கிழக்கிலங்கைக் கிராமியக் காவியப் பாடல்களின் தோற்றமும் வளர்ச்சியும்

 

கலாநிதி சின்னத்தம்பி சந்திரசேகரன்
 

 

அறிமுகம்:

 

கிராமியப் பண்பாடும் வாய்மொழி மரபுகளும் நிறைந்த கிழக்கிலங்கையில் தமிழர்களின் வழிபாட்டு முறையில் கிராமியத் தெய்வங்களுக்கான சடங்கு வழிபாடு முக்கியம் பெற்று விளங்குகின்றது. இந்த வழிபாட்டில் கிராமியத் தெய்வங்கள் மீது பாடப்படுகின்ற ஒரு வகைப் பாடலே காவியம் எனப்படும். கண்ணகி, மாரியம்மன், காளியம்மன், பேச்சியம்மன், வைரவர், வீரபத்திரர், ஐயனார், வதனமார் முதலிய தெய்வங்கள் மீது காவியங்கள் பாடப்பட்டுள்ளன. இந்தக் காவியங்கள் கதைப்பாடல் வடிவமாகவே அமைந்துள்ளன. காவியத்துக்குத் தனித்துவமான ஒரு இசையமைப்பு உண்டு.

 

நோக்கம்:

 

காவியப் பாடல்கள் சடங்கு வழிபாட்டில் இருந்து உருவானமை பற்றியும் அவை பின்னர் பல்வேறு சமூகநிலைப் பண்புகளையும் உள்வாங்கி வளர்ந்தமை பற்றியும் ஆராயப்படுகின்றது. அத்துடன் காவியம் அளிக்கை சார்ந்த ஒரு பாடல் வடிவமாக மக்கள் மத்தியில் பயிலப்பட்டு வருவதும் எடுத்துக்காட்டப்படுகின்றது.

 

முறையியல்

 

இந்த ஆய்வுக்குக் கூடுதலாக கள ஆய்விலே பெறப்பட்ட பாடல்கள், தகவல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்தகவல்களும் பாடல்களும் பகுப்பாய்வு செய்யப்பட்டு பொருத்தமான வகைமாதிரிகள் ஆய்வுக்குப் பயன்படுத்தப்பட்டன.

 

ஆய்வு:

 

சடங்கு வழிபாடு விவசாயப் பொருளாதாரத்தின் அடியாக உருவாகியது. இந்த வழிபாட்டில் குறிப்பிட்ட தெய்வங்கள் மீதான வழிபாட்டுப் பாடல்களும் மந்திரங்களுமே முக்கியம் பெறுகின்றன. கிராமிய மக்கள் வளம், நோய் தீர்த்தல் முதலான வாழ்வியல் தேவைகளை பாடல்கள் வழியாகவே முறையிடுகின்றனர்.இந்த வழிபாடே பாடல்களால் ஆனது எனலாம்.

 

ஆகவே சடங்கு வழிபாடு உருவானபோது கூடவே வழிபாட்டுப் பாடல்களும் தோன்றியிருக்க வேண்டும். இவ்வாறு பாடல்களை உருவாக்கியபோது தமக்கு ஏலவே பரிச்சயமாக இருந்த வாய்மொழிப் பாடல் வடிவங்களிலேயே உருவாக்கினர். அதேவேளை சடங்கிற்கே உரித்தான ஒரு புதிய வடிவமாக காவியம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் இசையே அது சடங்கை மையப்படுத்தி உருவானது என்பதைக் காட்டுகின்றது. சடங்கிலே பயன்படுத்தப்பட்டு வந்த முதன்மையான இசைக்கருவி உடுக்காகும். உடுக்கு கிழக்கிலங்கையில் ஏனைய சமூக, கமய விழாக்களிலே பயன்படுத்தப்படுவதில்லை. இந்த உடுக்கின் இசை லயத்தை அடிப்படையாகக் கொண்டே காவியம் உருவாக்கப்பட்டது.

