எமனார்க்கு இங்கு ஏது வேலை

 

கலாநிதி   பால.சிவகடாட்சம்


வாழவேண்டும் என்ற ஆசை உயிரினங்கள் அனைத்துக்கும் உண்டு. நீண்டகாலம் வாழவேண்டும் அதுவும் நோய்நொடி இன்றிவாழவேண்டும் என்பது மனிதப்பிறவிகளின் ஆசை. முற்றும் துறந்த யோகிகளும் இதற்கு விதிவிலக்கு அல்லர். காயகல்பம் என்னும் சாவாமருந்தைத் தேடி அலைந்து அது பற்றிய ஆய்விலேயே தமது வாழ்நாளைத் தொலைத்தவர்கள் பலர். தம்மிடம் ஆயுளை நீடிக்கும் மருந்து செய்யும் ஆற்றல் இருப்பதாக நடித்து மக்களையும் மன்னரையும் ஏமாற்றிய போலிச்சாமியார்கள் பலரை வரலாற்றில் காணமுடியும். தற்கொலை இயற்கைக்கு விரோதமானது என்பதை ஏற்றுக்கொள்ளும்போது சாவாமருந்து என்பதும் இயற்கைக்கு விரோதமானதே என்பதை ஏற்றுக்கொள்ளவண்டும். அதேசமயம் ஒருமனிதன் நூறாண்டுகாலம் வாழமுடியும் என்பதில் எவருக்கும் கருத்துவேறுபாடு இருக்கமுடியாது. அப்படியானால் உலகின் பெரும்பான்மையானோர் ஏன் அந்தப்பூரண வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பதில்லை என்ற கேள்வி எழுகிறது.

சுனாம, சூறாவழ, நிலநடுக்கம் போன்ற இயற்கைப்பேரழிவுகளால் ஏற்படும் இறப்புக்களை விட்டுவிடுவோம். யுத்தம், விபத்து, கொலை, தற்கொலை என்பவை காரணமாக இடம்பெறும் அகால மரணங்களையும் விட்டுவிடுவோம். முன்னம் ஒருகாலத்தில் பெருமளவு மனித உயிர்களைப் பலிகொண்ட பெரியம்மை, வாந்திபேதி, மலேரியா போன்ற தொற்றுநோய்கள் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டன.

அப்படியானால் உலகளாவியரீதியில் மக்களின் சராசரி வயதெல்லை இன்னமும் எழுபதுக்கும் குறைவாக இருப்பதற்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுகிறது. பெரும்பாலான மக்களின் அன்றாட வாழ்க்கை முறை ஆரோக்கியமானதாக இல்லை என்பதையே இந்தக் கேள்விக்கு விடையாகத்தர முடியும்.

இன்றைய உலகின் பிரதான ஆட்கொல்லிநோயான எய்ட்ஸ்
(AIDS) ஆபிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளில் வாழும் மக்களின் சராசரி ஆயுட்காலத்தை வெகுவாகக் குறைத்துவிட்டது. இதற்கு கட்டுப்பாடும் பாதுகாப்பும் இல்லாத உடலுறவே காரணமாகின்றது. புகைபிடித்தல் மற்றும் அளவுக்குமீறி மது அருந்தல் போன்ற பழக்கங்கள் உடல் உறுப்புக்களைப் பலவீனப்படுத்துவதன் மூலம் அவை இயங்கக்கூடிய காலத்தை மட்டுப்படுத்திவிடுகின்றன. இந்த விடயம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருப்பதால் இதுபற்றி விபரிக்கவேண்டிய அவசியம் இப்போது எழவில்லை. ஆனால் நாம் அவ்வளவு அக்கறைப்படுத்தாத அல்லது அவ்வளவு பெரியவிடயம் இல்லை என்று அலட்சியப்படுத்தும் விடயங்கள்கூட எமது ஆயுட்காலத்தை நீடிக்க அல்லது குறைக்க வழிவகுப்பன. இதுபற்றி இன்று நேற்றல்ல இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நமது சமூகத்தில் அறிஞர்களாகவும் மருத்துவர்களாகவும் அறியப்பட்டோர் வலியுறுத்தி வந்துள்ளனர்.

