சைவ நாயன்மார்களின் தேவாரத்தில் இராமாயணம் - ஒரு பார்வை
 

கலாநிதி பால.சிவகடாட்சம்


டவுள் நம்பிக்கையற்ற சமணம் மற்றும் பௌத்த மதங்களின் பிடியில் இருந்து தமிழகத்தை விடுவித்து அங்கு சைவ மதத்துக்கு மறுவாழ்வு அளிப்பதே ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவநாயன்மார்களின் பிரதான நோக்கமாக இருந்தது. இந்து மதத்தின் இரு பெரும்பிரிவுகளான சைவம் வைணவம் என்பவற்றின் பொது எதிரிகளாகச் சமணரும் பௌத்தரும் நோக்கப்பெற்ற காலம் அது. திருமாலின் பத்து அவதாரங்களையும் இறைவனாகவே கருதிப்போற்றினர் வைணவ ஆழ்வார்கள். சைவ நாயன்மார்களோ சிவபெருமான் ஒருவரே தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத என்றுமுள்ள தனிப்பெருங்கடவுள் என்பதில் அசையா நம்பிக்கை உடையவர்களாகத் திகழ்ந்தனர்.

'குழம்பிய மனத்தராய் வாதங்கள் பல செய்து அறிவில் ஏழ்மையைக்காட்டிநிற்கும் மனிதர்களே நீங்கள் என்னதான் கூறினும் கடவுளர் என்று கருதப்படும் அனைவருக்கும் மகாதேவனாகிய சிவனைத்தவிர வேறு ஒரு கடவுள் இல்லை' என்று உறுதிபடக்கூறுகிறார் அப்பர் சுவாமிகள்.

வாது செய்து மயங்கும் மனத்தராய்
ஏது சொல்லுவீர் ஆகிலும் ஏழைகாள்
யாதோர் தேவர் எனப்படுவார்க்கு எல்லாம்
மாதேவன் அல்லால் தேவர் மற்று இல்லையே.

திருநாவுக்கரசர் திருமுறை
5: பதிகம் 100, பாடல் 4

வைணவர்கள்மீதான நேரடி விமர்சனம் இந்து மதத்தின் இரு கிளைகளான சைவம் வைணவம் என்பவற்றின் பொது எதிரிகளை வலுப்படுத்தும் என்ற காரணத்தால் அதனைத் தவிர்த்து இராமாயணத்தில் இருந்தும் பிறநூல்களில் இருந்தும் பெறப்பட்ட கதைகளை மேற்கோள் காட்டுவதன்மூலம் சிவபிரானின் ஒப்புவமையற்ற சிறப்பை வலியுறுத்தும் ஓர் அணுகுமுறையை சைவ நாயன்மார்கள் தெரிந்தெடுத்தனர். வான்மீகி ராமாயணத்தை நன்கு அறிந்துவைத்திருந்த நாயன்மார்கள் அதில் கூறப்படும் குறிப்பாக உத்தரராமாயணத்தில் கூறப்படும் கதைகளை தமது தேவாரங்கள் பலவற்றில் எடுத்தாண்டுள்ளார்கள்.

ராமர்-சீதை கதையானது சைவநாயன்மார்களுக்குப் பலநூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ்நாட்டவரால் நன்கு அறியப்பட்ட ஒன்றாக இருந்துவந்துள்ளது என்பதற்கான ஆதாரங்களை சங்க இலக்கியங்களில் காணமுடிகிறது.

பெருந்தொகையான ஆபரணங்களைத் தமக்குப்பரிசளித்த சோழன் இளஞ்சேட்சென்னியைப் பாடப்புகுந்த ஊன்பொதிப்பசுங்குடையார் என்னும் சங்கப்புலவர் இராமாயணக் காட்சி ஒன்றை நினைவு கூருகிறார்.