 

தேந்தி நதி நாதி நதி நாதி நதி நானா

தினநாதி நாதந்த நாதந்நானா

 

 

இது உடுக்கோசையின் வரி வடிவமாகும். இந்த இசை வாய்பாட்டை இரு முறை ஒலிப்பதாக அதாவது நான்கடித் தருவைக் கொண்டதாக காவியத் தரு அமைகின்றது. உடுக்கின் ஓசைக்கேற்ப காவியம் பாடப்படுவதனால் அது ;உடுக்குச் சிந்து' என்றும் கூறப்படுகின்றது. இந்த இசையடிகள் காவியத்தின் ஆரம்பத்திலும் அப்பாடலின் ஒவ்வொரு பாடல் முடிவுகளிலும் திரும்பத்திரும்ப இசைக்கப்படும். அப்போது பாடலின் இசைப் போக்கு அதிகரித்து இசை இனிமை ஏற்படுவதுடன் பக்தி உணர்வும் தூண்டப்படுகின்றது. காவியப் பாடலின் தருவும் அதற்கு ஒத்திசைவாக இசைக்கப்படும் உடுக்கிசையுமே இப்பாடல்களைத் தெய்வீகப் பாடல்களாக மதிக்கும் மனநிலையை ஏற்படுத்தியுள்ளன.

 

காவியம் கிராமியப் பாடல் வடிவமாக இருந்தபோதும் எழுத்தில் உருவாக்கப்படுவது அதன் முக்கிய பண்பாகும். காவியம் புனிதப் பாடல் வடிவமாகக் கருதப்படுவதனால் அதனைத் திரிபுறாமல் பேணவேண்டிய தேவை ஏற்படுவது இயல்பே. எழுத்து நிரந்தரத் தன்மையைப் பேணுவது. எனவே இந்தச் சமூகத்தில் எழுத்து மரபு பரவிய அரம்பத்தில் காவியம் எழுத்து மரபுக்குட்பட்டிருக்க வேண்டும். அல்லது உருவானபோதே எழுத்தில் உருவாகியிருக்க வேண்டும். இந்தச் சடங்குமுறை தென்னிந்திய குடியேற்றங்கள் ஊடாக ஏற்பட்ட நிலமானிய சமூக அமைப்பினடியாக உருவானதாகும். அந்தச் சமூகத்தை எமுத்தறிவற்ற சமூகம் எனமுடியாது. எனவே அவர்கள் காவியம் முதலான சடங்குப் பாடல்களை எழுத்திலே உருவாக்கியிருக்கலாம்.

 

இப்போது கிடைக்கும் காப்பியங்கள் மட்டக்களப்பில் கண்டி மன்னரின் மேலாட்சி நிலவிய காலத்தில் இயற்றப்பட்டதாகத் தெரிகின்றது. மாரியம்மன் காவியம், வீரபத்திரர் காவியம், தம்பிலுவில் கண்ணகை அம்மன் மழைக் காவியம் ஆகிய பாடல்களில் கண்டி மன்னன் ராசசிங்கன் ( கி.பி. 1629 - 1687) வாழ்த்தப்படுவதைக் கொண்டு இதனைத் துணியலாம் (சிவசுப்பிரமணியம்,.,2004:155).

 

காவியப் பாடல்கள் எழுத்திலே உருவாக்கப்படுகின்றபோதும் வாய்மொழி மரபுகளைப் பின்பற்றியே படைக்கப்பட்டுள்ளன. அவற்றின் அளிக்கையும் கையளிக்கையும் பெரும்பாலும் வாய்மொழியாகவே இடம்பெற்று வந்துள்ளன. இந்த உடுக்கின் ஓசைநயம் இப்பாடல்களை ஞாபகப்படுத்துவதற்கும், அவற்றை தலைமுறை தலைமுறையாகப் பரிமாற்றவும் பயன்படுகின்றது. ஆகவே காவியம் எழுதப்படுகின்ற வாய்மொழிப் பாடலாகவே உள்ளது. சடங்கிலே காவியங்களைப் பாடுகின்ற பலர் அவற்றின் எழுத்துப் பிரதிகளைப் பார்க்காதவர்கள். அந்தவகையில் காவியம் உட்பட சடங்குப் பாடல்கள் இந்தப் பிரதேசத்திலே முக்கியமானதொரு இலக்கிய மரபாகக் கொள்ளப்படுகின்ற 'எழுத்துமரபுசார்ந்த வாய்மொழிப் பாடல்கள்'என்ற பாடல் மரபின் ஆரம்பமாகவும் உள்ளன.

