோல்வி அடைந்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். அவர்களுக்காக தன்னம்பிக்கை தரும் விதமாக வைர வரியாக உள்ள வாசகம் பாருங்கள்.

கேட்டில் உறுதி கூட்டும் உடைமை

பொருளை இழந்த போதும் மனம் தளராமல் இருந்தால் செல்வம் மீண்டும் வரும்.

தேர்வில் தோல்வி அடைந்தால் மீண்டும் தேர்வு எழுதினால் வெற்றி பெறலாம். ‘முயற்சி திருவினையாக்கும்’ என்ற வள்ளுவரின் வாக்கை வழிமொழிவது போல ஔவையார் எழுதி உள்ளார்.
கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. எப்பாடுபட்டாவது கல்வி கற்று விட்டால் பின்னர் வாழ்க்கை வளமாகும். அழியாத சொத்து கல்வி, கல்வியின் மேன்மையை மிகச் சிறப்பாக உணர்த்தி உள்ளார்.

கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி

கையில் உள்ள செல்வப் பொருளைக் காட்டிலும் கல்விப் பொருளே சிறந்தது.

செல்வத்தை விட கல்வியே சிறந்தது என்பதை கல்வெட்டு வரிகளாக வடித்து உள்ளார். மனமது செம்மையானால் மந்திரங்கள் ஜெபிக்க வேண்டாம் என்பார்கள். அது போல மனதை தூய்மையாக வைத்துக் கொண்டால் வாழ்க்கை இனிக்கும். காந்தியடிகளின் குரங்குகள் சொல்வதைப் போல கெட்டதை பார்க்காமல், பேசாமல், கேட்காமல் வாழ்வது நன்று. இவ்விதமாக ஔவையார் அன்றே சொன்ன அற்புத வாசகம்.

சூதும் வாதும் வேதனை செய்யும்!

வஞ்சகமும், வழக்கும் துன்பத்தை உண்டாக்கும்.
மனத்தாலும் பிறருக்கு தீங்கு நினைக்காமல் வாழ்வாங்கு வாழ வழி சொல்லி உள்ளார். ஒரு குரு ஆற்றை கடக்க தத்தளித்த இளம்பெண்ணிற்கு உதவி செய்து விட்டு நடந்து வந்தார். சீடன் கேட்டார், குருவான நீங்கள் இளம்பெண்ணை தொட்டு உதவியது சரியா? என்று கேட்டார். என் மனதில் எந்தவித அழுக்கும் இல்லை, அந்த இளம்பெண்ணை கரையில் விட்டு விட்டு நான் வந்து விட்டேன் . உன் மனதில் அழுக்கு இருப்பதால் நீ தான் இன்னும் எண்ணத்தில் இளம்பெண்ணை சுமந்து கொண்டு இருக்கிறாய் என்றார். சீடன் தலை குனிந்தார். மனதை மாசற்று வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த வாழ்க்கையை சுறுசுறுப்பானவர்கள் பொற்காலம் என்கின்றனர். சோம்பேறிகள் போர்க்களம் என்கின்றனர். விடிந்த பின்னும் எழாமல் வாழ்க்கை விடியவில்லை என்று சொல்லி விட்டு தூங்கிடும் சோம்பேறிகள் உள்ளனர். எந்த ஒரு செய்லையும் தள்ளிப் போடாமல் சுறுசுறுப்பாக உடன் முடிக்கும் எண்ணம் வேண்டும். முன்னேற்றத்திற்கு முதல் தடை சோம்பேறித்தனம் தான். அதனை மிக அழகாக ஔவையார் உணர்த்தி உள்ளார் பாருங்கள்.

சோம்பர் என்பவர் சோம்பித் திரிவர்

சோம்பல் உடையவர் வறுமையில் வாடி அலைவர்.

ஆம் வறுமையை ஒழிப்பதற்கு ஒரே வழி சுறுசுறுப்பு. மிகச்சிறிய எறும்பு தன்னைவிட அதிக எடையுள்ள பொருளையும் சுறுசுறுப்பாக இழுத்துச் செல்லும் காட்சி பாருங்கள். மழைக்காலத்திற்காக இப்போதே சேமித்து வைக்கும் எறும்பு. ஒழுங்காக வரிசையாகச் செல்லும் எறும்புகளிடம் கூட நாம் சுறுசுறுப்பைக் கற்றுக் கொள்ளலாம். சிறிய எறும்பு கற்பிக்கும் சுறுசுறுப்பு.

