ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக எதிரொலிப்பதே பெண் எழுத்துகவிதை நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் வெண்ணிலா பேச்சு-

வந்தவாசி.பிப்.
01.

 

கநி வெளியீட்டகத்தின் சார்பில் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற கவிதை நூல் வெளியீட்டு விழாவில், சமூக ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகிவரும் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக எதிரொலிப்பதே இன்றைய பெண் எழுத்தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது என்று கவிஞர் அ.வெண்ணிலா பேசினார்.

இவ்விழாவிற்கு கவிஞர் மு.முருகேஷ் தலைமையேற்றார். மா.பார்வதி அனைவரையும் வரவேற்றார்.

சிவகாசி கவிஞர் த.மாலாபிரியதர்சினி எழுதிய ' காதல் காளானே ' கவிதை நூலை செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி பேராசிரியர் டாக்டர் அர.நர்மதாலட்சுமி வெளியிட, கவிஞர் அ.வெண்ணிலா பெற்றுக் கொண்டார். நூலின் சிறப்புப் பிரதிகளை நூலகர் பூ.சண்முகம்,லயா அறக்கட்டளை செயலாளர் மா.யுவராஜ், நல்வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர் வெ.அரிகிருஷ்ணன், கவிஞர் வீ.சிவசங்கர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

கவிதை நூலை வெளியிட்ட கவிஞர் அ.வெண்ணிலா பேசும்போது, தமிழில் ஏராளமான பெண்கள் இன்றைக்கு தங்களின் படைப்புகளின் மூலம் தீவிரமான பங்களிப்பை செலுத்தி வருகிறார்கள். இரண்டாயிரமாண்டு தமிழ் இலக்கிய வரலாற்றில் கடந்த பதினைந்து ஆண்டுகளாகத்தான் ஒடுக்கப்பட்ட பெண்கள் விளிம்புநிலை மக்களின் குரல்கள் பதிவாகி வருகின்றன். பல்வகைப்பட்ட தடைகளையும் தாண்டி, இதையொரு இயக்கமாகவே பெண்கள் முன்னெடுத்துச் செல்கிறார்கள்.


பெண்கள் தாங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு குடும்ப, சமூக, பணியிட பிரச்சினைகளை கடந்து, தங்களின் அடையாளத்தை விரும்பிய துறையில் பதிக்க வேண்டிய அவசியம் இன்று உருவாகியுள்ளது. பெண்களின் இந்த முயற்சியில் வெளிப்படும் உண்மைகள் சமூகத்தின் அசல் முகமாய் பதிவாகி வருகின்றன. அவ்வகையில் வீரியமிக்க படைப்புகளை இன்றைக்கு எழுதும் பெண்கள் படைக்கிறார்கள் என்பது பெருமையளிக்கிற விஷயமாக உள்ளது. பெண் என்ற ஒற்றை அடையாலத்தோடு நில்லாமல், சமூக ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகிவரும் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாகயும் எதிரொலிப்பதே இன்றைய பெண் எழுத்தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

நூலாசிரியர் கவிஞர் த.மாலாபிரியதர்சினி ஏற்புரையாற்றினார்.
நிறைவாக, க.பிரியா நன்றி கூறினார்.

 

 


படக் குறிப்பு :
--------------------
வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தில் அகநி வெளியீட்டகத்தின் சார்பில் சிவகாசி கவிஞர் த.மாலாபிரியதர்சினி எழுதிய ' காதல் காளானே ' கவிதை நூலை டாக்டர் அர.நர்மதாலட்சுமி வெளியிட, கவிஞர் அ.வெண்ணிலா பெற்றுக் கொண்டபோது எடுத்த படம். நடுவில், நூலாசிரியர் கவிஞர் த.மாலாபிரியதர்சினி, (இடமிருந்து) மா.யுவராஜ், கவிஞர் மு.முருகேஷ், வீ.சிவசங்கர் ஆகியோர் உள்ளனர்.