எமக்கென வகுத்த அல்ல, மிகப்பல,
மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை
தாங்காது பொழிதந் தோனே; அது கண்டு,
இலம்பாடு உழந்தஎன் இரும்பேர் ஒக்கல்,
விரல்செறி மரபின செவித்தொடக் குநரும்,
செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும்,
அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும்,
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை,
நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தா அங்க,
அறாஅ அருநகை இனிதுபெற் றிகுமே,


புறநாநூறு: பாடல்
378

'அரசே எமக்கு நீ பரிசாகத் தந்த பெருந்தொகையான ஆபரணங்களை முன்பின் கண்டறியாத எனது உறவினர்கள் விரலில் போடவேண்டியதைக் காதிலும் காதில் போடவேண்டியதை விரலிலும் இடுப்பில் கட்டவேண்டியதைக் கழுத்திலும் போட்டுக்கொண்டு நிற்கிறார்கள். இது அன்று அந்த அரக்கன் சீதையைக் கடத்திக்கொண்டு போகும்பொழுது அவள் வீசி எறிந்த நகைகளைக் காட்டில் கண்டெடுத்த குரங்குகள் அவற்றை முறையில்லாமல் அணிந்துகொண்டு பார்ப்பவர்களுக்குச் சிரிப்பை மூட்டியதை நினைவுபடுத்துகிறது' என்று பாடுகிறார் இந்த சங்கப்புலவர்.

இந்துமதத்தின் இரு பெரும் கிளைகளையும், இலங்கை இந்தியா ஆகிய இரு நாடுகளையும்இ இணைக்கும் இராமாயணம் வெகுகாலத்துக்கு முன்பிருந்தே இந்த இருநாட்டு மக்களின் வாழ்க்கை கலாச்சாரம் என்பவற்றுடன் பின்னிப்பிணைந்து பிரிக்கமுடியாத ஒரு அங்கமாகிவிட்டது.

சங்ககாலத்துக்குரிய
(circa 300 B.C.E - 200 C.E) இலக்கியங்கள் வாயிலாக அக்காலப்பகுதியில் தமிழகத்தில் சிவன் விஷ்ணு இருவருமே பெருங்கடவுளராகப் போற்றி வணங்கப்பட்டனர் என்பதை அறியமுடிகிறது.

சோழன் திருமாவளவன் சிவந்த தோலுடையவன்; பாண்டியன் பெருவழுதி கருநிறமுடையவன். பாரம்பரிய எதிரிகளான இவ்விருவரும் ஓர் அரசவையில் சேர்ந்திருக்கக் கண்டு உணர்ச்சிவசப்பட்ட புலவர் காரிக்கண்ணன் இருவரையும் வெள்ளைத்தோலுடைய பலராமனுக்கும் கருமைநிறக் கண்ணனுக்கும் ஒப்பிட்டுப் பாடினார்.

பால்நிற உருவின் பனைக்கொடி யோனும்,
நீல்நிற உருவின், நேமியோனும், என்று
இருபெருந் தெய்வமும் உடன் நின் றாஅங்கு,
உருகெழு தோற்றமொடு உட்குவர விளங்கி,
இந்நீர் ஆகலின், இனியவும் உளவோ?


புறநாநூறு: பாடல்
58

இமயத்தைப் பிடுங்கி எறிய முற்பட்ட இராவணனின் நிலையைக் கபிலர் விபரிக்கும் பாடல் ஒன்றைக் கலித்தொகையில் காணமுடிகிறத.

இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர் மலை இருந்தனன் ஆக,
ஐ இரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப் பொலி தடக் கையின் கீழ் புகுத்து, அம் மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல –
உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக்
கறுவு கொண்டு,இ அதன் முதல் குத்திய மத யானை,
நீடு இரு விடர் அகம் சிலம்பக் கூய்த், தன்
கோடு புய்க்கல்லாது, உழக்கும் நாட! கேள்;


கலித்தொகை: பாடல்
38

'இமயத்தை வில்லாக வளைத்த, கங்கையின் ஈரம் செறிந்த சடையை உடைய, சிவபிரான் உமாதேவியுடன் உயர்ந்த மலையில் இருக்கையில் அந்த மலையின் கீழ் தனது காப்பு அணிந்த கைகளைவிட்டு அதனைத் தூக்கமுயன்ற அரக்கர் கோமானாகிய பத்துத்தலை இராவணன் அந்த மலையை எடுக்கமுடியாது அலறியதுபோன்று பூத்திருக்கும் வேங்கைமரத்தைப் புலிஎன்றுநினைத்து முட்டிமோதிய மதம்பிடித்த யானையின் பிளிறல் சத்தம் ஒலித்தது' என்று வர்ணிக்கின்றார் இந்த சங்ககாலப்புலவர்.