இன்றைய இளைய தலைமுறையினர் பெற்றோர் பேச்சைக் கேட்பது இல்லை. கேட்டு நடந்தால் வாழ்க்கை வசப்படும். எந்த ஒரு பெற்றோர்களும் தன் குழந்தைகளுக்குக் கெட்டதை சொல்ல மாட்டார்கள், கெட்டுப் போகவும் சொல்ல மாட்டார்கள். நல்லது மட்டுமே சொல்வார்கள் என்பதை குழந்தைகள் உணர வேண்டும். செவி மடுக்க வேண்டும். விளையாட்டுத்தனமாக வாழ்வதை விட்டு விட வேண்டும்.

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை

தந்தை சொல்லை விட மேலான அறிவுரை இல்லை.


தந்தை மகனை விட வயதிலும், அறிவிலும் மூத்தவர். அவர் அனுபவத்தின் அடிப்படையில் கூறும் நல்ல ஆலோசனைகளை ஏற்று நடந்தால் வாழ்க்கையில் சாதிக்க முடியும். வெற்றி பெற்ற மனிதர்கள் பலரும் தந்தையின் பேச்சை மதித்து நடந்தவர்கள் தான் என்பது வரலாறு.

இந்த உலகில் ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அம்மா என்ற உறவுக்கு ஈடு இணை இல்லை. தாய், என்றும் தன் மகனை வெறுப்பதே இல்லை. அளவற்ற அன்பு செலுத்தும் உயர்ந்த உள்ளம். தான் பசியில் வாடினாலும் தன் பிள்ளையின் பசி போக்கி மகிழும் தியாகத்தின் திருஉருவம் அன்னை. மகனால் புறக்கணிக்கப்பட்டு முதியோர் இல்லத்தில் வாடும் அன்னை கூட மகனை திட்டுவதில்லை. என் மகன் நன்றாக வாழ்ந்தால் போதும் என்றே வாழ்த்துகின்றார். நன்றி மறந்த மகனையும் மன்னிக்கும் உயர்ந்த குணம் அன்னைக்கு உண்டு. சிலர் அன்னையை மதிக்காமல், கவனிக்காமல் ஆலயத்திற்கு பணம் செலவு செய்வார்கள். காணிக்கை இடுவார்கள். பணம் செலுத்தி தங்கத்தேர் கூட இழுப்பார்கள். அவர்களுக்கு ஔவை சொன்ன சொல் அர்த்தம் உள்ளது.

தாயிற் சிறந்தொரு கோயிலுமில்ல

தாயைக் காட்டிலும் வேறு கோயில் இல்லை. தாயை மதித்து நடந்தால், மரியாதை தந்தால், தாய் மனம் மகிழும். பெற்ற மனம் மகிழந்தால் குழந்தைகளின் வாழ்க்கை செழிக்கும். ஔவையார் வாழ்வியல் கருத்துக்களை நன்கு விதைத்து உள்ளார்.

நம்மையே கொல்வது சினம். கோபம் கொடியது, கோபத்தால் தான் பலரது வாழ்க்கை அழிந்தது. கோபத்தால் தான் பல போர்கள் மூண்டது. பல்லாயிரம் உயிர்கள் மாண்டது. அதனால் கோபத்தை அடக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். பொறுமை கடலினும் பெரியது என்றார்கள் பெரியோர்கள்.

தீராக் கோபம் போராய் முடியும்

தணியாத கோபம் சண்டையில் கொண்டு நிறுத்தும். நானே பெரியவன் என்ற அகந்தையின் காரணமாகவே கோபம் வருகின்றது. விட்டுக் கொடுத்து வாழக் கற்றுக் கொண்டால் வாழ்க்கை இனிக்கும், சுவைக்கும். இயேசு சொன்னார், ‘ஒரு கன்னத்தில் அடித்தால், மறு கன்னம் காட்டு’ என்று. ஆனால் இன்று மறு கன்னம் காட்ட யாரும் தயாராக இல்லை, ஆனால் திருப்பி அடிக்காமல் பொறுமை காத்தால் போதும், நாட்டில் அமைதி நிலவும்.