 

இந்தக் காவியங்களிலே கண்ணகி பற்றிய காவியங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. சிலப்பதிகாரம் கிழக்கிலங்கையில் பரவிய காலம் முதலே கண்ணகி அம்மன் காவியப் பாடல்களும் இங்கு தோன்றியிருக்கவேண்டும். இந்தக் காவியங்கள் சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டே பாடப்பட்டுள்ளன என்பதை அவற்றிலுள்ள அகச் சான்றுகள் காட்டுகின்றன. ஊர்சுற்று காவியத்தில் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை எழுதியதாகக் கூறப்படுவதும் தம்பிலுவில் கண்ணகை அம்மன் காவியத்தில் சீத்தலைச் சாத்தனாரின் பெயர் இடம்பெறுவதும் இதற்கு எடுத்துக்காட்டுக்கள். ஆனால் இந்தக் காவியங்கள் சிலப்பதிகாரக் காப்பியக் கதையின் மீளுருவாக்கங்களாக உள்ளன. இதிலே முக்கியமானது கண்ணகியைப் பிறப்பிலேயே தெய்வநிலைப்படுத்தும் தொன்மங்கள் இணைக்கப்பட்டுள்ளமையாகும். கண்ணகியை உமையம்மையின் அவதாரமாகக் காட்டி முற்றிலும் பக்திநிலைப் பாடல்களாக இவை உருவாக்கப்பட்டுள்ளன. இப்பிரதேசத்திலே நிலவும் வாய்மொழிக் கதைகளும் இக்கதையினை அடிப்படையாகக் கொண்டதாகவே உள்ளன. ஆகவே ஒரு அறம் கூறும் சமூகநிலைக் காவியம் இங்கு பக்திநிலைக் காவியமாக மீளுருவம் பெற்றுள்ளது.

 

இவ்வாறு கண்ணகி வழிபாடும் அந்த வழிபாட்டிலே காவியம் உட்பட வழிபாட்டுப் பாடல்களின் அளிக்கையும் சிறப்புற்றிருந்த சூழலிலேயே கண்ணகி வழக்குரை என்ற நூல் இப்பிரதேசத்திலே பரவியிருக்கவேண்டும். கண்ணகி வழக்குரை சிலப்பதிகாரத்தின் மீளுருவமே. யாழ்ப்பாணத்தில் ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்தில் தோன்றியதாகக் கூறப்படும் இந்நூல் மட்டக்களப்பிலேயே பயிலப்பட்டு வருகின்றது. அது கண்ணகி கோயில்களில் பாடப்பட்டும் பேணப்பட்டும் வருகின்றது. இந்நூலை இப்பிரதேச மக்கள் 'கண்ணகி வழக்குரை காவியம்' என்றே அழைக்கின்றனர். இந்நூலுக்கும் கண்ணகி சடங்குக் காவியப் பாடல்களுக்கும் இடையிலான முக்கியமானதொரு உறவு என்னவெனில் இரண்டும் கண்ணகியைப் பிறப்பிலேயே தெய்வமாகக் காட்டுவதாகும்.

 

காவியப் பாடல் மரபிலே 'மழைக்காவியம்' என்ற தனியான ஒரு வழிபாட்டுப் பாடல் வகையும் தோன்றியுள்ளது. மழையை நம்பி பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட இப்பிரதேச மக்கள் மழை பொய்க்கும் காலங்களில் இது தெய்வக் குறையினாலேயே நிகழ்ந்தள்ளது என்றும் கிராமியத் தெய்வங்களுக்குச் சடங்குகள் செய்வதன் மூலம் மழையைப் பெய்விக்கவும் பயிர் செழிப்புறவும் செய்யலாம் என்று நம்பினர். இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே கண்ணகி அம்மன் சடங்கு, மாரியம்மன் சடங்கு முதலியன உருவாயின. அதேவேளை அந்த வேண்டுதலைச் செய்வதற்காக தனியான காவியப் பாடல்களையும் உருவாக்கியுள்ளார்கள். அவையே மழைக் காவியங்கள் எனப்படுகின்றன. வெய்யில் கொடுமைக்குக் கண்ணகியின் கோபமே காரணம் என்று நம்பப்படுவதனால் மழைக்காவியம் கண்ணகி மீது பாடப்படுவதாகவே அமைந்தது. இது வழச் சடங்காக அமைகின்றது. பின்னர் வேறு தெய்வங்கள் மீதும் பாடப்பட்டன. இன்று கிடைக்கும் பழைய மழைக்காவியங்கள் எல்லாம் கண்ணகி மீது பாடப்பட்டனவே. இவற்றில் தம்பிலுவில் கண்ணகை அம்மன் மழைக்காவியம் பழைமையானது. அகச்சான்றுகள் கொண்டு இந்நூல் 17 ஆம் நூற்றாண்டில் பாடப்பட்டிருக்கலாம் என்பர் (சிவசுப்பிரமணியம், .,2004: 156-57).