தென்னிந்தியாவில் சமணமும் பௌத்தமும் கோலோச்சி நின்றகாலப்பகுதியில் அமிழ்ந்திருந்த சைவ வைணவ முரண்பாடுகள் ஏழாம் நூற்றாண்டில் ஏற்பட்ட வைதீகமதங்களின் மறுமலர்ச்சியைத்தொடர்ந்து மீளத்தலைதூக்கின. இராமாயணத்தின் பல்வேறு வாசிப்புக்கள் தோன்றத்தொடங்கின. சிவன் விஷ்ணு ஆகிய இருபெருங்கடவுளரில் ஒருவரது மேன்மையை வலியுறுத்தும்முகமாக புராணங்களில் இடைச்செருகல்கள் நுழைக்கப்பெற்றன.

இராமாயணத்தின் பிற்கால வடிவங்களுள் ஒன்றான துளசிதாசரின் ராமசரிதமானச பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவர்க்கும் முதல்வனாக இராமனைப்போற்றுகின்றது. மற்றும் சில ராமாயணங்களோ அநுமனை சிவனின் அவதாரமாகவும் அரக்கர்களுக்கு எதிரானபோரில் ராமனுக்கு உதவும்பொருட்டு சிவன் அநுமனாக அவதாரம் எடுத்ததாகவும் கூறுகின்றன.

சைவ-வைணவ முரண்பாட்டைப் பெரிதுபடுத்தாமல் சம்பந்தர் தவிர்த்தார். அதேசமயம் அவரிலும் வயதில் மூத்தவரான அப்பரோ தனது தேவாரங்களில் சிவபிரானின் ஒப்புயர்வற்ற தன்மையை வலியுறுத்தத் தயங்கியதில்லை. சிவபெருமானில் அளவுகடந்த பக்திசெலுத்திய அப்பர்சுவாமிகள் அப்பெருமானுக்கு எவரும் இணையாகமாட்டார் என்னும் தமது வாதத்துக்கு வலிமை சேர்க்க இராமன் கதையையே பயன்படுத்தினார்.

இவ்விடத்தில் இயல்பாக எழக்கூடிய ஒரு கேள்வி மகாவிஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்பட்ட ஒரு மானுட அரசனின் கதைக்கு சைவநாயன்மார்கள் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பதாகும். இங்கே நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய விடயம் என்னவென்றால் அப்பரும் சம்பந்தரும் இராமாயணத்தில் இராவணனுக்கும் சிவபிரானுக்கும் இடையில் உள்ள பக்தன் தெய்வம் பிணைப்புக்கே முக்கியத்துவம் கொடுத்துவிட்டு மீதிக்கதைக்குள் அதிகம் நுழையாமல் விட்டுள்ளார்கள் என்பதேயாகும்.

இராவணன் சிவபிரான் சந்திப்பு தொடர்பான கதையானது சைவநாயன்மார்கள் காலத்துக்கு பலநூற்றாண்டுகளுக்கு முன்னரேயே தமிழகமக்களுக்கு நன்கு அறிந்த ஒன்றாக இருந்துள்ளது என்பதைக் கலித்தொகையில் இடம்பெற்றுள்ள முற்குறிப்பிட்ட பாடல்மூலமாக உறுதிப்படுத்தமுடிகிறது. நாயன்மார்கள் இந்தக் கதையைத் தமது தேவாரங்களில் மீண்டும் மீண்டும் குறிப்பிடுவதை அவதானிக்கமுடியும். அப்பரும் சம்பந்தரும் தமது பதிகம் ஒவ்வொன்றிலும் ஒரு பாடலை இந்தக்கதைக்கு ஒதுக்கியுள்ளனர். இவ்விரு நாயன்மார்களின் தேவாரங்களில் காணப்படும் இக்கதையின் சுருக்கம் பின்வருமாறு அமையும்.

தனது உறவினனாகிய குபேரனிடமிருந்து கைப்பற்றிய புஷ்பகவிமானத்தில் இமயமலைக்குச் சமீபமாகப்பறந்து கொண்டிருந்தான் இராவணன். இறைவனின் இருப்பிடத்தை வலம்செய்து போவோம் என்ற விமானஓட்டியின் ஆலோசனையை அலட்சியப்படுத்திவிட்டுத் தனது பயணத்துக்குத் தடையாய் இருந்த அந்தமலையையே எடுத்தெறிய முற்பட்ட அந்த அரக்கன் தனது மூர்க்கத்தனத்துக்காக இறைவனால் தண்டிக்கப்பெற்றான். இறைவனின் கால்விரல் ஒன்றினால் நசுக்கப்பட்டு அலறியவன் தனது இசையால் இறைவனை மகிழ்வித்தான். இறைவன் அவனைமன்னித்ததோடு அவனுக்கு ஓர் வாளையும் பரிசாகக் கொடுத்தான்.