எந்த ஒரு செயலாக இருந்தாலும் ஆராய்ந்து முன்கூட்டி திட்டமிட்டு செயல்படுத்தினால் செய்ல செம்மையாக முடியும்.ஓர் ஊருக்கு செல்வதாக இருந்தால் அந்த ஊருக்கு செல்ல எத்தனை மணிக்கு தொடர்வண்டி, முடிந்தால் முன்கூட்டியே முன்பதிவு செய்து விட்டு பயணப்பட்டால் பயணம் இனிதே அமையும். திட்டமிடுதல் அவசியம்.

நுண்ணிய கருமம் எண்ணித் துணி

சிறிய செயலையும் ஆராய்ந்து செய்க என்கிறார் ஔவை.

ஆராய்ந்து செய்தால் அல்லல் இருக்காது.

திருக்குறள், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை இவை போன்ற அறவழி உணர்த்தும் நல்ல நூல்களை பொருள் புரிந்து படித்து படித்ததோடு நின்று விடாமல் வாழ்வில் கடைப்பிடித்து நடந்தால் வசந்தம் வசமாகும்.

நூன்முறை தெரிந்து சீலத்தொழுகு

அற நூலில் சொல்லப்பட்ட முறைகளைத் தெரிந்து நல்வழியில் நட.

அற நூல்கள் படிப்பதோடு நின்று விடாமல் படித்தபடி வாழ்வாங்கு வாழ்வது அழகு.

சிலருக்கு பணக்காரர் என்ற செருக்கு இருப்பதுண்டு. ஏழைகளை ஏளனமாகப் பார்ப்பதும், பேசுவதும் உண்டு. மனிதாபிமானமற்ற செயலை கண்டிக்கும் விதமாக ஔவை சொல்லி உள்ள சொல் சிந்தனைக்கு உரியது.

நைபவ ரெனினும் நொய்ய உரையேல்

நலிந்தவரிடத்தும் சிறுமையான சொற்களைக் கூறாதே.

வள்ளுவப் பெருந்தகை ஒன்றே முக்கால் அடிகளில் சொன்ன கருத்துக்களை பெண்பாற் புலவரான ஔவையார் ஒரே அடியில் பொட்டில் அடித்தாற்போன்று நயம்பட பாடி உள்ளார். ஆணிற்குப் பெண் சளைத்தவள் அல்ல என்பதை மெய்ப்பிக்கும் விதமாக பாரதி பாடிய புதுமைப்பெண்ணாக அன்றே ஔவை அறிவார்ந்து சிந்தித்து அற நூல் எழுதி உள்ளார்.

அவ்வையும் திருவள்ளுவரும் சமகாலம் என்பதால் திருக்குறளைன் தாக்கம் கொன்றை வேந்தனிலும், கொன்றை வேந்தன் தாக்கம் திருக்குறளிலும் இருப்பதை உணர முடிகின்றது.

இன்று மருத்துவர்கள் சைவ உணவே உடல்நலத்திற்கு நல்லது என்று பரிந்துரை செய்கின்றனர். நாற்பது வயது ஆகிவிட்டால் அசைவ உணவை தவிர்த்திடுங்கள் என்று அறிவுரை கூறுகின்றனர். ஆனால் ஔவை அன்றே பாடி உள்ளார் பாருங்கள்.

நோன்பென்பதுவே கொன்று தின்னாம

எந்த உயிரையும் கொல்லாமையும் அதன் ஊனைத் தின்னாமையுமே விரதமாகும்.

இதனை ஒட்டிய கருத்தை திருவள்ளுவரும் திருக்குறளில் கூறி உள்ளார்.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.


கொலை செய்யாமலும், புலால் உண்ணாமலும் வாழும் உயர்ந்த மனிதனை எல்லா உயிர்களும் கைகூப்பு வணங்கும். மனிதர்கள் வணங்குவார்கள் என்று சொல்லாமல் எல்லா உயிரும் கைகூப்பி வணங்கும் என்கிறார் வள்ளுவர்.