 

காவியங்களுடன் ஒப்பிடுமிடத்து மழைக்காவியங்கள் சமூகநிலைத் தன்மையை அதிகம் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. முக்கியமாக மழை இல்லாமையால் பயிர்கள் வாடி அழிவதையும் அதனால் தமக்கு ஏற்பட்ட வேதனைகளையும் பலபட எடுத்துக் கூறி தம்மேல் இரக்கம் காட்டுமாறு வேண்டுதல் செய்வதே இப்பாடல்களின் கருவாக அமைந்துள்ளது. கோபமுற்ற தெய்வத்தைக் குளிரப் பண்ணுவது என்பதே இப்பாடல்களின் அடிப்படை நோக்காக அமைந்திருக்கும்.

 

பணிவேன் உன் பொன்னடியைப் பத்தினித் தாயே

பருவமழை பொழிய உன் திருமன மிரங்கும்

அநியாய மாய்ப்பயிர்கள் வாடுதே அம்மா

ஆருதவு வார்உன்னை யல்லாது வேறோர்

பனியாலே பயிர்வகைகள் விளையுமோ இந்த

பாதகம் தீர்ப்பவ ரார்பரா பரியே

கனிவான மனம்மகிழ்ந் தெமையாண்டு கொள்வாய்...

(மேற்கோள்: ஆறுமுகம்.கண.,2008:89)

 

செய்த பயிர்கள் மழையின்றி வாடுவதனால் ஏற்பட்ட வேதனையின் வெளிப்பாட்டை இந்தப் பாடலிலே காணலாம். கண்ணகியின் கோபத்திற்குத் தமது சமூகத்திலே நிலவுகின்ற பல்வேறு தீய செயல்களே காரணம் என்ற நம்பிக்கை இந்தப் பாடல்களிலே இளையோடியுள்ளதைக் காணலாம். 'தீமை செய்தால் மழை பொய்க்கும்' என்ற பாரம்பரிய நம்பிக்கை இவர்கள் மத்தியில் நிலவுவதே இதற்கு அடிப்படையாகும்.

 

மழை பொய்த்தமைக்கு தமது சமூகத்தில் நிலவுகின்ற தீய செயல்களே காரணம் என்றும் அவற்றையெல்லாம் பொறுத்து மழை பொழிவிக்க வேண்டும் என்றும் வேண்டுதல் செய்வதும் மழைக்காவியத்தின் முக்கிய அமைப்பாக உள்ளது. சில பாடல்கள் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளன. சில மழைக்காவியங்கள் இத்தீய செயல்கள்தான் மழை இன்மைக்குக் காரணமோ என்ற ஏக்கத்தை வெளிப்படுத்தவனவாக உள்ளன.

 

தலை சிறந்து தீனருந்தும் கொடியவர்களாலோ

தள்ளாடும் தறிகெட்ட வெறியர்களாலோ

தாய்தந்தை முகமெதிர்த்து கடுகடுப்பதாலோ

தூயவனே றாகுமானே வாறமழை பெய்யாததேன்

(மேற்கோள்:உதுமான் ஸாஹிபு,எம்.வை.,2006:34).

 

என்று புலவர் தனது ஏக்கத்தைப் பாடுகின்றார். இவ்வாறு பாடுகின்ற போது அது சமூகக் குறைகளுக்கு எதிரான உணர்வாகவும் அமைந்துவிடுகின்றது. எனவே மழைக் காவியப் பாடல்கள் சமூக உணர்வுப் பாடல்களாக, சமூகத்தை வழிப்படுத்த முனையும் பாடல்களாகவும் அமைந்தள்ளன எனலாம். ஆரம்பத்தில் சைவ மக்களின் கிராமிய வழிபாட்டுப் புனிதப் பாடலாக இருந்த மழைக்காவியமானது பின்னர் முஸ்லிம் மக்கள் மத்தியிலும் செல்வாக்குச் செலுத்தியது. அல்லாஹ் மீது பல மழைக்காவியப் பாடல்கள் பாடப்பட்டுள்ளன. மேலே கூறிய பாடல் இதற்கு எடுத்துக்காட்டாகும்.