கடுகிய தேர் செலாது கயிலாமீது
கருதேல் உன் வீரம் ஒழி நீ
முடுகுவதன்று தன்மம் என நின்று பாகன்
மொழிவானை நன்று முனியா
விடுவிடு என்று விரைவுற்று அரக்கன்
வரையுற்று எடுக்க முடிதோள்
நெடுநெடு இற்று வீழ விரல் உற்ற பாத
நினைவுற்ற தென்றன் மனனே.


திருநாவுக்கரசர் திருமுறை
4: பதிகம் 17, பாடல் 11

அப்பரும் சம்பந்தரும் இந்தக்கதையை மீண்டும் மீண்டும் எமது கவனத்துக்குக் கொண்டுவருவதன்மூலம் அகங்காரம் பிடித்த அரக்கனாகிய இராவணனை ஒத்த பாவிகளைக்கூட மன்னித்து ஆட்கொள்ளும் கருணையுள்ளம் படைத்தவர் இறைவனாகிய சிவபிரான் என்பதை எம் நினைவில் நிறுத்த முயற்சிக்கின்றனர். சிவபிரானையும் அவரது அடியார்களையும் எப்போதும் தூற்றிக்கொண்டு திரியும் சமணருக்கும் பௌத்தருக்கும் விடுக்கப்பட்ட மறைமுகமான அழைப்பு என்றுகூட இதனைக்கருதலாம்.

நாயன்மார்கள் திருத்தலங்களைத் தரிசிக்கச் சென்றபோதெல்லாம் இறைவனின் புகழ் பாடுவதுடன் கூடவே திருக்கோவில் அமைந்திருக்கும் ஊரினது அழகையும் இயற்கை எழிலையும் அனுபவித்துப்பாடினர். பொருத்தமானமுறையில் அந்தக்கோயிலின் சூழலை இராமாயணக் கதாபாத்திரம் ஒன்றுடன் இணைத்துப்பாடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.இத்தகைய அணுகுமுறையானது ஊரவர்களின் மனதை வென்றெடுக்க அவர்களுக்கு உதவியது.

புள்ளிருக்குவேளூர் என்பது கழுகுகள் வழக்கமாகத் தம் கூடுகளை அமைத்திருக்கும் ஓர் ஊரின் பெயர். இராமாயணத்தில் வரும் கழுகுகளின் அரசனாகிய சம்பாதியும் அவன் தம்பி சடாயுவும் சிவனை வழிபட்ட திருத்தலமே புள்ளிருக்குவேளூர் என்கிறார் சம்பந்தர். நாள் தோறும் இரு கழுகுகள் இக்கோவிலின்மேல் தோன்றி வட்டமிடுவதை சம்பந்தர் உட்பட ஏராளமான பக்தர்கள் கண்டு அதிசயித்துள்ளனர்.

தள்ளாய சம்பாதி சடாயு என்பார் தாம் இருவர்
புள்ளானார்க்கு அரையன் இடம் புள்ளிருக்கு வேளூரே

திருஞானசம்பந்தர் திருமுறை
2: பதிகம் 43, பாடல் 1

வாச நலம் செய்து இமையோர் நாள் தோறும் மலர் தூவ
ஈசன் எம்பெருமான் இனிதாக உறையும் இடம்
யோசனை போய்ப் பூக்கொணர்ந்து அங்கு ஒரு நாழும் ஒழியாமே
பூசனை செய்து இனிது இருந்தான் புள் இருக்கு வேளூரே.


திருஞானசம்பந்தர் திருமுறை
2: பதிகம் 43, பாடல் 3

சம்பந்தர் பாடிய புள்ளிருக்குவேளூர் இன்று வைத்தீஸ்வரன் கோவிலாக அடையாளம் காணப்படுகிறது.

