சங்க இலக்கியத்தில் ஆண் மகனுக்கான அடையாளங்கள்


முனைவர் பூ.மு.அன்புசிவா


ங்க காலத்தில் ஆண்கள் தலையிலும், முகத்திலும் முடிவளர்த்துக் கொள்வதையும் மழித்துக் கொள்வதையும் வழக்கமாகக் கொண்டிருக்கும் செய்தி இருக்கிறது.

'மழித்தலும் நீட்டலும் வேண்டா' எனத் வள்ளுவர் கூறியுள்ளதிலிருந்து இதனை அறியலாம். நீண்ட தலைமுடியையும், நீண்ட தாடியையும் வைத்துக் கொள்பவர்கள் பெரும்பாலும் தவசீலர்களாகவே இருந்து வருகின்றனர், இருந்தாலும் உலகியல் வாழ்வில் உள்ளவர்களும் தாடி வைத்திருந்த செய்தியை சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. தாடியைச் சங்க இலக்கியம் 'அணல்' என்று கூறுகிறது. இன்று தாடி வைத்துக்கொள்வதை சோகத்தின் அடையாளமாகச் சிலர் வெளிப்படுத்துகின்றனர்! சிலருக்கு அது சிந்தனையின் அடையாளம். சிலர், அழகின் அடையாளமாகக் கொண்டிருக்கின்றனர்.

சங்க காலத்தில் 'தாடி' ஆண்மையின் அடையாளமாக இருந்த செய்தியைப் புறநானூறு குறிப்பிடுகிறது.

'அடிபுனை தொடுகழல் மைஅணற் காளைக்கு என்
தொடி கழித்திடல் யான் யாய் அஞ்சுவலே!'
(புறம் -
83)

'காலில் செறிந்த வீரக் கழலை உடையவன்; மை போன்ற கரிய தாடியை உடையவன்; அத்தகையவனுக்காக என் கை வளையல் கழன்று போகின்றனவே!' எனப் பெருநற்கிள்ளியைப் புகழ்ந்து தம் காதலை நக்கண்ணையார் எனும் புலவர் வெளிப்படுத்திப் பாடியுள்ளார்.

'புலம் புக்கனனே! புல் அணற்காளை' (புறம் -
28)

என்னும் புறநானூற்றுப் பாடலில் ஒரு வீரனுக்குப் புற்களைப்போல முகத்தில் தாடி மண்டிக்கிடந்த செய்தியை அறிய முடிகிறது. சில சங்கப் பாடல்களில் உடன் போக்கில் செல்லும் தலைவனைக் குறிக்கும்போது அவனை,

'மை அணல் காளை' – 'கருமையான தாடியை உடைய இளைஞன்' என்று அடையாளப்படுத்திப் பாடியுள்ளதை அறியமுடிகிறது. |

'மதி உடம்படுத்த மை அணற் காளை' என அகநானூறும்
(221)

'மை அணற் காளையொடு பைய இயலி' என ஐங்குறுநூறும்
(389) குறிக்கின்றன.

'..... ..... இன்றே
மை அணற் காளை பொய் புகலா
அருஞ்சுரம் இறந்தனள் என்ப'
(நற்.
179)

என நற்றிணைப் பாடலும் சுட்டுகிறது.

தலைவியின் வீட்டார், திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளாத போது, தலைவன், தலைவியை அழைத்துக்கொண்டு உடன்போக்குச் செல்வது சங்ககால மரபு. அவ்வாறு அவர்கள் உடன்போக்குச் செல்லும்வழி கடுமையான பாலை நிலமாகவே இருக்கும். தலைவியை அழைத்துச் செல்லும் தலைவன், கரிய தாடியை வைத்திருந்தான் என்று குறிக்கப்பெறுகிறான்.

உடன் போக்குச் செல்வதற்குச் துணிச்சல் வேண்டும். அதே நேரத்தில் தலைவியின் வருத்தத்தையும் தன் வருத்தத்தோடு இணைத்துக் கொள்ளும் பக்குவமும், வலி ஏற்கும் உடலும் வேண்டும். எனவே, வருத்தம் தோய்ந்த துணிச்சல் உள்ளத்தின் அடையாளமாகத் தாடி இங்கே தலைவனுக்குப் பொருந்தியிருக்கிறது எனலாம்.
'அணல்' என்பது தாடி என்றால், 'மை அணல்' என்பது மைபோன்ற கருத்த தாடி என்று பொருள்.