 

காவியம் கிராமியச் சடங்கு வழிபாட்டுக்குரிய புனிதமான இசை வடிவமாகவே இருந்தது. ஆனால் 19ஆம் நூற்றாண்டிலே ஏற்பட்ட சமூக மாற்றங்களும் அதனூடான இலக்கியத்திலே சமுதாயச் சிந்தனைகளின் வெளிப்பாடும் முனைப்புற்ற சூழலில் காவியம் சமூக விடயங்களைப் பாடுவதற்கான முக்கியமானதொரு வடிவமாக மாறியது. குறிப்பாகச் சற்று எழுத்தறிவினைக் கொண்ட கிராமியப் புலவர்கள் தமது கிராமங்களிலே நடக்கும் முக்கிய சம்பவங்களையும் அனர்த்தங்களையும் பாடுவதற்கு இந்தப் பாடல் வடிவத்தைக் கையாண்டனர். காவியம் ஒரு கதைகூறும் பாடல் வடிவமாக இருந்ததும் காவிய இசை வடிவம் மக்கள் மத்தியில் செல்வாக்குற்றிருந்ததும் இதற்குக் காரணங்களாகும். குறிப்பிட்ட சம்பவங்கள் இடம்பெற்றதும் கிராமியப் புலவர்கள் அவை பற்றிப் பாடல்களை எழுதி மக்கள் மத்தியில் பாடிக்காட்டினர். சிலர் தமது பாடல்களைச் சிறு பிரதிகளாக அச்சிட்டு விற்பனையும் செய்தனர். இவற்றை முக்கியமாக திருவிழாக்களிலும் கோயிற் சடங்குகளிலும் பாடிக்காட்டி விற்பனை செய்தார்கள். ஆனால் இவற்றைப் பாடியபோது அவர்கள் இசைக் கருவிகளைப் பயன்படுத்துவதில்லை. சடங்கு வழிபாட்டில் பயன்படுத்தும் ஒரு புனிதக் கருவியாக உடுக்கினை கருதுவதே இதற்குக் காரணமாகும்.

 

குறிப்பாக காலத்திற்குக் காலம் தமது பிரதேசங்களிலே ஏற்பட்ட அனர்த்தங்கள் பற்றிப் பாடுவதற்கு காவிய வடிவம் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் வெள்ளப்பெருக்கு, சூறாவளி, சுனாமி ஆகிய அனர்த்தங்கள் பற்றிப் பல காவியங்கள் பாடப்பட்டுள்ளன. 1907 இல் வீசிய புயல் பற்றிப் பாடப்பட்ட சேகுமதார் புலவரின் புசற் காவியம், 1957 ஆம் ஆண்டு வெள்ளம் பற்றிய இப்றாஹீம் தாவுத்ஸா பாடிய வெள்ள வேதனைக் காவியம், மஹ்முது அப்புஸ்ஸமது ஆலிம் சாஹிபுவின் வெள்ளக்காவியம், 1978 ஆம் ஆண்டு சூறாவளி பற்றிய சீனிமுகம்மது அண்ணாவியாரின் சூறாவளிக் காவியம், மா.சிதம்பரப்பிள்ளையின் புயல் காவியம், நா.விநாயகமூர்த்தியின் புயல்காவியம், 2004 ஆம் ஆண்டு சுனாமி பற்றி பாடிய எம். இஸ்மாயிலின் சுனாமி கடல் கொந்தளிப்புக் காவியம், வை.கணேசனின் ஆழிப் பேரலையின் அனர்த்த காவியம், சீ.இல்யாஸின் சுனாமியலை கடல் கொந்தளிப்பு துயரக் காவியம் எனப் பல காவியப் பாடல்களைக் கூறலாம். இவை பெரும்பாலும் அச்சிடப்பட்டவையாகும்.

 

இந்தக் காவியங்களில் குறிப்பிட்ட அனர்த்தத்தால் ஏற்பட்ட அழிவுகளும் அவலங்களும் அவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்களும் கருப்பொருளாக அமைந்துள்ளன. அந்தவகையில் இப்பாடல்கள் சமூக வரலாற்று அவணங்களாக அமைந்துள்ளன எனலாம்.

 

இவை கிராமியப் பலவர்களின் அனுபவ எடுத்துரைப்புகளாகவே அமைந்துள்ளன.

 

'தஞ்சமென வீட்டைசிலர் நம்பியுள் இருக்க சலார்

என்று வொரு சுவரது பறக்க அஞ்சியே

பிள்ளைதனைக் கூட்டி வெளிவரவே ஆளாளாய்

வேறுதிசை கொண்டு புயல் விடவே' 'புயல்கொண்டு

அயல் வளவு மடுவுதனில் தள்ளவும் புருசனவன் தனிப்பிரிந்து

ஆறுதனில் விழவும் கயல் முதளை

பிள்ளைகளைக் கவ்வி உண்டிடவும் காணாமல் சடலமதை தேடி

தினம் உலவும்' (வினாயகமூர்த்தி,நா.,1978:2)

 

என்று புலவர் தனது கிராமத்து மக்கள் புயலின்போது பட்ட அவலங்களைப் பலபடப் பாடுகின்றார். கிராமநிலைப்பட்ட அனர்த்த அழிவுகளையும் அவலங்களையும் எவ்வித எழுத்து மூலங்களும் அடையாளப்படுத்தாத நிலையில் கிராமியப் புலவர்கள் அவற்றை இந்தக் காவியங்களிலே பதிவுசெய்துள்ளனர்.