பண்டைத்தமிழறிஞர்கள் பட்டியல் என்று ஒன்றை எடுத்துக்கொண்டால் அதில் வள்ளுவர் என்ற ஒருவரின் பெயர் இடம்பெறுவதைத் தவிர்க்கமுடியாது. நோய் ஏற்படாமல் தவிர்க்கவும் அதன்மூலம் வாழ்நாளை நீடிப்பதற்கும் வள்ளுவர் காட்டும் வழி எமது அன்றாட உணவு பற்றியதே ஆகும். மாறுபாடில்லாத உணவை உண்க (உங்களுக்கு ஒத்துவராது என்று கண்டறிந்த உணவுகளைத் தவிர்த்து உண்ணுங்கள்). அளவறிந்து உண்க (உங்கள் உடலுழைப்புக்குத் தேவையான உணவை மட்டும் உண்ணுங்கள்) அற்றது அறிந்து உண்க(முன்னர் உண்ட உணவு செரித்தபின் உண்ணுங்கள்). இவைதான் நோயின்றி நீண்ட காலம் வாழ ஆசைப்படும் ஒருவருக்கு வள்ளுவர் கூறும் அறிவுரை.

பதினான்காம் நூற்றாண்டில் ஈழத்தில் வாழ்ந்த தமிழறிஞர் போசராசபண்டிதர். தென்னிலங்கை மன்னன் பண்டித பராக்கிரமபாகு கேட்டுக்கொண்டதன்பேரில் சரசோதிமாலை என்னும் சோதிடநூலைத் தமிழில் ஆக்கியவர். அரண்மனை சோதிடரான இவருக்கு சோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை இருந்தது என்பதில் எவருக்கும் சந்தேகம் இருக்கமுடியாது. எனினும் ஒருவரின் வாழ்நாளை நிர்ணயிப்பது அவரது சாதகபலன் மட்டுமல்ல என்பதைத் தெளிவாகவே விளக்கியுள்ளார் இவர்.

அருந்தவ ராசியாலும் அளவுறும் உண்டியாலும்
புரிந்தநற் சீலத்தாலும் பூண்ட பேர் அன்பினாலும்
மருந்துறும் உபாயத்தாலும் வதைஉயிர் காத்தலாலும்
அரும்பிணி இடையூறின்றி ஆயுளும் ஏறும் மாதோ.

அளவான உணவு நல்லொழுக்கம் அனைவரிடமும் அன்பு பாராட்டும் குணம் நோயுற்றபோது மருத்துவர்கொடுக்கும் மருந்தை முறைப்படி எடுத்தல் பிற உயிர்களைக் கொல்லாமை என்னும் வாழ்க்கைநெறிகளைக் கடைப்பிடிப்போர் நோயற்ற நீண்ட ஆயுளைப்பெறுவர் என்கிறார் இவர்.
இவற்றுக்கெலாம் சிகரம் வைத்தற்போல் தேரையர் அல்லது தேரர் என்றழைக்கப்பெறும் மருத்துவ அறிஞர் நோய் அணுகா விதி என்ற ஒரு நூலையே எழுதிவைத்துள்ளார்.

பால்உண்போம் எண்ணெய்பெறின் வெந்நீரில் குளிப்போம்
பகல்புணரோம் பகல்துயிலோம் பருவமூத்த
வேலம்சேர் குழலியரோ டிளவெயிலும் விரும்போம்
இரண்டடக்கோம் ஒன்றைவிடோம் இடதுகையிற் படுப்போம்
மூலஞ்சேர் கறிநுகரோம் மூத்ததயிர் உண்போம்
முதனாளில் சமைத்தகறி அமுதெனினும் அருந்தோம்
ஞாலந்தான் மடைத்திடினும் பசித்தொழிய உண்ணோம்
நமனார்க்கிங் கேதுகவை நாமிருக்கும் இடத்தே