'மை அணல்' என்று வருகிற இடங்களில் எல்லாம், குறிக்கப்பெறும் தலைவன், இளமையும் ஆண்மையும் பொருந்தியவன் என்பதை உணரமுடிகிறது.

நற்றிணையில் ஒரு தலைவியின் தந்தை பற்றிய குறிப்பில், 'அவன் மை போன்ற கருந்தாடி உடையவன்',என்று சுட்டப்படுகிறான்.

'மை அணல் எருத்தின் முன்பின் தடக்கை
வல்வில் அம்பின் எய்யா வண்மகிழ்த்
தந்தை தண் ஊர் இதுவே.'(
நற் -
198)

தலைவி, 'இது என் ஊர்' என்று குறிப்பிடாமல், 'வீரம் பொருந்திய தனது தந்தையின் ஊர்' என்று குறிப்பிடுகிறாள்.

இங்கே கருந்தாடி ஆண்மை, வீரம், பெருமிதம் ஆகியவற்றின் அடையாளமாக அமைகிறது.

தற்காலத்தில், தாடி வைப்போர் அதை அதிகம் வைக்காமல், கத்தரிக்கோலால் அளவுபடுத்தி வெட்டி, அழகுசெய்து கொள்வார்கள். இப்படிப்பட்ட தாடி அழகு முறைமை சங்க காலத்திலும் இருந்தது என்பதைப் புறநானூற்றுப் பாடல் ஒன்றின் மூலம் அறியமுடிகிறது.

'குச்சின் நிரைத்த குரூஉ மயிர் மோவாய்
செவி இறந்து தாழ்தரும் கவுளன'
(புறம்.
257)

ஒரு வீரன் குச்சுப்புல் போன்ற குறுந்தாடி வைத்திருந்ததையும் அவனது தலைமுடி காதுகளை மறைத்து வளர்ந்திருந்ததையும் இந்தப் பாடல் குறிக்கிறது.

சங்க இலக்கியம் 'அணல்' என்ற சொல்லால் மனிதர்களின் தாடியை மட்டும் குறிப்பிடாமல்,

கோழி,
சேவல்,
ஓந்தி,
குரங்கு

ஆகியவற்றின் தாழ் கழுத்து மயிரையும் குறிப்பிடுகிறது.

'உள் இறைக் குரீஇக் கார் அணல் சேவல்';
என்று நற்றிணை
(181) கரிய மோவாயை உடைய குருவியின் சேவலையும்,

'மனைஉறை கோழி அணல் தாழ்வு அன்ன'
என்று அகநானூறு
(187) கோழியின் தாழ் மயிரையும்,

'வைவால் ஓதி மை அணல்'

என்று அகநானூறு
(125) ஓந்தியின் தாடியையும் குறிப்பிடுகின்றன. நற்றிணை (22) குறிப்பிடும் மந்தியின் செயல் காட்சி நகைப்புக்குரியது.

தினைப்புனத்தில் தினைக் கதிர்களைப் பறித்துக்கொண்டு, கடுவன் எனப்படும் ஆண் குரங்கோடு மலையேறிய மந்தி எனப்படும் பெண்குரங்கு தினைக் கதிர்களை நிமிண்டி, அலை அலையாய் இருந்த தாடியை உடைய கன்னம் (வாய்) நிறைய அமுக்கிக் கொள்கிறதாம்.

இக்காட்சி நோன்பிருக்கும் தவசீலர்கள் தாடியோடு காட்சியளிப்பதற்கு இணையாக இருக்கிறதாம். அணல் தரும் குறிப்புகள், உயிரினங்களுக்குத் தரும் அடையாளங்கள் ஏராளம் உள்ளன.

பொற்காலம்
உலக வரலாற்றைப் படிப்பவர்கள் ஒவ்வொரு இனத்துக்கும் ஒவ்வொரு பொற்காலம் இருந்திருப்பதை அறிந்து கொள்ளலாம்.முனைவர் பூ.மு.அன்புசிவா
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -
641 028
பேச
: 98424 95241,98438 74545.