 

அனர்த்தங்கள் அல்லது சமூகப் பிரச்சினைகள் பற்றிய காவியங்களிலே போரின் அவலங்கள் பற்றிப் பாடப்பட்டுள்ள காவியங்களும் முக்கியமானவை. கிராமியப் புலவர்கள் அவ்வப்போது தாம் அனுபவித்து வந்த போரின் அவலங்களைக் காவியங்களாக எழுதி அவற்றைப் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியிலே பாடினர். 'வன்செயல் காவியம்' 1980 களில் இருந்து தொடரும் யுத்தத்தினால் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற அழிவுகளையும் அவலங்களையும் பேசுகின்றது.

 

பட்டினித் தொல்லைகள் ஒரு புறம் வாட்ட

பட்டாள வீரர்கள் மறு புறம்தாக்க

சுட்டபேர் பயங்கர வாதி யென்றோட

சுடுபட்டு மாண்டனர் அப்பாவி மக்கள் (இப்றாஹீம்,.எஸ்.,2006:2)

 

என்று போர்ச் சூழலுக்குள் பட்டுழலும் மக்களின் அவல வாழ்வைக் காட்டுகின்றார். அமைதிக்கான எதிர்பார்க்கையும் ஏக்கமும் வன்செயல் காவியத்தின் இறுதிப் பகுதியில் உள்ள பாடல்களின் கருப்பொருளாக அமைந்துள்ளது. 'கினாந்திமுனைக் காவியம்' 2006 ஆம் ஆண்டு மூதூரில் இருந்து முஸ்லிம்கள் அகதிகளாக வெளியேறியதையும் இந்த இடப்பெயர்வின்போது மக்கள் எதிர்கொண்ட அவலங்களையும் கூறுகின்றது. இதிலுள்ள பல பாடல்கள் அரசியல் விமர்சனங்களாக உள்ளன.

 

சமூக சம்பவங்கள் பற்றிய பல காவியப் பாடல்கள் வடிவரீதியாகவும் சற்று மாறியுள்ளன. காவியங்கள் எட்டு வரியமைப்பை அதாவது நான்கு இசையடிகளைக் கொண்டிருப்பது மரபாக அமைய, சமூக சம்பவங்கள் பற்றிய பல காவியப் பாடல்கள் நான்கு வரிகளை அதாவது இரண்டு இசையடிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. காவியங்களில் நான்கு இசையடிகளின் முதலும் ஒத்த எதுகை அமைவது மரபாக உள்ளதால் இவ்வாறு அமைப்பதில் உள்ள சிரமம் காரணமாகவே நான்கு வரிப் பாடல்களாகப் பாடப்பட்டுள்ளன. ஆனால் கிராமியப் புலவர்கள் இந்தப் பாடல்களைப் பாடுகின்றபோது தொடர்ந்து வரும் இரு பாடல்களை இணைத்து நான்கு இசையடிகள் கொண்டதாகப் பாடுகின்றனர். ஆனால் காவிய இசையிலே எவ்வித மாற்றங்களும் இடம்பெறுவதில்லை. அவர்கள் எதுகை, மோனை அமைப்பிலும் இறுக்கத்தைப் பேணவில்லை. ஆழிப் பேரலையின் அனர்த்த காவியம், சுனாமி கடல் கொந்தளிப்புக் காவியம், சீனிமுகமது அண்ணாவியாரின் சூறாவளிக் காவியம் முதலியன இதற்கு உதாரணங்களாகும்.

 

அதேவேளை கிராமியத் தெய்வங்கள் மீது புதிதுபுதிதாகக் காவியங்கள் பாடுவதும் தொடர்கின்றது. ஆனால் இக்காவியப் பாடல்கள் வடிவ ரீதியில் எவ்வித மாற்றமும் இன்றியே பாடப்படுகின்றன. அதேவேளை இந்தப் பாடல்கள் சமகால சமூக உணர்வோட்டத்தினை அதிகம் உட்கொண்டுள்ளன.