பாலை அருந்துங்கள் என்கிறார் இவர். உடலுக்குத் தேவையான பிரதான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நிறைந்தது பால். எண்ணெய் தேய்த்துக்கொண்டால் வெந்நீரில் குளிக்கவேண்டும். மயிர்த்துளைகளினூடே எண்ணெய் ஊடுருவ சுடுநீரில் உள்ள வெப்பம் உதவுகிறது. பகல்நேரத்தில் உடலுறவு கொள்வது நித்திரை கொள்வது என்பவற்றைத் தவிர்த்துக் கொள்வதுடன் வயதுக்குமூத்த பெண்களுடன் உடலுறவு கொள்வதையும் தவிர்க்கும்படி ஆண்களுக்கு அறிவுரை வழங்குகிறார். 'இரண்டு அடக்கோம் ஒன்றை விடோம்' என்பது மலசலத்தை அடக்கிவைப்பதும் விந்துவை விரயமாக்குவதும் உடல்நலத்துக்குக் கேடானது என்பதைக் கூறுகிறது.

இடதுகையில் படுப்பதும் நல்லதாம். கிழங்குகளில் கரணைக்கிழங்கைத்தவிர மற்றையவை கெடுதல் விளைவிக்ககூடியன என்பது தேரையர் கருத்து. மரவள்ளிக்கிழங்கும் உருளைக்கிழங்கும் பிற்காலத்தில் ஐரோப்பியர் மூலமாக எமக்கு அறிமுகமானவை. இவைபற்றி தேரையர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. உணவில் தயிரைச் சேர்த்துக்கொள்வது பலவிதத்திலும் நன்மை தரும். கல்சியம் உள்ளிட்ட சத்துக்களைத் தருவதுடன் தயிரில் உள்ள கெடுதல் விளைவிக்காத பக்ரீரியாக்கள் பழுதடைந்த உணவு நன்கு வேக வைக்கப்படாத காய்கறிகள் மற்றும் குடிநீர் போன்றவற்றுடன் குடலினில் சேரக்கூடிய கெடுதல் விளைவிக்கும் கிருமிகளை அமுக்கிவிடுகின்றன.

முதனாளில் சமைத்த உணவு அமுதமாக இருந்தாலும் அதைச்சாப்பிடாதீர்கள் என்று சொல்வதற்குக் காரணம் இருபத்துநாலு மணிநேர இடைவேளையில் அந்த உணவுகளில் வயிற்றோட்டத்தை ஏற்படுத்தக்கூடிய பக்ரீரியாக் கிருமிகள் பெருகிவிடும் என்பதுதான். அக்காலப்பகுதியில் இன்றுள்ள குளிர்சாதனவசதிகள் இல்லை என்பது உண்மை. எனினும் குளிர்சாதனப் பெட்டியிலும்கூட கிருமிகளின் வளர்ச்சிவேகம் குறைக்கப்படுகிறதே தவிர அவற்றின் வளர்ச்சி முற்றாகத் தடை செய்யப்படுவதில்லை என்பதை நினைவில் கொள்வது அவசியம். உலகம் முழுவதும் மடை (படையல்) போட்டாலும் பசித்தால் ஒழியச் சாப்பிடாதீர்கள் என்று வள்ளுவர் கூறியதையே மீண்டும் வலியுறுத்தும் தேரையர் இவ்வாறெல்லாம் செய்துவந்தால் யமன் ஏன் நம்மிடம் வரப்போகிறான் என்கிறார்.