பண்பாக நடந்து கொண்டால் பார் போற்றும். நல்லவன் என்று பெயர் எடுக்க காலம் எடுக்கும். ஆனால் கெட்டவன் என்ற பெயர் எடுக்க சில நொடி போதும். காந்தியடிகள் இறந்து பல ஆண்டுகள் கடந்த போதும் இன்றும் மக்களால் மதிக்கப்படுகிறார் என்றால் காரணம் அவரது உயர்ந்த பண்பு. பண்பாளர் என்று எடுத்த நல்ல பெயர். காந்தியடிகள் உயிர் வாழாவிட்டாலும் பலரின் உள்ளங்களில் வாழ்கிறார் காரணம் பண்பு.

சிறையில் தன்னை எட்டி மிதித்த சிறை அதிகாரிக்கு காலணி செய்து கொடுத்து வெட்கப்பட வைத்த பண்பாளர் காந்தியடிகள். விடுதலை பெறுவதே நமது இலக்கு. வெள்ளையர் தடி கொண்டு தாக்கிய போதும், திருப்பித் தாக்காதீர்கள் என்று மக்களுக்கு அறிவுறுத்தி அகிம்சை வழியை அறிமுகம் செய்தார்.

பையச் சென்றால் வையற் தாங்கும்

பண்பாக நடந்து கொண்டால் உலகத்தார் பாராட்டுவர்.

உண்மை தான், காந்தியடிகளை உலகமே பாராட்டி மகிழ்கின்றது. காந்தியடிகள் அஞ்சல்தலை வெளியிடாத நாடே இல்லை என்று சொல்லுமளவிற்கு பல நாடுகள் வெளியிட்டுள்ளன.

எல்லோருக்கும் மனசாட்சி என்ற ஒன்று உண்டு. அந்த மனசாட்சி, தீங்கு என்றால், இது தீங்கு, வேண்டாம் என்று அறிவுறுத்தும், அதன்படி கேட்டு நடந்தால் வாழ்வில் துன்பம் வரவே வராது. சிலர் மனசாட்சிக்கு மாறாக தீய செயல் புரிவதால் தான் தண்டனை பெற்று, துன்பத்தில் பின் ஏன் செய்தோம்? என்று வருந்துவார்கள்.

பொல்லாங்கு என்பவை யெல்லாந் தவிர

தீயன என்று கூறும் அனைத்தையும் நீக்கி விடு.

தீய வழியில் செல்லாதே! நல்லதை நினை, பேசு, நட என்பதை ஔவையார் மிக அழகாக உணர்த்தி உள்ளார்.

‘உழைக்காமல் உண்பவன் திருடன்’ என்றார் காந்தியடிகள். உடல் உழைப்போ, மூளை உழைப்போ தமக்கு முடிந்த உழைப்பை செய்து விட்டுத்தான் உண்ண வேண்டும். இந்தக் கருத்தை ஔவை அன்றே பாடியுள்ளார் பாருங்கள்.

போகை மென்பது தானுழந் துண்டல்

உழைத்து உண்ணும் உணவே சிறந்த உணவாகும்.

உழைத்தால் தான் பசி எடுக்கும், பசி அந்த பின் உண்டால் தான் செரிக்கும், உழைத்து பின் உண்பதே சாலச்சிறந்தது. அதனால் தான் உழைக்காமல் உட்கார்ந்து உண்டால் சொத்து அழிந்து விடும் என்று எச்சரிக்கை செய்தார்கள்.

ராக்பெல்லர் என்ற பெரிய பணக்காரர் விமானத்தில் வானில் பயணம் செய்து கொண்டிருந்த போது அவர் அருகில் இருந்த இளைஞர் கேட்டான். நீங்கள் பெரிய பணக்காரர், இந்த வயதிலும் உழைக்க வேண்டுமா? என்று கேட்டான். அதற்கு ராக்பெல்லர் கேட்டார். விமானம் வானத்தில் பறக்கிறது, விமானத்தின் எஞ்சினை நிறுத்தி விடலாமா? என்று கேட்டார். உடனே அந்த இளைஞன் சொன்னான். விமானம் விபத்துக்குள்ளாகிவிடும் என்றான். அதுபோலதான் மனிதனும் மூச்சு உள்ளவரை உழைக்க வேண்டும் என்றார் ராக்பெல்லர்.