 

பழைய காவியப் பாடல்கள் தெய்வத்தைப் போற்றிப் பகழ்ந்து பெரும்பாலும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட வளம் வேண்டுவதாகவே அமைந்திருந்தன. ஆனால் கால மாற்றத்தில் கிராமிய மக்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்ட சூழலில் பாடப்பட்ட வழிபாட்டுக் காவியப் பாடல்களில் அத்தகைய சிக்கல்களால் பாதிக்கப்பட்ட மனநிலையின் வெளிப்பாட்டை அதிகம் காணமுடிகின்றது. குறிப்பாக யுத்தம் நடைபெற்ற காலங்களில் அதன் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருந்தபோது பாடப்பட்ட பாடல்களில் யுத்தத்தால் பாதிப்புற்ற மனநிலையின் வெளிப்பாட்டையும் அதிலிருந்து விடுபடுவதற்கான வேண்டுதல்களையும் பரவலாகக் காணலாம். பேச்சியம்மன் காவியத்தில் வரும் ஒரு பாடல் பின்வருமாறு:

 

மாதாவே இன்றிங்கு மக்கள் படுதுன்பம்

வாயாலே சொல்லவே முடியாது அம்மா

ஏதேனும் உன்கருணை இல்லாது போனால் எமது

குலம் இன்றே அழிந்து விடுமம்மா

வாதாடயாருண்டு எம் துயரை இன்று வையகத்தோராலே

மாற்ற முடியாது ஆதாரம் உனையன்றி

யாருமில்லையம்மா அம்பிகையும் அருள் தந்து

எங்கள் துயர்தீராய் (கந்தையா,.,1992:7)

 

கிராமக் கோயில்கள் மீது பாடப்பட்டுள்ள காவியங்கள் பெரும்பாலும் அந்த ஆலையத்தினதும் அந்தச் சமூகத்தினதும் வரலாற்றையும் அந்த மக்களது பண்பாட்டு மரபுகளையும் வெளிப்படுத்துவனவாகும.; எனவே இக்காவியங்கள் தலபுராணங்களோடு ஒப்புமையுள்ளனவாக அமைந்துள்ளன. சின்னக்குளத்துக் காளியம்மன் சிறைமீட்ட காவியம்இ புளியடிமடு வடபத்திரகாளி அம்மன் காவியம், கன்னன்குடா கண்ணகி அம்மாள் ஆலையத்தில் கள்வர் பிடிபட்ட காவியம் முதலிய காவியங்களை இதற்கு உதாரணங்களாகக் கூறலாம். சின்னக்குளத்துக் காளியம்மன் சிறைமீட்ட காவியத்தில் புலவர் குறித்த ஆலையத்தின் உருவாக்கம், வளர்ச்சி பற்றிப் பாடும் போது அக்கிராமத்து மக்களின் நம்பிக்கைகள், சடங்கு வழிபாட்டு அம்சங்கள், சமூக மரபுகள், அவர்களுக்கு இடையிலான முரண்பாடுகள் எனப் பல்வேறு பண்பாட்டுக் கூறுகளையும் பாடுகிறார்.

 

சில வழிபாட்டுக் காவியப் பாடல்கள் புலவரின் தனிப்பட்ட வாழ்விலே ஏற்பட்ட பிரச்சினைகளை, துயரங்களை முறையிடுகின்ற தன்னுணர்வுப் பாடல்களாகவும் அமைந்துள்ளன. இத்தகைய பாடல் பிரதிகளையும் அவர்கள் மக்கள் கூடும் இடங்களிலே பாடிக்காட்டி விற்பனையும் செய்துள்ளார்கள். கேதாரபிள்ளை என்பவர் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு சிறையிருந்தபோது 'சின்னக்குளத்துக் காளியம்மன் சிறைமீட்ட காவியம்' என்ற காவியத்தைப் பாடினார். இதிலுள்ள அதிகமான பாடல்களிலே தான் சிறையில் அடையும் வேதனைகளை அம்மனிடம் முறையிட்டு தன்னை விடுவிக்குமாறு வேண்டுகிறார்.