இவற்றுக்கெல்லாம் ஒருபடி மேலே சென்று நீண்ட காலம் வாழ்வதற்கு வேறு விடயங்களும் சரியாக அமையவேண்டும் என்று கூறுகிறார் பிசிராந்தையார் என்னும் சங்ககாலப்புலவர். பாண்டிய நாட்டுப்புலவரான பிசிராந்தையாரும் சோழநாட்டை ஆண்டுவந்த கோப்பெருஞ்சோழனும் ஒருவரையொருவர் காணாமலேயே பெருநட்புக்கொண்டவர்கள். நெடுங்காலமாகவே புலவரின் புகழ் பாண்டிநாட்டில் பரவியிருந்தது. மன்னனும் மக்களும் பிசிராந்தையாரின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஏதோ ஒருதடையால் கோப்பெருஞ்சொழன் உயிருடன் இருந்த காலத்தில் புலவரால் சோழநாட்டுக்கு வரமுடியவில்லை.

'என் இனிய நண்பன் பிசிராந்தை என்னைத் தேடி இங்கு வருவான். அவனுக்கு என்பக்கத்தில் இடம் ஒதுக்கிவையுங்கள்' என்று கூறி உயிர் நீத்தான் சோழன். அரசன் கூறிவைத்தபடியே புலவரும் வந்தார். அவரைப்பார்த்ததும் அதிசயித்து நின்றார்கள் அவ்வூர்மக்கள். அரசன் சொன்னபடியே அவர் வந்தது அதிசயம் என்றால் அவரது தோற்றம் அதைவிட அதிசயம். பல்லாண்டுகாலமாக அவர்கள் கேள்விப்பட்ட புலவர் அவர். நரைத்த தலையும் மெலிந்த உடலும் தளர்ந்த நடையும் கொண்ட ஒருவரையே அவர்கள் கற்பனை செய்து வைத்திருந்தார்கள். ஆனால் வந்தவரிடம் முதுமையின் அறிகுறியையே காணமுடியவில்லை. இது எப்படி சாத்தியமாகும். அவரிடமே கேட்டுவிட்டார்கள்.

'ஆண்டுகள் பல கடந்துவிட்டன. இன்னும் எப்படி நரைமுடியும் இன்றி இளமைத்தோற்றத்தில் இருக்கமுடிகிறது என்றுதானே கேட்கிறீர்கள். எனது மனைவி மாட்சிமை பொருந்திய பண்புகளை உடையவள். எனது மக்கள் கல்வி கேள்வி நிரம்பப்பெற்றவர்கள். எனது வேலையாட்கள் நான் சொன்னபடி கேட்டு நடப்பவர்கள். எமது மன்னன் தனது குடிமக்களைக் கொடுமைப்படுத்தாது நாட்டைக்காத்து வருபவன். அதற்கும் மேலாக எதனையும் விரிவாக உள்வாங்கி முடிவெடுக்கும் கொள்கையுடைய பெருமக்கள் பலர் வாழும் ஊர் எனது ஊர்.'

தாம் இன்னமும் முதுமை அடையாமல் இருப்பதற்கு இவையே காரணம் என்று பிசிராந்தையர் கூறிய பதில் சங்க இலக்கியமான புறநானூற்றில் இடம்பெற்றது.

யாண்டு பலவாகி நரையில ஆகுதல்
யாங்காகியர் என வினவுதிர் ஆயின்
மாண்ட என்மனைவியொடு மக்களும் நிரம்பினர்
யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும் அதன்தலை
ஆன்றவிந்து அடங்கியக் கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழும் ஊரே' புறம்:
191

உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டும் ஒருவருக்குப் பூரணமான ஆயுளைத் தந்துவிடும் என்று கூறுவதற்கில்லை. குடும்பத்தில் அமைதியும் இன்பமும் நிறைந்திருக்கவேண்டும். சார்ந்திருக்கும் சமூகம் சிறப்பானதாக இருக்கவேண்டும் ஆட்சியில் இருப்போர் நீதிக்கும் நேர்மைக்கும் கட்டுப்பட்டவர்களாய் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் ஒருவரது வாழ்நாள் நீண்டதாகவும் சிறப்பானதாகவும் இருக்கும் என்பதையே பிசிராந்தையார் மறைமுகமாக உணர்த்தியுள்ளார் எனக்கருதலாம்.