வீட்டில் பெரியவர்கள் பேசினால் மதிப்பதே இல்லை. பெரிசு ஏதாவது உளரும் என்பார்கள். ஆனால் பெரியவர்கள் அனுபவ அறிவின் காரணமாக பல பயனுள்ள அறிவுரை தருவார்கள். நாம் அதனைக் கேட்டு நடந்தால் நல்லது. இதனை ஔவையார் வலியுறுத்தி உள்ளார்.

மூத்தோர் சொன்ன வார்த்தை யமிர்தம்

பெரியோர் சொன்ன அறிவுரை அமுதம் போல் இன்பமாகும்.

துன்பம் நேராமல் இருக்க பெரியோரின் வழிகாட்டுதல் படி நடக்க வேண்டும். பெரியவர்கள், இளையவர்களை நெறிப்படுத்துவார்கள், ஆற்றுப்படுத்துவார்கள், அறவழியில் நடந்திட அறிவுறுத்துவார்கள்.

தோல்விக்க்கு துவளாத நெஞ்சம் வேண்டும். என்னால் முடியும் என்றே முயன்றால் நினைத்தது முடியும். சராசரி அல்ல, நான் சாதிக்கப் பிறந்தவன், நான் என்ற நெருப்பு நெஞ்சில் இருந்து கொண்டே இருந்தால் சாதனை நிகழ்த்திட முடியும். தன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்க முடியும். ஔவையின் வைர வரிகள் இதோ!

ஊக்கமுடைமை ஆக்கத்தற் கழகு

மனம் தளராமை எல்லா முன்னேற்றமும் தரும்.

மனம் என்பது மகாசக்தி! மனதை வலிமையாக வைத்துக் கொண்டால் மாமலையும் ஒரு கடுகு தான்.

இப்போது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்றால், உடன் மறைக்காமல் என்ன நினைத்தேன் என்பதை சொல்ல வேண்டும், அப்படி உடன் உண்மையாக வெளிய சொல்லக்கூடிய நல்லதை மட்டுமே மனம் நினைக்க வேண்டும். நமது உள்ளம் வெள்ளைத் தாளாக இருக்க வேண்டும். கெட்ட எண்ணங்கள் என்ற அழுக்கு தோன்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வெள்ளைக்கிலை கள்ளச் சிந்தை

தூய மனமுடையவரிடத்தில் வஞ்சகம் தோன்றாது.

சிந்தனை சிறப்பாக இருந்தால் செயலும் சிறப்பாக இருக்கும். நல்லதை மட்டுமே நினைத்தால் நல்லது மட்டுமே நடக்கும். இதைத்தான் திருவள்ளுவர் திருக்குறளில்,

மனத்துக்கண் மாசிலன் ஆதால் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற


ஒருவன் மனத்தில் குற்றமற்றவனாக இருக்க வேண்டும். அதுவே அறம் என்கிறார்.

கொன்றை வேந்தன் சிறுவர்களுக்கான பாட நூல் என்று பெரியவர்கள் பலர் படிப்பதே இல்லை. கொன்றை வேந்தன் ஆழ்ந்து, புரிந்து படித்தால் வாழ்வியல் கருத்துக்களின் சுரங்கமாக உள்ளதை அறிய முடியும். தமிழ் இலக்கியமான கொன்றை வேந்தனில் சொல்லாத கருத்துக்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்தும் சொல்லி உள்ளார் ஔவையார்.

திருக்குறளை அரங்கேற்றம் செய்திட திருவள்ளுவருக்கு உதவியவர் ஔவையார் என்ற கருத்தும் உண்டு. திருக்குறள் அளவிற்கு கொன்றை வேந்தனிலும் அரிய பல ஒப்பற்ற கருத்துக்கள் உள்ளன.

கொன்றை வேந்தன் படித்து, அதன்படி நடந்தால் வீட்டின் வேந்தனாக வாழலாம். நாடு போற்றும் நல்லவனாக வாழலாம்.