சம்பந்தரால் பாடப்பெற்ற மற்றுமோர் திருத்தலம் திரு வடகுரங்காடுதுறை. இராவணனை அவனது இருபது கரங்களுடன் தனது வாலினால் கட்டிய குரங்குகளின் அரசனும் சிவபக்தனுமாகிய வாலி கட்டிய கோயில் இது என்று கூறும் சம்பந்தர் பூக்களும் தூபமும் சந்தனமும் கொண்டு இத்தலத்தில் கோவில் கொண்டிருக்கும் இறைவனை வாலி வழிபட்டதாகப் பாடுகிறார்.

நீலமாமணி நிறத்து அரக்கனை இருபது கரத்தொடு ஒல்க
வாலினாற் கட்டிய வாலியார் வழிபட மன்னு கோயில்
ஏலமோடு இலை இலவங்கமே இஞ்சியே மஞ்சளுந்தி
ஆலியா வருபுனல் வடகரை அடை குரங்காடுதுறையே.


திருஞானசம்பந்தர் திருமுறை
3: பதிகம் 91, பாடல் 8

கோலமாமலரொடு தூபமும் சாந்தமும் கொண்டு போற்றி
வாலியார் வழிபடப் பொருந்தினார் திருந்து மாங்கனிகள் உந்தி


திருஞானசம்பந்தர் திருமுறை
3: பதிகம் 91, பாடல் 7

இராமர் இலக்குவன் ஜாம்பவான் சுக்கிரீவன் மற்றும் அநுமான் ஆகியோரின் வேண்டுதலை ஏற்று அரக்கன் தோற்றுவித்த நஞ்சை உண்டு அவர்களை இறைவன் காப்பாற்றினான் என்று பாடுகிறார் சம்பந்தர்.

நீரிடைத் துயின்றவன் தம்பி நீள் சாம்புவான்
போருடைச் சுக்கிரீவன் அநுமான் தொழக்
காருடை நஞ்சுண்டு காத்தருள் செய்த எம்
சீருடைச் சேடர் வாழ் திருவுசாத்தானமே


திருஞானசம்பந்தர் திருமுறை
3: பதிகம் 33, பாடல் 1

வால்மீகி இராமயணத்தில் கூறப்படும் ஒரு சம்பவத்தை நினைவு கூருவதாக இத்தேவாரம் அமைந்துள்ளது. வானத்தில் சடுதியாகத் தோன்றிய கருடப்பறவை ஒன்று இராமர் இலக்குவன் ஆகியோரினது உடலில் இருந்து அம்புவிடத்தை உறிஞ்சி அவர்களைக் காப்பாற்றுகின்றது. அந்தப்பறவை யார் என்பதை அறிந்துகொள்ள விரும்புகின்றான் இராமன். 'நான் யார் என்பதை அறிய இப்போது ஆசைப்படாதே. போரில் உனக்கு வெற்றிகிடைத்ததும் நான் யார் என்பது உனக்குத்தெரியவரும்' என்று அந்தப்பறவை அவனுக்குக் கூறுகின்றது.

வானத்தில் கருடன் வடிவத்தில் தோன்றி இராமர் முதலானோரை அம்புவிடத்தில் இருந்து காபாற்றியவர் சிவபிரானே என்பது சம்பந்தரின் துணிபு.

மகாவிஷ்ணு சிவபிரானுக்குச் சமமானவராகமுடியாது என்ற தனது வாதத்தை வலியுறுத்த இராமயணக் கதையினை முழுமையாக எடுத்துக்கொள்கிறார் அப்பர் சுவாமிகள்.

முன்பு ஒருநாள் சிவபெருமான் தன் ஒரு விரலால் நசுக்கி அடக்கிய இராவணனை திருமால் அம்பும் வில்லும் ஏந்தி சேனையைத்திரட்டி சேதுஅணைகட்டி இலங்கைக்குள் புகுந்து யுத்தம் பலபுரிந்தே தோற்கடிக்க முடிந்ததைச் சுட்டிக்காட்டுகின்றார் அப்பர்.

செங்கண்மால் சிலை பிடித்துச் சேனையோடும்
சேதுபந்தனம் செய்து சென்று புக்குப்
பொங்கு போர் பலசெய்து புகலால் வென்ற
போர் அரக்கன் நெடுமுடிகள் பொடியாய் வீழ
அங்கு ஒரு தன் விரலால் இறையே ஊன்றி
அடர்த்து அவர்க்கே அருள் புரிந்த அடிகள் இந்நாள்
வங்கம் மலி கடல் புடைசூழ் மாட வீதி
வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே.