 

 

கேதாரபிள்ளை யெனைக் கெதியாக மீட்பாய் கேவலம்

பண்ணுகிறார் கண்டிநகர்ச் சிறையில் பார்ப்போர்க்குப்

பகிடியாய் இருக்குதே அம்மா பாழாகிப் போகுதே

எந்தனது வாழ்க்கை வீரியர் பணத்தினால் செய்த

வொரு வேலை வினையாகிப் போச்சுதே வீரமாகாளி

வாலையே சிறையிலெனை மீட்டருளும்

தேவி வடபத்திர காளியே சின்னக் குளத்தாயே

(கேதாரபிள்ளை,.மா.,1999:8)

 

தனது வேதனைகளைப் பற்றிப் பாடும்போது அதற்குக் காரணமாக அமைந்த சமூக அநீதிக்கும் அதிகாரத்துவச் செயற்பாடுகளுக்கும் எதிராகக் குரல் எழுப்புகின்றார். மத உணர்வுப் பாடலில் சமூக விமர்சனம் பரவலாக இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. தனது விடுதலையின் பின் 1999 இல் இப்பாடலை நூலுருப்படுத்தி கோயில் விழாக்களில் மக்கள் மத்தியில் பாடிக் காட்டி விற்பனை செய்து வந்தார்.

 

முடிவு:

 

சடங்கு வழிபாட்டுப் பாடலாக உருவான காவியம், படிப்படியாக கிராமிய மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகின்ற வடிவமாக வளர்ந்து வந்துள்ளதைக் காணலாம்.இத்தன்மை மழைக்காவியங்களில் முனைப்புறத் தொடங்கியது. பிற்காலங்களில் பாடப்பட்ட வழிபாட்டுக் காவியப் பாடல்கள் மதவழி நின்று வரலாறு கூறுவனவாக மாற்றமுற்றன. இதற்கும் மேலாக, மதநிலையில் இருந்து விடுபட்டு சமகால சமூக, அரசியல் பிரச்சினைகள் பற்றிப் பாடுகின்ற 'காவியக் கதைப்பாடல்' மரபொன்றும் உருவாகியுள்ளது. மொத்தத்தில் காவியம் கிழக்கிலங்கைத் தமிழர்களின் சமய, சமூக, பண்பாட்டுக் கூறுகளைத் தாங்கிய இலக்கிய வடிவமாக வளர்ந்துள்ளது.

 

 

உசாத்துணை:

 

1. ஆறுமுகம்,கண.,2008, கண்ணகை அம்மன் பத்ததியும் பாடல்களும், மட்டக்களப்பு: விபுலம் வெளியீடு.

 

2. இப்றாஹீம், .எஸ்., 2006, வன்செயல் காவியம், மூதூர்: சஸ்னாஸ்

 

3. உதுமான் ஸாஹிப்,எம்.வை. (தொகு.), 2006, கிழக்கிலங்கை முஸ்லிம் கிராமியக் கவிகள், அக்கரைப்பற்று: முஹம்மது அப்ராஸ் வெளியீட்டகம்.

 

4. கணபதிப்பிள்ளை,சி. (பதி.), 1971, மகாமாரித்தேவி திவ்விய கரணி, யாழ்ப்பாணம்: விவேகானந்தா அச்சகம்.

 

5. கணேசன்,வை., 2005, ஆழிப்பேரலையின் அனர்த்த காவியம், கல்முனை: விறிலியண்ட் கொம்பியூட்டர் லேண்ட் பிறிண்டர்.

 

6. கந்தையா,., 1992, ஸ்ரீ பேச்சி அம்மன் காவியம், மட்டக்களப்பு: ஆதவன் அச்சகம்

 

7. கேதாரபிள்ளை,.மா., 1995, சின்னக்குளத்துக் காளியம்மன் சிறைமீட்ட காவியம், மட்டக்களப்பு: ஜெஸ்கொம் அச்சகம்.

 

8. சித்திரலேகா,மௌ. (பதி.), வாய்மொழி மரபுகள் வரலாற்று மூலங்களாக, இலங்கை: மொழித்துறை, கிழக்குப் பல்கலைக் கழகம்.

 

9. சிதம்பரப்பிள்ளை,மா,. 1978, புயல் காவியம், மட்டக்களப்பு: ராஜன் அச்சகம் .

 

10. சிதம்பரப்பிள்ளை,மா,. 1986, புளியடிமடு வடபத்திரகாளி அம்மன் காவியம், மட்டக்களப்பு: ஆதவன் அச்சகம்

 

11. சிவசுப்பிரமணியம், ., 2004, மட்டக்களப்பு நாட்டாரியல், கொழும்பு: வக்மி பதிப்பகம்.

 

12. பரீத், எம்.., 2006, கினாந்திமுனைக் காவியம், மூதூர்

 

13. விநாயகமூர்த்தி,நா., 1978, புயல் காவியம், கல்முனை: குட்வின் அச்சகம்.