திருநாவுக்கரசர் திருமுறை
6: பதிகம் 58, பாடல் 10


சைவநாயன்மார்கள் சிவபிரானின் மேன்மையை வலியுறுத்தும் அதேசமயம் இராவணனை நீதியுள்ள ஒருஅரசனாகவோ இராமனை ஒரு சாதாரண மனிதனாகவோ ஒருபோதும் சித்தரிக்கமுற்படவில்லை என்பதை நாம் கவனத்தில்கொள்வது அவசியமாகும். இராமன் திருமாலின் அவதாரமே என்று வலியுறுத்தும் உத்தரராமாயணத்தின் முடிபை அப்பரும் சம்பந்தரும் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இதன் காரணமாகவே தேவாரத்தில் திருமால் என்றும் பாற்கடலில் துயில்பவன் என்றும் இராமன் குறிப்பிடப்பெறுகிறான்.

இராவணன் சிறந்த சிவபக்தன். இராவணன் மேலது நீறு என்று பாடுகிறார் சம்பந்தர். சிறந்த ஒரு சிவபக்தனாகவிருந்தபோதிலும் அவன் செய்தகுற்றம் மன்னிக்கமுடியாதது. சீதையைக் கடத்திய மாபெரும் குற்றத்துக்காகவும் தேவர்களை ஆணவத்துடன் அவமதித்ததற்காகவும் அவன் தண்டனைக்கு உள்ளாக நேர்ந்தது. எனினும் அவன் சாதாரணமான மானுடன் ஒருவனால் கொல்லப்படவில்லை. மாறாக மகாவிஷ்ணுவின் அவதாரமான இராமனால் வதைக்கப்பட்டான்.

இராமேஸ்வரத்தில் இராமன் கட்டி வழிபட்ட சிவாலயம் பற்றிய செய்தி நீண்டநெடுங்காலமாகத் தமிழகத்தில் நிலைத்துவிட்ட ஒரு மரபாகும். வால்மீகி இராமாயணத்தில் கூறப்படாத இந்த மரபுவழிச் செய்தியை அப்பர் சம்பந்தர் ஆகிய இருவருமே நினைவு கூருகின்றனர். வால்மீகி இராமாயணத்தின்படி இராம இராவண யுத்தம் முடிந்ததும் இராமனும் சீதையும் படையினரும் இராவணன் பயன்படுத்திய புட்பகவிமானத்தில் அயோத்தி திரும்புகின்றனர். விமானத்தில் பயணிக்கும்போது கீழே தென்பட்ட ஒரு தீவைச் சுட்டிக்காடிய இராமன் அங்கேதான் மகாதேவரின் அருள் தமக்குக் கிட்டியதாகச் சீதையிடம் கூறுகின்றான். அப்பரினதும் சம்பந்தரினதும் பாடல்களின்படி இராமன் போர்முடித்து நாடு திரும்பும்வழியில் முதலில் இராமேஸ்வரம் என்று இன்று நாம் குறிப்பிடும் தீவுக்கு வருகின்றான். இராவணன் என்னும் ஒருசிவபக்தனைக் கொன்றதனால் ஏற்படக்கூடிய பாவத்தைப் போக்குமுகமாக அந்தத்தீவில் சிவபிரானுக்கு ஒரு கோயில் கட்டுகின்றான்.

தேவியை வவ்விய தென்னிலங்கைத் தசமாமுகன்
பூவியலும் முடி பொன்றுவித்த பழி போயற
ஏவியலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம்
மேவிய சிந்தையினார்கள் தம்மேல் வினை வீடுமே


திருஞானசம்பந்தர் திருமுறை
3: பதிகம் 10, பாடல் 2


கடல் இடை மலைகள் தம்மால் அடைத்து மால் கருமம் முற்றி
திடல் இடைச் செய்த கோயில் திருவிராமேச்சரத்தைத்
தொடல் இடை வைத்து நாவில் சுழல்கின்றேன் தூய்மை இன்றி
உடல் இடை நின்றும் பேரா ஐவர் ஆட்டுண்டு நானே.


திருநாவுக்கரசர் திருமுறை
4: பதிகம் 6, பாடல் 3